திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களின் பெயரை தலையாகக் கொண்ட விஷயம் “குடி அரசில்” தலையங்கமாக வராமல் இப்போது உபதலையங்கமாக வருவதினாலேயே திரு. முதலியார் தலையங்கத்திற்கு அருகர் அல்லாமல் போய்விட்டாரோ என்னமோ என்பதாக யாரும் கருதிவிடக் கூடாது என்பதாக முதலில் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொண்டு சில வாக்கியங்களுடன் நாமும் இக்கிளையை முடிக்கின்றோம்.

periyar and anna 480திரு. முதலியார் அவர்கள் 27.6.28 ‘நவசக்தி’ தலையங்கத்தில் “தொடர் முடங்கல்” என்னும் தலைப்புக் கொடுத்து நமக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் 24.6.28 ‘குடி அரசில்’ “அவ்விஷயத்தை தற்கால சாந்தியாக நாம் நிறுத்தி வைக்கின்றோம்” என்றும், “திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்க கவலை கொள்ளவில்லை” என்றும் கண்டிருக்கும் வாக்கியங்களை எடுத்துக் காட்டி அதை ஆதாரமாகக் கொண்டு அதற்காகத் தாமும் போர் தொடுக்க வரவில்லை என்று எழுதியிருக்கிறார். அவைகள் எந்த வாக்கியங்களோடு இணைக்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டி திரு. முதலியார் வாசகர்களுக்கு நியாயம் செலுத்தாமல் போய்விட்டார். ஆயினும் நாம் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் திரு. முதலியார் அவர்கள் அவ்விரு வாக்கியங்களையும் ஒப்புக் கொண்டு முடங்கலுக்கு முந்தி நேர்ந்ததான அரிய நன்மைக்காக நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இதை மாத்திரம் தயவு செய்து வாசகர்கள் சற்று கவனமாய்ப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டுகின்றோம்.

அதாவது, முதலாவது வாக்கியத்தில் முன் தொடர்பு திரு. முதலியார் அவர்கள் ‘சீர்திருத்த’க் கட்டுரையைப் பற்றியது.

அதைப் பற்றி ருஜுக்களை காட்டிவிட்டு “அவ்விஷயத்தை தற்கால சாந்தியாக நிறுத்தி வைக்கின்றோம்.” என்று எழுதினோம். அவற்றில் சிலவற்றை திரு. முதலியார் அவர்கள் மறுத்துவிட்டு சிலவற்றை விட்டு விட்டார்கள். இனி அம்மறுப்புக்கு மறுப்பு எழுதுவதால் நாம் திரு. முதலியார் அவர்களின் ‘முடங்கலை’ ஒப்புக் கொள்ளாதவராவோம் ஆனதாலும், அன்றியும் அவ்விஷயம் என்றைக்கும் கிளம்பக் கூடியதானதாலும், இன்றே மறுப்பு வேண்டும் என்கின்ற அவசியத்தில் பட்டதுமல்லவாதலாலும், தற்கால சாந்தியாக நிறுத்தி வைப்பதில் குற்றம் ஒன்றும் இல்லை.

மற்றபடி எஞ்சிய இரண்டாவது வாக்கியந்தான் மிக முக்கியமானது.

அதாவது, “நாம் திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்கக் கவலை கொள்ளவில்லை” என்கின்ற வாக்கியத்தின் முன் தொடர்பு.

“எனவே திரு. முதலியார் அவர்கள் இயற்கைத் தோற்றம்தான் கடவுள் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது பற்றியும், புராணங்கள் குப்பைகள் என்று எழுதியது பற்றியும், அவைகள் (புராணங்கள்) ஆரியர்களால் புகுத்தப்பட்டன என்று எழுதியதைப் பற்றியும், அவைகள் சமய வெறியர்கள் பலரால் பாடப்பட்டவை என்று எழுதியது பற்றியும், அவைகளால் உலகில் மக்கள் ஒழுக்கங்களுக்கு கேடு சூழ்ந்தது என்று எழுதியது பற்றியும், நாம் திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்க கவலை கொள்ளவில்லை என்பதை திரு. முதலியார் அவர்களுக்கு வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.”

என்று எழுதியிருந்தோம். ஆதலால் திரு. முதலியாரவர்கள் இவற்றை அப்படியே ஒப்புக் கொண்டதானது நமக்கு எவ்வளவோ விடுதலையைக் கொடுத்திருக்கின்றது. இவை இதற்கு முன் பல தடவை பல இடங்களில் திரு. முதலியாரவர்கள் சொல்லாலும் எழுத்தாலும் இகழ்ந்திருந்தாலும் நாம் “கடவுளை நிந்தனை செய்ததற்கு” ஆகவே நம்முடன் ‘அறப்போர் தொடுக்க’க் கிளம்பிய பெரியார் ‘இயற்கைத் தோற்றங்கள்’தான் கடவுள் என்று ஒப்புக் கொண்டாரானால் அது நமது கருத்துக்கு நன்மையா அல்லவா என்பதை யோசித்தால் நம் கருத்துக் கொண்டவர்கள் பெரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது.

நிற்க! புராண விஷயங்களைப்பற்றி பெரிய புராணம் ஒன்று தவிர மற்ற புராணங்களையெல்லாம் ஒரே அடியாய் குப்பை என்றும், ஆரியர்களால் புகுத்தப்பட்டு மத வெறியர்களால் பாடப்பட்டு மக்கள் ஒழுக்கங்களுக்கு கேடு சூழ்வதாக இருக்கின்றது என்று ஒப்புக் கொண்டதும் நமக்குப் பெரும் வெற்றியா அல்லவா என்பதை வாசகர்களே உணர்ந்து பார்க்கட்டும்.

இவ்வளவும் அல்லாமல், இதுவரை பல இடங்களிலிருந்தும் பல ஆராய்ச்சிக்காரர், பண்டிதர்கள் என்போர்களிடமிருந்தும் கிடைத்த வெற்றிகளையெல்லாம் விட பெரும் வெற்றி என்னவென்றால், அதுதான் பெரிய புராணத்தைப் பற்றியது. திரு. முதலியாரவர்களை பெரிய புராணத்தைப் பற்றி நாம் எழுதிக் கேட்டிருந்த பல வினாக்களுக்கு - அதாவது பெரிய புராணம் என்பது, “இயற்கைக் கடவுளால்” அனுப்பப்பட்டதா? “இயற்கைக் கடவுளின் திருவிளையாடல்களை உணர்த்துகின்றதா? “இயற்கைக் கடவுளை” உணர்த்துகின்ற “செயற்கைக் கடவுளை” உணர்த்துகின்றதா? அது வான சாஸ்திரமா? விஞ்ஞான சாஸ்திரமா? உடல் கூறு சாஸ்திரமா? உலகக் கூறு சாஸ்தி ரமா? “வேதாந்த” சாஸ்திரமா? “சித்தாந்த” சாஸ்திரமா? தேச சரித்திரமா? “தெய்வ” சரித்திரமா? “இகத்திற்கு” சாதனமா? “பரத்திற்கு” சாதனமா? “கற்புக்கு” வழியா? களவுக்கு வழியா? அரசியலா? மத இயலா? “கடவுள்” தன்மைக்கு நெறியா? மனிதத் தன்மைக்கு நெறியா? முடிவாக அதிலுள்ள தெல்லாம் உண்மைதானா? அன்றி அது ஒரு சமயத்தாரால் மக்களின் நன்மைக்கென்று கற்பிக்கப்பட்ட கற்பனைக் கதையா அல்லவா? அதை எல்லோரும் ஒப்புக் கொண்டே தீர வேண்டுமா? ஒப்புக் கொள்ளாதவர்கள் காரணம் கூட காட்டக் கூடாதா?

எனப் பல கேள்விகளுக்கு திரு. முதலியார் அவர்களை சமாதானம் கேட்டிருந்ததில் அவைகளுக்கு ஒரே பதிலாக, “பெரிய புராணத்தின் உள்ளுறையை, இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுக்கள், அகச்சான்றுகள், நமது நாட்டைப் பற்றி இங்கு வந்துள்ளவர்கள் எழுதி வைத்த குறிப்புகள், சில புறச்சான்றுகள், சரித்திரப் பொருள்கள், கால நிலை முதலியவற்றிற்கு அரண் செய்யும் அளவுக்குக் கொள்ளலாம்.” என்று தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு ஆதாரமாகப் பெரியார்கள் சுந்தரம் பிள்ளை. சீனிவாச பிள்ளை, சுவாமி வேதாசலம் முதலியோர்கள் நூல்களையும் ஆய்ந்து பார்க்கும்படி கட்டளையிட்டிருக்கின்றார்.

புராணப் பிடுங்கல்களுடையவும் அழுக்கு மூட்டைகளுடையவும் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற இது ஒருவாறான ஆதாரம் என்பதே நமது அபிப்பிராயம்.

இப்பெரியார்களை அறிஞர்களாகக் கொண்ட எவரும், இனி அவ்வளவு சுலபமாக நம்மீது “புராணங்களைக் குற்றம் சொன்னான்” “கடவுளை வைதான்” “நாயன்மார்களின் கதையைப் பற்றி வாதம் நிகழ்த்துகின்றான்” என்று பழிசுமத்தி இதனால் “சமயம் போச்சு! நாயன்மார்களுக்கு ஏச்சு! கடவுளர்களுக்கு ஆபத்து!” என்று ஆத்திரப் படமாட்டார்கள் என்றும் அப்படி ஆத்திரப்படுபவர்கள் முதலில் நம் திரு. முதலியார் அவர்கள் மீது பாய்ந்து விட்டுத்தான் பிறகு நம்மீது பாய வருவார்கள் என்றுமே நினைத்து மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்நிலையில், வாதசபை ஒன்றும் வேண்டியதில்லை என்றும், தானாக வந்தால், வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றோம்.

இறுதியில் “அன்பு முறையில் ஒருவரை ஒருவர் போர் புரிந்து திருந்த முயல வேண்டும்; பிடிவாதம் பெரும் பேய்” என்று எழுதியிருக்கிறார்.

ஒழுங்கு முறைப் போருக்கு அன்பு முறைப் போரே புரிவது நமது கடன். சூழ்ச்சி முறைப் போருக்கு “பிடிவாதப் பேய்” ஆட்டம் ஆடுவதே நமது குணம். நம்மைச் சிற்றினம் என்று கருதவில்லை என்று சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்வதில் ஏதும் நஷ்டம் இருப்பதாய்த் தோன்றவில்லை. ஏதாவது ஒரு வசைமொழியை சொன்னவர்கள், சொல்லிவிட்டு இல்லை என்று சொல்வார்களானால், சொல்லப்பட்டவர்களுக்கு அது ஒரு வெற்றியாகும் என்பது ஒரு வழக்கு. அம்முறையில் திரு. முதலியார் அவர்கள் சொல்லி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதைப் பற்றிய கவலையை விட்டுவிட்டோம். அப்படி விட்டு விடுவதால் நமக்கு ஒன்றும் குறைந்து போ காது. ஏனென்றால், திரு. முதலியார் அவர்களாலேயே இனியும் இம்மாதிரி எத்தனையோ தடவை கேட்கக் காத்திருக்கின்றோம்.

அப்படி திரு. முதலியார் இனியும் இம்மாதிரி சொல்லாவிட்டாலும் இன்னும் எத்தனையோ பேர் இப்படியும் இன்னும் கேவலமாகவும் நம்மைச் சொல்லக் காத்திருக்கின்றார்கள் என்கின்ற உறுதி நமக்குண்டு. என்னவெனில், நமது தொண்டானது அவ்வளவு உரம் பெற்றதும் வசை மொழி கிடைப்பதாலேயே அது பலன் பெற வேண்டி இருப்பதால் நமக்கு வசைமொழி இல்லையே என்றும், அதைப் பற்றிக் கொண்டு நமது கருத்தை தாராளமாய் வெளியிட்டு வெற்றி பெற சந்தர்ப்பங்கள் இல்லையே என்றும் இப்போது நாம் கவலைப்படவில்லை.

முடிவாக நமது நலன் கருதி திருவருளை வழுத்துவதாக எழுதி அக்கட்டுரையை முடித்திருப்பதற்கு நாம் நன்றி அறிதலை காட்ட கடமைப் பட்டுள்ளோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.07.1928)

Pin It