அருப்புக்கோட்டையில் சுகாதார வார கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத் தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப்பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு “முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிராமணன் தான் பாட வேண்டும்” என்று சொல்ல, உடனே அங்கிருந்த கூட்டம் ‘சூத்திரன்’ என்று சொன்னதற்காக அக்கிராசனரை மன்னிப்பு கேட்கும்படி கேட்கவே, அக்கிராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுயமரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள்.

periyar 480பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்யவொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும் சில குற்றங்களும் சுமத்தி அரஸ்டு செய்து ஜாமீனில் விடவும் மறுத்து சிறைச்சாலையில் இரவெல்லாம் அடைத்து வைத்து கேஸ் தொடர்ந்தார்கள்.

கேசுக்கு மதுரையிலிருந்து வக்கீல்கள் பீசில்லாமல் போய் பல வாய்தாக்கள் ஆஜராகி கேஸ் நடத்தினார்கள். கடைசியில் குற்றவாளிகள் இன்னார் என்று சரிவர அடையாளம் காட்டவே முடியாமல் போய் விட்டது. அப்படி இருந்தும் அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்த மேற்படி வாலிபர்கள் கேஸை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஆசைப்பட்டார்கள். கடைசியாய் கேசு தள்ளுபடியாகி விட்டதாக அருப்புக்கோட்டையிலிருந்து தந்தி வந்திருக்கின்றது.

அனாவசியமாய் ஒரு இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்ததற்காக போலீசு அதிகாரிகள் மீது நஷ்டத்திற்கு விவகாரம் தொடர வேண்டும் என்கின்ற எண்ணம் அவ்வூராருக்கு இருப்பதாக தெரிய வருகின்றது. அதற்காக பலர் பொருளுதவி செய்வதாகவும் முன் வருவதாகவும் தெரிய வருகின்றது.

என்றாலும் விடுதலை அடைந்த விஷயத்திற்காக வாலிபர்கள் பதினொருவரையும் பாராட்டுவதுடன் இந்த கேசுக்கு பொருள் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டத்தையும் கருதாது வந்து உதவி செய்த மதுரை வக்கீல்களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.06.1928)

Pin It