ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்கு சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுத்தும், நிதி கொடுத்தும் இன அழிப்பில் பங்கு கொண்ட இந்தியாவைக் கண்டிக்கும் வகையில் இந்திய அரசுக் கொடியையும், இலங்கையைக் கண்டிக்கும் வகையில் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை சார்பில் 25.4.09 அன்று நடந்தது.

சென்னை, ஓசூர் ஆகிய இடங்களில் இப்போராட்டம் நடத்திய தோழர்கள் தளைப்படுத்தப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தஞ்சை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடி எரிப்புப் போராட்டம் நடத்திய தோழர்கள் தளைப்படுத்தப்பட்டு முறையே திருச்சி, கோவை நடுவண் சிறைகளில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நிபந்தனைப் பிணையில் விடப்பட்டனர். தஞ்சைத் தோழர்கள் ஒரு மாதம் கரூரிலும், தஞ்சையில் இரண்டு மாதங்களும் கையொப்பமிட்டனர். ஈரோடுத் தோழர்கள் ஈரோட்டில் ஒருமாதம் கையொப்பமிட்டனர். தஞ்சையில் வழக்கறிஞர் கருணாந்தி அவர்களும், ஈரோட்டில் வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களும் கட்டணமின்றி வாதாடினர்.

ஆனால் கோவையில் கொடியெரிப்புப் போராட்டம் நடத்திய தோழர்களைப் பிணையில் விட கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மறுத்தது. மூத்த வழக்கறிஞர் காந்தி வாதாடினார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது நீதிபதி இரகுபதி என்பவர் ஒருவாரத்திற்கு இத்தோழர்கள் தங்கள் வீடுகளின் முன் இந்திய அரசுக்கொடியை ஏற்றவேண்டும் என்றும், ஒரு வாரம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து பிணை வழங்கினார்.

மூத்த வழக்கறிஞர் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் வாதாடினர். இந்த நிபந்தனைகளை ஏற்காமல் இவற்றை மறு ஆய்வு செய்யும்படி அதே இரகுபதியிடம் மறு முறையீடு செய்யப்பட்டது. அவர் மீண்டும் அந்த நிபந்தனைகளை உறுதிப் படுத்தினார். தோழர்கள் பா.தமிழரசன் - பாரதி ஆகிய இருவரையும் சிறையில் வைத்துக் கொண்டு மற்றவர்களைப் பிணையில் எடுப்பது என்று இயக்கங்கள் முடிவு செய்தன. பிறகு உயர் நீதி மன்றம் விதித்த நிபந்தனைகளை நீக்கக் கோரி தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் ராஜீவ் ரூபஸ், பிரபுசுப்புரமணியன், பாரிவேந்தன், சந்தன் இராமமூர்த்தி, லத்திகா ஆகியோர் சிறப்பு விடுப்பிற்கான வாதுரையை அணியம் செய்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி மூன்று முறை உச்சநீதிமன்றத்தில் முன்னிலையாகி நமக்காக வாதிட்டார். இவர்கள் அனைவரும் கட்டண மின்றி, இவ் வழக்கை நடத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ ராம்ஜெத்மலானி வாதிட ஏற்பாடு செய்தார்.

3.11.2009 அன்று உச்சநீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்சன்ரெட்டி, தீபக் வர்மா ஆகியோர் சட்டத்திற்கும் மனித உரிமைக்கும் பொருந்தாத நிபந்தனைகளை நீக்கிப் பிணை வழங்கியது. ஆதரவற்றோர் இல்லத்தில் பணி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதனை சட்டபடி செல்லாது என்றனர். இனிமேல் கொடியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்ககூடாது என்றனர்.

இவ்வழக்கு இந்தியா முழுமைக்கும் மனித உரிமைக்கெதிரான நிபந்தனைகளை நீக்கியுள்ளது. 200 நாட்கள் சிறையிலிருந்தாலும் இந்தியா முழுமைக்கும் உரிமைகளைப் பெற்று தந்துள்ளனர் தோழர்கள் இருவரும்!

10.11.2009 அன்று மாலை 6 மணிக்கு கோவை நடுவண் சிறை வாயிலில் தோழர்கள் தமிழரசன், பாரதி இருவருக்கும் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. பெருந்திரளாகத் தோழர்கள் திரண்டிருந்தனர். தாரைதப்பட்டை ஒலிக்க முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். மாலைகள், சால்வைகள் என தோழர்கள் இருவருக்கும் அணிவித்தனர்.

த.தே.பொ.க. தோழர்கள் சிதம்பரம், திருத்துறைப் பூண்டி, மதுரை, ஓசூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலிருந்து ஊர்திகளில் வந்திருந்தனர். சென்னை, தஞ்சை, திருச்செந்தூர், கோவை பகுதியிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். த.தே.வி.இ. தோழர்கள் ஈரோட்டிலிருந்து ஊர்தியில் வந்திருந்தனர் பிற ஊர்களில் இருந்தும் வந்திருந்தனர்.

தோழர்கள் பெ.மணியரசன் (த.தே.பொ.க.), தியாகு (த.தே.வி.இ.), கோவை இராமகிருட்டிணன் (பெ.தி.க., பொதுச் செயலாளர்) ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். தோழர் கி.வெங்கட்ராமன் ஒருங்கிணைத்தார். தோழர் கண.குறிஞ்சி, பொன்.சந்திரன், தனலட்சுமி (அனைவரும் மக்கள் குடிமை உரிமைக் கழகம்-பி.யு.சி.எல்.), வழக்கறிஞர்கள் கலையரசு, நிகோலசு, கிருஷ்ணசாமி(ம.தி.மு.க.), வள்ளுவராசன் (பு.இ.மு.), அறிவுடை நம்பி(த.ஓ.வி.இ.), கருப்புசாமி (சிறுதொழில் முனைவோர் சங்கம் - கோப்மா), கவிஞர் முருகு இராசாங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.

 

Pin It