nedumaran maniarasan

தோழர்களே.. வணக்கம்! எனக்கு முன்னால் பேசிய அருமைத் தோழர் மணியரசன் அவர்கள் உணர்ச்சி மிக்க உரைய ஆற்றிவிட்டு அமர்ந்திருக் கிறார்.

மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதற்காக அவர் அப்படி பேசவில்லை. மாறாக, இன்றைக்கு தமிழர்களின் உண்மை நிலையை மக்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசினார்.

1974இல் இருந்து நம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். எனக்கு முன்னால் பேசிய வர்கள் அனைவரும் அத்தனை விளக்கமாகப் பேசி னார்கள். எனக்கிருக்கும் வருத்தமெல்லாம், இவ்வளவு வஞ்சணைகள் நமக்கெதிராக விளைவிக்கப் பட்ட பின்பும்கூட நமக்கு வரவேண்டிய உணர்வு வரவில்லை. இதே காவிரிப்படுகையில், 10 இலட்சம் முதல் 15 இலட்சம் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலா ளிகள் வாழ்கிறார்கள். நிலம் வைத்திருக்கும் மிராசு தார்கள் மட்டுமே போராடும் போராட்டமாக இருக் கின்றது. விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலா ளிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் போராட்டமாக உருவெடுக்கும்போதுதான் இதற்கு விடிவு கிடைக்கும்.

வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் ஒரு புள்ளி விவரத்தை சொல்லி இருக்கின் றார். இந்தியாவிலிருந்து ஃபிலிப்பைன்ஸ்வரை இருக்கக் கூடிய எல்லா நாடுகளிலும் நெல் விவசாயம் நடை பெறுகிறது. ஆனால், காவிரி சமவெளிப்பகுதியில் இருக்கக் கூடிய அளவுக்கு சிறப்பான மண் வளமும், சமவெளிப்பகுதியும் வேறு எங்கும் இல்லை.

நம் விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு எவ்வளவு நெல் விளைவிக்கின்றார்களோ, அதில் பாதி அளவுக் குக்கூட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விளை விப்பதில்லை.

காவிரி தண்ணீரை நமக்கு வரவிடாமல் தடுக்கும் கர்நாடகத்தில் இந்த தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தி நம் சமவெளி விவசாயிகள் விளைவிக்கும் மூன்றில் ஒரு பங்கு நெல்லைத்தான் கர்நாடக விவ சாயிகள் விளைவிக்கிறார்கள்” என்றார். இந்த உண்மையை அவர் காவிரி நடுவர் மன்றத்தில் வந்து சொன்னார்.

அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். கர்நாடகத்தில் உள்ள மாநிலக் கட்சிகளும் அகில இந்தியக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு செய்யும் வஞ்சனையைக் கண்டிப் பதற்கு அகில இந்தியத் தலைவர்கள் யாரும் முன்வருவ தில்லை.

தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லையென்றால் இந்திய ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என்று அனைத் திந்தியக் கட்சித் தலைவர்கள் கண்டித்திருந்தால், நம் மனமாவது ஆறுதல் அடையும். யாரும் அதற்குத் தயாராக இல்லை.

நம் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டிய கொதிப் புணர்வும், ஒற்றுமையுணர்வும் ஏற்படாததன் விளைவு காவிரியில், முல்லைப்பெரியாற்றில், பாலாற் றில் இன்னும் பல பிரச்சினைகளில் பாதிப்படைகின்றோம்.

நேற்று முன்தினம் வடக்கே இருந்து அம்மையார் மேதா பட்கர் வந்திருந்தார். நர்மதை ஆற்றில் அணைக் கட்டுவதால் மலைவாழ் மக்கள் பெருந்துன்பத் திற்கு ஆளாவார்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அவர்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்கி விடும் என்று ஒரு தனி ஒரு பெண்ணாக மலைவாழ் மக்களைத் திரட்டி இடைவிடாது போராடி, அந்த அணையின் உயரத்தைக் குறைப்பதற்கு அவரால் முடிந் தது. ஒரு மேதா பட்கர் செய்த சாதனையை நம்மால் சாதிக்க முடியவில்லை. எந்தச் சிக்கலாக இருந்தாலும் நம்மால் தீர்க்க முடியவில்லை.

1972 முதல் இன்றுவரை மத்தியில் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் காங்கிரசு, பா.ச.க., ஜனதா தளம் - எதுவாக இருந்தாலும் அந்தக் கட்சியுடன் திராவிடக் கட்சிகள் இரண்டும் மாறி மாறிக் கூட்டு சேர்வதற்குத் தயங்குவதில்லை. அமைச்சர் பதவிகளைப் போராடி பெறுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை.

கர்நாடகாவைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் ஆனந்தகுமார் வீட்டில், தில்லியில் கர்நாடகாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடி காவிரியில் புதிதாக அணைகள் கட்டுவதற்கு சதி ஆலோசனைச் செய்தனர். ஆனால், தி.மு.க.வினரும், அ.இ.அ.தி.மு.க.வினரும் தில்லியில் பல ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்த போதிலும், நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழகத்திற்குரிய நியாயங்களைப் பெற முயன்றதே இல்லை.

அ.இ.அ.தி.மு.க.விற்கு 37 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இருக்கிறார்கள். எதுவும் பேச வேண்டாம், தயவு செய்து எழுந்து நில்லுங்கள். சபாநாயகர் என்ன என்று கேட்டால், கர்நாடகா அணைக் கட்டுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லுங்கள்.

எழுந்து நிற்பதற்கும் வாய் திறந்து பேசுவதற்கும் அம்மையாரிடம் அனுமதி வேண்டுமென்றால், இவர் களுக்கு எதற்கு வாக்களித்தோம்? என மக்கள் சிந்திக்க வேண்டும்.

நம் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவ தற்கு யார் யாரெல்லாம் தயாராக இல்லையோ அவர் களையே மீண்டும் மீண்டும் வாக்களித்து தேர்ந்தெடுக் கின்றோம்.

ஆனால், கர்நாடகத்தில் அமைச்சர்களோ, நாடாளு மன்ற உறுப்பினர்களோ தங்கள் மாநில நலன் குறித்து ஒற்றுமையுடன் குரல் கொடுக்காமல் தங்கள் மாநிலத் திற்குத் திரும்பிவிட முடியாது. இப்படியரு நிலை இருக்கிறது.

மக்கள் திரள் போராட்டம் மூலமாக நம் பிரச்சி னைகளைத் தீர்க்க முடியும்.

பஞ்சாபில் பஞ்சாபுக்கும், சிந்து மாநிலத்திற்கு மிடையே நதி பற்றி வெள்ளைக்காரன் காலத்திலேயே பிரச்சினை! அதனைத் தீர்க்க வெள்ளையனுக்கு அக்கறையில்லை. இந்தியாவும் - பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாகப் பிரிந்து போனது.

இரண்டு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினை யாக இருந்தது. சிந்து நதிப் பிரச்சினை இப்பொழுது இரண்டு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையாக உருவாகிவிட்டது.

இந்தியாவும் பாகிஸ்தானும் உலக வங்கியிடம் உதவி கேட்டபோது, “முதலில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு வாருங்கள்” என உலக வங்கி சொன்ன போது, “நீங்களே தீர்த்து வையுங்கள்” எனச் சொல்லி உலக வங்கி அதிகாரி முன்னிலையில் உட்கார்ந்து சிந்து நதிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டார்கள்.

இந்தியாவுக்குள் இரண்டு மாநிலங்களாக இருக்கும் காலம் வரை காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று சொன்னால், இரண்டு நாடுகளாக ஆவது தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் இதை சகித்துக் கொள்வது?

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய நிலை இல்லை. அவரவர் மாநிலப் பிரச்சினைகளில் அந்தந்த மாநில மக்களே கொதித்தெழுந்து போராடு கின்றனர். நடுவண் அரசு தலையிட்டு தீர்த்து வைக் கின்றது.

இந்த பிரச்சினையில் நாம் யாரையும் நம்பி இருக்கக் கூடாது. மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினால் நம் பிரச்சினைகளுக்கு பரிகாரம் வரும்.

நாம் இந்தளவுக்கு வஞ்சிக்கப்படுறோம் என்பதை மக்கள் உணர்ந்து, விழிப்புணர்வு பெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப் படுகின்றன.

இலவசங்கள் என்ற பெயரில், மக்கள் இரு கையேந்தி நிற்கும் அவமானகரமான நிலையை உண்டாக்கி மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கும் காலம் வரை நாம் ஆட்சிக்கட்டிலில் இருக்க முடியும் என்று நினைக்கின்றனர்.

மக்கள் விழிப்பு நிலை அடைந்து மயக்கம் தெளிய வேண்டும்.

அசாம் மாநிலத்தில் வங்காளியும் பீகாரியும் குடி யேறி அந்த மாநில மக்களின் நிலம், வீடு, வேலை வாய்ப்பு என்று தங்கள் வசமாக்கினர். இதனைக் கண்டு பொங்கி எழுந்த மாணவர்கள் போராடினர். அன் றைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி மாணவத் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்த நினைத்து, “உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்.

இந்திராவின் தலைக்கு மேல் இருந்த “மகாத்மா காந்தியின்” படத்தைக் காட்டி, “அவர்தான் எங்கள் தலைவர்” என்று சொன்னார்கள்.

இவர்கள் விபரமானவர்கள் என்றுணர்ந்த இந்திரா அம்மையார், இவர்களை ஏமாற்றிவிட முடியாது என்றெண்ணி, அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி எடுத்தார். ஆனால், அந்த மாணவர்கள் பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு, பிளவுபட்டு போனார்கள் என்பது வேறு கதை.

ஆனால், மாணவர்களின் அந்த ஒன்றுபட்ட போராட்டத்தினால் ஒரு மாற்றம் வந்தது.

மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும், இல்லை யேல் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும். இவை ஒன்றும் நடக்கவில்லையானால், எந்தப் பிரச்சினையும் தீர்ந்து விடாது.

மொழிவழி மாநிலப் போராட்டம் நடைபெற்ற போது, மகாராட்டிரமும், குசராத்தும் சேர்ந்து ஒரே மாநிலமாக இருந்தது. மொழிவழி மாநிலப் பிரிவி னைக்குப் பிறகு இரண்டு மாநிலங்களும் ‘பம்பாயை’த் தங்கள் தலைநகரமாக்க வேண்டும் என்று கோரின.

பம்பாயை எடுத்துக் கொள்வதில் இரண்டு மாநி லங்களும் போட்டியிட்டதால், பெரும் போராட்டம் வெடித்தது. மராட்டிய மக்கள் ஒன்று திரண்டு போரா டினர். நேரு அவர்கள், “இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக பம்பாய் விளங்கும்” என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புற்றி வைக்க நினைத் தார். ஆனால், மராட்டிய மக்கள் வெகுண்டெழுந் தனர்.

இராணுவம் வரவழைக்கப்பட்டு முந்நூறுக்கும் (300) மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மராட்டியமே பற்றி எரிந்தது!

அதுவரை அரசியலுக்கே வராமல் மிசிஷி அதிகாரியாக வாழ்நாள் முழுவதும் இருந்து ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகித்திருந்த சி.டி. தேஷ்முக் அவர்களை நேரு அவர்கள் தனது அமைச்சரவையில் நிதி அமைச்சராக வைத்திருந்த காலமது!

தேஷ்முக் அவர்கள் பிறப்பால் மராட்டியர். அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல. நிதி நிர்வாகத்தில் சிறந்த நிபுணர் என்பதால் அந்த பதவியில் அமர வைக் கபபட்டிருந்தார் நேருவால். நேருவின் பரிபூரணமான நம்பிக்கையைப் பெற்றவர் தேஷ்முக. ஆனாலும் ‘மராட்டியர்’ என்ற உணர்வு மேலோங்கி இருந்ததால், நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

“மதிப்பிற்குரிய நேரு அவர்களேஞ் என் மாநிலமான மராட்டியத்துக்குள் பம்பாய் இருக்கின்றது. “இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக இருக்கட்டும்” என்றீர்கள்.

“இதை எதிர்த்துப் போரடிய என் இன மக்களை இராணுவம் கொண்டு சுட்டு பொசுக்கினீர்கள்! ஞாயத் துக்காகப் போராடிய மக்களை கொன்று குவிப்பீர் களானால், எனக்கு இந்த பதவி தேவை யில்லை” என்று கடிதம் எழுதி, பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் விளைவாக தன் வாழ்நாளில் அடைந்திராத பேரதிர்ச்சியை அடைந்தார் நேரு!

அவரை எதிர்த்து ஒருவர் தன் பதவியை ராஜி னாமா செய்கிறேன் என்று சொன்னது அதுதான் முதல் தடவை!

ஒரு தேஷ்முக் தன் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினாலே ‘பம்பாய் நகரம்’ மராட்டியத்துக்குச் சொந்தமானது என்று நேரு பிரகடனப்படுத்தினார்.

அதேபோல், நடுவண் அரசில் உறுப்பு வகித்தவர் கள், தமிழகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தங்கள் பதவிகளை தூக்கியெறிந்து தியாகம் செய்வதற்குத் துணிய வேண்டும். அதற்கு யாரும் தயாராக இல்லை.

தோழர் மணியரசன் அவர்கள் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அறிவித்திருக்கும் இந்த முற்றுகைப் போராட்டம் என்பது, அவர் சொன்னது போல் வீட்டுக்கொருவர் வந்து அங்கே குவிய வேண்டும். அப்படி இல்லையெனில், நம் எதிர்கால சந்ததியினர் நம்மை சபிக்கும் நிலைக்கு ஆளாகிவிடு வோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

காவிரி, முல்லைப் பெரியாறு, இந்தி மொழித் திணிப்பு போன்ற பிரச்சினைகளில் நம் காலத்திலேயே அதற்கு ஒரு தீர்வு கண்டுவிட வேண்டும். நம் காலத்தில் தீர்க்கப்படவில்லை என்றால், எதிர்காலத்தில் தீர்க்கப் படாமலேயே போய் விடலாம்!

தோழர் மணியரசன் அவர்கள் அரசியல் கட்சி களையும், மனித உரிமைப் போராளிகளையும், விவசாய சங்கங்களையும் மிகவும் சிரமப்பட்டு ஒருங்கிணைத் துள்ளார்கள்.

அதற்காக அவருக்கும், அவரோடு தோள் கொடுக் கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், மனித உரிமைப் போராளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டம் வெல்லும்! வெல்லும் என்று சொல்லி எனது உரைய நிறைவு செய்கிறேன்! வணக்கம்!

(தஞ்சையில் 10.02.2015 அன்று மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டப் பரப்புரைத் தொடக்க நிகழ்வில் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை. எழுத்து வடிவம்: மா. இராமதாசு)

Pin It