நீர் அற்ற அரபுப் பாலைவனங்களில் கூட நீர் பாய்ச்சிச் சோலை வனங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி’’ என்று புலவர்களால் போற்றப்பட்ட காவிரி, இன்று நீர் அற்று வேளாண் நிலங்கள் பாலையாகிக் கொண்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றம் ஆறு வார காலத்திற்குள் நதிநீர் சட்டப் பிரிவு 6ஏ&இன் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துச் செயல்திட்டம் உருவாக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

அதன்படி மார்ச் 29 தேதியுடன் அந்தக் கால எல்லை முடிகிறது. அதாவது இன்னும் சில நாள்களே உள்ளன, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க.

மத்திய அரசு கர்நாடகத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக, தமிழக மக்களை வஞ்சித்து மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது. நதிநீர்த் துறைச் செயலாளர் கூட மார்ச் 31ஆம் தேதிக்கு மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை என்று தெளிவாகச் செல்லிவிட்டார்.

ஆனாலும் 31ஆம் தேதி வரை பொறுமை காப்போம், வாரியம் அமைந்து விடும் என்று பா.ஜ.க.வுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் எடப்பாடியும், அவரது கூட்டத்தாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மாநில அந்தஸ்து தரவில்லை என்று ஆந்திர முதல்வரும், இடஒதுக்கீட்டில் உரிய பிரதிநிதித்துவம் தரமறுக்கிறது என்று தெலுங்கானா முதல்வரும் மத்திய மோடி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள்.

ஆனால், இத்தீர்மானத்தை விவாதத்திற்குக் கூட எடுக்கவிடாமல் காவிரிப் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்து நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழக அரசு, தன் உரிமையைப் பெற மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்யக் கிடைத்த நல்ல வாய்ப்பை வேண்டுமென்றே கைகழுவி விட்டார்கள் அ.தி.மு.க. ஆட்சியினர்.

ஆந்திர அரசு செம்மரக் கட்டைகளைக் கடத்துவதாகக் கூறி தமிழகக் கூலிகளைச் சுட்டுக் கொல்கிறது. அதனால் ஆந்திர அரசு பா.ஜ.க. அரசு மீது கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று சப்பைக் கட்டுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, நாணம் இல்லாமல்.

தமிழக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றாலும், எடப்பாடி கூட்டத்தார் இரண்டகம் செய்து பா.ஜ.க.வின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழகத்தின் வேதனை.

மொத்தத்தில் பா.ஜ.க.வின் தயவில் வாழநினைக்கும் எடப்பாடி அ.தி-.மு.க. அரசு, தம் சுயநலத்திற்காக மக்களை வஞ்சித்து வயிற்றில் அடிப்பதும், வேளாண் நிலங்கள் அழிவுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தாமல் மோடியின் அரசுக்குத் துணை போவதும் வெட்கக் கேடான செயல்.

Pin It