su venkatesan tweet on governorஆளுநர் என்பவர் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை தருவதற்கான ஒரு கண்காணிப்பாளர். ஒன்றிய அரசின் பணியாளர். ஆனால் மாநில அரசுகளின் செலவு பட்டியலிலும், நிர்வாகச் சிக்கலிலும் ஒரு தேவையில்லாத ஆணி.

அரசியலமைப்புச் சட்டம் 152 முதல் 162 வரையிலான பத்து விதிகளில் ஆளுநர் நியமனம் அதிகாரம் பற்றிய அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், ‘குலத்துக்கு ஒரு நீதி’ என்கிற மனுதர்மச் சட்டம்தான் இன்றைக்கு வரைக்கும் இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை விடவும் மேலானதாக இருக்கிறது.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக (பாஜகவின் நான்முகம் தவிர்த்து) இயற்றிய நீட் விலக்கு தீர்மானம் ஏறக்குறைய 125 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு கடந்த பிப்ரவரி 3ஆம் நாள் மறுபரிசீலனைக்கு என்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது ஆளுநர் திருவாளர் ரவி அவர்களால்.

நீட் மசோதா மட்டுமல்ல, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பற்றிய தீர்மானம், பாரதியார் பல்கலைக்கழக பிரச்சனை, துணைவேந்தர்கள் நியமனம், TNPSC, அண்ணா பல்கலை இப்படி தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானங்கள் பல ஆளுநரின் கனிவான கவனத்திற்கு வரிசைகட்டி நிற்கின்றன. பாவம் ஆளுநருக்குத்தான் இவை பற்றி ஆலோசிக்க, முடிவெடுக்க நேரமே இல்லாமல் இருக்கிறார்.

சரி 156.14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள படாடோபமான மாளிகை, அய்.ஏ.எஸ் தகுதியில் தனிச்செயலாளர், மூன்று துணைச் செயலாளர்கள், பாதுகாப்புப் படை உயர் தகுதியில் மூன்று பாதுகாப்பு அலுவலர்கள், இரண்டு கூடுதல் இயக்குனர்கள், மாளிகையெங்கும் சுற்றுச்சுழன்று கண்ணசைவிற்குப் பணிவிடை செய்யும் பணியாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமானால் ஊட்டியில் சென்று குளுகுளு என ஓய்வெடுக்க அங்கேயும் ஒரு ராஜபவனம், வெள்ளைப் பணமாகவே பல லட்சம் மாத ஊதியம் என ஒரு வெள்ளைக்கார வைஸ்ராயைவிட வசதியான வாழ்க்கை அத்தனையும் தமிழ்நாட்டரசின் செலவில் என்று வளமாக வாழுகிற ரவியானவருக்கு அப்படி வேறு என்னதான் முக்கிய வேலை? என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதால்தான், அன்னார் சமஸ்கிருத கலாச்சாரக் கூட்டத்தில் போய் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தி ராமராஜ்ஜியப் பெருமைகளை எடுத்துரைக்கிறார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டில் போய் தமிழ்நாடு அரசு நிராகரித்து விட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து சிலாகித்துப் பேசி துணைவேந்தர்களையும் பத்திரிகையாளர்களையும் திகைக்கச் செய்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தான் நிர்வாகத் தலைவராக இருக்கிற தமிழ்நாடுதான் இந்திய மாநிலங்களிலேயே கல்வி - சமூக - பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலம் என்கிற பெருமிதம் கொஞ்சமும் இன்றி, இந்தத் தமிழ்நாடுதான் தானும் தன் குடும்பமும் அதிஉயர் சொகுசு வாழ்வுவாழ செலவழிக்கிறது என்கிற நன்றி உணர்ச்சி சிறிதும் இன்றி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகிறார். இதை அவரது பாசையில் சொல்வதானால் கர்ணனின் தேரை சகதியில் சிக்கவைத்த சல்லியனின் செயலுக்கு ஒப்பானது என்றுதான் செல்லவேண்டும். கூச்சம் சிறிதும் இன்றி ரவியானவர் பேசுகிறார், “மாநிலங்கள் வளர்வது ஆபத்து, தேசம் வளர வேண்டும்” என்னே ஆராய்ச்சி!

மேதகு ஆளுநர் அவர்களே, மாநிலங்களை ஒதுக்கிவிட்டு உங்கள் தேசம் எங்கே இருக்கிறது காட்டுங்கள் பார்க்கலாம் என்று இப்போது தமிழ்நாட்டின் சாமான்ய குடிமகன் கேள்வி கேட்க மாட்டானா?

மாநில அரசுகளுக்குத்தான் நிலப்பரப்பு இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள்! உங்கள் தேசத்திற்கென்று எது நிலம்? ஏது மக்கள்?

மாநில அரசுகள்தான் வரிவசூல் செய்து திட்டங்களையும் சட்டங்களையும் இயற்றி மக்களிடத்திலே வாக்குகளைப் பெற்று ஆட்சி நடத்துகிறார்கள். உங்கள் தேசத்திற்கு என்று தனியே எது சட்டம்? ஏது வருவாய்?

எங்கள் மாநிலம் உங்களுக்கு உவப்பாய் இல்லை என்றால், உடன்பாடானதல்ல என்றால் அவ்வளவு சிரமத்தில் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். நீங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி உங்கள் தேச நலனுக்குப் பணியாற்றச் செல்லலாம்!

 கிண்டியிலிருந்து எப்போது கிளம்பப் போகிறீர்கள்? ஆளுநரே பதில் சொல்லுங்கள்!

- கா.சு.நாகராசன்

Pin It