அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் செய்யும் புரட்சி பற்றி ஊடகங்கள் எங்கிலும் பார்க்கிறோம். ஆனால் அமெரிக்காவில் தொழிலாளர்கள் தங்கள் உரிமை பறிபோவதை எதிர்த்து நடத்தும் போராட்டம் பற்றி வெகு சில ஊடகங்களே முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடுகின்றன‌. தற்போது விஸ்கான்சின் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் தொழிற்சங்க உரிமையைப் பறிக்க சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளனர். அதை எதிர்த்து போராட்டம் தீப்பொறியாக ஆரம்பித்து தற்பொழுது பெரிதாக வெடிக்கத் தொடங்கி உள்ளது.

சுமார் 75000 அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் அங்கு நடைபெற்றது. அமெரிக்காவில் இவ்வளவு ஊழியர்கள் தங்கள் உரிமையைக் காக்க போராடுவது சமீபத்திய நிகழ்வுகளில் புதுமையானது. இது போன்ற பெரிய அளவிலான மக்கள் போரட்டங்கள் லத்தீன் அமெரிக்க மக்கள் தவிர யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் அமெரிக்காவில் ஏற்படுத்திய சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மாநிலங்களின் நிதி நிலமை மோசமாக உள்ளது. இதை காரணமாகக் காட்டி மாநில அரசு ஊழியர்களின் யூனியன் கட்டமைப்பை ஒட்டு மொத்தமாக அழிக்க விஸ்கான்சின் அரசு முயன்று வருகிறது. புதிய சட்டதிட்டத்தின் படி யூனியன் மூலம் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்துவது, யூனியனுக்கு பணம் வசூலிப்பது போன்ற யூனியன் சம்பந்தபட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நிறைய கட்டுப்பாடு விதிக்கப்படும். மொத்தத்தில் அரசுத் துறையில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கையை ஒட்டுமொத்தமாக முடக்கிவிட்டு அரசுத் துறை தொழிலாளர்களின் சலுகைகளை சிறிது சிறிதாக இனி வரும் காலங்களில் பறிப்பது தான் இந்த சட்ட திட்டத்தின் நோக்கமாக கருதப்படுகிறது.

இனி இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றி பார்ப்போம். சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் மக்கள் கோபம் தனியார் வங்கிகளின் மீதும் தனியார் முதலீட்டு நிறுவனங்களின் மீதும் திரும்பி இருக்கிறது. அந்தக் கோபத்தை அரசின் மீது திருப்ப தேனீர் விருந்து இயக்கம் குடியரசு கட்சி சார்ந்தவர்களால் தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தினர் வலியுறுத்துவது சிறிய அரசாங்கம், குறைந்த அரசுக் கடன் மற்றும் குறைவான வரி. ஆனால் அமெரிக்காவின் இந்த நிலைக்குக் காரணமான தனியார் வங்கிகள், தனியார் லாபிக்கள் மற்றும் அவர்கள் மூலம் உடைத்து எறியப்பட்ட அரசின் கட்டுப்பாடு பற்றி இந்த இயக்கம் வாய் திறப்பது இல்லை. இத்தனைக்கும் அமெரிக்காவில் அடிப்படை பள்ளிக் கல்வி, அரசு நிர்வாகம், ராணுவம், முதியோர் நலன் போன்றவை மட்டுமே அரசின் கையில் உள்ளது. சுகாதாரம், தொழிற்துறை, வங்கிகள் போன்ற அனைத்தும் தனியார் கையில் தான் உள்ளது. ஏனெனில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை வழி நடத்துபவர்கள் பலம் வாய்ந்த தனியார் லாபிக்களின் ஆதரவை பெற்றவர்கள். கடந்த தேர்தலில் இந்த இயக்கத்தினரின் சிலர் வெற்றி பெற்றார்கள். அவர்களுடைய முக்கிய நோக்கமே அரசுப் பணியாளர்களின் தொழிற்சங்கங்களை அழித்து விட்டு அரசு தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து அரசு கட்டுப்பாடற்ற தனியார் தொழிற்துறையை வளர்ப்பது தான். இந்த செயல்களுக்கு ஒரு சில பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் ஆதரவு அளிப்பதாகவும் செய்தி உள்ளது.

http://www.economist.com/blogs/democracyinamerica/2011/02/public_and_private_unions (அரசுத் துறை தொழிற்சங்கங்கள் 23%லிருந்து 36% ஆக 1973லிருந்து இன்றுவரை உயர்ந்துள்ளது. ஆனால் தனியார் துறை தொழிற்சங்கமோ 24%லிருந்து 7%ஆகக் குறைந்துள்ளது.)

அமெரிக்க உற்பத்தி துறை சிறிது சிறிதாக அழிந்து மெக்சிகோ மற்றும் சீனா போன்ற நாடுகளுக்குச் சென்றபோது கூட அந்த தொழிற்சங்கங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தற்போது தனியார் தொழிற்துறையில் இருப்பவர்களைப் பொருத்தவரை தங்களுடைய சம்பளமும் குறைந்து, சலுகைகளும் குறைந்து எதிர்கால வளம் கேள்விக்குள்ளான நிலையில் இருக்கும்போது அரசுத் துறை ஊழியர்கள் மட்டும் நியாயமான உரிமைகளை தொழிற்சங்கம் மூலம் பெற்று வருவது அவர்களிடம் கோபத்தையே ஏற்படுத்துகிறது.

அடுத்து அரசுத் துறை தொழிலாளர்களின் நிலையைப் பார்ப்போம். அமெரிக்காவில் அரசுத் துறையில் வேலை செய்வோரின் கல்வித் தகுதியும் குறைந்தது இல்லை. அரசுத் துறை தொழிலாளர்களில் 54% பேர் நான்கு வருட கல்லூரி படிப்பு படித்துள்ளனர். தனியார் துறையில் இது 35% மட்டுமே. ஆனால் கல்லூரி படிப்பு படித்துள்ள அரசுத் துறை ஊழியர்கள் அதே தகுதி உள்ள தனியார் ஊழியர்களை விட 28% குறைவான சம்பளம் பெருகிறார்கள். அவ்வளவு குறைவான சம்பளம் பெற்றும் அங்கே தொடர்ந்து இருப்பதற்கான காரணம் பணி ஓய்வு அடைந்த பின் அவர்களுக்கு கிடைக்கப் போவதாக நினைத்து கொண்டு இருக்கும் பலன்கள். ஆனால் அரசோ தொழிற்சங்கங்களை அழித்து பின் அவற்றையும் சிறிது சிறிதாக அழிக்க தொடங்கி உள்ளது . அதன் விளைவே மேற்சொன்ன போராட்டம்.

Animal Farm என்ற புத்தகத்தில் George Orwell கம்யூனிசத்தைப் பற்றி எழுதும் போது All are equal என்பது All are equal but some are more equal than others என்ற நிலைக்கு மாறிவிடும் என்பார். தற்போது அதே நிலை அமெரிக்காவிலும் வந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுண‌ர் பால் கிரக்மேன் கூறுகிறார்.

இதோ (http://www.nytimes.com/2011/02/21/opinion/21krugman.html?hp') அவருடைய கூற்றை படியுங்கள்.

In principle, every American citizen has an equal say in our political process. In practice, of course, some of us are more equal than others. Billionaires can field armies of lobbyists; they can finance think tanks that put the desired spin on policy issues; they can funnel cash to politicians with sympathetic views (as the Koch brothers did in the case of Mr. Walker). On paper, we’re a one-person-one-vote nation; in reality, we’re more than a bit of an oligarchy, in which a handful of wealthy people dominate.

உலகம் ஒரு உருண்டை!

உலகம் ஒரு உருண்டை!

Pin It