cauvery 413தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனையானக் காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. நடுவர்மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீர் உரிய அளவில், உரிய நேரத்தில் கிடைக்கவில்லை.

அதற்கான எவ்வித முயற்சிகளையும் ஒன்றிய அரசு இதுவரை காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டதில் இருந்து மேற்கொள்ளவே இல்லை. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இதுவரை எந்த முயற்சியும் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான காவிரி நீர் தடுத்து நிறுத்தப்படும் அபாயமும், இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 கோடி தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்கப்படும் நிலை தடுக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசின் மறைமுகத் துணையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேகதாட்டு அணை என்றால் மேக = ஆடு + தாட்டு என்றால் = தாண்டும் காவிரி = ஆடு தாண்டும் காவிரி என்றுதான் பொருள். அவ்வளவு குறுகிய இடத்தைக் கூடவிடாமல், கர்நாடகம் தமிழகத்துக்கு நீர்வரக்கூடிய எல்லா வழிகளையும் அதற்கே வைத்துக் கொள்ள எத்தனிக்கிறது.

மேகதாட்டு அணை, கிருஷ்ணராஜ சாகாரைவிடப் பெரிதாக இருக்கும் என்கிறார்கள். கர்நாடகத்தில் 1918-1920 வாக்கில் கட்டப்பட்டது கிருஷ்ணராஜசாகர் அணை. அந்த அணையைத் தவிர, மேற்கொண்டு காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணையைக் கட்ட வேண்டுமானால், அதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைப் பெறவேண்டும்; அத்துடன் காவிரியின் கீழ்மடையிலுள்ள தமிழ் நாட்டு அரசின் ஒப்புதலையும் பெறவேண்டும்.

ஆனால் கர்நாடக அரசு கபினி அணையை 1959இல் கட்டியது. ஏரங்கி அணையைக் 1964இல் கட்டியது. 1965இல் சுவர்ணவதி அணையைக் கட்டியது. 1968இல் ஏமாவதி அணையைக் கட்டியது. இவ்வாறு அணைகளைத் தன்னிஷ்டத்திற்குக் கட்டிக் கொண்டே உள்ளது.

29.6.2017 அன்று கர்நாடகம் ஏறக்குறைய ஒரு மணிக்கு மூவாயிரம் கனஅடி நீர் விடுவதாக அறிவித்தது. ஆனால், 05.07.2017 வரையில் காவிரி நீர் ஒகேனக்கல் அணைக்கே வந்துசேரவில்லை. இது பற்றி பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 900 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது. அந்த அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைக்கும் சிறிதளவு தண்ணீர் கூடக் கிடைக்காது என்பதால், மேகதாது அணைத் திட்டத்திற்குத் தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்தான் பெங்களூருவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணைக்கட்டுத் திட்டம் பற்றி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதென்றும், மழைக் காலத்தில் கடலில் கலக்கும் உபரி நீரைப் பயன்படுத்த இந்த அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் பேசியிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு, ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதனை 12 மாதங்களிலும் பகிர்ந்து வழங்க வேண்டுமென்று தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனைக் காதில் போட்டுக் கொள்ளாமல், அங்குள்ள அணைகள் நிரம்பியவுடன் உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்கி வருகிறது.

அந்த நீரிலும் கர்நாடக அரசு தனது பாசனப் பரப்பை 11.20லட்சம் ஏக்கர் பரப்பிலிருந்து 21.71லட்சம் ஏக்கராகக் கூட்டியிருகிறது. நமது பங்கீடான 67.3டிஎம்சி நீரை ரூ.900கோடி செலவில் மேகதாது அணைக்கட்டைக் கட்டுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் குறுவையை இழந்து தற்போது சம்பாவையும் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, மேகதாது பிரச்சினையில் மாநிலத்தை ஆளும் பாஜக, ஒன்றிய அரசை நடத்தும் பாஜக, உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு, ஒன்றிணைந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை அன்று முதல் இன்று வரை பொதுப்பணித் துறையை வைத்திருந்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது வியப்பை அளிக்கிறது.

மேகதாது அணைக் கட்டப்படுவதால்,

1. தமிழக நீர்ப் பாசனத்திற்குத் தேவையான நீரானது மோசமான முறையில் பாதிக்கப்படும்.

2. மேட்டூர் குகை - மேட்டூர் அணை - கீழ்மேட்டூர் அணை, 1 முதல் 4 வரை ஆகிய புனல் மின் நிலையங்கள் பாதிக்கப்படும்.

3. மேகதாது அணை கர்நாடகா பகுதியில் இருப்பதால், அதிலிருந்து வரும் நீரோட்டத்தைத் தமிழகம் எவ்வகையிலும் உறுதிப்படுத்த இயலாது.

4. மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த, இந்த அணையிலிருந்து நேரிடையாக நீர் பெறும் வாய்ப்பு உள்ளது. இதை தமிழகம் எவ்வகையிலும் தவிர்க்க இயலாது.

5. பெங்களூரு குடிநீருக்காக, காவிரியிலிருந்து 28 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்த, கர்நாடகா மின் கழகம் அறிக்கை அளிக்கிறது. பருவநிலை அல்லாத காலங்களில் மேகதாது அணையிலிருந்து 16.1 டி.எம்.சி. நீரை பயன்படுத்துவார்கள்.

இப்படி பல தீங்குகள் இடர்பாடுகள் மேகதாது அணை கட்டுவதால் ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 1984ல் ரங்கநாதன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு வந்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு அல்லது கர்நாடகா, கேரளா என எந்த மாநிலம் அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அந்த ஆணையத்தில் தென்மாநிலங்களின் உறுப்பினர்கள் உள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற தீர்ப்பால் காவிரி நதிநீர் முறையான வகையில் பங்கிட்டுத்தர வேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. மேலும் காவிரி நதி மீதான எந்தவிதமானக் கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும்.

தற்போது மத்திய அரசு கொடுத்துள்ளதாகக் கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது, தீர்ப்பின் அடிப்படையில் அணைகளின் நீர் நிர்வாகத்தைக் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொணரவேண்டும்.

இதனை ஒட்டியே தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்ட முடிவிலான தீர்மானமும் சொல்கிறது. முதல் கட்டமாக கோரிக்கை மனு அளிப்பது, அது பயன்தரா பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வது என தீர்மானம் கூறுகிறது.

அந்த அடிப்படையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதல்படி தன்னாட்சி அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆவண செய்ய வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டினால், அது தமிழகத்தைப் பாலைவனமாக மாற்றிவிடும். 25லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதில் வசிக்கும் ஐந்து கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். அதேபோல மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் இந்தத் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ஒன்றியஅரசு தமிழத்தை வஞ்சிக்கிறது.

இந்தத் திட்டம் குறித்து கலைஞர் கருணாநிதி அவர்களின் வழிகாட்டுதலான காவிரி நடுவர் மன்றம் அதன் மூலமான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆனாலும் இன்றைய தமிழ்நாடு அரசின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

- முனைவர் பூ.மணிமாறன்

Pin It