அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இதனால் உலகம் முழுவதிலுமே கொந்தளிப்பான சூழ்நிலைமை நிலவுகிறது.

எகிப்தில் துவங்கி ஏமன் வரையில் கிட்டத்தட்ட அனைத்து அரபு நாடுகளிலும், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலும் தொடரும் மக்கள் கிளர்ச்சி ஒருபுறம்; கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி என மிக முக்கிய ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத மக்கள் போராட்டங்கள் மறுபுறம்; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர் கிளர்ச்சிகள் என உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர் போராட்டங்களும் உலகமயமாகியுள்ளன.

3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் துவங்கிய நெருக்கடி லட்சக்கணக்கான மக்களின் வேலையைப் பறித்து வீதிக்கு விரட்டியது. நிலைமையைச் சீராக்க, ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம், பெரும் முதலாளிகளின் நிறுவனங்களுக்கு மீட்பு நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கில் நிதியைக் கொட்டிக் கொடுத்தது. இந்த மீட்பு நிதி, பொருளாதாரத்தை மீட்க பயன்படுத்தப்படும் என்று கூறியது. ஆனால், அது நடக்கவில்லை. மீட்பு நிதி என்ற பெயரில், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதிகளையெல்லாம் வெட்டிக் குறைத்து கொடுக்கப்பட்ட நிதியை பெரும் நிறுவன முதலாளிகள் பங்கு போட்டுக் கொண்டனர். எனவே அந்த நிதி பொருளாதாரத்தை மறுநிர்மாணம் செய்ய பயன்படவில்லை. இதனால் தேக்க நிலையிலேயே இருந்த அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் பாதாளத்தை நோக்கி பயணப்படத் தொடங்கியுள்ளது.

முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்ட, தாராளமய பொருளாதாரக் கொள்கை அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டிருப்பதால்,ஆளும் வர்க்க முதலாளிகள் ஒபாமா நிர்வாகம் சொல்வதை கேட்கப்போவதில்லை. மாறாக, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலையில் ஒபாமா இருக்கிறார். எனவே, மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பொருளாதாரச் சூழலில் தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள பெரும் முதலாளிகள், அமெரிக்கத் தொழிலாளிகளின் வயிற்றில் இன்னும் பலமாக அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இதுவரை 36 மாகாண அரசுகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் என அனைத்துத் திட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீட்டை மிகக் கடுமையாக வெட்டிக் குறைத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன. ஓய்வூதியம் உள்பட எதற்கும் பணமில்லாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்று உலகின் மிகப் பெரிய பணக்கார நாட்டின் ஜனாதிபதி ஒபாமா புலம்பித் தள்ளியுள்ளார்.

அமெரிக்காவின் நிலைமை மோசமடைந்து வரும் சூழ்நிலையில், ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. கிரீஸ் நாட்டில் நெருக்கடி தீவிரமடைந்ததால் அரசே திவாலாகும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை உயர்த்திப் பிடித்த தீவிர முதலாளித்துவ நாடுகளான இத்தாலி உட்பட பல நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவைப் போலவே இந்த ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்திலிருந்து பெரும் முதலாளிகளை காப்பாற்றுவதற்காக உழைக்கும் மக்களின் நலன்களை பறிக்கத் தயங்கவில்லை. ஓய்வூதிய வெட்டு, நீண்ட காலமாக போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் வெட்டு, கூலிக்குறைப்பு, வேலைப்பறிப்பு என கடும் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதற்கு எதிராக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஏதென்ஸ் நகரிலும், ரோம் மாநகரிலும், மாட்ரீட் நகரிலும், இன்னும் ஏராளமான ஐரோப்பிய நகரங்களிலுமாக போராட்டக் களம் கண்டுள்ளனர்.

உலக அளவில் தொழில் துறை உற்பத்தி ஒரு பேரழிவுச் சூழலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவும்,முன்னேறிய முதலாளித்துவ நாடுகளும் தங்களது தேசங்களின் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. அதே வேகத்தோடு தொழிலாளர்களும் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிரிட்டனிலும் சமீபத்தில் இந்த நிலைமை ஏற்பட்டது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஓய்வூதிய வெட்டு உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட்டவுடன், அது ஒரு குறிப்பிட்ட மக்கள் பகுதியினரின் பிரச்சனை என்று கருதாமல், அரசு ஊழியர்களோடும், பேராசிரியர்களோடும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் களத்தில் இறங்கினார்கள். லண்டன் மாநகரம் அதிர்ந்தது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிரிட்டனில் பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், பின்லாந்தில் விமானப்போக்குவரத்து ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டக் களம் கண்டுள்ளனர்.

இன்னும் உலகம் முழுவதிலும் எடுத்துக்கொண்டால், சிலி நாட்டில் தாமிர சுரங்கத் தொழிலாளர்கள் 45ஆயிரம் பேர்; மெக்சிகோவின் 12 பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள்; அர்ஜென்டினாவில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் நிறுவனத் தொழிலாளர்கள்; பராகுவேயில் பொது போக்குவரத்துத் தொழிலாளர்கள்; அமெரிக்காவில் அணுசக்தி உலைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்; கனடாவில் அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள்; ஆசியக் கண்டத்தில் கொரியாவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனியார் நிறுவன கட்டுமானத் தொழிலாளர்கள், தனியார் வங்கி ஊழியர்கள், ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள்; இலங்கையில் தொழில் நுட்ப பேராசிரியர்கள், ஜவுளித் தொழில் நிறுவன ஊழியர்கள்; இந்தோனேசியாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் சுரங்க நிறுவனத் தொழிலாளர்கள்; ஆஸ்திரேலியக் கண்டத்தில் பல்லாயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள்; ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனத் தொழிற்சாலை தொழிலாளர்கள், 2 லட்சம் மெட்டல் தொழிலாளர்கள், நைஜீரியாவில் இரும்பு எஃகு நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் என - உலகம் முழுவதிலும் ஊதிய பறிப்புக்கெதிராக, வேலை பறிப்புக்கெதிராக, உரிமை பறிப்புக்கெதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மறுபுறத்தில் எகிப்து, ஏமன், இராக், பாலஸ்தீனம், பஹ்ரைன், மொராக்கோ உட்பட அரபு நாடுகளில் ஏகாதிபத்திய ஆதரவு எதேச்சதிகாரிகளுக்கும் வேலையின்மைக்கும் எதிரான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நமது அன்றாட வாழ்வில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நாசகர தாராளமய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு எதிராக உலகெங்கிலும் தீவிரமடைந்துள்ள இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முன்னிற்பது இளைஞர்களும், மாணவர்களுமே!

Pin It