சென்னையில் அண்மையில் நடந்த ‘ஜனவரி 29’ என்ற முத்துக்குமார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். ஆத்மா என்று ஒன்றிருந்து அது முத்துக்குமாரின் ஆத்மாவாக விருந்தால் அது இந்த ஆவணப் படத்தை நிச்சயம் மன்னிக்காது.

 முத்துக்குமார் தற்கொடை செய்து கொண்டது, ஈழப்போரை நிறுத்த வலியுறுத்தியும் அதற்குத் துணை போன இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்தும் தான் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிவார்கள். ஆனால் இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இது தெரியாமல் போனதுதான் முதல் வியப்பு.

 தீக்குளிக்கும் முன்னர் இவர் ஒரு நீண்ட மடல் வரைந்துள்ளார். அந்தக் கடித்ததில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமரிசித்துள்ளார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு ஒரு நாடகம் என்றும், ‘தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்து கொண்டுள்ளார்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், புறங்கையை நக்கிய கருணாநிதியையும், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கருணையுள்ளத்தோடு பேசிய அம்மா ஜெயலலிதாவையும் கண்டித்திருக்கிறார், முத்துக்குமார். இதையெல்லாம் மருந்துக்குக்கூட அந்தப் படத்தை எடுத்தவர்கள் சொல்லவில்லையே ஏன்?

 ஆவணப்படத்தில் முத்துக்குமாரின் தந்தை குமரேசன் பேசுகிறார். ஆனால் தமிழக அரசு அவருக்குக் கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அவர் நிராகரித்தது பற்றி இந்தப் படம் பேசவே இல்லை. (கருணாநிதி கோபித்துக் கொண்டால் என்ன செய்வது?) “தனது உடலைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துங்கள்” என்று சொன்ன முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அரசு தரப்பினரும் தேர்தல் கட்சித் தலைவர்களும் செய்த துரோகங்கள் பற்றி “ஜனவரி 29” படம் பதிவு செய்யவே இல்லை. அரசுக்கு எதிராக எதையும் பதிவு செய்துவிடக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருந்த சுயக்கட்டுப்பாடு புரிந்தது. முத்துக்குமார் மரணத்தால் எழுந்த மாணவர்களின் எழுச்சியை அடக்க பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்ததைக் கண்டித்து முத்துக்குமார் உடலோடு அரசுக்கு எதிராக குரல் கொடுத்த இளைஞர்களைத் தாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்திய தேர்தல் கட்சித் தலைவர்கள் சிலர் இந்தப் படத்தில் முத்துக்குமாருக்காக முதலைக் கண்ணீர் வடித்திருப்பது மற்றொரு வியப்பு.

 இத்தனைக்கும் ஒருபடி மேலே போய், முத்துக்குமாரால் எழுந்த எழுச்சியை அடக்க முயன்ற தலைவர்களைப் பற்றி “ஓட்டுப் பொறுக்கி” என்று விமர்சித்த ஒரு வழக்கறிஞரின் பேட்டியில் ஓட்டுப் பொறுக்கி என்ற வார்த்தையை மௌனமாக்கியிருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த ஆவணப்படத்தின் நியாயத்தையும் நடுநிலைத்தன்மையையும் புரிந்து கொள்ளலாம்.

 அலுவலகம் வரும் முத்துக்குமார் கணினி முன் அமர்ந்து அந்த அறிக்கையை எழுதுகிறார். பின்பு சாஸ்திரி பவன் சென்றதாக காட்டுகிறார்கள். மரணிப்பதற்கு சற்று நேரம் முன்பு அவசர அவசரமாக எழுதப்பட்ட அறிக்கையாக அது தெரியவில்லையே? அத்துடன் அந்த அறிக்கையுடன் மெரினா கடற்கரைக்குச் சென்று அங்கே இளைஞர்கள் தங்கள் ஜோடிகளுடன் அமர்ந்து காதல் செய்வதைப் பார்த்து நொந்து போய் மனதுக்குள் குமுறுவதாகக் காட்டுகிறார்கள். முத்துக்குமாரை இதைவிட முரண்பாடுகளுடன் யாரும் சித்தரிக்க முடியாது.

 முத்தாய்ப்பாக முத்துக்குமாருக்கு சிலை வைக்கும் த.தே.பொ.க.வின் முயற்சிக்கு தி.மு.க. அரசு போட்டு வரும் தடைகளைப் பற்றியும் பேச மறுத்திருக்கிறது இந்தப் படம். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் முத்துக்குமாரை மாவீரர் என அறிவித்து அவருக்கு வீரவணக்கம் செலுத்தியதையும் (களத்தில் நேரடியாக நிற்காத ஒருவருக்கு இப்படியொரு தகுதியைப் புலிகள் எல்லோருக்கும் தந்து விடமாட்டார்கள்!) வசதியாக மறந்திருக்கிறார்கள்.

 தமிழகத்தில் முத்துக்குமார் மரணத்துக்குப் பின் இளைஞர்கள் பெருமளவில் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். முத்துக் குமாரின் உந்துதலால் முத்துக்குமாரின் பெயரிலும், முத்துக்குமாரின் இலட்சியத்தைத் தாங்கியும் ஏராளமான இயக்கங்கள், அமைப்புகள் உருவாகி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பரப்புரை செய்ததை சோற்றில் முழு பூசணிக்காயாக புதைத்துவிட்டார்கள்.

 முத்துக்குமாரின் வாழ்க்கையை ‘துருப்புச்சீட்டு’ என்ற நூலின் மூலம் பதிவு செய்த என்னால் அந்த ஆவணப்படக் குழுவினர் முத்துக்குமாருக்கு செய்த துரோகத்தை மறக்கவோ மறைக்கவோ முடியாது!

ஆசாரக்கோவையும் எந்திரனும்!

 அக்டோபர் முதல் வாரம். தேனீர் கடை, பேருந்து நிறுத்தம் என பொது இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் சந்தித்துக் கொண்டால் மறக்காமல் கேட்டுக் கொண்ட கேள்வி, “எந்திரன் பாத்தாச்சா?“ தமிழ் நாட்டில் பெரும்பா லானவர்களால் பார்க்கப்படும் சன் தொலைக் காட்சியிலும், அதிக வாசகர்களைக் கொண்டதாகச் சொல்லப்டும் தினகரன் நாளிதழும் சேர்ந்து எந்திரன் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற உளவியல் அழுத் தத்தை ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்துக் கொண்டிருந்தன/ கொண்டிருக்கின்றன. (கொஞ்சம் அசந்தால் நம்முடைய சட்டைப் பையில் கையைவிட்டு பணத்தை எடுத்து அவர்களே படத்தின் அனுமதிச் சீட்டையும் கொடுத்து விடுவார்கள் போல!)

 ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் சாக்கிசானுக்கு அடுத்த இடத்திலிருக்கும் ரஜினியும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரும் இணைந்த இந்தப் படத்தைத் தயாரித்தது, கருணாநிதி பேரன் கலாநிதி மாறனின் சன் குழுமம். படத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடியாம்! உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் அக்டோபர் முதல் நாளன்று திரையிடப்பட்டது. அரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்க வேண்டும் என்ற விதியை மீறி குறைந்தபட்சம் (!) 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அனுமதிச்சீட்டுகள் விற்கப்பட்டன.

 சிறு நகரமான புதுக் கோட்டையிலும் கூட ஆறு திரையு ரங்குகளில் இந்தப் படம் திரை யிடப்பட்டது. அங்கேயும் 200 ரூபாய் அனுமதிக் கட்டணம். இதெல்லாம் எப்படி சாத்தியம்? பணபலத்தாலும், அரசியல் செல்வாக்கினாலும் பெருவாரியான திரையரங்குகளில் எந்திரன் படத்தை திரையிட்டார்கள். திரையிட்ட எல்லா திரையரங்கு களிலும் கூடுதல் விலை. இதனால் நியாயமான விலையில் அந்தப் படத்தைப் பார்க்கவே முடியாத நிலை! தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டார்கள்.

 நடைமுறையில் உள்ள நான்கு காட்சிகளுக்குக் கூடுதலான காட்சிகள் திரையிடத் தமிழக ஆளுநரே சிறப்பு அனுமதி அளித்தார். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் இப்படியொரு அனுமதியை அவசர அவசரமாக அளித்து, நம் மக்களின் மீதான அதீத அக்கறையைக் காட்டிவிட்டார்.

 இந்தப் படத்தை வரவேற்கும் ரஜினி ரசிகர்கள் அவரது ஆளுயரப் படங்களுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தப் படம் வெற்றி அடைய வேண்டி கன்னியாகுமாரி முதல் சென்னை வரை நடைபயணம் நடத்துகிறார்கள். கோயில் படிக்கட்டுகளில் மண்டியிட்டு முழங் கால்களில் நடந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். மண்சோறு தின்கிறார்கள். சன் தொலைக்காட்சி ஒட்டுமொத்த தமிழக இளைஞர் கூட்டமே எந்திரனுக்காக ஏங்கித் தவிப்பதாக சித்தரித்தது.

 ரசிகர்கள் மனம் மற்றும் ஆர்வக் கோளாறில் செய்யும் இது போன்ற செய்கைகள் பாகவதர் காலத்திலிருந்து நடப்பதுதான். ரசிகர்களின் பொறுப்பற்ற இச் செய்கைகளை இந்தியத் தொலை க்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக திரும்பத் திரும்ப காட்டியதன் மூலம் அவர்களின் மனப் பிறழ்வுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது. சன் குழுமம். இந்தப் படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சில கோடி ரூபாய் செலவில் கோலாலம்பூரில் கோலா கலமாக நடக்கிறது. தமிழில் பெயர் வைத்தற்காக கேளிக்கை வரி விதிப்பிலிருந்து (கிடைத்த வரைக்கும் லாபம்) வரிவிலக்கும் பெற்றிருக்கிறான், எந்திரன். திரையரங்குகளில் விநியோகிக்கப் பட்ட அனுமதிச் சீட்டில் கட்டணம் எதுவும் அச்சிடப் படவில்லை. அனுமதிச் சீட்டின் பின்புறம் இருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் முத்திரையும் இல்லை. இதுக்குப் பேருதான் பகல் கொள்ளை!

 ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில்தான் திரையிடப்பட வேண்டும் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை இந்தப் படத்தின் மூலம் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள். பிற நாள்களில் குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, சில நாள்களாவது ஓடினால் குறைந்தபட்ச லாபமாவது கிடைக்கும். திரையில் ஊர் நியாயம், உலக நியாயம் பேசும் நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை இந்த விதிமீறல் குறித்து வாய் திறக்கவே இல்லையே, ஏன்?

 எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கோலாலம் பூருக்கு காணொளி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர், இப்போது எந்திரன் திருட்டு விசிடியை ஒழிக்க காவல்துறையை முடுக்கிவிட்டுள்ளார். 150 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த வரி வருமானம், எவ்வளவு தெரியுமா? 0-தான்!.

 ஒவ்வொரு தமிழனும் பார்த்தே ஆக வேண்டும் என்று சிந்தனையில் புகுந்து சித்திரவதை செய்த எந்திரன் படத்தில் அப்படி என்ன புரட்சி செய்து விட்டார்கள்?

1. படத்தில் கார்கில் போரில் கணவன், தந்தையை இழந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியைக் காட்டுகிறார்கள். அந்தப் பெண்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்பது பல்வேறு காட்சிகளில் திரும்பத் திரும்ப காட்டப்படுகிறது. உண்மையில், கார்கில் போரில் உயிரிழந்த பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று ஷங்கரால் சொல்ல முடியுமா?

2. படத்தின் நாயகனான விஞ்ஞானி வசீகரன் (ரஜினி) பெற்றோரும் அவர்களின் வீடும்அவர்கள் பார்ப்பனர்கள் என்பதையே வலியுறுத்துகிறது. ராணுவத் துக்கு உதவும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியும் பார்ப்பனரே. வாழ்க ஷங்கரின் பார்ப்பன வெறி!

3. எந்திர மனிதனுக்கு மனித உணர்வுகளை கற்றுத் தருவதற்காக அதை சென்னையிலுள்ள பிரித்தானிய நூலகத்துக்கு அழைத்துச் செல்கிறார், வசீகரன். அங்கே எந்திர மனிதனுக்கு படிப்பதற்காக அவர் கொடுக்கும் புத்தகங்களில் இடம் பெறும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம், ஆச்சார கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளை (தீண்டாமையை) வலியுறுத்தும் இந்த நூலைக் கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கப் பார்க்கும் இயக்குநரின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

4. படத்தில் ஒரு காட்சியில் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடக்கிறது. திருவிழாவை நடத்தும் ரௌடிகள் படத்தின் கதாநாயகியை கிண்டல் செய்கிறார்கள். மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவோர் எல்லாம் ரௌடிகள் என்றால், பார்ப்பனர்கள் மட்டும்தான் கோயில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்கிறாரா ஷங்கர்? கருவறைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பற்றியெல்லாம் இவர் படம் எடுக்க மாட்டாரா?

 மொத்தத்தில், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு போன்ற ஏகபோக வலுவில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட எந்திரன் ஒரு பூணூல் அணியாத பார்ப்பனன்.

Pin It