மகாபோதி' பத்திரிகையின் 1950 மார்ச் இதழில், "இந்து மதத்திலும் பவுத்தத்திலும் பெண்களின் நிலைமை' என்ற தலைப்பில், லாமா கோவிந்தா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவருடைய கட்டுரை, 1950 சனவரி 21இல் "ஈவ்ஸ் வீக்லி' என்ற இதழில் வெளியான ஒரு கட்டுரைக்கான பதிலேயாகும். மேலே குறிப்பிட்ட கட்டுரையில், புத்தரின் அறிவுரைகள் தான் இந்தியாவில் பெண்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒவ்வொரு பவுத்தரும் முன் வர வேண்டியது போன்றே, லாமா கோவிந்தாவும் தனது கடமையைச் செய்திருந்தார். ஆனால் விஷயம் இத்துடன் முடிந்து விட்டதாகக் கருதிவிடக்கூடாது.

புத்தருக்கு எதிராக இத்தகைய ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவது, இது முதல் முறையல்ல. அவருடைய மேதமையைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், "ஈவ்ஸ் வீக்லி'யில் எழுதிய எழுத்தாளரைக் காட்டிலும் கூடுதல் அதிகாரம் கொண்டவர்களால், இவ்வாறு அடிக்கடி குற்றம் சுமத்தப்படுகிறது. எனவே இந்தப் பிரச்சினையின் அடிவேருக்குச் சென்று, மீண்டும் மீண்டும் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டின் அடித்தளத்தையே ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்தக் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானதாகவும் வஞ்சகமானதாகவும் இருப்பதால், இதை மேற்கொண்டு ஆய்வு செய்வதை "மகாபோதி' வாசகர்கள் வரவேற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

புத்தருக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டு இரண்டு நிலைகளின் மீது மட்டுமே ஆதாரப்பட முடியும். சாத்தியமான முதல் காரணம், ஆனந்தா என்பவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு, புத்தர் அளித்ததாகக் கூறப்படும் பதிலாக இருக்கக்கூடும் (அத்தியாயம் 5 இல் மகாபரிநிர்வாண சத்தா). அது, கீழ்வருமாறு : “9. பெண்களிடம் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்வது? (என்று ஆனந்தா கேட்டார்). ஆனந்தா! அவர்களைப் பார்க்கõதவர்களாக இருந்துவிட வேண்டும். ஆனால், நாங்கள் அவர்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? அவர்கள்

எங்களிடம் பேச நேரிட்டால், மேன்மை தாங்கியவரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனந்தா! விழிப்புடன் இருக்க வேண்டும்.'' பிரச்சனையிலுள்ள இந்த வாசகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடப்பட்ட மகாபரிநிப்பான சத்தாவில் காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் விஷயம் என்னவெனில், அந்த வாசகம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல. இந்த வாசகத்தின் அடிப்படையில் எந்த வாதமானது கூறப்பட வேண்டுமெனில், அந்த வாசகம் மூலமானது, மெய்யானது என்றும், பிக்குகளால் பிற்காலத்தில் இடைச் செருகல் செய்யப்பட்டது அல்ல என்றும் நிரூபிக்க வேண்டியது அவசியமல்லவா? இதுவே முக்கிய விஷயமாகும்.

புத்தரின் மய்யமான அறிவுரைகளை அறிந்துள்ள எவரும் "சுத்த பிடாகா”வைப் படித்த பின்னர் மிகவும் வியப்படைவர். ஏனெனில், அது இப்பொழுது கற்பனையான திரைச்சீலையால் மூடப்பட்டு, முற்றிலும் பார்ப்பனிய கருத்துகளின் இடைச்செருகலால் உருச்சிதைக்கப்பட்டுக் காணப்படுகிறது. அந்தக் கருத்துகள், மூல பவுத்த சிந்தனைக்கு முற்றிலும் அந்நியமானவையாகும். துறவுசார்ந்த லட்சியங்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக, துறவுசார்ந்த கருத்துகளால் அளிக்கப் பெற்றுள்ள திரிபுகள் மற்றும் திசை திருப்பங்களால் உருச்சிதைக்கப்பட்டுள்ளன. எனவே, இதனால் ஒருவர் வியப்படைந்து திருமதி. ரைஸ் டேவிட்சுடன் சேர்ந்து பின்வருமாறு கேட்கத் தோன்றுகிறது:

“(சுத்தபிடாகா)வின் இந்தப் பக்கங்களில் கவுதமர் எங்கே இருக்கிறார்? அவற்றில் எந்த அளவு, எவ்வளவு குறைவாக, மூலவாசகத்துடன் தெளிவாகவோ, குழப்பமாகவோ கலப்படம் செய்யப்பட்டு, மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது? காலங்காலமாகத் தொடர்ச்சியாக, கதை கூறுபவர்களால், போதகர்களின் கற்பனைத் திட்டங்களால் இட்டு நிரப்பப்பட்டுள்ளது? மக்களின் போதகர்களால் அல்ல, வாய்மொழியாகக் கற்றுக் கொள்ளும் மாணவர்களால். அந்த முயற்சிகள் அடிக்கடி அருவருப்பான முறையில், நீண்டகாலமாக சரளமாகக் கூறப்பட்டவற்றை ஆசிரியர்கள் எழுத்து வடிவத்தில் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் – வர்ணனையாளர்கள், போதனையாளர்கள், ஆசிரியர்கள். தேர்வு செய்த வாழ்க்கையின் லட்சியங்கள், உலகின் மற்றவர்கள் தேர்வு செய்தவற்றோடு மாறுபடுகின்றன. அவர்கள் எந்த அளவுக்கு உலகியல் சார்ந்ததாக இல்லாமல் இருந்தார்களோ, அந்த அளவுக்கு அவை வேறுபட்டன. இந்த உருச்சிதைந்த ஊடகத்தின் வழியாக ஒருவர் படித்தால் என்னவாகும்?''

எனவே, இந்த வாசகம் பிற்காலத்தில் பிக்குகளால் செய்யப்பட்ட இடைச் செருகல் என்று கூறுவதில் மிகையொன்றுமில்லை. முதலில் சுத்த பிடாகா, புத்தர் இறந்து 400 ஆண்டுகள் ஆன பிறகும் எழுதப்படவில்லை. இரண்டாவதாக, அவற்றை தொகுத்து பதிப்பித்த ஆசிரியர்கள் துறவிகளாவர். அந்தத் துறவு ஆசிரியர்கள், துறவிகளுக்காகத் தொகுத்து எழுதினர். புத்தர் கூறியதாகக் கூறப்பட்ட கூற்று, ஒரு துறவிக்கு மதிப்புடையதாகும். தனது திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, இது அவருக்கு அவசியமாகும். எனவே, துறவி ஒருவர் அத்தகைய ஒரு விதியை இடைச் செருகல் செய்வது அசாத்தியமானதல்ல.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 109

Pin It