அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு 262, படியும் 1956ஆம் ஆண்டு பன்மாநில ஆற்றுநீர்ச் சட்டம் (Inter State River Dispute Act 1956 பிரிவு (11) கூறியபடியும் முதல்வராக இருந்த கலைஞரின் முயற்சியால், கர்நாடகத்துடன் தமிழகம் 1968 முதல் 1990 வரை 26 முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்ற பிறகே, அப்போதைய பிரதமர் வி.பி. சிங் அவர்களை வலியுறுத்தி, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி 1990 ஜூன் 2-இல் காவிரி நடுவர் மன்றம் எனும் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி, 5 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தின் நீண்ட காலச் சட்டப் போராட்டத்தின் காரணமாக, 2013 பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு நடுவர் மன்றத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டது.

அதன்படி, காவிரி வடிநிலத்தில் ஓராண்டில் கிடைக்கக்கூடிய மொத்த நீரின் அளவு 740 டி.எம்.சி.யில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு-

10 டி.எம்.சி., கடலில் வீணாகக் கலப்பு - 4 டி.எம்.சி. போக, தமிழகம் 419 டி.எம்.சி., கருநாடகம் 270 டி.எம்.சி., கேரளம் 30 டி.எம்.சி., புதுவை 7 டி.எம்.சி. எனத் தரப்பட வேண்டும்.

தமிழகத்துக்குரிய 419 டி.எம்.சி. நீரில் தமிழ்நாட்டிற்குள் கிடைத்ததுபோக, கர்நாடகம் தரவேண்டிய நீர் 192 டி.எம்.சி.தான். ஆனால் அந்நீரினைத் தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஓராண்டில் நீர் பற்றாக்குறை நாட்களில் நடுவர்மன்றம் அளித்தள்ள இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாடு 57.7, கர்நாடகம் 37.2, கேரளா 4, புதுவை 1 டி.எம்.சி. என்ற விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்து கொள்ளப்படவும் வேண்டும்.

இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டதை மைய அரசு அரசிதழில் வெளியிட்ட 90 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழக்குத் தொடர்ந்து சட்டச் சிக்கலை ஏற்படுத்தி, உச்சநீதிமன்றத்தில் நடத்திவருவதுடன், அதற்கு மைய அரசு தாளம் போட்டு வருகிறது.

காவிரியை நம்பித்தான் தமிழகத்தில் 24.5 லட்சம் ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

19 மாவட்டங்களில் வாழும் மக்களுக்குக் குடிநீர் வழங்கும் ஆதாரமாக உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பயிரை நம்பி 40 லட்சம் விவசாயிகள் உள்ளனர்.

எனவே, சம்பா பாசனத்திற்குக் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடக் கர்நாடகாவுக்கு உத்திரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் அமர்வு, செப்டம்பர் 5, 12, 20, 27, 30 ஆகிய நாட்களில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 6-ந் தேதிக்குள் அமைக்க ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று வெளியிட்டது. அதனை முதலில் ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, திடீரென்று பின்வாங்கி, அக்டோபர் 3 அன்று நடைபெற்ற அவசர விசாரணையின் போது, முன்பிருந்த நிலையிலிருந்து மாறி “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், “நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலமே முடியும்Ó என்றும், “எனவே, செப்டம்பர் 20, 30 தேதிகளில் உத்தரவுகளை மாற்றியமைக்க வேண்டும்Ó எனவும் கோரி மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுப்புத் தெரிவித்துள்ளார். இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது; இந்திய இறையாண்மைக்கும் ஊறு விளைவிப்பது ஆகும்.

அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு 144ன்படி, அரசை நடத்துபவர்கள், நீதித்துறையில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்திற்குத் துணையாக இருக்கவேண்டும்.

இதன்படி பார்த்தால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவை மாநிலங்கள் என்பதால், அதன் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயமும் கடமையும் அம்மாநிலங்களுக்கு உண்டு என்பதே.

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, ‘பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்' அமைக்கப்படவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பின்படியே அவ்வாரியம் அமைக்கப்பட்டது. அதுபோலவே கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா மேலாண்மை வாரியங்கள் உருவாக்கப்பட்டன.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாசல்பிரதேசம், சண்டிகார், தில்லி உட்பட 7 மாநிலங்கள் நீரையும், மின்சாரத்தையும் 50 ஆண்டு காலமாகப் பக்ரா-நங்கல் பியாஸ் மேலாண்மை வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதைத்தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் 14ஆவது பத்தியில் கூறப்பட்டுள்ளது. ஒழுங்குமுறைக் குழு பற்றிய செயல்பாட்டை 16--வது பத்தியில் கூறப்பட்டுள்ளது.

நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதாகும்.

இ.அ.அ.ச. பிரிவு 143-ன் கீழ் நடுவர் மன்றம் வழக்கில் (AIR 1992 S/C 522) மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம் குறித்து நீதிபதி ‘சாவானத்’ வழங்கிய தீர்ப்பில்,

“மாநிலங்களுக்கிடையில் ஓடும் நதியானது, பல மாநிலங்கட்கு இடையில் ஓடினாலும், அந்த நதி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ளது என்று கூறமுடியாது. அது பல மாநிலங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், எந்தவொரு மாநிலமும், அதற்குச் சொந்தம் கொண்டாடி மற்ற மாநிலங்களுக்கான உரிய பங்கினை அளிக்காமல் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடிப்படையில்தான் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு நீர் கேட்கின்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பதை எதிர்க்க, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தையும் கூட்ட வேண்டுமென்று கலைஞர் அறிக்கை வாயிலாகக் கேட்டுள்ளதுடன் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசைக் கண்டித்துள்ளார். இதனை வலியுறுத்திடவே, தஞ்சையில் எதிர்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் கழக முன்னோடிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் உண்ணா நோன்பு போராட்டத்தை மேற்கொண்டார்.

Pin It