எனது சொந்த ஊராகிய கோட்டையூர் என்பது “செட்டி நாடு” என்ற ஒரு தனிப்பட்ட முத்திரையுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தது. டாக்டர் அழகப்பா செட்டியார் அவர்கள் பிறந்த ஊர். செட்டி நாட்டில் சுமார் 1800ஆம் ஆண்டு முதல் 1920 வரை கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்துமே ஒவ்வொன்றும் பிரமாண்டமான கலைக் கூடங்கள். சுமார் 150x100 சதுரஅடி அளவுள்ளவை. முற்றிலும் பாலை, வீரை, தேக்கு முதலிய உயர்ரக மரங்களால் கட்டப் பட்டவை. வெண்மையும், வழுவழுப்பும் மிகுந்த சுவற்றுப் பூச்சுகள், பூச்சு வேலைப்பாடுகள் செய்வோரையும் பிரமிக்கச் செய்பவை. நுழைவாயில் முதல், உள்ளே உள்ள ரூம்கள், தூண்கள் முதலிய அத்தனையிலும் சிற்பச் செல்வங்கள், தெய்வ முத்திரைகள், பூ வேலைப்பாடுகள், நாட்டிய வகைகள், இன்னும் எவ்வளவோ மர வேலைப்பாடுகள் நிறைந்தவை, வீட்டிற்குள் சென்ற யாரும் ஒரு மாய உலகிற்குள் நுழைந்துவிட்ட ஒரு உணர்விலிருந்து விடுபட முடியாது. தேர்ச்சி பெற்ற சின்னஞ்சிறிய சிற்றுளிகள் செட்டி நாட்டை ஒரு தெய்வீக சௌந்தர்ய சிற்பச் செல்வங்கள் நிறைந்த நகரமாக ஆக்கியிருப்பதைக் கண்ட ஆங்கிலேயர்களும் அமெரிக் கர்களும் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது உலக மகாயுத்தம் காரண மாக செட்டியார் சமூகத்தின் திடீர் பொருளாதார வீழ்ச்சியால் இப்படிப்பட்ட அருமையான வீடுகள், சில பணத்தேவை காரணமாக ‘டெமாலிஷ்’ செய்யப்பட்டன. கலைப்பொருள் சேகரிப்போர் -மியூசியங்கள் -இவர்களின் பேராவல்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இடம்பெயர்ந்துவிட்டன. மிஞ்சியுள்ள ஒரு சில பழமையான வீடுகளுள் என் வீடும் ஒன்று.

சென்னையை விட்டுச் சொந்த ஊர் வந்ததும் இங்கிருந்து கொண்டு டாக்டர் அழகப்பா செட்டியார் காலேஜ், காரைக்குடி முதலிய இடங்களில் ‘சைன்போர்டு’ பெயிண்டராகப் பணியாற்றி னேன். இந்தச் சமயங்களில் நான் சேகரித்த புத்தகங்கள் மட்டும் சுமார் 5000 இருக்கும். இந்தக் காலம் போல அல்ல, 1952- 60. புத்தகங்கள் மிகமிக மலிவாகக் கிடைக்கக் கூடிய காலம். வாங்கு வதற்கு அதிக ஆட்கள் இல்லாத காலம். ஒரு கிலோ எடையுள்ள பழமையான புத்தகங்களை 5 ரூபாய்க்கோ, சுமார் 100 பழைய புத்தகங்கள் அடங்கிய ஒரு ‘பண்டி’லை 20 ரூபாய்க்கோ வாங்கி விடுவது சுலபமே.

“இன்று நரி முகத்தில்தான் விழித்திருக்கிறோம்; சரியான இளிச்சவாயன்; தலையில் கட்ட சரியான ஆள் அகப்பட்டான்” என்றெல்லாம் நினைத்துக்கொண்டு என்னிடம் புத்தகங்களை விற்கும் வியாபாரிகள் அநேகம் பேர்கள். குண்டூசி முதல் கோட்டைக் கொத்தளங்கள் வரை வாங்கி விற்கக்கூடிய தெரு வியாபாரிகள் இவர்கள். பழைய புத்தகக் கடைகளும் கிட்டத்தட்ட இப்படிதான். டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள் பதிப்பித்த ஒரு சீவகசிந்தாமணி முதல் பதிப்பை (1887) 5 ரூபாய்க்கும், லண்டனி லிருந்து வெளிவந்த 1867ல் ‘தி புல்டர்’ என்ற சஞ்சிகை ஒரு வருஷ வால்யூமை 20 ரூபாய்க்கும், கொக்கோகம் வரைபடங்களுடன் கூடிய ஒரு பழைய பதிப்பை 50 ரூபாய்க்கும் வாங்குவது சாத்திய மாகவே இருந்தது. புத்தகங்கள் சேகரித்த விஷயத்தில் எனக்குப் பலவிதமான அனுபவங்கள், அவஸ்தைகள், சந்தோஷங்கள் எல்லாம் உண்டு.

ஒரு நாள் இரவு மைலாப்பூர் லஸ் கார்னரில் இருந்த நடைபாதை புத்தகக்கடையில் கையிலிருந்த 30 ரூபாய்க்கும் புத்தகம் வாங்கி விட்டேன். புத்தகக்கட்டுடன் நான் வழக்கமாகத் தங்கும் இடத்திற்குப் போய்ச் சேரும்போது மணி பத்து. அன்று இரவு பெரு மழை வேறு. தூங்குபவர்களை எழுப்ப மனமின்றி தாகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்த மழைத் தண்ணீரை நாலு டம்ளர் குடித்தேன். மறுநாள் காலை ஆறு மணிக்கே ஜன்னி கண்டு விட்டது. ஒரு வாரம் மரணப் படுக்கை. மயிலாப்பூர் மேற்கு மாட வீதியில் டிஸ்பென்சரி வைத்திருந்த டாக்டர் அவதானி என்பவரின் உதவியினால் பிழைத்தேன். நூறு ரூபாய்ச் சிலவு. புதுக்கோட்டை யில் ஒரு பழைய புத்தக வியாபாரியிடம் புத்தகங்கள் இருப்பதாகவும் அவைகளை அவர் அப்படியே விற்க விரும்புவதாகவும் கேள்விப் பட்டு நானும் என் மனைவியும் அங்கு சென்றோம். கிழக்கு 4ஆம் வீதியில் நான்கே அடி அகலமும் 30 அடி நீளமும் உள்ள ஒரு சிறிய வீடு. வெளிப்பக்கம் மூன்றுபேர் பேசிக்கொண்டிருந்தனர். வயதான அம்மாள் சொன்னார்: “இன்றோ நாளையோ - நிச்சயம் அமாவாசை தாண்டாது. ”வீட்டிற்குள் நுழைந்ததுமே ஒரு சகிக்க முடியாத நெடி. கெட்ட நாற்றம். பாதை பூராவும் அசிங்கம். தொடர்ந்து வந்தது குமட்டு இருமல் சத்தம். எப்படியோ உள்ளே போய்விட்டேன். எனது மனைவி நெடி தாங்கமல் நாலு வீடு தள்ளி ஒதுங்கிவிட்டாள்.

புத்தகங்களை விற்க விரும்பியவர் 60 வயது நிறைந்த காச நோயாளி. பேசக் கூடச் சக்தியில்லை. அவரைச் சுற்றிலும் புத்தகங்கள். பல புத்தகங்கள் நைந்தும், கிழிபட்டும், நனைந்தும், எலிகளால் கடிக்கப்பட்டும் கிடந்தன. சுமார் நூறு புத்தகங்கள் மட்டும் ஒரு ஹார்லிக்ஸ் அட்டைப் பெட்டியில் அடுக்காக இருந்தன. எல்லா மாக மொத்தம் இருநூறு புத்தகங்கள் இருக்கலாம். அதில் 70-- 80 வருடங்களுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டவை. சுமார் 50- -60 தேறும்.

அவரது மனைவிதான் விலை சொன்னார். ரூ. 750ல் ஆரம்பித்த பேரம் ரூ.600ல் முடிந்தது. எல்லாம் ஓரிரு நிமிடங்களில்! புத்தக உரிமையாளர் இடையிடையே இருமலுடன் சொன்னார்: “நிற்கிறீர்களே உட்காருங்கோ” - (மனைவியைப் பார்த்து) என்னடி பேசாம நிற்கிறே? ஒரு காபி வாங்கிண்டு வாடி.” பழைய புத்தகம் வாங்கப்போனால் அத்தனை மரியாதை, அந்த நாளில்! எனக்கு ரவிவர்மா பழைய அச்சுப் படங்கள் கிடைத்த விதம் இது:

ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு தேவகோட்டை என்ற ஊரில் ஒரு வைத்தியர் வீட்டில் மருத்துவ நூல்கள் இருப்பதாகச் சொல்லி ஒரு புரோக்கர் என்னை அங்கு கூட்டிச் சென்றார். வைத்திய ருடைய மனைவியார் சிறுது பெரிதான சுமார் 100 புத்தகங்களை என் முன்பு கொண்டு வந்து வைத்துவிட்டு “இதெல்லாம் ரொம்ப நல்ல புத்தகங்கள்; அவர் இருந்தால் தரவே மாட்டார்; நல்ல விலை தருவீர்கள் என்று புரோக்கர் சொன்னதால்தான் சரி என்றேன்” என்றார்.

சுமார் 20 புத்தகங்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியானவை. மற்றவை 1910 முதல் 1930 வரை வெளிவந்தவை. போகர் 7000, அகஸ்தியர் எழுதிய சில நல்ல நூல்களும் இருந்தன. “விலை என்ன?” என்று கேட்டேன். “பார்த்து நல்லபடியாகக் கொடுங்கள்” என்றார் புரோக்கர். இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்ட வைத்தியரின் மனைவி அதை திருப்பித் திருப்பிப் பார்த்தார் கலவரத்துடன்.

“நூறு ரூபாய் நோட்டுதான்” என்று தெளிவுபடுத்தினார் புரோக்கர். அடுத்து எனக்கு ஏகப்பட்ட உபசாரம். காப்பியைக் குடித்துக் கொண்டிருந்த போது எனது பார்வை அங்கு இருந்த ஒரு ஸ்கிரீனின் மத்தியில் சுமார் ஒரு சதுர அடி அளவு துணி கிழிந்த ஓட்டையாக இருந்த இடத்தில் ஒரு பெரிய படத்தை வைத்து 4 பக்கம் குண்டூசியினால் குத்தப்பட்டிருந்ததைப் பார்த்தேன். பம்பாயில் அச்சிடப்பட்ட ரவிவர்மா ஓவியம்.

புரோக்கர் அந்த அம்மாவிடம் போய் ஏதோ சொன்னார். உடனே அந்த அம்மாள் உள் வீட்டிற்குச் சென்று ஒரு பெரிய ரோலை தூக்கி வந்து என் முன்புவைத்தார். பூராவும் சுமார் 60, 70 வகையான ரவிவர்மா பழைய அச்சுப் படங்கள். எல்லாம் பெரிய அளவிலானவை. படங்கள் இத்துப் போயும் கார்னர்கள் ஒடிந்தும், மடித்தால் ஒடியக் கூடியதாகவும் இருந்தது. எப்படிப் பார்த்தாலும் உருப்படியாக 50 தேறும். நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, “ஏதம்மா?” இவ்வளவு படங்களும்? என்றேன்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தாத்தா இங்கு பஸ் ஸ்டாண்டு அருகே ஒரு கண்ணாடி படக்கடை வைத்திருந் ததாகவும் அவருக்குப்பின் அதை நடத்த யாரும் இல்லாததால் தன் வீட்டுக்காரர் அந்தச் சாமான்களை இங்கு கொண்டு வந்து போட்டார் என்றும், இதே போல மேலும் 200 படங்களுக்கு மேல் இருந்ததாகவும், அவற்றையெல்லாம் தனது மகன் ஒவ்வொன்றாக பட்டம் விட்டுவிட்டான் என்றும் கூறினார்.

“இதை நீங்கள் வாங்குவீர்கள் என்று தெரிந்திருந்தால் அந்தப் பயலை ஒரு படத்தைக்கூடத் தொடவிட்டிருக்க மாட்டேன்” என்று சொன்னார். வெளியே வந்ததும் புரோக்கரிடம் “பாவம் . . . அந்த அம்மாள் ரொம்ப நல்ல மாதிரியாக இருக்கிறார்கள், அந்தச் சின்னப் பையன்களிடம் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுங்கள்” என்று சொல்லி முப்பது ரூபாயைக் கொடுத்தேன். “அட நீங்க வேறு, இடம் காலியானதைப் பற்றி அந்த அம்மாள் இப்போ எவ்வளவு சந்தோஷமாக இருப்பாங்க தெரியுமா?” என்று சொல்லிவிட்டு ரூபாயைத் தனது பைக்குள் வைத்துக் கொண்டார், அவர்.

வைஷ்ணவர்களுக்குத் திருப்பதி எப்படி ஒரு புண்ணிய ஸ்தலமோ, சைவர்களுக்குக் காசி எப்படி ஒரு புண்ணிய «க்ஷத்திரமோ அதே போல என் புத்தகச் சேகரிப்பாளர்களுக்குச் சென்னை மூர்மார்க்கெட் ஒரு புண்ணியஸ்தலம். எத்தனை தடவை இந்த ஸ்தலத்துக்கு யாத்திரை போய்வந்தா லும் அலுப்போ, சலிப்போ தோன்றுவதில்லை. எவ்வளவு பணத்தை இழந்து விட்டு வந்தாலும் வருத்தம் தோன்றுவதில்லை: கையில் கொள்ளை கொள்ளையாகப் புத்தகங்களைக் குவித்துவிடக் கூடிய காலமாக இருந்தது முன்பு.

தபால்தலைகள் சேகரிப்பதும் எங்கள் ஏரியாவில் மிகவும் சாத்தியமான காரியம். அநேக வீடுகளில் மூட்டை மூட்டையாக இருக்கும். செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. எதையும் உடனே கிழித்தோ தூக்கியோ எறிந்துவிட மாட்டார்கள். “சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்று பாதுகாத்து வைப்பார்கள்.

அவர்கள் பர்மா, மலாயா, சிலோன், இந்தோ சைனா முதலான நாடுகளில் பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் முதலான வியா பாரங்கள் செய்து வந்தனர். இதனால் கடிதப் போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. நாளைக்கு வம்பு வழக்கு வந்தால் வேண்டுமே என்ற காரணத்தால் கடிதங்களைக் கவர்களுடனே பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருந்தனர். இந்தச் சேமிப்பை நாடித்தான் இன்று பல வெளிநாட்டினர் இந்த ஏரியாவுக்கு வருகின்றனர். அவர்கள் எதிர்பாராத அளவு இங்கு அபூர்வமான ‘மெட்டீரியல்சும்’ கிடைக்கிறது!

1960- -70லும் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் லெட்டர் களை பைல் செய்து கொண்டு கவர்களை (ஸ்டாம்புகளை எடுத்துக் கொண்டோ அல்லது எடுக்காமலோ) குப்பைக் கூடையில் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தபோது இப்பகுதியில் செட்டியார்கள் கவர்களை (அறிந்தோ அறியாமலோ - “எதற்கும் ஆகும்” என்ற நினைவுடன்) டிரங்குப் பெட்டியிலோ மரப்பெட்டி யிலோ கவனமாக அடுக்கிவைத்துக் கொண்டிருந்தனர். செட்டி நாட்டில் அநேக வீடுகளில் இப்படிப்பட்ட கடித செல்வங்கள் உண்டு. ஆனால் எல்லோர் வீடுகளிலிருந்தும் கிடைப்பதில்லை. அவைகளின் மதிப்பை அறியாமல் அழித்துவிடுகின்றனர்.

கணக்கு வழக்குகள் வேறுயாருக்கும் தெரியவேண்டாம் என நினைத்தும், மூட்டை மூட்டையாக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறதே என நினைத்தும், நெல் அவிக்கும்போது அவற்றை விறகுக்குப் பதிலாக நெருப்பில் போட்டு எரித்து விடுகின்றனர். அல்லது ஒரு பொட்டலில் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்திவிடுகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கவர்கள் இப்படி அழிந்துவிட்டன.

பணவசதி படைத்தவர்களிடமிருந்து இந்தக் கவர்மூட்டைகளை வாங்குவது மிகவும் கடினம். நடுத்தரமானவர்களிடமிருந்து பணத்தேவை உள்ளவர்களிடமிருந்து மட்டுமே இவற்றை விலை கொடுத்து வாங்க முடியும். சமீபத்தில் எனக்குத் தெரிய இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று தேவகோட்டை என்ற ஊரில் நடந்தது. 1860 முதல் 1940 வரையிலான மலாயா ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட கவர்கள் அடங்கிய சுமார் 10 மூட்டைகள் ஒரு இடத்தில் வைத்து நெருப்பை வைத்துக் கொளுத்தி அழித்தனர். கடைசி நிலையில் அதில் சுமார் 200--300 கவர்கள் என்னிடம் வந்து சேர்ந்தன. அவ்வளவும் அபூர்வமான கவர்கள். அதாவது பிரிட்டன் ஸ்டாம்புகள்; மலாயாவில் உபயோகிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவை. “Great Britain used in Malaya” என்ற வகையைச் சேர்ந்தவை, தபால் தலைகளைச் சேகரிப்பவர்களுக்கு இப்படிப் பட்ட கவர்கள் ஒரு அபூர்வ சரக்கு. அந்தப் பத்து மூட்டைகளிலும் என்னென்ன அபூர்வமான கவர்கள் இருந்தனவோ?

இன்னொரு சம்பவம்: இந்தக் கோட்டையூரிலேயே ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஒரு லட்சாதிபதி வீட்டில் இப்படிப்பட்ட கவர்கள் 100 மூட்டைகள் இருந்தன. வீட்டிலிருந்த அடைசல்களை ஒழிக்கும் காரணமாக அவற்றை நெருப்பு வைத்து அழித்துவிட முடிவு செய்தனர். உடனே அவருக்குச் சொந்தமான பஸ்ஸைக் கொண்டு வந்து இரண்டு பஸ் நிறைய அவற்றை அள்ளிப் போட்டு அவர்களுடைய ஸ்கூலிலேயே ஒரு வெற்று இடத்தில் 4- 4 மூட்டையாகப் போட்டு அவ்வளவையும் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டனர். இந்த அழிந்த மூட்டைகளின் மதிப்பு அந்த லட்சாதிபதியின் சொத்தைவிட அதிகமானது. அந்த லட்சாதிபதிக்கு மலாயா, பர்மா முதலிய 15 ஊர்களில் கொடுக்கல் வாங்கல் வியாபாரம். அழிந்த அத்தனை லட்சக்கணக்கான கவர்களும் (1840- 1940) மொத்தம் 100 வருட சரித்திரங்களைக் கூறுபவை.

இந்த லட்சாதிபதி வீட்டிலிருந்து கவர் மூட்டைகள் அழியப் போகிறது என்று துப்பு தெரிந்த ஒரு பழைய சாமான் வியாபாரி இதை வாங்க ரொம்பவும் முயற்சி செய்தார். ரூ.3000 வரை தருவதாகச் சொல்லியும் லட்சாதிபதியும் கணக்குப்பிள்ளைகளும் சம்மதிக்கவில்லை. பெரிய பஸ் இரண்டும் ஸ்கூலை நோக்கி ‘ஸ்டார்ட்’ ஆகிவிட்டது. நம்பிக்கை இழக்காத வியாபாரி பஸ்ஸைப் பின் தொடர்ந்தார். வியாபாரி ஸ்கூல் போய்ச் சேரும்போது அநேக மூட்டைகள் நெருப்பில் அழிந்து கொண்டி ருந்தன. வியாபாரிக்கு ஏதோ ஒரு சபலம். கடைசி மூட்டையை நெருப்பில் தூக்கிப்போட்டுக் கொண்டிருந்த வேலையாளிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். உடனே வேலையாள் ஒரு பெரிய கம்பை எடுத்து வெந்து கொண்டிருந்த ஒரு மூட்டையை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளினார். வெந்ததுவும் வேகாததுமாக 100 கவர்களும் 2000 உண்டியல்களும் சில ரெக்கார்டுகளும் கிடைத்தன. வியாபாரி மூலம் அவைகள் அனைத்தும் என்னிடம் வந்துசேர்ந்தன. கிடைத்த கவர்களில் பெரும்பகுதி அபூர்வமானவை. (Rangoon to akyab cover with akyab due mark 1880).

கிடைத்த ரெக்கார்டுகளிலும் சில அபூர்வமானவை. நூறு வருடங்களுக்கு முன்பு கல்கத்தாவில் செட்டியார்கள் செய்த வியாபாரங்கள் பற்றிய ஒரு அரிய உண்மையை - இதுவரை வெளிவராத உண்மையைத் தெரிவிக்கக்கூடியவை. அதாவது நூறு வருடங்களுக்கு முன்பு செட்டியார்கள் பணத்தை அதிக வட்டிக்குக் கொடுத்துச் சம்பாதிக்கவில்லை. அதிக வட்டிக்கு வாங்கியே சம்பாதித்திருக்கிறார்கள் என்ற உண்மையே அது. அத்துடன் ஒரு செட்டியாரின் ஏஜென்ட் என்ற ஒரு காரியஸ்தர் ஒரு சேட்டினிடமோ ஒரு மார்வாடியிடமோ பத்து லட்ச ரூபாய்கள்கூட ஒரு நிமிடத்தில் ஒரே கையெழுத்தில் வாங்கக்கூடிய அளவுக்குச் செட்டியார்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர் என்பது தெரிந்தது.

காரண காரியம் ஒரு எண்ணம்-அல்லது ஒரு பயம். - இவற்றின் மதிப்புத் தெரியாத ஒரு அறியாமை. - இவை எல்லாமாகச் சேர்ந்து இப்படி எவ்வளவோ செல்வங்களையும், சரித்திரங்களையும் அழித்துவிட்டன. இருந்தபோதிலும் வேறு இடங்களில் மிச்ச மீதமிருந்த சில லட்சக்கணக்கான கவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டன. இதற்கு முற்றிலும் நானே காரணம் என்பது எனக்கு மகிழ்ச்சிதான். வெளிநாட்டினர் மலாயா, பர்மா, இந்தோசைனா முதலிய கவர்களில் மிக மிக ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். உதாரணம்: எனக்கு பிரௌட்-பெய்லி கோ லிட்டிலிருந்து வந்த கடிதம்.

“அன்புள்ள திரு முத்தையா, நான் மலேயா, பர்மாவிலுள்ள செட்டியார்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு அவை கிடைக்கும் மூலாதார இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கல்கத்தாவிலும் தென்இந்தியாவிலும் உள்ள சில வியாபாரிகளிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் உங்களிடம் இதுபோல் நிறைய இருப்பதாகச் சொன்னார்கள். இது சரிதானா?”

இப்படிப் பல வெளிநாட்டினர் என்னை நாடினர். அவர்களில் மலாயாவில் ஒரு பெரிய பிலெட்டிலிக் கம்பெனி வைத்துள்ளவரும் ஒருவர். அவருக்கு என்னிடம் இருந்த மலாயா கவர்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தேன். அங்கே இருந்த அவருடைய கஸ்டமர் ஒருவர், ‘அநேக அரிய கவர்கள் செட்டி நாடு என்ற ஒரு பகுதியிலிருந்துதான் வந்துகொண்டிருக்கிறது’, என்பது தெரிந்ததும் அவரே அடுத்த ஓரிரு மாதங்களில் செட்டிநாடு வந்து சேர்ந்தார்.

வந்ததும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்தது. அடுத்தடுத்த வந்து விளம்பரம் செய்தார். மேலும் மேலும் பயன் ஏற்பட்டது. ஒரு இரண்டு வருட இடைவெளிக்குள் மிச்சமீதமிருந்த லட்சக்கணக் கான கவர்களும் அவரது கைக்கு வந்து சேர்ந்துவிட்டன. இதன் மூலமும் பல அரிய கவர்கள் – Postal Histories- காப்பாற்றப்பட்டி ருக்கின்றன.

இப்படி நான் பதினாறாயிரக்கணக்கான புத்தகங்கள், சஞ்சிகைகள், லட்சக்கணக்கான கட்டிங்ஸ்கள், ஆரம்ப காலம் முதல் வெளிவந்த நாடக நோட்டீஸ்கள், கல்யாண அழைப்பிதழ்கள், சினிமாப் பாட்டுப் புத்தகங்கள், ஓவியங்கள், அச்சுப் படங்கள், பழைய கடிதங்கள், பழைய டாக்குமென்ட்ஸ் முதலிய ரெக்கார்டுகள், சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த மரப் பொம்மைகள், தீமெட்டிக்ஸ் ரக வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள பதினாறாயிரக் கணக்கான தபால் தலைகள், 1850லிருந்து வெளிவந்த Sale Deed Stamp Papers, Hundies வண்ண வண்ண கலைப்பொருள்கள் இவை அனைத்தும் சேர்த்தேன்.

புத்தகங்களோ, சஞ்சிகைகளோ நல்ல விலை கொடுத்து வாங்குவோர் அல்லாத காலத்தில் நான் ஒருவன்தான் எங்கள் ஏரியாவில் கிடைத்த அனைத்தையும் அவர்கள் குப்பைகள் என நினைத்த டிராமா நோட்டீஸ் உள்பட அனைத்தையும் வாங்கினேன். ஐந்து லட்ச ரூபாய்க்கான புராதன புரோநோட் ஒன்று ‘குப்பையில்’ கிடைத்தது. -

நான் புத்தகங்களை வாங்கி இராவிட்டால் எவ்வளவோ ஆயிரக்கணக்கான புத்தகங்கள் (பல அரிய புத்தகங்கள் உட்பட) பலகாரக்கடைகளில் பலகாரம் மடித்துக் கொடுப்பதற்காகவே கிழிக்கப்பட்டிருக்கும். அநேக அரிய புத்தகங்களை இந்தப் பட்சணக் கடைகளில், பதிலுக்கு நியூஸ் பேப்பர்களைக் கொடுத்துவாங்கினேன்.

சுமார் 5000 புத்தகங்கள் அளவில் வைத்துக்கொண்டு அதை நிர்வகிப்பது, ஒழுங்குபடுத்துவது, உபயோகிப்பது, நினைவில் வைத்துக் கொள்வது, எல்லாம் மிகச் சுலபம்தான். ஆனால் பதினா யிரக்கணக்கில் சேர்த்துவிட்டால் என்ன செய்வது? எப்படிப் பாது காப்பது? இந்தக் கேள்விகளுக்கு நான் கண்ட விடைகள் மூலம்தான் சமுதாயத்தில் என்னையும் உபயோகமுள்ள பணியாளனாகக் கடவுள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

சேகரித்த புத்தகங்களைப் பாதுகாக்க இடவசதி, ஷெல்ப் வசதிகள் முதயலின அதிகம் வேண்டும். 1972இல் சுமார் 4000 அடியில் புதிதாக ஒரு பங்களா கட்டிக்கொண்டேன். எனது கலெக்சனுக்கு இந்த வீடும் போதவில்லை. இந்த நிலையில் நான் வேறு சில வீடுகளை வாடகைக்குப் பிடித்து அதில் புத்தகங்களைப் பாதுகாத் தேன். இருந்தது பல நல்ல நூல்கள் கரையான்களாலும், எலிகளாலும், மழையாலும் சேதமாகிவிட்டன. இது ஒரு மகத்தான நஷ்டம்.

புத்தகப் பாதுகாப்பில் பல பிரச்சனைகள். புத்தகத்தை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்தால் அடுத்த சில மாதங்களிலேயே எல்லாப் புத்தகங்களும் ராமாயணப் பூச்சிகளால் பஞ்சர் ஆக்கப்பட்டு விடும். இப்படி பஞ்சர் ஏற்படாமல் இருப்பதற்காக நான் “காமாக்சீன்” என்ற பூச்சிக்கொல்லி மருந்தை (வெண்மை நிறமுள்ள பவுடர்) புத்தகங்களின் இரண்டு பக்க உட்புற அட்டை களிலும் தூவி வைப்பது வழக்கம்! இதன் நெடி மிகவும் கேடு பயக்கத்தக்கது; நாளடைவில் உடலையே உருக் குலைத்துவிடும் தன்மை வாய்ந்தது. இப்படித்தான் என் உடல் கெட்டுவிட்டது. தூசி, இருட்டு இவைகளெல்லாம் புத்தகங்களின் பகைவர்கள், அதே சமயம் இந்தப் பகைவர்களே புத்தகப் பூச்சிகளின் நண்பர்கள். புத்தகங்களைப் பாதுகாக்க முற்படும்போது அவைகளை வெளிச்சமான காற்றோட்டமான இடங்களில் ஷெல்புகளில் புத்தகங்களின் முதுகு தெரியும்படியாக ஒன்றின்மேல் ஒன்று கனம் ஏறிச் சாயாமல் நேராக அடுக்கி வைக்க வேண்டும். தூசி அடையாமல் அடிக்கடி எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். பழைய பேப்பர் கட்டிங்ஸ், டாக்குமென்ட்ஸ், டிராமா, சினிமா நோட்டீஸ், பழைய அச்சுப்படங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றுவது இதைவிட பெரியபிரச்சனை. இத்துப்போன பேப்பர்கள் காற்றுப்பட்டால் கூட கிழிந்துவிடும். ஒவ்வொரு பேப்பருக்கும் அடியில் கார்டு போர்டை வைத்து ‘சலபன்’ கவர் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே இவற்றைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு பேப்பரையும் காப்பாற்ற சராசரி 35 பைசா ஆகும். என்னிடம் உள்ள பதினாயிரக்கணக்கான கட்டிங்ஸ்களும், நோட்டீஸ்களும் இந்த முறையில்தான் காப்பாற்றப்பட்டு ஒழுங்கான முறையில் வைக்கப்பட்டுள்ளன.

1954 மே மாதம் ஒருநாள் சமீபத்தில் ஒரு சஞ்சிகையில் படித்த ஒரு விஷயத்தை மறுபடி நினைவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்தேன். நினைவுக்கு வரவில்லை. அப்போதுதான் எனக்கு ‘இவ்வளவு சிரமப்படுவானேன் நாம் படித்த விஷயங்களுக் கெல்லாம் ஒரு அட்டவணை வைத்துக்கொண்டால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது. உடனே ஒரு பெரிய லெட்ஜரை எடுத்துக்கொண்டு வேலையைத் தொடங்கிவிட்டேன். அன்று ஆரம்பித்த அந்த வேலைதான் இன்று பெரிய அளவில் வால்யூம் வால்யூமாக வளர்ந்துவிட்டது. என் நேரத்தில் பெரும் பகுதியை இந்த வேலை ஆக்ரமித்துக் கொண்டுவிட்டது. ஆனால் இந்த வேலை எனக்குப் பரிபூர்ணமான மன நிறைவையும் திருப்தியையும் அளித்தது!

நான் 1960--_--61இல் திருமணம் செய்துகொண்டேன். அப்போது எனக்கு வயது 34. வருமானத்தில் ஒரு பகுதி வீட்டுச் செலவுக்கும் ஒரு சிறு பகுதி புத்தகச் செலவுக்குமாக ஆகிக்கொண்டிருந்தது. புத்தக செலவு விஷயமாகவே அவளுக்கும் எனக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படும். பொய்யைத் துணையாகக் கொண்டு சமாளிப்பேன். சமாளித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் அவளது முணு முணுப்பு எனக்கு எப்போதுமே ஒரு பிரச்சனை யாகத்தான் இருந்தது: 1968_--69இல் சில அரிய புத்தக விற்பனையின் மூலம் எனக்கு ஒரு துகை கிடைக்கும்வரை! இன்று எனது அழகான வீடு பூராவும் புத்தக மயம், படிக்கக்கூட வசதியான ஒரு இடமோ தனி அறையோ இல்லாத அளவுக்குப் பத்திரிகை களும் புத்தகங்களும் அடைத்துக்கொண்டிருக்கின்றன. வீடு பூராவும் தூசி மயம். இந்த நிலையில் அவளுடைய சகிப்புத்தன்மை ஒரு தியாகம்தான் சந்தேகமில்லை.

1970_-72இல் என் நூலகத்துக்கு “லைப்ரரி சர்வீஸ் இன்டியா” என்ற பெயர் வைத்துக்கொண்டு ஆய்வு செய்பவர்களுக்கு “ப்ரீ சர்வீஸ்” செய்ய ஆரம்பித்துவிட்டேன். எனது இந்தப் பணி வரவர மிகவும் விரிவாக வளர ஆரம்பித்துவிட்டது. மூன்று வருடம் பாடுபட்டுத் தேடிப் பெற வேண்டிய விஷயங்களெல்லாம் எனது நூலகத்தில் மூன்றே நாளில் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு எனது தயாரிப்பு சிறப்பாக இருந்தது.

120 வருடங்களுக்கு முந்திய பாங்கிங் பேப்பர்ஸ், எக்சேஞ்ச், டிராப்ட்ஸ், லோன் அட்மிஷன்ஸ், பேரேடு குறிப்பு முதலான கணக்குகள், அந்தக் கால வட்டி விபரங்கள் அடங்கிய வட்டிச் சிட்டைகள், முதலிய எல்லா ரிக்கார்டுகளும் அதிக அளவில் எனது கலெக்சனில் உள்ளன. இவற்றால் “பாங்கிங் லாஸ் கமிட்டி” “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா” போன்ற அநேகர் பயன் அடைந்தார்கள்.

புத்தகம் சேகரிப்பது , அவற்றை ஒழுங்குபடுத்துவது, படிப்பது, அவற்றைப் பிறருக்கும் பயன்படும்படிச் செய்வது இவற்றை நல்ல ஒரு “ஷேப்” ஆக்குவது இவையெல்லாம் அதிக உழைப்பு மிகுந்த செயல்கள்தான். ஆனால் இதனால் ஏற்படும் மனநிறைவோ சந்தோஷமோ வேறு எதிலும் இல்லை. சத்தியமான வார்த்தை. இன்டெக்ஸ் செய்யும்போது எற்படும் மன உணர்வுகளும் மகிழ்ச்சிகளும் விவரிக்க இயலாதவை. வின்சன்ட் சர்ச்சிலைப் பற்றி படித்து இன்டெக்ஸ் செய்யும்போது அப்பேர் கொண்ட ஒரு சாதனை வீரர் மகாயுத்தம் முடிந்த பிறகு பிரிட்டனில் நடந்த பொதுத் தேர்தலில் ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்பதை சிந்திக்கும் போது, காந்தியடிகளைப் பற்றிப் படிக்கும்போது அடிகள் தென்னாப்பிரிக்க சிறையில் இருந்தபோது அந்நாட்டின் அதிபர் ஜெனரல் ஸ்மட்சுக்கு ஒரு காலணி (மிதியடி) அன்பளிப் பாக அளித்த செய்தியைப் படித்து மனம் நெகிழ்ச்சியுறும்தோறும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு மனம் குழம்பி “புரிந்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு போதாதா” என்று என்னைப்பற்றியே நான் எண்ணிப் பார்க்கிற போதும் ஏற்படுகின்ற மகிழ்ச்சிகள், ஆத்ம சிந்தனைகள், மனவளர்ச்சிகள் எதுவும், விலை கொடுத்துப் பெற முடியாதவை.

புத்தகச் சேகரிப்புடன் எனது ஆசை நின்றுவிடவில்லை. இந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய ஓவியங்கள், மரப்பொம்மைகள், அச்சுப்படங்கள், தபால் தலைகள், ஏட்டுச் சுவடிகள் முதலியனவும் சேகரித்தேன். பெரிய அளவிலான ரவி வர்மா ஓவியங்களின் ஆரம்பகால அச்சுப்பிரதிகளும் தேசீயத் தலைவர்களின் அந்தக் காலப் படங்கள் அனைத்தும் கிடைக்க இயலாத அபூர்வமான வேறு படங்களும் சேகரிப்பில் குவிந்துவிட்டன. குழந்தைகள் விளையாடுவதற்கான மரத்தால் செய்து கொடுக்கப்படும் மரப்பாச்சி என்று சொல்லப்படும் பொம்மைகள், யானைகள், நடைவண்டிகள் (இது குழந்தைகள் நடை பயில்வதற்காக) முதலியவைகள் “செட்டிநாடு” என்று சொல்லப்படும் இப்பகுதிக்கே சொந்தமானவை. இவை மிக மிக நேர்த்தியான கை வேலைப் பாடும் அழகும் மிகுந்தவை.

மரப்பாச்சி பொம்மைகள் அபூர்வ அழகு உள்ளவை. ஒரு தாய் தனது குழந்தைகளுடன் நிற்கும் பாணியில் இருக்கும். பல மாதிரிகளில் இருக்கும். தாயின் முடி ஒப்பனை, உடை அலங்காரம், அணிகலன்களின் சிறப்பு, எடுப்பான தோற்றம் இவை அனைத்தும் கண்கொள்ளாக் காட்சி. குழந்தைகளின் அழகுத் தோற்றம் தெய்வீக சௌந்தர்யம் மிக்கது, தொன்று தொட்டு வந்த பரம்பரை சிற்பாச்சாரியார்களால் செய்யப்பட்டவையாதலால், இதன் அழகு பிரமிக்கத்தக்கது. துரதிஷ்டவசமாக இப்படிப்பட்ட Master wood carvers இப்பொழுது அருகி விட்டனர். இப்படிப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளுக்கு என்று எனது கலக்சனில் ஒரு சிறப்பான இடம் உண்டு.

இப்பொழுது எனது சிரமம் எல்லாம் இந்தக் கலெக்சன்களை எலி, கரையான், ராமாயணப்பூச்சி முதலியவற்றினின்று காப்பாற்றுவது கஷ்டமாக உள்ளது என்பதுதான். அபூர்வமான பதிப்புகளையும் படங்களையும் என்னால் கடைசிவரை அழிவினின்றும் காப்பாற்றிவிட முடியுமா என்ற கேள்விக்கு என்னால் நம்பிக்கையான விடைகாண முடியவில்லை.

சில வெளிநாட்டு நிறுவனங்கள் எனது கலெக்சன்களைப் பெரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவும் முன் வந்தன. எனக்கு உற்சாகமூட்டிய போதிலும் அவ்வளவு கலெக்சன்களுக்கு உடனடியாக லிஸ்ட் தயாரிக்க இயலாத காரணத்தினாலும் எனக்கு அப்படி ஒன்றும் விற்றுவிட வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் எனது கலெக்சன்கள் விற்கப்படவில்லை. எனது வாழ்க்கை, புத்தகம் தேடி இரவு பகல் என்ற வித்தியாசமில்லாத உழைப்பாகவே அமைந்துவிட்டது. அது என் பாக்கியம். பயனோ அளவற்றது. ஒரே ஆனந்தமயம். இறைவனின் அருட்கொடை களில்கூட புத்தகமே மிகமிக மேலானது!

எனது வாழ்க்கையிலேயே துக்கம், சந்தோஷம் என்பது இரண்டுதான். சந்தோஷம்: டாக்டர் அய்யரவர்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது. வேதனை: சமீபத்தில் மூர்மார்க்கெட் என்னும் புனிதத் தலம் நெருப்பு பற்றி எரிந்து போனது.

- ரோஜா முத்தையா

(இக்கட்டுரை‘ஓம்சக்தி’ இதழில், 1985 நவ - டிசம்பர் மாதங்களில் வெளிவந்தது.)

Pin It