ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் தமிழக மாணவர்களைக் கடிக்கத் தொடங்கியுள்ளது தமிழக அரசு! தமிழ்நாட்டில் முதன்முறையாக,வளர்மதி என்னும் ஒரு மாணவியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இன்னும் ஓர் ஆண்டு காலம், எந்த விசாரணையும் இன்றி, அம்மாணவி சிறையில் இருக்க நேரிடலாம். இல்லையென்றாலும், விசாரணைக்குழு, நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆறேழு மாதங்களுக்குப் பின் விடுதலை ஆகலாம்.

Valarmathi studentதமிழ்நாடு குண்டர் சட்டம் என்பது எம்ஜிஆர் ஆட்சிக் காலத்த்தில் கொண்டுவரப்பட்ட ஒன்று. 1982 மார்ச் 12 ஆம் தேதி, இந்தியக் குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தார். குறிப்பாகத் தொடர் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் (bootleggers), கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் கடத்துவோர் ஆகியோரை, எந்த விசாரணையுமின்றி, உடனடியாகக் கைது செய்வதற்காக அந்தச் சட்டம் என்று சொல்லப்பட்டது. பிறகு திருட்டு விசிடி வைத்திருப்போருக்கும் அந்த சட்டம் செல்லுபடியாகும் என்னும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அந்தச் சட்டம்தான் இன்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், மாணவி வளர்மதி ஆகியோர் மீது 'பாய்ந்திருக்கிறது.'

வளர்மதியின் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறுகின்றார். அந்த வழக்கில் ஒன்று கூட, சமூக விரோதச் செயல்பாடு சார்ந்ததன்று. மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டது, மக்களின் அறவழிப் போராட்டங்களுக்குத் துணை நின்றது ஆகியவற்றிற்காகத் தொடுக்கப்பட்ட வழக்குகளே அவை. அவற்றின் அடிப்படையில் எப்படி, குண்டர் சட்டத்தின் கீழ்க் கைது செய்யலாம்?

இது வெறுமனே ஒரு கைது நடவடிக்கை அன்று. இதற்குள் ஓர் அரசியல் இருக்கவே செய்கிறது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வருவது போல, தமிழ்நாட்டின் சிரிப்புப் போலீஸான எடப்பாடியை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம். ஆனால் மத்திய அரசை எதிர்த்தால் கடும் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவார்கள். ஆக, எஜமானின் ஆணைக்கு ஏற்ப ஆடும் எடுபிடி அரசுதான் இங்கு உள்ளது.

இது ஓர் அச்சுறுத்தல். மத்திய அரசின் திட்டத்தை யாரேனும் எதிர்த்தால், அவர்கள் மாணவர்களாக இருந்தாலும், ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்னும் அச்சுறுத்தல். மாணவர்களின் மீதும், ஜனநாயக சக்திகளின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறை, அரச பயங்கரவாதம்!

சல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கில், பல்வேறு ஊர்களிலும் கூடிய மாணவர்கள் இப்போது எங்கே? இன்று ஒரு மாணவிக்குநேர்ந்துள்ளது, எதிர்காலத்தில் பிறருக்கும் நேராது என்பதற்கு என்ன உறுதி? அறவழிப் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்குத் தமிழக மக்கள் தரப்போகும் விடை என்ன? இதுவே இன்றைய காலத்தின் குரல்!

Pin It