அச்சு ஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணக் காப்பகங்களின் வரிசையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. செவ்வியல் இலக்கியங்கள், மருத்துவம், குறிப்பாகச் சித்த மருத்துவம், வெகுசன இலக்கியம், நாட்டார் வழக்காறு, இருபதாம் நூற்றாண்டின் வெகுசன நூல்கள், தமிழ் சினிமா, நாடகம், காலனிய அரசு சார்ந்த ஆவணங்கள் எனப் பலதரப்பட்ட ஆவணங்களைக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறது. நூலகங்களின் வளர்ச்சிக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத முக்கியத்துவம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதற்குச் சாட்சியாகத் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கூறலாம். செம்மொழியாகிய தமிழின் தொன்மை பற்றி அதிகமாகப் பேசப்பட்டு வரும் இச்சூழலில் ரோஜா முத்தையா நூலகம் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்கினைப் பற்றிப் பேசுவதும் பதிவு செய்வதும் இத்தருணத்தில் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

வால்டர் பென்ஜமின் தனது நூலகத்தின் ஒழுங்கு -ஒழுங்கின்மை குறித்து, இருவேறு நிலைகளில் தனது மனம் ஊசலாடு வதைப் பதிவு செய்கிறார். இது சேகரிப்பாளர்களுக்கென்றே உள்ள மனநிலை. அதற்கு ரோஜா முத்தையா முதலானோர் விதிவிலக்கல்ல. ரோஜா முத்தையா புத்தகங்களை அலமாரிகளிலும், மேஜைகளிலும் திண்ணையிலும் வீட்டு அடுக்களையிலுமாகத் தனது சேகரிப்பு களை விரித்து, எங்கும் நூல் மயமாகத் தோன்றும்படி வைத்திருந்தாரென்று பலரும் கூறுவர். பல புகைப்படங்கள் அதைச் சித்திரிக்கவும் செய்கிறது. நிறுவனங்களே இப்பிரச்சனையை எதிர்கொள்வது கடினமாக உள்ளது. ரோஜா முத்தையாவின் நூலக மேலாண்மை வியக்கத்தக்க வகையில் இருந்துள்ளது. அவை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஒன்றாகும். அவர் இல்லையென்றால் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சிக்காகத் தரவுகளைத் தேடி அலைந்திருக்க வேண்டும். பல தரவுகளுக்கு இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தைத் தான் நாடியிருக்க வேண்டியிருக்கும். ரோஜா முத்தையா குறிப்பிடுவது போல் இப்புத்தகங்கள் யாவும் பலகாரக் கடைகளில் பொட்டலம் மடித்துக் கொடுக்கப்பட்டிருக்கக்கூடும். சிகாகோ பல்கலைக்கழகம் இதைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் அவை பல்வேறு இடங்களில் சிதறிப் போயிருக்கும். நல்லவேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டுத் தொடங்கி நவீன கல்வி முறையினால் வாய்வழி, செவிவழி அறிவு பரிமாற்றம் அழிந்தது. அச்சு கலாச்சாரத்தின் வருகையால் ஆவணங்கள் அச்சேறின. ஒரு பிரதி, பல படிகளாக மாற்றப்படுவதற்குரிய அச்சியந்திரங்கள் நவீன இந்தியாவின் அறிவு பரவலாக்கலின் ஊடகமாயின. அரிய இலக்கியங்களெல்லாம் அச்சில் ஏற்றப்பட்டு, நாளடைவில் அச்சு சார்ந்த பண்பாடு வந்தது. இவ்வச்சுப் பிரதிகள் இல்லையென்றால் நமது மொழி சார்ந்த தகவல்களை, நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, ஆகையால் அச்சு ஆவணங்களை நாம் பாதுகாக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது.

உலகில் தலைசிறந்த நூலகங்களான இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகம், ஆக்ஸ்போர்டிலுள்ள இந்திய நிறுவன நூலகம், நியூயார்க்கிலுள்ள நியூயார்க் பொது நூலகம், பாரிஸிலுள்ள நேஷனல் பிப்லியோதிக் நூலகம், புதுதில்லியில் நேரு அருங்காட்சி யக நூலகம் போன்ற நூலகங்களின் வரிசையில் ரோஜா முத்தையா நூலகமும் இடம்பெற்றுள்ளது. இந்நூலகம் தமிழ்த் தரவுகள் எங்கெல்லாம் உள்ளன என்ற தகவல்களைத் திரட்டி, அதனைப் பட்டியலிட்டுத் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அளித்து வருகிறது. அத்தகவல்களை நூலகவியல் கோட்பாடு களுடன், நவீன தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு பாதுகாத்து, தெற்காசியாவிலுள்ள பிற நூலகங்களுக்கும் அளித்து வருகிறது.

பழைய, அரிய வரலாற்று ஆவணங்களை மக்கள் உதாசினப் படுத்தி ஒதுக்கினர். ஆனால் ரோஜா முத்தையா பழைய ஆவணங்கள் மீது பற்றுடையவராக இருந்ததனால் மற்றவர்கள் தேவையில்லை என்று தூக்கி எறிந்ததையெல்லாம் சேகரித்தார். சென்னை மூர் மார்கெட் எரிந்து போகாதிருந்தால் அது பண்பாட்டுச் சின்னமாக இருந்திருக்கும். ரோஜா முத்தையா மூர் மார்கெட்டில் பல அரிய ஆவணங்களை வாங்கி கோட்டையூருக்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வந்தார். அமரர் ரோஜா முத்தையாவின் காலத்திற்குப் பிறகு சிகாகோ பல்கலைக்கழகம் இத்தொகுப்பை வாங்கியது. தமிழகத்திற்கே அதைக் கொடையாக அளித்ததை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

நூலகத்தைப் பயன்படுத்துபவர்களில் சிலர் கேட்கும் கேள்விகளில் ஒன்று, - நம் நாட்டின் பண்பாட்டு எச்சங்களைப் பாதுகாப்பதில் நம்மைவிட வெளிநாட்டவர்களுக்கு அப்படியென்ன அக்கறை இருக்க முடியும்? அதற்குப் பல காரணங்கள் இருந்தா லும் மிக எளிதாகச் சொல்லவேண்டுமானால் அவர்கள் வரலாற் றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். பிரிட்டிஷ் நூலகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் அவர்களது பண்பாட்டை மட்டும் பாதுகாக்காமல் உலகத்தில் உள்ள நாடுகளின் அறிவுச் செல்வத்தைப் பாதுகாக்க அக்கறை காட்டுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தரவுகளையும் திரட்டுகிறார்கள். அதே போன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் 1556 முதல் பதிப்பிக்கப் பட்ட உலகிலுள்ள அனைத்துத் தமிழ்த் தரவுகளையும் (நூல்கள், இதழ்கள், இசைத்தட்டுகள், துண்டறிக்கைகள், மற்றும் பிற) தேடி, அதன் பட்டியலை உருவாக்கி வருகிறது.

வரலாறு என்பது எப்போதும் மேல்தட்டு மக்களின் வரலாறாக உள்ளதே தவிர விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதில்லை. வெகுசன மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல் சாரா ஆவணங்களைத் தேடி எங்கே போவது. நல்லவேலை ரோஜா முத்தையா போன்றவர்களின் தொலைநோக்குப் பார்வை யினால் இதுபோன்ற இலக்கியங்களும் இந்நூலகத் தொகுப்பில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. விளிம்பு நிலை ஆய்வுகளின் அவசியத்தைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனம், International conference on Collection, Selection and Erudition: Reading practices and Textual culture in Classical Tamil என்ற கருத்தரங்கை 2009இல் நடத்தியது. அதில் ஆவணத் தொகுப்புகளின் நிலைமை பற்றியும் அவைகள் கிடைக்கும் இடங்கள் பற்றியும் ஆராய்ச்சிக்குத் தேவையான மூல நூல்கள் பற்றியும் பேசப்பட்டது. அதில் கட்டுரைகளை வாசித்த ஆய்வாளர்கள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தை எவ்வாறு எளிதாகப் பயன்படுத்த முடிகிறது என்றும் அங்குக் கிடைக்கும் பல்வேறு செவ்வியல் இலக்கண, இலக்கியங் களையும், இதழ்களையும் பற்றித் தங்களது கட்டுரைகளில் வாசித்தனர். இதேபோல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் நடைபெற்ற வெகுசனப் பண்பாடு பற்றிய கருத்தரங்கில், சினிமா பாட்டுப் புத்தகங்கள், திருமண அழைப்பிதழ்கள், நாடக நோட்டீஸ்கள், விளம்பரங்கள், பிற காட்சிப் படிவங்கள் ஆகியவைகளை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைப் பயன்படுத்தித் தங்களது கட்டுரைகளை வாசித்தனர். அவர்கள் குறிப்பாகப் பேசிய விஷயங்கள் என்னவென்றால், ரோஜா முத்தையா நூலக நூற்பட்டியல் கணினி மயமாக உள்ளதால் ஒரு நூல் இல்லையென்றால் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது, நூல்கள் இந்நூலகத்தில் இல்லையென்றாலும் வேறு எங்குக் கிடைக்கும் என்கிற தகவல்களை அளிப்பது போன்ற சேவைகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். இந்நூலகத்தில் என்ன இல்லை என்றும் அவைகளை விரைவில் தருவித்தால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் பேசினர்.

இந்த இரு கருத்தரங்குகளும் ஒரு புரிதலைத் தந்தன. அவை நூலகத்தைப் பற்றிக் கொடுக்கப்பட்ட மதிப்பீட்டறிக்கை (Status report)யாகப் பார்க்கிறேன். பேராசிரியர் அரசு இந்த இதழுக்கான அவசியத்தையும் இது நல்ல தருணம் என்றும் கூறினார். அது நூலகத்தைப் பற்றிப் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கூறுவதற்கு ஒரு வாய்ப்பாகவே அமைந்துவிட்டது.

தன் வாழ்நாள் முழுவதும் இவ்வாவணங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ரோஜா முத்தையா மரணத்தைத் தழுவினார். ரோஜா முத்தையா உயிரோடு இருக்கும்போது அவரைச் சரியாக கவனித்தவர்கள் யாருமில்லை. ரோஜா முத்தையா ஏன் இவற்றைச் சேகரித்தார், அவருக்கு உந்துதல் என்ன என்ற கேள்விகள் அடிக்கடி எழும். நூல் சேகரிப்பாளர்களுக்கான பிரத்யேகமான மனநிலை என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும். இவைகளை மனத்தில் கொண்டு ரோஜா முத்தையா அவர்களே பதிவு செய்த தகவல்கள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவரைப் பற்றிக் கூறும் கருத்துகள், அவர்கள் எப்படி இந்நூலகத்தை அணுகினார்கள், மேலும் சிகாகோ பல்கலைக் கழகத்தின் இடம், அறிஞர்கள் எவ்வாறு இத்தொகுப்பினைப் பார்க்கிறார்கள், இப்போது நிறுவனமயமாக்கப்பட்டப் பின் எவ்வாறு இயங்குகிறது ஆகிய பல தரவுகளைத் தெரிந்து கொள்வதற்கான ஓர் ஆவணமாக இவ்விதழ் வருகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளின் தொகுப்பாக இந்நூலகம் அமைந்துள்ளது. ரோஜா முத்தையா தொகுப்பின் முக்கியத்துவம்; இந்நூலகம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூற்களைப் பாதுகாப்பது, அதற்குத் தேவையான பொருளுதவி ஆகியவையும் இவ்விதழில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இதழ் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முதலில் ரோஜா முத்தையா அவர்களின் தொகுப்பு, சிகாகோ பல்கலைக்கழகத் தொடர்பு, நிறுவனமான பின் நடந்தேறிய முக்கியப் பணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரோஜா முத்தையா 1985இல் எழுதிய கட்டுரை சேகரிப்பாளர்களுக்கென உள்ள மனநிறைவையும் அவஸ்தைகளையும் பதிவுசெய்வதோடு அவர் சித்திரிக்கின்ற அந்த வரலாறு ஒரு சமூகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. என்னுள் மிகந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாவதாகப் பல துறை வல்லுநர்கள் இத் தொகுப்பினைத் தங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தியதன் மூலம் அவர்கள் கண்டறிந்த ஆவணங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அவைகளைப் படிக்கும்போது ஆராய்ச்சி செய்பவர்களுக்குப் பல தரப்பட்ட ஆவணங்களைப் பற்றியும் அவைகளை எவ்வாறு தங்களது ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாம் என்ற தகவல்களையும் அறியலாம். நூலகத் தொகுப்பின் செழுமையை பிரதிபலிப்பதாகக் கருதலாம். மூன்றாவதாக, நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளைக் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள் அனைத்தும் மூன்று மாதங்களில் எழுதப்பட்டவை.

பேரா. அரசு என்னிடம் இதுபற்றிக் கூறியவுடன் முதலில் நான் தொடர்பு கொண்டது பேரா. குரோவ் அவர்களைத்தான். சரியான நேரத்தில் எனக்குக் குரோவ் அவர்களைச் சந்திக்க ஆலோசனை வழங்கிய கண்ணன் அவர்களுக்கும் நன்றி. மூத்த ஆராய்ச்சியாளர், சிந்தனையாளர், ரோஜா முத்தையாவைச் சந்தித்தவர், ஆவணங்களின் அவசியத்தை நன்கு அறிந்தவர் என்ற வகையில் அணுகினேன். அவர் ஒப்புதல் அளித்ததும் இந்த இதழ் வெளிவந்துவிட்டதாகவே கருதினேன். அவருக்கும், இந்த இதழுக்குக் கட்டுரைகளைத் துரிதமாக எழுதிக் கொடுத்த அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் இந்தத் தருவாயில், இந்நூலகச் சேவைகளைப் பற்றியான புரிதலை எல்லோரும் அறியும் படியாகச் செய்யவேண்டும் என்று ஆலோசனை வழங்கியவரும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழாகக் கொண்டு வரக் காரணமாக விளங்கிய பேரா. வீ. அரசு அவர்களுக்கு நூலகத் தின் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விதழைச் சிறப்பான முறையில் வெளியிட்ட நண்பர் சிவ. செந்தில்நாதன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரா. அரசு அவர்கள் அட்டையில் ரோஜா முத்தையாவின் படத்தை மருது அவர்களை வரைந்துகொடுக்க கேட்கலாம் என்று கூறியவுடன், நான் நண்பர் மருதுவிடம் கேட்டேன். மறுப்பு ஏதும் கூறாமல் உற்சாகத்துடன் வரைந்து கொடுத்தார். அது மட்டுமல்லாமல் அவர் இப்படத்தை வரையும் போது இருந்த மகிழ்ச்சியினை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவருக்கு அனைவரின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விதழ் பலருடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகவும் மேலும் பல கேள்விகளைக் கேட்கத் தூண்டுவனவாகவும் இருக்கும். ரோஜா முத்தையாவைப் பற்றிய சுயசரிதை, இதுவரை வரலாற்றில் பதிவு செய்யப்படாத நிலையில் இவ்விதழ் அக்குறையைத் தீர்த்துள்ளது. ரோஜா முத்தையாவிற்குப் பிறகு இந்நூலகம் பல்வேறு வளர்ச்சிநிலையை அடைந்துள்ளது. இந்நூலகம் குறித்தான வரலாற்றை எழுதுமாறு நண்பர்கள் பலரும் கூறிவருகின்றனர். இவ்விதழ் அதற்கு முன்னோடியாக அமையும் என நம்புகிறேன்.

- க.சுந்தர்

Pin It