சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிர் எதிராக அமர்ந்து செயல்படுவார்கள். மாறாக எதிரிகளாகச் செயல்பட மாட்டார்கள். செயல்பட்டால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது.

மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதும், விவாதிப்பதும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்குவதும், அரசு நடவடிக்கைகளில் குறை இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி நெறிப்படுத்த வேண்டியதும் எதிர்க்கட்சியின் கடமை.

குற்றங்களை மட்டுமே கண்டு பிடித்துச் சொல்ல வேண்டும், முடிந்தவரையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருப்பது என்பது எதிர்க் கட்சியின் வேலையன்று.

ஆனால் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்து கொண்டு இருக்கிறார் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

ஒன்றிய அரசின் 15ஆவது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்படுவதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துவிட்டு சொத்து வரியை சற்று உயர்த்தி உள்ளது.

 கடந்த 10 ஆண்டுகளாகச் சொத்து வரி வசூலிக்காத காரணத்தால் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஆதாரமில்லை. நிதி வருவாய்க்கான வழிமுறையில் சொத்து வரியும் ஒன்று. அதையும் கூட முதல்வர் தயக்கத்தோடுதான் செய்திருக்கிறார் என்பதை அவரின் பேச்சு உணர்த்துகிறது.

இதற்குரிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைச் சொல்லாமல், நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம் என்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

ஒன்றிய அரசு ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றிக் கொண்டே இருக்கிறது. மாதா மாதமும் சமையல் எரிவாயு விலையும் ஏறிக் கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற பிரச்சனைகளை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பேசுவதில்லை?

விளக்கம் தெளிவாக இருக்கிறது.

அரசியல் சட்ட விதிமுறைப்படி அவர் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படவில்லை. எதிரிக்கட்சியின் தலைவராகக் காட்சி தருகிறார்.

இது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல.

----------------------

ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்தநாள்

1944 செப்டம்பர் 22 அன்று அன்றைய சென்னை மேயர் ம.இராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், சென்னை ரிப்பன் கட்டிடத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு வரவேற்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஷெட்டியூல்டு இனப் பேரவையின் தமிழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் :-

“வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் நாடாளுமன்ற முறையிலான அரசு இந்தியாவில் அமைக்கப்பட்டு விடுவதாலோ, அல்லது சுயராஜ்ஜியமோ, சுதந்தரமமோ அடைந்து விடுவதாலோ இங்கு எல்லோருடைய பிரச்சனைகளும், துன்பங்களும் தீர்ந்துவிடும் என்பதற்கு வரலாற்றில் ஆதாரம் எதுவும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் கல்வி கற்கவும், வளம் பெறவும் உரிமை உண்டு என்றும், மற்ற சாதியினர் அடிமைகளாகப் பிறந்து அடிமைகளாகவே சாக வேண்டும் என்றும் கருதுகின்ற ஆளும் வர்க்கத்தின் கையில் இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப் படுமானால், அந்த அரசு எந்த வகையிலும் சிறந்ததாக இருக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

Pin It