நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்காக அவதரித்த லோக குருக்கள் அநேகர் என்பது யாவரும் அறிந்த விஷயம். அவர்களால் ஏற்பட்டிருக்கும் தொல்லைகளும் நமது சுயமரியாதைக்கு இடையூறுகளும் நமது சீர்திருத்தத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைகளும் இவ்வளவு, அவ்வளவு என்று சொல்லி முடியாது. இவ்வளவும் போதாமல் திருமதி பெசண்டம்மையார் அவர்களால் சுமார் 20, 30 வருஷங்களாக “லோககுரு வருகிறார்! லோக மாதா வருகின்றார்!” என்பதாக கூப்பாடு போடப்பட்டு வந்து, அநேக டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பி.எ., எம்.ஏ., பட்டம் பெற்றவர்கள் முதல் நம்பச் செய்து இரவும் பகலும் எதிர்பார்த்து திடீரென்று சீமையில் திரு. கிருஷ்ணமுர்த்தி என்ற வாலிபர் லோககுருவாகவும், திருமதி அருண்டேல் ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு அம்மையார் லோக மாதாவாகவும் அவதாரம் செய்து உலகோர்கள் ஒப்புக் கொண்டதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு பக்கத்தில் ‘ உலகாக்ஷிப்பு’ நடந்து வருகின்றது.

periyar and dr johnsonஇவ்வளவும் போதாமல் நமது திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தமது தவத்தால் இன்னும் ஒரு லோககுரு அவதாரம் செய்யப் போவதாய் திருநெல்வேலியில் 8-7-28 தேதி வெளியாக்கி விளம்பரப் படுத்தியிருக்கின்றார். ஆனால் அந்த லோககுரு அவதாரம் செய்யப் போவதற்கு அப்போது அவர் சொன்ன காரணம்தான் மிக வெட்கக் கேடானது என்று சொல்லுவோம். என்னவென்றால் மக்களுக்கு கடவுள் எண்ணம் மறைந்துபோன காலத்தில், கடவுள் அவ்வெண்ணத்தை உண்டாக்க அவதாரம் செய்வது எப்போதும் வழக்கமாம். அதுபோலத்தான் முன்பு ஒரு காலத்தில் சமணர்களால் கடவுள் எண்ணம் மக்களுக்குள் மறைபட்டிருந்த காலத்தில் திருஞானசம்மந்தர் என்கின்ற பார்ப்பனர் தோன்றி, தனது மூன்றாவது வயதிலேயே சமணர்களை வென்று, அவர்கள் தத்துவங்களை அழித்து, கடவுள் பெருமையைக் காட்டி, மக்களை மோக்ஷமடையும்படி செய்தாராம். “அதுபோலவே இப்போது... என்பவரால் மக்களுக்குள் கடவுள் எண்ணம் மறைபட்டு வருவதால் அதை ஒழித்து அவனை வாதில் வென்று மக்களுக்கு கடவுள் எண்ணத்தை ஊட்டி மோட்சம் கொடுக்க ஒரு லோககுரு அவதரிக்கப் போகின்றார்; அவர் தயாராயிருக்கின்றார்; எல்லோரும் தவம் கிடங்கள்” என்று பேசியிருக்கின்றார். அந்த லோககுரு இனிமேல் பிறக்கப் போகின்றாரோ அல்லது திரு. கிருஷ்ணமூர்த்தி லோககுரு ஆய் விட்டது போல் நமது திரு.வி.கல்யாணசுந்தரரே லோககுரு ஆய்விடுவாரோ அல்லது நமது சுந்தரராலேயே யாராவது காட்டப்படுவாரோ அறிகிலோம்.

பத்து அவதாரங்களும், பன்னிரண்டு ஆழ்வார்களும், நான்கு சமயக் குரவர்களும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் அவதரித்து வெகுகாலமாக யாரும் அவதரிக்கவே இல்லை என்பது யாவரும் அறிந்ததே. இதற்குக் காரணம் உலக,ம் nக்ஷமமாய் நீதியாய் சத்தியமாய் நடந்து வந்ததாலோ அல்லது யாராவது 144 போட்டு தடுத்து விட்டதாலோ என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகிலும் நமது முதலியார் அவர்கள் தவத்தால் இப்போதாவது கடவுளை உணர்த்த ஒரு அவதாரம் வரப் போவதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி எய்துகிறோம். ஆனாலும் நமக்கு இதில் ஒரே ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. அதாவது கடவுள் உணர்ச்சி மறைந்த மக்களுக்கு ஒரு சமயம் கடவுள் ஒரு அவதாரம் அனுப்பித் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை விட கடவுள் தானாகவே மக்கள் மனதில் வெளிப்படும்படி செய்து கொள்ள முடியாதா என்பதுதான்.

இதற்கு ஒரு கதை உண்டு. அதாவது ஒரு ஊரில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அந்தக் கோயிலின் மேடையில் ஒரு ராமசாமி பிள்ளையாருக்கு நேரே காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்து பிள்ளையாருக்கு மிகவும் அவமானம் ஏற்பட்டுத் தன்னை வெகு பக்தியுடன் பூசை செய்யும் ஒரு கல்யாணசுந்தரக் குருக்களைக் கூப்பிட்டு “ஓ குருக்களே! இந்த ராமசாமியை காலை எடுத்து அப்புறம் வைத்துக் கொள்ளச் சொல்லுகின்றாயா? அல்லது உன் கண்ணை பொட்டை ஆக்கட்டுமா” என்று கேட்டதாம். அந்தக் குருக்கள் பிள்ளையாரைப் பார்த்து “என் கண்ணைப் பொட்டையாக்க சக்தியுள்ள பிள்ளையாரே! அவன் காலை முடமாக்காவிட்டாலும் சற்று மடக்கச் சொல்லக்கூடாதா” என்று கேட்க ஞானமில்லாமல் ராமசாமியின் காலை எடுக்கும்படி தவம் செய்தாராம். அதுபோல் இருக்கின்றது நமது திரு.முதலியார் அவர்கள் வெளிப்படுத்தும் அவதார மகிமை.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.07.1928)

Pin It