பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு ஒன்று நடைபெற்று இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த துணைவேந்தர்கள் அதில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக அதில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மிகச் சிறப்பான சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். “பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் இயங்கும் போது அவை தமிழ்நாடு பாடத்திட்டத்தைத் தான் நடத்த வேண்டும். அது அறிவியல் மனப்பான்மையில் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அறிவியலுக்கு எதிரான பிற்போக்குத் தனமான கருத்துக்களை திணித்துக் கொண்டு இருக்கிறது. எனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றியாக வேண்டும்” என்ற கருத்தை அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கு மாறாக ஆளுநர் ஆர்.என் ரவி கூட்டாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். “இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு அல்ல. கூட்டமைப்புத் தத்துவம் இந்தியாவிற்குப் பொருந்தாது” என்று கூறியிருக்கிற ஆளுநர், அதற்கு கூறியிருக்கிற காரணங்கள் தான் மிகவும் விசித்திரமாக இருக்கிறது. “அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்களை இணைத்துக் கொண்டு ஒரு நாடாக மாற்றிக் கொண்டார்கள். அதே போல் உருவாக்கப்பட்ட நாடு அல்ல இந்தியா, இந்தியா என்பதே உண்மையிலேயே பாரதம் தான். 1947 ஆகஸ்டு 15 இல் இந்தியா பிறந்துவிடவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாரத தேசம் பிறந்துவிட்டது. இந்த பாரத தேசத்தில் வாழ்ந்த அனைவரும் ஒத்த உணர்வும், ஒத்த கலாச்சாரமும் கொண்ட மக்களாகவே இருந்திருக்கிறார்கள். எனவே இங்கு வெவ்வேறு இனங்களைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்குத் தனித்தனி மாநிலங்கள் இருக்கிறது, அவைகளை நாங்கள் கூட்டாட்சியாக மாற்றப் போகிறோம் என்று கூறுவது இந்தியாவிற்குப் பொருந்தாது” என்ற வாதத்தை ஆளுநர் எடுத்து வைத்திருக்கிறார்.
இந்த வாதத்தைக் கண்டு சிரிப்பதா அல்லது வியப்பாதா என்று நமக்குப் புரியவில்லை. வாதத்திற்காகவே ஒப்புக் கொள்வோம். பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் என்ற தேசம் இருந்தது என்று இவர் சொல்கிறார் என்றால் அந்த பாரத தேசத்திற்கு அரசியல் சட்டம் ஏதாவது இருந்ததா ? அந்த பாரத தேசத்திற்கு நீதிமன்றங்கள் இருந்ததா ? அந்த பாரத தேசத்தில் காவல் நிலையங்கள் இருந்ததா ? இவர் சொல்லுகிற பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லை, போக்குவரத்து வசதிகள் இல்லை. சொல்லப்போனால் மனிதன் பேசுவதற்கு மொழி கூட தோன்றவில்லை. மொழி தொடர்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி இப்படி எதுவும் இல்லாத காலத்திலேயே அவர்கள் ஒரே கலாச்சாரத்தில் வாழ்ந்திருக் கிறார்கள். அது ‘பாரதீய கலாச்சாரம்’ என்று கூறுகிறார். இவர் கூறும் பாரத தேசத்தின் எல்லை எது என்று வரையறுப் பதற்கும் தயாராக இல்லை.
வரும் காலத்தில், அய்க்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எல்லைப் பிரச்சனை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கே இந்தியாவினுடைய பிரதிநிதி சென்று, “நாங்கள் பாரத தேசம், 3000 ஆண்டு களுக்கு முன்பே பாரதியர்களாக நாங்கள் வாழ்ந்தோம். அப்போதே எங்களுக்கு ஒருமித்த உணர்வும், கலாச்சாரமும் இருந்திருக்கிறது; எங்கள் தேசத்துக்கு எல்லை இல்லை என்று வாதிட்டால் உலகம் இந்த நாட்டைப் பார்த்து சிரிக்காதா? இப்படிப்பட்ட கருத்தை இவர் சொல்வதற்கு காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ் இன் சித்தாந்தத்தை உருவாக்கிய கோல்வாக்கர் தான் இந்தக் கருத்தைக் கூறினார். நம்முடைய மக்கள் மூதாதையர் என்பவர்களுக்கு ஆதி அந்தம் எதுவுமே கிடையாது. இவர்கள் எப்பொழுது தோன்றினார்கள் என்று கூறவே முடியாது. உலகம் தோன்றிய காலத்திலுருந்து, கடவுள் தோன்றிய காலத்திலிருந்து நம்முடைய மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே தான் நமக்குத் தனிப்பட்டப் பெயர்கள் எதுவும் இல்லை. நம்மை எதிர்த்தவர்களுக்கு மிலேச்சர்கள் என்று பெயர் சூட்டப்பட்டது. நம்மை அடையாளப்படுத்துவதற்குத் தான் ஆரியர்கள் என்ற பெயரைத் தந்தார்கள். நாம் தான் இந்த நாட்டினுடைய மக்கள்” என்று கோல்வாக்கர் கற்பனையில் கட்டவிழ்த்துவிட்ட கட்டுக்கதையை ஒரு மாநில ஆளுநர், அரசியலமைப்புச் சட்டபடி செயல்பட வேண்டியவர் கூறுகிறார்.
இந்தியா ஒற்றைத் தேசமே தவிர, கூட்டாட்சிகளுக்கான நாடு அல்ல என்கிறார் ஆளுநர் ரவி. பிரதமர் மோடி பெயரளவுக்குக் கூறிய ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ (Co-operative Federalism) என்ற கருத்தைக்கூட ஆளுநர் ஏற்க மறுக்கிறார். இந்தியா மொழி வழி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிக்கு வந்தவர் அரசியல் சட்டத்துக்கு எதிராக ‘பாரதம்’ என்ற ஆர்.எஸ்.எஸ். கட்டுக் கதையைப் பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழலாகப் பேசுவதை தமிழ்நாடு ஒருபோதும் சகிக்காது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும் சூழலை ஆளுநரே உருவாக்கி வருகிறார்.
- விடுதலை இராசேந்திரன்