supreme court 255பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்தியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவ்வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21அ படி அனைவருக்கும் இலவசமாக கட்டாயமாக ஒரே மாதிரி கல்வியை அளிப்பது அரசின் கடமை. எனவே, நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பொதுவான கல்வித் திட்டம் வேண்டும். அரசு, தனியார், உள்ளூர் நிர்வாகம் என யார் நடத்தும் பள்ளிகளாக இருந்தாலும் அங்கு மாணவர்களுக்கு ஒரே பாடத் திட்டம் தான் இருக்க வேண்டும். எல்லாக் கல்வி வாரியங்களையும் இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியத்தை உருவாக்க மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இதற்கு அதில் சொல்லப்பட்டுள்ள காரணம் நுழைவு தேர்வுகள் சிபிஎஸ்இ பாடத் திட்டதின் படி நடப்பதால் மற்ற பாடத் திட்ட மாணவர்கள் பாதிப்பு அடைகிறார்கள் என்பதுதான். இதன் செய்தி கடந்த 20/6/2020 நாளில் தினமணியில் வந்துள்ளது.

            வழக்கு தொடுத்த உபாத்தியா என்பவர் பாரதிய ஜனதா கட்சி டெல்லி கிளையின் செய்தித் தொடர்பாளர். யோகா, வந்தே மாதரம் பாடல், இந்தி மொழி ஆகியவற்றை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர். அதே போல் இஸ்லாமிய தனிச் சட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர். இது போன்ற ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை வழக்குகளின் வழியாக நிறைவேற்றுவதற்காக உச்ச, உயர் நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகளைத் தொடுப்பவர். இந்தப் பின்னணியில் இவ்வழக்கின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ் தன் திட்டங்கள் பலவற்றை பாராளுமன்றங்களின், சட்டமன்றங்களின் வழியாக நிறைவேற்றாமல் நீதிமன்ற வழக்குகளின் வழியாக நிறைவேற்ற முயல்வதின் வெளிப்பாடுதான் இவ்வழக்கு. ஏற்கனவே இடஒதுக்கீடு, பாபர் மசூதி, ஆதார் அடையாள அட்டை ஆகியவையும் இவ்வாறு வழக்குகளின் வழியேதான் நம்மிடம் திணிக்கப்பட்டது.

            அதேபோன்று, தற்போது வழக்கின் வழியே கல்வியையும் கைப்பற்றப் பார்க்கிறது. இவர்கள் முன்வைக்கும் ஒரே நாடு ஒரே கல்வித் திட்டம் என்பது அடிப்படையிலேயே தவறானது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வியை, மேல்நிலைக் கல்வி வரை வழங்குவதை அடிப்படை உரிமையாக்கியது தான் சட்டப்பிரிவு 21அ. அப்பிரிவு அனைவருக்கும் சமத்துவமான கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறதே தவிர எந்த இடத்திலும் ஒரே நாடு ஒரே கல்வித் திட்டம் என்று கூறவில்லை. அனைவருக்கும் சமத்துவமான கல்வியை முழுவதுமாக நிறைவேற்ற மறுக்கும் பாரதிய ஜனதா அரசு அதை ஒரே கல்வித் திட்டமாக மாற்ற முயல்கிறது. இதற்கு இவர்கள் முன்வைக்கும் ஒரே காரணம் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் பங்கு பெற அனைவரும் ஒரே கல்வித் திட்டத்தில் பயில வேண்டும் என்பதுதான்.

            உண்மையில் அறிவுக்குப் புறம்பான, ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட இந்த அகில இந்தியத் தேர்வுகளை நீக்கிவிட்டு மாநில அடிப்படையிலான தேர்வே சரியானது. அதனால்தால் நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு கடுமையாகப் போராடியது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் கல்வி வேதமயமாக்கப்படும், புராண மயமாக்கப்படும் பார்ப்பனிய மயமாக்கப்படும். நமது பிள்ளைகளின் சீருடை கூட காவி மயமாக்கப்படும். கல்வி நிறுவனங்கள் பார்ப்பன பனியாக்களால் கைப்பற்றப்படும். பல்வேறு மாநிலங்களின், தேசிய இனங்களின் தனித்தன்மைகளை அழித்து ஒரு செயற்கை பாரதியர்களை உருவாக்குவதும், தமிழ்நாடு போன்ற வளர்ந்த கல்வி அமைப்பைக் கைப்பற்றி வட இந்திய பார்ப்பன, பனியாக்கள் பலன் பெறுவதே இந்த ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தின் நோக்கம்.

            கல்வி மனிதர்கள் தங்களை வளர்த்துத் கொள்வதற்கான விடுதலை செய்து கொள்வதற்கான அறிவை ஆற்றலை வழங்கக் கூடியது. மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான பொய்க்கதைகள் கல்வியாகவோ கல்வி முறையாகவோ இருக்க முடியாது. கல்வி அடிமைத் தன்மைகளையோ, மேலாதிக்கத்தையோ ஏற்காது. அது விடுதலையை சுதந்திரத்தை மட்டுமே ஏற்கும். மண்ணின் மக்களின் மரபுகள், மொழி, பண்பாட்டில் வேர் பிடித்து கலை, அறிவியல், வரலாறு, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்யக் கூடியதாகவே கல்விமுறை அமைக்கப்பட வேண்டுமே ஒழிய பார்ப்பன பனியாக்களின் கனவான ராமராஜ்யம் அமைக்க நம் சமூகத்தை பழக்கப்படுத்தும் ஒரு மேலாதிக்கக் கருவியாக கல்வி முறையை கட்டமைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

            எனவே, ஒரே நாடு ஒரே கல்விமுறை என்கின்ற அபாயத்தை எதிர்த்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கல்வியாளர்களும் உடனடியாக தங்களுடைய மறுப்புகளை எதிர்ப்புகளை எழுப்ப வேண்டும். மூளையை பறி கொடுத்து விட்டால் மற்றவையெல்லாம் தானாகவே பறி போய்விடும் என்பதை நாம் உணர வேண்டும். நரிகள் வருவதற்கு முன்பே வரும் நரிகளின் ஊளைச் சத்தமாகத்தான் இவ்வழக்கை அணுக வேண்டும்.

            இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கில் பிரதிவாதியாக தமிழக அரசு, அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வழக்காடி வெல்ல வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மாற்றாக,

  • நம் தமிழ்நாட்டின் கல்வி, கல்வி முறை, கல்வி நிறுவனங்கள் குறித்த அதிகாரம் நம் தமிழ்நாட்டிற்கே வேண்டும்.
  • தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டிற்குரிய பங்கை தமிழ்நாடு அரசுக்குரிய ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும்!
  • நம் தமிழ்நாட்டிற்கு மருத்துவம் (நீட்), பொறியியல் (JEE) கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு, NET, உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளிலிருந்து விலக்கு வேண்டும்.
  • நம் தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  • தமிழர்களின் வரலாற்று அறிவு அனைத்தும் தொகுக்கப்பட்டு தற்காலப் புதுமைகளுடன் இணைத்து தமிழ்நாட்டுக்கான தனித்த கல்வி முறையைப் படைப்போம்.

என்பது போன்ற மாற்று உரிமை/ அதிகார மீட்பு/ கல்விப் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசை, அரசியல் கட்சிகளை, கல்வியாளர்களை கேட்டு கொள்கிறோம். 

- செயப்பிரகாசு நாராயணன், நிறுவனர், தலைவர், தமிழர் முன்னணி