தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் எதில் ஒன்றுபடுகிறார்களோ இல்லையோ, சினிமாக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதிலும், அவர்களைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களைச் சுரண்டுவதற்கு அனுமதிப்பதிலும் அவர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அவர்களின் புகழ்ச்சிகளை எத்தனை மணிநேமானாலும் காதுகொடுத்துக் கேட்பதிலும் நிச்சயம் ஒன்றுபடுகிறார்கள்.


ஆசிரியர்

வழக்கறிஞர் காமராஜ்

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

சமூக விழிப்புணர்வு,
74, 4வது தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.
தொலைபேசி எண்: 94434 23638
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆம். எப்போதும் சமூகத்திற்கு எதிராக சிந்தித்து அதைத் திரைப்படமாக உருமாற்றி, மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் திரைத்துறையினர் தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது கலைஞரானாலும் சரி, ஜெயலலிதாவானாலும் சரி அவர்களை ஏதாவது ஒரு காணம் வைத்து பாராட்டு விழா நடத்தி தங்கள் மக்கள் விரோத பிழைப்பை தொடர்ந்து நடத்துவதற்கு ஆட்சியாளர்களின் நேடி அல்லது மறைமுக அனுமதியைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகாலமாக அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமா துறையினர் மாறாமல் சொல்லும் ஒரே வசனம் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வந்துள்ளார். இது எங்களுக்குப் பெருமை என்று. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் அதனையே சிந்திக்கின்றனர். அதனைப் பெருமையுடன் எண்ணுகின்றனர். என்னமோ திரைப்படத் துறையினர் மட்டுமே வாக்களித்து தாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்ற நினைப்பில்.

ஆளும் ஆட்சியாளர்களுக்கு இவர்களின் எல்லா அயோக்கியத்தனங்களும் தெரிந்திருந்தாலும் சினிமாக்காரர்களின் ஜால்ரா சத்தம் அவர்களுக்குப் பிடித்திருப்பதால், மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போதும்கூட, சினிமாக்காரர்களின் குறையைக் கேட்பதற்கும் அவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை விரும்புகின்றனர். தவறாமல் கலந்து கொள்கின்றனர்.

அதிலும், கலைஞர் ஆட்சிக்கு வந்து விட்டால் திரைப்படத் துறையினருக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே ஏதாவது ஒரு பெயரில் கலைஞருக்குப் பாராட்டு விழா நடத்தி விடுகின்றனர். கலைஞரும் இவர்களின் பாராட்டுக்களை வெகுவாக ரசிக்கிறார். மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளவும் செய்கிறார். தற்பொழுது கலைஞர் ஆட்சியின் பொழுது திரைப்படத்துறையினர் அனுபவிக்கும் சலுகைகள் சொல்லி மாளாது. தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு, கேளிக்கை வரி குறைப்பு, திரைப்படக் கட்டணக் கொள்ளை என்று சலுகைகளில் நனைகின்றனர்.

சமீபத்தில் ரஜினி நடித்த "சந்திரமுகி' திரைப்படம் வெற்றி விழாவில் கலைஞர் கலந்து கொண்டு, ரஜினியை வானளாவ புகழ்ந்துள்ளார். படங்களில் வீராவேச வசனம் பேசி, பிளாக்கில் கொள்ளை விலைக்கு டிக்கெட்டை தனது ரசிகர்களிடம் விற்று ஏமாற்றும் ரஜினி எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் அவர்களை அண்டிப் பிழைப்பு நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதே ரஜினி சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களித்தவரும் கூட. தற்பொழுது கலைஞரைப் புகழ்ந்து விட்டு தனது "சிவாஜி' படத்தின் டிக்கெட்டை ஆயிரக்கணக்கில் தியேட்டர் அதிபர்களுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு பல கோடியைச் சுருட்டியிருக்கிறார். கலைஞரும் அவர் கொள்ளையடித்ததைக் கண்டு கொள்ளவில்லை. அவர் விழாவில் பங்கேற்று, அவரைப் புகழ்ந்திருக்கிறார்.

தமிழ் மக்களைப் போல, தமிழ் ஆட்சியாளர்களையும் பிடித்திருக்கும் சினிமா நடிகர்களின் மோகம் என்று தீரும் என்று தெரியவில்லை?

அதே நேரம், சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்டு பட்டினியால் வாடும் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காக, தமிழகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள உணவுப் பொருட்கள், உடைமைகள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பபட்டவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு உரிய அனுமதி கிடைக்காமல், தமிழகம் முழுவதும் உள்ள கிடங்குகளில் கெட்டுப்போய்க் கிடக்கிறது. தமிழர்கள் அங்கு உரிய மருந்துப்பொருள் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், அவர்களுக்கு உதவுவற்காக சேகரிக்கப்பட்ட பொருட்கள் கடந்த ஒரு வருடங்களாக அனுப்ப வழியில்லாமல் கிடங்குகளில் கெட்டுப்போய்க் கிடக்கிறது. பலவழிகளில் முயன்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புவதற்கு உரிய அனுமதி கிடைத்தபாடில்லை. இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டால் இதில் தீர்வு கிட்டக்கூடும். இதில் முதல்வர் தலையிடக் கோரியும். உரிய அனுமதியைப் பெற்றுத் தரக் கோரியும் தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் இருந்தும் உரிய அனுமதி கிட்டியபாடில்லை.

ஒருவேளை திரைத்துறையினரை வைத்து கலைநிகழ்ச்சி நடத்தி பிரச்சினையைக் கூறினால் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரோ தெரியவில்லை.
Pin It