பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் தங்கள் ஆதிக்கத்திற்கு ஊனம் வராமல் காப்பதில் கவலை எடுத்துக் கொண்டு அதற்காக எந்ததெந்த வகையில் மக்களை ஏமாற்றலாமோ அந்தந்த வகையில் எல்லாம் இன்னும் துணிவுடன் வேலை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆதலால் இனி அதைப் பற்றியும் சற்று கவனம் செலுத்துவோம்.

periyar and karunanidhi 620என்னவெனில், உதாரணமாக, சென்ற வாரத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள உத்திராதி மடம் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன மடத்தில் வைத்துப் “பிராமணர்கள் கூட்டம்” என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஐகோர்ட் மாஜி ஜட்ஜியும் இப்போது வக்கீலுமான திரு. வி.வி. சீனிவாசய்யங்கார் அக்கிராசனத்தின் கீழ் மற்றொரு ஐக்கோர்ட்டு வக்கீல் என். சீனிவாசாச்சாரியார் என்பவரால் “பிராமணர்களின் தற்கால நிலைமை” என்பது பற்றி ஒரு உபன்யாசம் செய்யப்பட்டிருக்கின்றது. அது வைதீகப் பார்ப்பனக் கூட்டம் என்றாலும், எல்லா வகையான பார்ப்பனர்களுமே அக் கூட்டத்தில் கூடி இருந்திருக்கின்றார்கள். அந்தச் சமயத்தில் அக்கிராசனரும் உபன்யாசகரும் ஆகிய இருவர்களும் பேசிய பேச்சைக் கேட்டவர்களுக்கு பார்ப்பனர்களின் தற்கால நிலைமை எப்படிப்பட்டது என்பது ஒருவாறு தெரியக் கூடுமாயினும் பார்ப்பனரல்லாதாரின் தற்கால நிலைமை என்னவென்பதும் அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதும் அதைவிட நன்றாய் தெரியுமென்றே நினைக்கின்றோம்.

முதலில் அவ்விருவர்களும் பேசிய பேச்சுகளில் உள்ள முக்கிய விஷயங்கள் சிலவற்றை அதாவது ஜூலை 27-தேதி “மித்திரன்” பத்திரிகையில் காணுவதின் சாரத்தை குறிப்பிட்டுவிட்டு பின்னால் அதைப் பரிசீலனை செய்வோம்.

அக்கிராசனர் முன்னுரையில் காணப்படுவது:-

நான் 20 வருஷமாக அரசியல் விஷயத்தில் கவலை வெளிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது எடுத்துக் கொள்ள நேர்ந்தது.

எனது அனுபவத்தைக் கொண்டு எனக்கு சுயராஜ்யத்தில் நம்பிக்கை குறைந்து விட்டது.

பிராமணர்கள் தாங்கள் சிறுபான்மையாய் இருந்தாலும் தேச நன்மையையே பிரதானமாக கருதியதால் தங்களுக்காகவென்று ஒன்றும் அரசியலில் கேட்டுக் கொள்ளவில்லை.

அப்படி இருந்தும் இது சமயம் பிராமணர் என்ற மாத்திரத்தில் ஒருவித துவேஷ புத்தி கிளப்பிவிடப்பட்டு வருகின்றது.

பிராமணர்களை தூஷிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருவதை பிராமணர்கள் எவ்வழியில் தடை செய்தார்கள்?

பிராமண துவேஷம் 25 வருஷத்திற்கு முன் கிளப்பி விடப்பட்ட பொழுது அது நிலைக்காது என்று கருதி பிராமணர்கள் அலக்ஷியமாக இருந்து விட்டார்கள்.

இப்போது பிராமண துவேஷம் பரவும் ரீதியைப் பார்த்தால் பிராமண தத்துவத்திற்கே ஆபத்து வரும்போல் இருக்கின்றது.

இதை எண்ணியேதான் ஸ்ரீமான் சீனிவாசாச்சாரியார் பிராமண இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.

இத் தேசத்தில் ஜாதி மத பேத மாச்சரியம் இருக்கும்போது சுயராஜ்ஜியத்தால் என்ன பலன் விளையும்.

அநேக பிராமணர்களை நான் விசாரித்துப் பார்த்த வரையில் வெள்ளைக்கார ராஜ்ய பாரமே மேலானது என்று சொல்லுகிறார்கள்.

இந்நிலையில் பிராமண மகாசபை ஏற்பட்டது மிகவும் நல்ல விஷயம். ஸ்ரீ சீனிவாசாச்சாரியார் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்கக் கூடாது என்று சொல்ல தைரியமாய் முன் வந்திருக்கிறார்.

நாம் சுயராஜ்யத்திற்கு அருகரா? நம்மால் பரிபாலனம் செய்ய முடியுமா? நமக்கு சுயராஜ்ஜியத்தில் இடம் கிடைக்காது என்பது நிச்சயம். இதரர்கள் (பார்ப்பனரல்லாதார்கள்) ஒற்றுமையாய் இருக்கும் போது பிராமணர்களும் கட்டுப்பாடாய் இருக்க வேண்டாமா?

மத விஷயத்தில் யாராவது பிரவேசித்தால் பிராமணீயத்திற்கு கெடுதல் வருமாகையால் மதத்தில் பிரவேசிக்க யாரையும் விடக் கூடாது.

பிராமணர் என்பதற்காக நாம் ஒரு வித்தியாசத்தையும் கற்பிக்கிறதில்லை.”

பின்பு உபன்யாசகர் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச்சாரியார் பேசியதின் முக்கிய பாகம்:-

இந்த பிராமண சங்கம் பல வருஷங்களாகவே வேலை செய்து வருகின்றது.

எவன் தன் மனதை அடக்கி யோக்கியனாக இருக்கின்றானோ அவனே பிராமணன்.

பிராமணர்கள் இந்த மேன்மை ஸ்திதியில் இருக்க வேண்டுமென்றேதான் நாங்கள் பிரசாரம் செய்கிறோம். ராஜீய விஷயத்தில் நாங்கள் தலையிடுவதே கிடையாது.

“குடி அரசு” கிளர்ச்சி வலுத்து வரும் இச்சமயத்தில் யாவும் வரம்பு மீறிப் போகின்றபடியால் அதைத் தடுக்க வேண்டுமென்றே ராஜீய விஷயத்தில் தலையிட முன்வந்திருக்கிறேன்.

பிராமணரல்லாதார் இயக்கம் உத்தியோகம் பெற ஏற்பட்டதென்று எண்ணி யாவரும் கவலையில்லாமல் அதைச் சும்மா விட்டுவிட்டார்கள்.

இப்போது அது ஒரு உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்கு கிளம்பி விட்டது. பிராமணர்கள் தங்களுக்கு சட்டபூர்வமாக பதவி அளிக்கப்பட வேண்டுமென்று ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பிராமணரல்லாதார் இயக்கத்தினால் துவேஷ புத்தியை ஊட்டி வருகிறார்கள், மத விஷயத்திலும், கோவில் முதலிய விஷயத்திலும் பிரவேசித்து அடியோடு கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நாம் அநுபவித்து வரும் பாத்தியதைகளை பலாத்காரமாய் பிடுங்கிவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுயமரியாதை இயக்கமென்று சொல்லிக் கொண்டு சிலர் செய்துவரும் கொடுமைகளையும், அவமானங்களையும் ஊர் ஊராய்ப் போய் சுற்றிப் பார்ப்பவர்களுக்குதான் தெரியும். மேற்கண்ட துவேஷ புத்தி இயக்கத்தினால் (சுயமரியாதை இயக்கத்தால்) பிராமணர்களுக்கு யாதொருவித கெடுதியும் ஏற்படா வண்ணம், தடுக்க வேண்டுமென்றே சைமன் கமிஷன் முன் நமது விஞ்ஞாபனத்தைக் கொடுக்க உத்தேசித்திருக்கிறேன். அதில் இரண்டு விஷயங்கள்தான் முக்கியமானது. ஒன்று மத விஷயத்தில் அரசாங்கம் தலையிடாமல் இருக்க வேண்டுமென்பது மற்றொன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தினால் அநர்த்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பது. இவை வருணாசிரம தர்ம மகாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்றும் பிராமணர்கள் யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இத்தேசத்தில் உள்ள பல கட்சிகளும் நம்மை லட்சியம் செய்யவில்லை. இந்தியாவிலுள்ள சர்வ கட்சி மகாநாடும், காங்கிரஸ் முதலானவைகள் தங்கள் ரிப்போட்டை பார்லிமெண்டுக்குத்தான் அனுப்பப் போகிறார்கள். சைமன் கமிஷனும் தாங்கள் சேகரிக்கும் விஷயங்களை பார்லிமெண்டுக்குத்தான் அனுப்பப் போகிறது. நம்மை இங்கு ஒருவரும் பொருள்படுத்தாமல் இருக்கையில் நம் பாத்தியதையை யாரிடமேனும் வற்புறுத்தி வைக்கவே நமது கோரிக்கையை கமிஷன் முன் ஆஜர்படுத்த வேண்டும். நமது உரிமையை வற்புறுத்த வேண்டிய காலத்தில் நாம் சும்மா இருந்துவிடக் கூடாது. பெரும்பாலோர் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்காத காலத்தில் 100 க்கு மூன்றுபேர் ஆகிய நாம் மாத்திரம் ஏன் பகிஷ்காரம் என்று புத்தியில்லாமல் உளறிக் கொண்டிருக்க வேண்டும்

என்று பேசியிருக்கிறார்கள். இவ் வாக்கியங்களை ஒவ்வொன்றாக கவனித்துப் பார்ப்பவர்களுக்கு பார்ப்பனர்களின் இரகசியமும், பார்ப்பனரல்லாதாரின் நிலைமையும், சைமன் பகிஷ்காரம் என்பதின் யோக்கியதையும், “இரண்டொரு பார்ப்பனர்கள் அயோக்கியத்தனமாய் இருக்கிறார்கள் என்பதற்காக பார்ப்பன சமூகத்தையே குற்றம் சொல்லலாமா?” என்று சொல்லும் பார்ப்பனக் கூலிகளின் கூற்றுகளின் யோக்கியதையும் வெட்ட வெளிச்சமாகாமல் போகாது.

மேற்படி தென் இந்திய பார்ப்பன பிரதிநிதி சபையாக இரண்டு தக்க பார்ப்பனர்களை முக்கிய புருஷர்களாக மாஜி ஹைகோர்ட் ஜட்ஜும், செல்வாக்குப் பெற்ற வக்கீல் என்பவருமான திரு. வி.வீ. சீனிவாசய்யங்கார் என்பவர் அக்கிராசனாதிபதியாகவும், வைதீக பார்ப்பனருக்குப் பிரதிநிதியாக திரு.என். சீனிவாசாச்சாரி என்பவர் உபந்யாசராகவும், அநேக லௌகீக உத்தியோகப் பார்ப்பனர்களும் அனேக வைதீகப் பார்ப்பனர்களும் சபையோர்களாகவும் இருந்து கூட்டம் நடைபெற்றிருப்பதால் இது பொதுவாக தென்னாட்டு “லௌகீக வைதீக”ப் பார்ப்பனர்களின் பொறுப்பேற்ற சபை என்பதற்கு யாரும் ஆட்nக்ஷபனை சொல்ல முடியாது.

திரு.வி.வி. சீனிவாசய்யங்கார் அரசியல் புரட்டின் பலனாய் 20 வருஷங்களாக மாதம் ஆயிரம் பதினாயிரம் ரூபாய்கள் வீதம் வக்கீல் தொழிலில் கொள்ளையடித்து விட்டு ஹைகோர்ட் ஜட்ஜி வேலையும் பெற்று அதிலும் ஒரு கை பார்த்துவிட்டு இன்னமும் மாதம் பதினாயிரக் கணக்காய்ச் சம்பாதித்துக் கொண்டிருப்பவர். இந்நிலையில் பார்ப்பனரல்லாதார்களும் இவரைப் போல் ஆகி விடுவார்களே என்கின்ற பொறாமையால் தனக்கு இப்போது சுயராஜ்ஜியத்தில் அதாவது அரசியல் சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லை என்றும், ஜாதி மதத் துவேஷமிருக்கும் போது சுயராஜ்யம் பெறுவதில் பலன் இல்லை என்றும் பார்ப்பனர்களுக்கு சுயராஜ்யத்தில் பங்கு கிடையாது என்றும், சுயராஜ்ஜியத்தை விட வெள்ளைக்காரரின் ராஜ்ஜிய பாரமே மேலானதென்றும் சொல்லிவிட்டார்.

இதையேதான் எல்லாப் பார்ப்பனர்களும் இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். (ஆனால் சிலர் ரகசியமாய்ச் சொல்லுகிறார்கள்) எனவே தங்களுக்கு அதிகாரமும் பதவியும் உத்தி யோகமும் கிடைப்பதாயிருந்து அதுவும் நிலைத்திருந்தால் மாத்திரம் சுய ராஜ்ஜியம் வேண்டும் என்பதும் வேறு யாருக்காவது அதில் பங்கு போய் விடும் என்று தோன்றினால் உடனே சுயராஜ்ஜியம் வேண்டாம் என்பதும், பார்ப்பனர்களின் யோக்கியதை என்பதாக நாம் அடிக்கடி சொல்லி வருவதானது வெட்டவெளிச்சமாகும்படி வெளியானதற்கு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அடுத்தபடி பார்ப்பனரல்லாதார் படிப்பதை பார்ப்பனர்கள் தடுத்தார்களா என்கிறார்.

நமது படிப்பு விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு இடையூறாய் இருந்திருக்கின்றார்கள் என்பது திரு அய்யங்காருக்கு உண்மையிலேயே தெரியாதா? சுருங்கச் சொன்னால் இப்போதும் உபாத்தியாயர்கள் பார்ப்பனர் கள்; பரீட்க்ஷை அதிகாரிகள் பார்ப்பனர்கள். (அதுவும் நம்மைச் சூத்திரர்கள் என்றும், சூத்திரர்களைப் படிக்கவிடக் கூடாது என்றும் சொல்லும் மதக் காரர்கள்) இந்த நிலையில் அப்பார்ப்பனர்களிடம் நம் பிள்ளைகள் எப்படிப் படித்து பாஸ்செய்யக் கூடும் என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளட்டும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் வலுப்படுகின்றது என்றும், இதனால் “பிராமணத்துவம்” கெட்டுப்போகும் என்றும் திரு. அய்யங்கார் முதலைக் கண்ணீருடன் கவலைப்படுகிறார். வகுப்புவாதத்தை வெட்டிப் புதைத்தாய்விட்டது. “டிங் டாங் டிங்” என்று பறையடித்த கூட்டத்தார் இப்போது துவேஷம் வளருகிறது என்று சொல்லுவதின் அர்த்தமென்ன? பார்ப்பனன் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பார்ப்பனக் கரு உலகத்தில் உள்ள வரை பிராமணத் துவேஷத்தை ஒழிக்க யாவராலும் முடியாது என்பதையும், அப்படி அது ஒரு சமயம் எந்தக் காரணத்தாலாவது ஒழிவதானாலும் நாம் உயிர் விடும் வரை அதற்கு இடையூறாய் இருந்துதான் தீருவோம் என்பதையும் வாசகர்களும், மற்றப் பார்ப்பனர்களும் ஒன்றாய் உணர்வார்களாக.

மற்றும் பிராமணத்துவேஷத்தால் பிராமண தத்துவத்திற்கு கெடுதி வரும் போலிருக்கின்றது என்று மிக்க துக்கப்படுகிறார்.

பிராமணத்துவம் என்றால் என்ன? ஊரை ஏமாற்றுவதா? உத்தியோகங்களெல்லாம் எந்த வேலை செய்தாவது தாங்களே பார்க்க வேண்டுமென்பதா? தங்கள் சுயநலத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்து கொடு முறை அரசாங்கத்துக்கு உளவாய் இருப்பதா? வக்கீல் வேலை செய்வதா? போலீசு வேலை பார்ப்பதா? லஞ்சம் வாங்குவதா? அதிகாரிகளின் தயவுக் காக இழிதொழிலில் இறங்குவதா? எல்லாவித அயோக்கியத் தனங்களையும் இழி தொழிலையும் செய்து கொண்டும் உடம்பினால் ஒரு தொழிலும் செய்யாமல் பிச்சையெடுத்து வயிறு வளர்த்துக் கொண்டும் சோம்பேறி வர்க்கமாய்த் திரிந்து கொண்டும் பிராமணன் உயர்ந்தவன் என்று சொல்லு வதா? பார்ப்பனரல்லாதாரை தலையெடுக்கவொட்டாமல் மதத்தின் பேராலும் சாமி பேராலும் அரசியலின் பேராலும் அழுத்தி வைத்திருப்பதா?

காப்பிக்கடையில் எச்சில் கிண்ணம் கழுவுவதா? விபசாரத்திற்கு தரகு வேலை செய்வதா? என்று கேட்பதுடன் அப்படியானால் இவற்றில் எந்தக் காரியம் கெட்டுப் போகும் என்று திரு. அய்யங்கார் வருத்தப்படுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.

மற்றும் “பிராமணர் இயக்கம் பிராமணத் தத்துவத்தை” காப்பாற்றவே வெகுகாலமாய் இருந்து வருகின்றது என்கின்றார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை காட்டிக் கொடுத்து பிழைக்கும் வயிற்றுப் பிழைப்பு தேசீய வாதிகள் பலர் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆவதற்காக அடிக்கடி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை குறை கூறி வகுப்பு இயக்கம் கூடாது கூடாது என்று சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பு ஆகும் என்றே சொல்லுவோம். மற்றும் “எல்லா பிராமணர்களும் வெள்ளைக்கார அரசாங்கமே மேல் என்று சொல்லுகிறார்கள்” என்கின்றார். இது உண்மையே. எப்படி என்றால், எப்போ தும் பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம் போல் தங்கள் ஆதிக்கத்திற்கு ஏற்றபடி நடக்கக் கூடிய அரசாங்கம் இல்லாவிட்டால் உடனே வேறு அரசாங்கத்தைக் கொண்டுவந்து நிலைக்க வைக்க முயற்சிப்பது சரித்திர பூர்வமானது; ஆனதால் நமக்கும் அதிகாரத்தில் சற்று பங்கு கிடைக்கும் என்கின்ற பயம் ஏற்பட்டவுடன் சுயராஜ்ஜியம் வேண்டாம் வெள்ளைக்கார ராஜ்ஜியமே இருக்க வேண்டும் என்று சொல்ல வந்து விட்டார்.

மற்றும் மத விஷயத்தில் யாரும் பிரவேசிக்க இடம் கொடுக்கக் கூடாது என்கின்றார்.

மதவிஷயம் என்றால் என்ன? எல்லோரும் சம்பாதிக்கும் பணம் ஒரு கூட்டத்தாரின் வயிற்றிலேயே போய் விழுவதற்கு அனுகூலமாயிருக்கட்டும் என்பதா? அல்லது மத ஆதாரத்தை ஒரு கூட்டத்தார் தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது என்பதா? ஒருவனை ஒருவன் தொடக்கூடாது என்பதா? தெருவில் நடக்கக் கூடாது என்பதா? சாமி பேரால் பெண்கள் பொட்டுக்கட்டிக் கொண்டு ஊராருக்கெல்லாம் மேகவியாதி விநியோகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதா? பார்ப்பானுக்கு வேலை செய்யவே மற்றவர்களைக் கடவுள் படைத்தார் என்பதா? என்ன அக்கிரமம் செய்தாலும் “பிராமணன் பிராமணன் தான்” என்பதா? சாமிகளுக்கு பெண்டு பிள்ளை, வைப்பாட்டி, விபசாரம் முதலிய குணங்கள் கற்பித்து அதற்கு கோயில் குளம் திருவிழாக்களும் கற்பித்து அதனால் ஒரு கூட்டத்தாரே பிழைக்க வழி செய்திருப்பதா? 10 வயது பெண்ணுக்கு 60 வயது கிழவனை கட்டுவதா? 11 வயதுள்ள பெண் குழந்தை மற்றொரு குழந்தையைப் பெறுவதா? 5 வயது குழந்தையை தாலியறுத்து முண்டைச்சி என்று மொட்டையடித்து சகுனத்தடையாக்கி முக்காடிட்டு சாகும் வரை மூலையில் கிடத்துவதா? பெண்ணாய்ப் பிறந்துவிட்டால் ஆண்பிறப்பு இல்லாவிட்டால்தான் பதிவிரதைகளாக இருக்கலாம் என்பதா? பெண்கள் விபசாரித்தனம் செய்தால் வீட்டுக்கு விலக்கானதும் அத்தோஷம் தீர்ந்துவிடுகிறது என்பதா? கடவுளே பெண்களை விபசாரிகளாகச் சிருஷ்டித்து விட்டதால் காவல் செய்வதில் பிரயோஜனமில்லை, பிராயச்சித்தம் செய்தால் போதும் என்பதா? ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு பார்ப்பான் ஒரு ராத்திரி தன் பக்கத்தில் போகத்திற்குப் பெண் இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தால் அந்தக் கிராமத்திற்கே தோஷம், ஆதலால் திண்ணை திண்ணையாய் தேடிப் பார்த்து தனியாய்ப்படுத்திருந்தால் ஒரு பெண்ணைப் படுக்க வையுங்கள் என்பதா? இந்து மதம் தப்பு என்று பார்ப்பன ஜாதியில் பிறந்து கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து அதில் பெரிய உத்தியோகம் பெற்றுக் கொண்டு மறுபடியும் பார்ப்பானாகி பார்ப்பனரல்லாதாருக்கு கெடுதி செய்வதா? மறுபடியும் மகமதிய மதத்தில் சேர்ந்து மறுபடியும் பார்ப்பானாவதா? அண்ணன் மிதவாதி, தம்பி சர்க்கார்வாதி, தான் உளவாளி சி.ஐ.டி தகப்பன் பிஞ்சின் வாங்கிய பிறகு காங்கிரஸ் வாதி, மாமனார் வக்கீல் வேலையில் லக்ஷக் கணக்காய் பணம் கொள்ளையடித்துக் கொண்ட பிறகு பூரண சுயேச்சைவாதி, கண் தெரியாத பாட்டனார் ஒத்துழையாவாதி என்பதா? இன்னும் இது போன்ற விஷயங்கள் பதினாயிரக்கணக்கில், எதை மத தத்துவம் என்கிறார் என்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் நமது நாட்டில் பிராமணன் பிராமணரல்லாதவன் என்பதற்கு ஒரு வித்தியாசத்தையும் கற்பிப்பதில்லை என்கின்றார். இது வாஸ்தவமா என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும் என்றாலும், இது ஒன்றே போதும். இவர் எவ்வளவு பொய்யைப் பேசுகின்றார் என்பதற்கு ஆதாரம் போதாதா என்று பார்க்க விரும்புகிறோம்.

இதுவரை அக்கிராசனர் சீனிவாச அய்யங்கார் முன்னுரையில் சிலதைப்பற்றி மாத்திரம் எடுத்து விவரித்திருக்கின்றோம். மற்றபடி உபந்நியா சகர் திரு. சீனிவாசாச்சாரியார் உபந்யாசத்தைப் பற்றி மறுமுறை எழுதலாம் என்று நிறுத்திவிடுகின்றோம். இதிலிருந்து சைமன் கமிஷன் பஹிஷ்காரத் தைப் பற்றிய உண்மை என்ன என்பதும் அது விஷயத்தில் பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்ன என்பதும் ஒத்துழைப்பும் பஹிஷ்காரமும் எதற்காக என்பதும் ஒருவாறு திரு. சீனிவாசாச்சாரியார் பேசிய குறிப்புகளிலிருந்தே வாசகர்கள் உணரலாம் என்றும் நினைக்கின்றோம்.

ஆகவே பார்ப்பனரல்லாதார் இயக்கமும் சுயமரியாதை இயக்கம் என்கின்ற சீர்திருத்தத் தன்மை கொண்ட இயக்கமும் நமது மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பதும், பஹிஷ்காரக் கூச்சலைப் புரட்டு என்று நாம் இதுவரை சொல்லி வந்தது உண்மையா அல்லவா? என்பதும் ஒருவாறு வாசகர்களுக்கு அக் குறிப்புகளால் விளங்கக் கூடும் என்றும் நினைக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 05.08.1928)

Pin It