1921 ஆகஸ்ட் மாதம் 5 சென்னை சட்டசபையில் கனம் திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் கொண்டு வந்து பாஸ் செய்த தீர்மானங்களுள் முக்கியமானது, சென்னை கோட்டைக்குள் கொரடுபோட்டுக் கொண்டிருக்கிற பிராமணர்களுடைய கோட்டையைத் தகர்த்து, கோட்டையாகிய கவர்மெண்டு ஆபீசாகிய கோட்டைக்குள் பிராமணரல்லாதாரும் சூப்பிரண்டுகளாகவும் உயர்தர கிளார்க்குகளாகவும் செய்விக்க வேண்டுமென்பதும், அதுவும் மூன்று வருஷ காலத்திற்குள் நூற்றுக்கு ஐம்பதுக்கு குறையாமல் பிராமணரல்லாதாரை வேலைகளில் நியமிக்க வேண்டுமென்பதும், அந்த கவர்ன்மெண்டு ஆபீசில் இருக்கும் பிராமணருக்குப் பிரண்டுகள், கிளர்க்குகள் வெளிப்படுத்தப்படவேண்டுமென்பதுமான இந்த தீர்மானத்துக்கு என்ன மதிப்பு தந்தனர் கவர்ன்மெண்டார்?
இந்த நிலைக்கு யார் உத்தரவாதம்? பிராமண உத்தம சீலர்களும். தீர்மானத்தை நிறைவேற்றக் கூடிய மனத்திடமில்லாத மினிஸ்டர்களும் அல்லவா? இதில் அதிக அக்கிரமமுடையது, சர்.சி.பி. ராமசாமி அய்யருடைய லா டிபார்ட்டுமெண்டு ஒரு பிராமண சூப்பிரண்டு கூட கவர்மெண்டு ஆபீசை விட்டு வெளிப்படுத்தவே இல்லை. பிராமணர்களுக்கே லா டிபார்ட்டுமெண்டு காணியாட்சியா? புது லா மெம்பர் இதைக் கவனிக்கும்படியாக வேண்டுகின்றோம்.
கனம் நாப்பு துரை தாம் கவனித்து ஏற்பாடு செய்வதாக கவுன்சிலில் வாக்களித்தார். அவரும் போய் விட்டார். திரு. தணிகாசலம் செட்டியாரும் சட்டசபையில் தற்போது இல்லை. இந்த நிலையில் இனியாவது சரியான நிலைமையிலுள்ள எல்லா அதிகாரிகளும், பிராமணரல்லாதாருக்கு நியாயம் நடத்துவார்கள் என்பது எங்கள் பூரண நம்பிக்கை. லா டிபார்டுமெண்டில் 100-க்கு 50க்கு மேல் பிராமணரல்லாதாரை சூப்பிரெண்டுகளாகவும் கிளர்க்குகளாகவும் அஸிஸ்டெண்டு செக்ரிடரிகளாகவும் ஆக்கி வைக்க வேண்டுமென்பது ஜஸ்டிஸ் கட்சிக்காரருடைய வேண்டுகோள். புது லாமெம்பர் கட்டாயம் இந்த அக்கிரமமான நடவடிக்கையை மாற்றி நியாயம் செய்ய வேணும். இனிமேல் புது லா மெம்பர் கவனித்து அக்கிரமத்தைக் குறைத்து மற்ற வகுப்பினரையும் லா டிபார்ட்மெண்டில் அதிகமாக சேர்க்கும்படி உத்திரவு உடனே பிறப்பிப்பார் என நம்புகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டாமா? - நியாய வேண்டுகோள்.
(குடி அரசு - கட்டுரை - 12.08.1928)