தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

bharathidasan 350பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

periyar 221குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
தமிழன் முதலில் உலகினுக் களித்த
அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்
அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்
பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்
தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்
மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்
நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துக
ஏதும் இனியும் செய்யற்க வெனும்
விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்
கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.
நல்குதல் வேள்வி என்பது நலியக் -
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய
ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
குச்சிக் காரிக்குக் கோயிலும் கட்டி
மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்
அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன்
இப்படி ஒருநிலை காணுகின் றோமே
இப்படி எங்குண் டிந்த உலகில்?
இறந்த காலத் தொடக்கத் திருந்து
சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?
இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும்இவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? - நம் பெரியார் வாழ்கவே!

- பாரதிதாசன் (8.6.1958, 6)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆரரிரோ ஆராரோ
சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே!
மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
துண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற சரம்விடுக்கும் பொய்ம் மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று தொடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு!

***

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It

திங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடும்.

சனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.

இதைக் கேள்: நடலை அறுந்
தாள் அருணை
நம்பனுக்கு அன்பில்லா
உடலை ஒறுத்தால்
ஆவதுண்டோ -
அடலைநூல்
ஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே
மோதினாற்
பாம்பு சாமோ.

இச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.

- புரட்சிக்கவிஞர்
குயில் 4-10-1960

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமோ?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்றுகேட் பவனை, "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணரு நாள் இந்தநாள்
தீபா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவரெ!

------------------------

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It