ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு மறைமுக ஆதரவுக் கரம் நீட்டி, விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி.யை இலங்கை அரசிடம் பிடித்துக் கொடுத்த பன்னாட்டு அலைபேசி நிறுவனம் தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பதையும், மராத்தா ஓட்டத்துக்கு அவர்கள் நிதி உதவி செய்ய முன் வருவதையும், ‘நாம் தமிழர் இயக்கத்தின்’ நிறுவனர் சீமான் வன்மையாக கண்டித்தார். பெரியார் திராவிடர் கழகமும், நாம் தமிழர் இயக்கமும் கூட்டாக இதை எதிர்க்கும் என்று சென்னையில் செப்.25 அன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இயக்குநர் சீமான் இதுபற்றி வெளியிட்ட அறிக்கை:

தமிழ் இனம் அறிவையும், மானத்தையும் கொண்ட இனம்தானா என்பதை நிரூபிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்.

சிங்கள இனவாதம் தொடுத்த போரினால் அழிக்கப்பட்ட தமிழர் பூமியான வன்னி நிலத்தில் வேளாண் தொழிலை மீள் கட்டமைக்க இலங்கை அரசுக்கு உதவ மன்மோகன் அரசு முன்வந்தது. இதற்காக வேளாண் விஞ்ஞானி பார்ப்பனர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் விஞ்ஞானிகளின் குழு ஒன்றையும், 500 கோடி ரூபாயையும் கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது.

அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், தமிழர்களின் இனப்படுகொலையில் முக்கிய சூத்திரதாரியுமான பசில் ராஜபக்சே தலைமையில் அமைந்த 19 சிங்களர்களைக் கொண்ட மீள் கட்டுமானக் குழுவின் கீழ்தான் இது செயல்பட்டாக வேண்டும். வன்னி நிலத்தின் பூர்வீகக் குடிகளானத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக “நாம் தமிழர் இயக்கம்” போராட்டம் அறிவித்தது. பெரியார் திராவிடர் கழகம் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியது. இறுதியில் எம்.எஸ்.சுவாமிநாதன், “இலங்கையில் சுமூகமான அரசியல் சூழ்நிலை உருவாகும் வரை அங்கு நான் செல்ல மாட்டேன்” என்று அறிவித்து விட்டார்.

இருப்பினும் மன்மோகன் அரசு தனது திட்டத்தை நிறுத்தவில்லை. ஆறு பேரைக் கொண்ட வேளாண் விஞ்ஞானிகள் குழு ஒன்றினை செப்டம்பர் 16 ஆம் தேதியன்று இலங்கைக்கு அனுப்பியது. அதில் 4 பேர் தமிழர்கள். இருவர் வடநாட்டவர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ப.முருகேச பூபதியும் அதில் ஒருவர். செப்டம்பர் 17 ஆம் தேதியன்று முள்கம்பிகளுக்கு மத்தியில் சிங்கள அரசால் சிறை வைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை சந்திக்கவும் திட்டங்கள் பற்றி விவாதிக்கவும் இந்தக் குழு வவுனியா சென்றது.

அகதிகள் முகாமை பார்வையிட சென்றபோது, குழுவில் இடம் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழர்களை மட்டும் முகாமுக்குள் அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் இதற்கான உரிய அனுமதியை அவர்கள் பெற்றிருந்தனர். தமிழ்மொழி தெரியாத இரு வடநாட்டுக் குழு உறுப்பினர் மட்டும் முகாமுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முகாமில் வாடும் தமிழர்கள், தமிழர்களிடம் தங்கள் அவலங்களை விளக்கிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன், இலங்கை அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது.

(கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இத்தமிழின எதிர்ப்பு திட்டத்தில் பங்கேற்று சென்றதை எதிர்த்து, கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை. இராமகிருட்டிணன் தலைமையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது)

இது தவிர மற்றொரு அதிர்ச்சியான தகவலும் வந்துள்ளது. வன்னி தமிழர் பகுதியில் இரண்டரை லட்சம் சிங்கள ராணுவத்தையும், குடும்பத்தினரையும் குடியமர்த்த சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கான அலைபேசி வசதிகளையும், அதற்கான கட்டுமானப் பணிகளையும் நிறைவேற்றும் ஒப்பந்தத்தை சிங்கள அரசு ‘ஆக்சியாட்டா’ எனும் மலேசிய அலைபேசி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இந்த ஆக்சியாட்டா நிறுவனத்தின் பின்னணி என்ன? அந்த நிறுவனம் - மலேசியாவில் நடத்தும் ஓட்டலில் வைத்துத் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்ட ‘கே.பி.’ என்ற குமரன் பத்மநாபா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கள உளவுப் படையால் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டு, கொழும்பு கொண்டு போகப்பட்டார். கே.பி.யை சிங்கள அரசுக்கு பிடித்துக் கொடுத்த “திருப்பணிக்காக” ஆக்சியேட்டாவுக்கு சிங்கள அரசு வழங்கியிருக்கும் பரிசுதான் இந்த ‘அலைபேசி ஒப்பந்தம்’.

இந்தியாவைச் சார்ந்த ‘அய்டியா செல்லுலார்’ அலைபேசி நிறுவனத்தோடு முக்கிய கூட்டாளியாக செயல்படுகிறது இந்த ‘ஆக்சியாட்டா’ நிறுவனம்.

‘அய்டியா’ நிறுவனத்தின் கூட்டாளியான ‘ஆக்சியாட்டா’, ‘அய்டியா’வின் பெயருக்குள் பதுங்கிக் கொண்டு தமிழகத்திலும் இப்போது மூக்கை நுழைக்கிறது. ‘அய்டியா’ தான் சென்னையில் குழந்தைகள் நலனுக்காக நடத்தப்படும் ‘கிஃப்ட் லைப்’ எனும் நிறுவனம் நடத்தும் மராத்தான் ஓட்டப் பந்தயத்துக்கும் நிதி வழங்குகிறது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்த புதிய தலைவரை சிறீலங்காவுக்கு பிடித்துக் கொடுத்துவிட்டு, அதற்கு பரிசாக சிங்கள ராணுவத்துக்கு தகவல் துறை கட்டமைப்புகளுக்கான ஒப்பந்தத்தை பெற்ற ஒரு நிறுவனம், தனது பங்குதாரரான அய்டியா நிறுவனத்தின் வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்து கொண்டு, மராத்தான் ஓட்டப் பந்தயத்துக்கு உதவி செய்வதாகக் கூறுவது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்த இனவெறி அரசிடம் வர்த்தகம் நடத்தி, அதில் கிடைக்கும் லாபத்தை தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காக செலவிடப் போவதாகக் கூறுவதை மானமுள்ள தமிழர்கள் அனுமதிக்க முடியாது. எனவே ‘மராத்தா ஓட்டத்தை’ நடத்துவோர் - இந்த நிறுவனங்களின் உதவிகளோடு அதை நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் பெரியார் திராவிடர் கழகமும், நாம் தமிழர் இயக்கமும் இந்த அலைபேசி நிறுவனங்களுக்கு எதிரான பரப்புரையை மேற்கொள்ளும் இந்த நிறுவன அலைபேசிகளை மக்கள் புறக்கணிக்க, இயக்கம் நடத்தும் இந்த மராத்தா ஓட்டத்தை முன்னின்று நடத்தும் ஜெகத் கஸ்பர், கனிமொழி ஆகியோர் தமிழின உணர்வாளர்கள் என்பதால், அவர்கள் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டு, அந்தப் படுகொலைக்கு மறைமுகமாக ஆதரவுக்கரம் நீட்டும் பன்னாட்டு சக்திகளிடம் பரிவு காட்டக் கூடாது.

இவ்வாறு சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பேட்டியின் போது கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உடனிருந்தார். எதிர்ப்பையும் மீறி மராத்தா ஓட்டப் பந்தயம் சென்னையில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It