‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே’

‘பாவை விளக்கு’ திரைப்படத்தில், சிதம்பரம் ஜெயராமன் குரலில், சிவாஜி கணேசன் திரையில் பாடுவதாக வருகின்ற அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும், செவியில் இன்பத் தேன் பாயும்; திகட்டாது. இப்படி எத்தனையோ பாடல்கள் குற்றாலத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.

குற்றாலத்துக்கு அருகிலேயே பிறந்தவன் என்பதால், நினைவு தெரிந்த நாள் முதல் எத்தனை முறை குற்றாலத்தில் குளித்து இருக்கிறேன் என்பதற்குக் கணக்கே இல்லை. அருவியில் தண்ணீர் விழுகிறது என்று யாராவது சொன்னாலே போதும், உடனே கிளம்பி விடுவோம். குற்றாலத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வல்லத்தில், என் மனைவியின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், நேராக உள்ள குற்றாலம் அருவியில் எவ்வளவு தண்ணீர் விழுகின்றது என்பது தெரியும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குற்றாலத்தில் ஒருமுறை கூடக் குளித்தது இல்லை. ரசித்துக் குளிக்கக் கூடிய நிலையிலும் இப்போது குற்றாலம் இல்லை. பல்வேறு காரணங்கள். சிலவற்றைக் குறிப்பிட விழைகிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, குற்றாலத்துக்குப் பேருந்து வசதிகள் அதிகம் கிடையாது. ஒருசில பணக்காரர்கள் மட்டும்தான் குடும்பத்தோடு கார்களில் வருவார்கள். வேன்கள், இருசக்கர வண்டிகளை எண்ணி விடலாம். எனவே, கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் மட்டுமே ஓரளவு கூட்டம் இருக்கும். எப்போது சென்றாலும், எவ்வித நெரிசலும் இன்றி, விரும்புகின்ற அளவுக்கு அல்லது தாக்குப் பிடிக்க முடிகின்ற அளவுக்கு அருவியில் நின்று குளிக்கலாம்.

90 களுக்குப் பிறகு, போக்குவரத்து வசதிகள் பெருகின. மக்களிடம் காசு, பணப் புழக்கமும் கூடியது; வண்டி, வாகனங்களின் எண்ணிக்கையும் கூடியது. ஐயப்பன் கோவிலுக்குப் போகின்ற அனைவரும், குற்றாலத்துக்கும் வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டார்கள். எல்லாம் சேர்ந்து, குற்றாலத்திலும் கூட்ட நெரிசல் உண்டானது.

முன்பெல்லாம் ஆயிரக்கணக்கானவர்கள் அருவிப் பகுதியில் நின்று இருந்தாலும், ஒன்றிரண்டு காவலர்களைக் கூடப் பார்க்க முடியாது. சில பானை வயிற்றுக்காரர்கள், மதுவைப் பருகி மதிமயங்கியவர்கள், அருவிலேயே சப்பணம் போட்டு அமர்ந்து, ஒரு மணி நேரம் வரையிலும் ஆடாமல் அசையாமல், உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து இருக்கின்றேன். இவர்களுக்கு மூச்சுத் திணறாதா? என்றுகூட எனக்கு வியப்பாக இருக்கும். பாறாங்கல் விழுவது போலத் தண்ணீர் விழும். அதையும் பொறுத்துக்கொண்டு இருப்பார்கள். எப்போதும் பெண்கள் கூட்டம் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். ஐந்து அருவியில் மகளிருக்கு இரண்டு அருவிகள்தான் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இப்போது நிலைமை தலைகீழ். பெண்களுக்குத்தான் முதல் இடம். ஆண்கள் ஒரு ஓரமாகத்தான் நின்று குளிக்க முடிகிறது. அதற்கும் வரிசையில் நிற்க வேண்டும். அந்த வரிசையும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீள்கிறது. இவர்கள் எல்லாம் எந்த நம்பிக்கையில் நிற்கிறார்கள் என்றே பார்ப்பேன். அப்படி வரிசையில் நின்று அருவியை நெருங்கினாலும், ஒருவருக்கு ஐந்து நிமிடங்கள் கூடக் கிடைக்காது. காவலர் தடிகொண்டு சாத்துவார். குளிக்கும்போது வெற்று உடம்பில் தடியடி விழுந்தால் சுளீரென வலிக்கும் என்று கருதுகிறேன். ஏனென்றால், நான் அப்படி அடி வாங்கியது இல்லை. அடிபட்டவர்களுக்குத்தானே தெரியும் அந்த வேதனை? ஆனால், மசாஜ் என்ற பெயரில், முறையாகப் பயிற்சி பெறாதவர்களிடம் ஒருமுறை மாட்டிக்கொண்டேன். உடலை முறுக்கிப் பிழிந்து விட்டார்கள். பிற்பகலில் வீட்டில் போய்ப் படுத்தவன், மறுநாள் காலையில்தான் தட்டுத்தடுமாறி எழுந்தேன். அப்போதும் வலி போகவில்லை. அடுத்து இன்றுவரையிலும், மசாஜ் பக்கம் போகவும் இல்லை.

செண்பகா தேவி

குற்றாலம், ஐந்து அருவி தவிர, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி, தேனருவி, பழத்தோட்ட அருவி எனப் பல அருவிகள் உண்டு. புலி அருவி செயற்கையாகக் கட்டப்பட்டது. பத்து அடிகள் உயரத்தில் இருந்துதான் தண்ணீர் விழும். குற்றாலத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய குற்றால அருவியும், மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்டதுதான். ஆனால், அகன்று பரந்த இடம். நின்று குளிப்பதற்கு மிகவும் வசதியானது, பாதுகாப்பானது. இந்த அருவிக்குச் செல்லும் வழியில் கிடைக்கின்ற இளநுங்கு சுவையானது. எண்ணிக்கை கணக்குப் பார்க்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலுக்கு எந்தக் கேடும் இல்லை. அதைக் கண்டு கொள்ளாமல் வருபவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

திருக்குற்றால அருவியின் பக்கவாட்டில் அமைந்து உள்ள சிற்றருவியில் இரண்டு அறைகள் உண்டு. அதற்கு உள்ளே தண்ணீர் விழும். பத்து அல்லது பதினைந்து பேர்கள்தாம் நின்று குளிக்க முடியும். அதற்குப் பக்கத்தில் உள்ள மலைப்பாதை வழியாக மேலே ஏறி, அடர்ந்த காடுகளுக்கு ஊடாக உள்ள மண் சாலையில், மூன்று கிலோ மீட்டர்கள் நடந்து சென்றால் செண்பகா தேவி அருவி. வழிநெடுகிலும் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு, நண்பர்களோடு பேசிக்கொண்டே நடக்கலாம். செண்பகப்பூ உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களின் மணம் நாசியைத் துளைக்கும்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே, கீழே உள்ள அருவிகளில் குளிப்பதைத் தவிர்த்துக் கொண்டு, நண்பர்களோடு பேசிக்கொண்டே செண்பகாதேவி அருவி வரையிலும் நடந்து சென்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். செண்பகா தேவி அருவியில் அல்ல; அது சற்று ஆபத்தான இடம். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த நண்பன் ஈஸ்வரன், அந்த அருவி முன்பு உள்ள தடாகத்தில் குதித்துத்தான், பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிர் இழந்தான். இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் அவனது உடலை மீட்க முடிந்தது. அந்த அருவியைப் பார்க்கும்போதெல்லாம் அவனது நினைவு வந்து விடும். அப்படிப் பல பேர் அங்கே சிக்கி உயிர் இழந்து இருக்கின்றார்கள். ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. எனவே, அங்கே குளிப்பது இல்லை.

செண்பகாதேவி அருவிக்கு 500 மீட்டர்கள் முன்பாக ஒரு பெரிய தடாகம் உண்டு. அங்கே எவ்வித அச்சமும் இன்றி, நன்றாக நீந்திக் குளிக்கலாம். ஒன்றிரண்டு பாறைகளின் ஊடாக அருவி போல, சற்றே குறைவான உயரத்தில் இருந்து தண்ணீர் விழும். நன்றாக எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு, பாறைகளில் அமர்ந்து, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் குளிக்கலாம். எந்தத் தொல்லையும் இருக்காது. இந்த இடத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தால், மூன்று புறங்களிலும் சிகரங்களின் பிரமாண்டத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம். பச்சைப் பசேல் என, அடர்த்தியாக மரங்கள், விண்ணைத் தொடுகின்ற அளவுக்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன. பெரிய தூக்குச் சட்டியில் கோழி அல்லது ஆட்டுக்கறிக் குழம்பு சமைத்துக் கொண்டு போய், பாறைகளில் இலையைப் போட்டு, கையில் தட்டு வைத்துக் கொண்டு, நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்ட இன்பம், வாழ்நாளில் இறுதிவரையிலும், நினைவு இருக்கின்ற வரையிலும் எண்ணிப் பார்த்து மகிழத்தக்கது. பாறையில் துண்டை விரித்துப் படுத்து உறங்கி எழுந்து வருவோம். இடையிடையே சாரல் பெய்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அந்தச் சாரல் வலுத்துப் பெய்தாலும், அதற்காக எங்கும் ஓடி ஒளிய முடியாது. நனைந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அது ஒரு இனிமை.

தேனருவி

செண்பகாதேவி வரையிலும்தான் வழித்தடம் ஓரளவு நடக்கக்கூடிய நிலையில் இருக்கும். அதற்கும் மேலே இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து சென்றால் தேனருவி. சமதளத்தில் அல்ல, பல இடங்களில் பாறைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டுதான் ஏற முடியும். சில இடங்களில், பாறைகளில் இருந்து கீழே இறங்கி, ஆங்காங்கே வழியில் ஓடுகின்ற ஓடைகளைக் கடந்து, சிறுசிறு பாறைகளில் குதித்துத் தாவி, அதற்குப் பிறகு மீண்டும் மேலே ஏறித்தான் செல்ல முடியும். தேனருவிக்கு மூன்று முறைதான் சென்று இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களோடு சென்றபோது, ஐம்பது பேர் ஒன்றாக ஏறி தேனருவிக்குச் சென்று குளித்தது மறக்க முடியாத நிகழ்வு. சுமார் 150 அடிகள் தொலைவுக்கு, இருபுறமும் உயர்ந்து ஓங்கிய பாறைகளுக்கு நடுவே நடந்து சென்று, 150 அடி உயரத்தில் இருந்து நேராகத் தண்ணீர் விழுவதைப் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கும். இங்கே தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். நடுங்கிக் கொண்டேதான் குளிக்க வேண்டும. அடுத்தடுத்த ஆண்டுகளில், ஐந்து பேர் பத்துப் பேர் சேர்ந்து போனாலும்கூட நடுக்கமாகத்தான் இருந்தது. இவ்வளவு சிரமப்பட்டு இங்கே வரவேண்டுமா என்ற எண்ணத்தில் தேனருவிக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன். ஆனால், செண்பகா தேவிக்கும் போக முடியாமல், கடந்த மூன்று ஆண்டுகளாக வனத்துறையினர் தடுத்து விட்டார்கள்.

எத்தகைய ஒரு இனிமையான நடைபயணம் அது!

இப்போதும்கூட, ஒருசிலர் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, காவலர்களைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து, செண்பகா தேவிக்குச் சென்று வருவதாக, சென்னையில் ஏடுகளில் வந்த செய்திகளில் படித்தேன். அப்படிப் போவதும் கூட இனிமையாக இருக்காது. தனிமையாகத்தான் இருக்கும். வேண்டுமானால், மதுமயக்கத்தில் போகிறவர்கள், தனியாக நடக்கப் பயந்து, கூச்சல் போட்டுக் கொண்டு விலங்குகளைப் போலப் போய்வரலாம்.

கலைவாணர் கலை அரங்கம்

தமிழகத்திலேயே பாறை மீது அமைந்து இருக்கின்ற ஒரேயொரு கலை அரங்கம், திரை அரங்கம், குற்றாலம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கலைவாணர் கலை அரங்கம்தான். அங்கே பல படங்கள் பார்த்ததை மறக்கவே முடியாது. இப்போது அங்கே படங்களைத் திரையிடுவது இல்லை. திரை அரங்கத்துக்கு முன்பாக உள்ள பாறையில், குடும்பத்தோடு நண்பர்களோடு அமர்ந்து பேசிக் களிக்கலாம்.

தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை பத்துப் பதினைந்து நாள்கள் நடந்த குற்றாலம் சாரல் விழா, அந்தப் பகுதியிலேயே ஒரு பெரிய திருவிழா. அங்கே, நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் அவர்களுடைய பல நாடகங்களைப் பார்த்து இருக்கின்றேன். புகழ் பெற்ற பல கலைஞர்கள் வருவார்கள். இப்போது சாரல் விழா நாள்களும் சுருங்கி விட்டன. பெயரளவில்தான் நடக்கின்றது.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், குற்றாலத்தில் தண்ணீர் விழுகிறது என்றால், அதற்காகவே ஒரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டு, சென்னையில் இருந்து போய் வந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டில்தான் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கும் மேல் அருவிகளில் தண்ணீர் வெள்ளமாகப் பாய்ந்து ஓடுகிறது என்ற செய்திகளைக் கேட்டபோதும், ஏனோ குற்றாலத்துக்குச் செல்லும் எண்ணமே தோன்றவில்லை.

வைகோ அவர்களும் ஒரு குற்றாலப் பிரியர் என்றாலும், ‘கடைசியாகக் குற்றாலத்தில் குளித்து 18 ஆண்டுகள் ஆகின்றன’ என்று அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்கள். அந்த நாள்களில், நானும் பலமுறை அவர்களுடன் சென்று இருக்கின்றேன். இப்போது, நாடு அறிந்த தலைவர் ஆகி விட்டதால், அருவியில் குளிக்கப் போனால், அவரைப் பார்க்க ஒரு கூட்டம் கூடி விடும். அதைத் தவிர்ப்பதற்காக, அருவிக் குளியலை நிறுத்திக் கொண்டார். பிரபலம் ஆனவர்கள் குற்றாலத்தில் குளிப்பதை எண்ணிப் பார்க்கவே முடியாது. இப்படியாக, குற்றாலத்தில் ஆனந்தக் குளியல் என்பது இப்போது அருகி வருகின்றது.

கும்பா உருட்டி

kumba_urutti

நான்கைந்து ஆண்டுகளாக குற்றாலத்தில் குளிக்க முடியாத வருத்தத்தில், செங்கோட்டைக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில், கேரள மாநிலத்துக்கு உள்ளே, கும்பா உருட்டி என்ற சிற்றருவி இருப்பதை அறிந்து, நான்கைந்து முறை அங்கே சென்று குளித்து வந்தேன். குற்றாலத்தில் பெற முடியாத அருவிக் குளியலை, கும்பா உருட்டியில் சுகமாக அனுபவிக்க முடிகின்றது. அங்கே, அருவியில் இருந்து தண்ணீர் விழுகின்ற இடத்தில், ஒரு தடாகம் இருக்கின்றது. ஒரு ஆள் உயரத்துக்கும் குறைவான ஆழம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், கூழாங்கற்களின் மீது நின்று கொண்டுதான் குளித்தோம். இப்போது, அந்த இடத்தில் காங்கிரீட் சிமெண்ட் தளம் அமைத்து விட்டார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ள நீச்சல் குளித்தில் குளிக்கும்போதும்கூட அப்படி ஒரு குளியலை அனுபவிக்க முடியாது. இப்போது, கும்பா உருட்டியைப் பற்றியும் நிறையப் பேர் அறிந்து கொண்டார்கள். எனவே, அங்கேயும் கூட்டம் கூடி வருகின்றது. அடுத்த சில ஆண்டுகளில், கும்பா உருட்டிக்கும் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கின்றது.

பாபநாசம் கடந்து மணிமுத்தாறு அணைக்கட்டுக்குப் போய், சுமார் மூன்று கிலோமீட்டர்கள் படகில் பயணித்து அக்கரைக்குச் சென்றால், மணிமுத்தாறு அருவி உள்ளது. அருமையாகக் குளிக்கலாம். இப்போது, அங்கே செல்வதற்கும் தடை விதித்து விட்டார்கள்.

கொடிவேரி

இந்நிலையில்தான், கொடிவேரிக்குச் சென்று வருகின்ற ஒரு பயணத்திட்டத்தை வகுத்தேன். நீங்களும் கூட இதைப் பார்த்து இருக்கலாம் திரைப்படங்களில்! ஆம்; ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில், இந்த இடம் காண்பிக்கப்படுகிறது. ஆனால், இதுதான் கொடிவேரி என்பதை நீங்கள் அறிந்து இருக்க மாட்டீர்கள் அவ்வளவுதான்!

kodiveri_arunagiri_650

கொடிவேரி தடுப்பு அணையின் நடுவில் உள்ள சுவர் மீது, கதாநாயகனும், கதாநாயகியும் நடந்து வருவார்கள்; ஆடுவார்கள், பாடுவார்கள்; தனியாக அன்றி, குழுவாகவும் சேர்ந்து ஆடிப் பாடுவார்கள்.

இப்போது நினைவுக்கு வருகின்றதா? ஆம்; அதுதான் கொடிவேரி. நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், ஒரு இரண்டு நாள்கள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்ற பாடல் காட்சிகளை சற்றே உற்றுப் பாருங்கள். கொடிவேரியைப் பார்த்து விடலாம். உடனே பார்க்க வேண்டும் என்றால், இணையத்தில் ஒரு நொடியில் படங்களைப் பார்க்கலாம்.

படங்களில் மட்டும் பார்த்தால் போதுமா? எந்த ஒரு இடத்தையும், நேரில் பார்த்து ரசிப்பதே ஒரு தனி அழகு. அப்போது கிடைக்கின்ற உணர்வுகளை விவரிக்க முடியாது. அதுதான் பயணங்களின் வெற்றி.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்துக்கு வடமேற்கில், சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில், சத்தியமங்கலம் செல்லும் சாலையில், கொடிவேரி அமைந்து உள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் நாள், ஈரோட்டில் நடைபெற்ற முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரோடு சென்றேன். அன்று காலையில் கொடிவேரி சென்று வரத் திட்டமிட்டேன். நண்பர் பென்னாகரம் அசோகன் அவர்களும் ஈரோடு வருவதாகச் சொன்னார். அவரையும் அழைத்தேன். இருவரும் சென்றோம். பழனிச்சாமி என்ற உள்ளூர் ம.தி.மு.க. தோழர், எங்களை எதிர்பார்த்துச் சாலையில் காத்து இருந்து அழைத்துச் சென்றார்.

எவ்வளவு அருமையான அருவி! நாங்கள் சென்ற காலை வேளியில், எட்டு மணிக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ஐம்பது பேர் கூட இல்லை. தண்ணீர் ஒரே சீராக விழுவதால், அருவிக்கு அருகே, தரையில் நன்றாக அமர்ந்து குளிக்க முடிந்தது. அடித்துக் கொண்டு போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியது இல்லை. ஆனந்தமாகக் குளித்தோம்.

சுமார் 300 அடிகள் நீண்ட ஒரு சிறிய தடுப்பு அணை. இருபுறமும், இருபது முப்பது அடிகள் வரையிலும், இரும்புப் பாளத்தை வைத்துத் தண்ணீரைத் தடுத்து இருக்கின்றார்கள். பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வற்றாமல், தொடர்ச்சியாகத் தண்ணீர் விழுவதால், இரும்புப்பாளம் இருப்பது தெரியாது. கடும் கோடையில், தண்ணீர் வறண்டால்தான் அதைப் பார்க்க முடியும். தடுப்பு அணையின் நடுவில் நீண்ட சுவர் உள்ளது. அதன் மேல்பகுதி சற்றே அகலமாக, ஒன்றரை அடி அளவில், நன்றாகக் கால் பதித்து நடக்கக்கூடிய அளவுக்கு இருக்கின்றது. இரும்புப் பாளத்தின் மீதும், சுவரில் இருந்தும் தண்ணீர் ஒரே சீராக விழுகின்றது. பிரமாண்டமான அணைக்கட்டுகளில் கூட, திறந்து விடும்போது தண்ணீர் பொங்கிப் பெருகி பெருவெள்ளமாகச் சீறிப் பாயும். ஆனால், கொடிவேரியில், தண்ணீர் விழுகின்ற அழகே அழகு. தண்ணீர் தேங்கி நிற்கின்ற பகுதியில், பரிசல் சவாரி உண்டு. இந்தத் தடுப்பு அணை, 17 ஆம் நூற்றாண்டில், மைசூரை ஆண்ட மன்னரால் கட்டப்பட்டது. இதன் பயனாக, இன்றைக்கும் இப்பகுதியில், கரும்பு, நெல், வாழை சாகுபடி செழுமையாக நடைபெறுகிறது.

kodiveri_arunagiri_370அருவியில் ஆனந்தக் குளியலை முடித்துக்கொண்டு புறப்படுகின்ற வேளையில், சில பெண்கள் வந்து, ‘மீன் சோறு சாப்பிடுங்கள்’ என்று அன்போடு அழைத்தார்கள். ஆங்காங்கே கற்களை அடுப்பாக ஆக்கி, சுள்ளிகளைப் போட்டு எரிக்கின்றார்கள். மசாலா தடவிய, வகைவகையான மீன்கள். கட்லா, ரோகு, விறால், ஜிலேபி, வாழை, கெளுத்தி என அடுக்கிக் கொண்டே போகிறார்கள். சிறிய துண்டு விலை குறைந்தது 25 ரூபாய்; சற்றே பெரிய துண்டு, ஐம்பது வரையிலும் போகிறது. ‘ஒகேனக்கல்லில் 15 ரூபாய்க்குக் கிடைக்கிறதே?’ என்றார் அசோகன்.

‘அண்ணா, இங்கே நாங்கள் அக்கரையில் இருந்து ஆற்றைக் கடந்துதான் வருகிறோம். எல்லாப் பொருள்களையும் தலைச்சுமையாகத்தான் கொண்டு வர வேண்டும். மீன் பிடிப்பதற்கு குத்தகைப் பணம் கொடுக்க வேண்டும். அதற்குப்பிறகுதான், மிச்சம் மீதி பார்க்க வேண்டும். பெரிதாக மிச்சம் மீதி பார்த்து விட முடியாது’ என்றார். அவர் சொல்வதும் சரி என்றே பட்டது. நாம் தேர்ந்து எடுத்துக் கொடுக்கின்ற மீன் துண்டுகளைப் பொறித்துக் கொடுக்கின்றார்கள். அருமையான கம்மங்கூழ் கிடைத்தது. சுவைத்துப் பருகினோம். குளிப்பதற்கு வசதியாக அரைக்கால் சட்டைகள், துண்டுகள், சோப்புகளும் கிடைக்கின்றன. இளநீர் பருகலாம். கொடிவேரி பகுதியின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே ஈரோட்டுக்குத் திரும்பினோம்.

இதுவரையிலும், 15 நாடுகளில் பயணம் மேற்கொண்டு, நான்கு பயண நூல்களையும் எழுதி விட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஜப்பான் பயணம் குறித்த நூல், இந்த ஆண்டின் இறுதிக்கு உள்ளாக வெளிவரும். தமிழகத்துக்கு உள்ளேயும், இந்தியாவின் பிற மாநிலங்களில் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும், விரிவாக எழுதி வைத்து உள்ளேன். விரைவில் ஒரு நூலாக வெளிவரும். தமிழகத்துக்கு உள்ளேயே பார்த்து ரசிக்க வேண்டிய, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் எத்தனையோ உள்ளன. அப்படி ஒரு இடம் கொடிவேரி. பார்த்து ரசியுங்கள்; குளித்து மகிழுங்கள்!

- அருணகிரி

Pin It

தேனி மாவட்டத்தின் சின்னக்குற்றாலம் என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்குமலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி ஒரு இயற்கையான அருவி. மூலையார் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டி மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகம் நிறைந்துள்ளது. மருதமரங்களின் வேர்களின் இடையே இந்த அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது நம்பிக்கை.

kumbakarai_falls_576

இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த அருவியில் இரவு நேரங்களில் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும்.

anda_gajam_595

ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளிக்க காண காலை 9.00 மணிக்குமேல் மாலை 5.00 மணிவரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இங்கு தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை. சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெரியகுளத்தில் வாங்கிச் செல்வது நல்லது. பேருந்து வசதி, ஆட்டோ வசதி உள்ளது.

- வைகை அனிஷ், தொலைபேசி:9715-795795

Pin It

இந்தியாவிலேயே முதன்முறையாக, 1885 ஆம் ஆண்டு சென்னையில்தான் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது என்பது, தமிழகத்துக்குப் பெருமை. அந்தப் பூங்கா, சென்னை மையத் தொடர் வண்டி நிலையத்தின் ஒரு பகுதியாக உள்ள பத்து மாடிக் கட்டடத்துக்குப் பின்பகுதியில்,நேரு விளையாட்டு அரங்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருந்தது. சிறுவனாக இருந்தபோது, அதை நான் பார்த்து  இருக்கிறேன். அப்போது எனது உறவினர்கள்,அதை ‘உயிர்க்காலேஜ் என்றும்;கன்னிமரா நூலகத்துக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தை ‘செத்த காலேஜ் என்றும் அழைப்பார்கள். அது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

சென்னை நகரின் விரைவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு,தொலைநோக்குப் பார்வையோடு, அன்றைய ஆட்சியாளர்கள், இந்த உயிரியல் பூங்காவை, வண்டலூருக்கு இடமாற்றம் செய்தனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்று பெயரும் சூட்டினர்.

‘இவ்வளவு தொலைவில் கொண்டு போய் அமைக்கின்றார்களே? யார் போய்ப் பார்ப்பார்கள்?’ என்றே அப்போது எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால், அந்த முடிவு சரிதான் என்பதை, இன்றைய  சென்னை நகரின் அசுர வளர்ச்சி எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றது. 

நூற்றுக்கணக்கான முறை அந்த வழியாக சாலையில் பயணித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை விலங்குகள் காட்சியகத்தின் சுற்றுச்சுவரை,வெளிவாயிலைப் பார்க்கும்போதும், விரைவில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.அந்த இடத்தைக் கடப்பதோடு, அந்த எண்ணமும் அழிந்து விடும்.அவ்வளவுதான்.அடுத்து மறுமுறை அந்த வழியாகப் போகும்போது, அதே நினைப்பு, அதே மறதி.

9 ஆம் வகுப்பு படிக்கின்ற என் மகளுக்குக் கோடை விடுமுறை. ஊரில் இருந்து என் மைத்துனரின் நான்கு வயது மகன் வந்து இருக்கின்றான்.இருவருக்கும்,சுற்றிக் காண்பிப்போம் என்று கருதி, (7.4.2013) அழைத்துச்  சென்றேன்.

வண்டலூர் தொடர்வண்டி நிலையத்தில் போய் இறங்கினோம்.ஞாயிற்றுக்கிழமை என்பதால், நல்ல கூட்டம். ஆனால், வெளியே போகின்ற வழியைத் தேடி ஒவ்வொருவரும் தத்தளித்துக் கொண்டு இருந்தார்கள். தொடர்வண்டி நிலையத்துக்கும், நெடுஞ்சாலைக்கும் இடையில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால்,எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் கிடைத்த இடைவெளியில், பள்ளத்துக்கு உள்ளே இறங்கி, சாலையை நோக்கிப் போனார்கள்.

உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுங்கள்

நாங்களும் அப்படியே இறங்கி, தேசிய நெடுஞ்சாலைiயில் போய் நின்றோம். சாலையைக் கடக்க வேண்டும்.ஒரு அடி இடைவெளி இல்லாமல் அணிவகுத்துச் சீறிப் பாய்ந்து வருகின்றன பேருந்துகளும், இதர வண்டிகளும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டும். கிடைத்த ஒரு இடைவெளியில் நான் விரைவாக முன்னேறுகையில், ‘அய்யோ குழந்தை குழந்தை’ என்று ஒரு பெண்மணி அலறவும், நான் திரும்பிப் பார்த்தேன். என் மகள் கையில் பிடித்துக் கொண்டு இருப்பாள் என்று கருதி நான் முன்னே சென்றுவிட, அங்கே சிறுவன் தனியாக நிற்கிறான். பாய்ந்து திரும்பி வந்து, பிடித்துக் கொண்டேன். அதிர்ச்சி விலக சில நிமிடங்கள் ஆனது.

இப்படி ஒரு அதிர்ச்சி,எனக்கு மட்டும் அல்ல;குழந்தைகளை அழைத்துச் செல்லுகின்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும்.வண்டலூருக்கு இத்தனைப் பயணிகள் குழந்தைகளோடு வருகின்றார்களே,அவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக அங்கே ஒருவரும் இல்லை.

நெடுஞ்சாலைகளைத் தோண்டி,தரைக்கு அடியில் நடைவழிகள் அமைப்பது எளிதான ஒன்று அல்ல. ஆனால், தொடர்வண்டி நிலையத்துக்கு உள்ளே, தண்டவாளங்களைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற இரும்பு நடைமேம்பாலங்களை,அப்படியே வெளியே நீட்டி,நெடுஞ்சாலைக்கு மறுபுறம் போய் இறங்குமாறு அமைப்பது எளிதான ஒன்று ஆயிற்றே? வண்டலூரில் அப்படி அமைக்கலாமே? கவனிப்பார்களா?

சரி.சாலைக்கு மறுபுறம் போய்விட்டோம். அங்கிருந்து, வண்டலூர் பூங்கா இரண்டு கிலோமீட்டர் தொலைவு என்றார்கள். 12 மணி உச்சி வெயிலில் நடந்து செல்ல முடியாது.

இந்த இடத்தில், சாலையின் இருபுறங்களிலும் மேம்பாலங்கள் உள்ளன. அங்கிருந்துதான், பாலம் உயரத் தொடங்குகிறது. எனவே, அதற்கு அடியில் சென்று நிற்க முடியாது. அதை ஒட்டி, நெடுஞ்சாலையில்தான் நிற்க வேண்டும். நூறு அடிகள் தொலைவில் பேருந்து நிலையம் இருக்கிறது.ஆனால்,அங்கே போகாமல் எல்லோரும் சாலையைக் கடந்த இடத்திலேயே நிற்கிறார்கள். அவர்களை அங்கே போகும்படிச் சொல்லவும் ஆள் இல்லை.

பேருந்தில் ஏறினோம்.ஆறு ரூபாய் கட்டணம்.ஐந்து நிமிடங்களில் கொண்டு போய் இறக்கினார்கள். மீனம்பாக்கம், திரிசூலம் தொடர்வண்டி நிலையங்களுக்கு இடையிலான தொலைவைப் போல, சுமார் மூன்று மடங்கு இருக்கும். வண்டலூர் பூங்காவுக்கு எதிரே, ஒரு தொடர்வண்டி நிலையத்தை,பத்து ஆண்டுகளுக்கு முன்பே அமைத்து இருக்க வேண்டும். ஆனால்,இன்றுவரையிலும் அமைக்காதது மட்டும் அல்ல;எதிர்காலத்திலும் அமைப்பதற்கான திட்டமோ,அதற்கான ஆய்வுப் பணிகளோ எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பூங்காவின் நுழைவாயிலில்... 

உயிரியல் பூங்காவின் முகப்புப் பகுதிகளைப் புதுப்பித்து இருக்கின்றார்கள்.சுவரில் விலங்குகளின் உருவங்களைக் கருங்கல்லில் செதுக்கி வைத்து இருக்கின்றார்கள்.குறை சொல்ல முடியாது. அதற்கு அருகிலேயே விலங்குகளின் வண்ணப்படங்களையும் வரைந்து இருக்கலாம். நெடுஞ்சாலையில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் குழந்தைகளின் மனதில் அவை எளிதாகப் பதியும்.

பெரியவர்களுக்குக் நுழைவுக் கட்டணம் 30 ரூபாய்; 5 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு  15 ரூபாய். படக்கருவிக்கு 25 ரூபாய். அதில் வெவ்வேறு வகையான கட்டணங்கள் உள்ளன. நியாயமான கட்டணங்கள்தாம். விலங்குகளுக்கு உணவு, ஊழியர்கள் சம்பளம், உள்புறச் சாலைகள் பராமரிப்பு, பார்வையாளர்களுக்கான வசதிகள் என பராமரிப்புச் செலவுகள் அதிகம்.

உள்ளே நுழைகின்ற இடத்தில்,இரண்டு ஊழியர்கள்,பயணிகள் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் வெளியில் எடுத்துச் சோதித்துப் பார்த்தார்கள். சரியான நடவடிக்கை, பாராட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம்மவர்கள், பூங்காவைக் குப்பையாக ஆக்கி விடுவார்கள். எஞ்சி இருக்கின்ற உணவுகளை,போனால் போகட்டும் என்று,விலங்குகளுக்கு வீசி மகிழ்வார்கள். அந்தக் கொடுமை தடுக்கப்படுகிறது.

உள்ளே நுழைந்தவுடன்,விலங்குகளின் படங்களுடன் குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை ஒருமுறை படித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து உள்ளே போய்ப் பார்க்கும்போது அடையாளம் காண எளிதாக இருக்கும். ஏனென்றால், உள்ளே ஒட்டகச் சிவிங்கி உலவுகின்ற இடத்தில் உள்ள அறிவிப்புப் பலகையை,ஒட்டகச் சிவிங்கி மட்டும்தான் படிக்க முடியும். பார்வையாளர்களிடம் இருந்து சுமார் 100 அடி; ஆம் 100 அடிகள் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து இருக்கின்றார்கள். பல விலங்குகளைப் பற்றிய பெயர்ப்பலகைகளில், குறிப்புகளை விட, அதில் கிறுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற காதலர்களின் பெயர்கள்தாம் பெரிதாகத் தெரிகின்றன.

உணவு

பூங்காவுக்கு உள்ளே செல்கிறோம்.தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசு உணவகம் இருந்தது. மணி 12.30 ஆகி இருந்தது. இனி உள்ளே உணவகங்கள் இருக்காது; எனவே இங்கேயே முடித்துக் கொள்வோம் என்ற தொலைநோக்குப் பார்வையோடு, உள்ளே நுழைந்தோம்.

தமிழ்நாடு உணவகத்தில் கோழி பிரியாணி ஒரு தட்டு 100 ரூபாய். சாம்பார், தயிர் சாதங்கள் அருமை. தட்டு நிறையக் கொடுக்கின்றார்கள். அதுவே போதும்.  ஆனால், உணவகம் சந்தைக் கடை போல இருக்கின்றது. ஒரு ஒழுங்கு இல்லை. மேசையைத் துடைக்க ஒருவரும் இல்லை.ஏற்கனவே சாப்பிட்டு விட்டுப் போனவர்கள் வைத்த தட்டை சற்றே தள்ளி வைத்துவிட்டு அங்கே நீங்கள் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.கல்லாவிலும் நெருக்கடி, உணவு வாங்கும் இடத்திலும் தள்ளுமுள்ளு. ஒருவழியாக உணவை முடித்தோம். 

பிறகு, எனது கணிப்பு சரியாகவே அமைந்தது. உள்ளே ஒரு இடத்தில் தேநீர் மட்டும் வைத்து இருக்கிறார்கள்.கடைசியாக வெளியே வருகின்ற இடத்துக்கு அருகில் மற்றொரு உணவகம் இருக்கின்றது.தொடக்கத்திலேயே உணவை முடித்துக் கொள்ளாவிட்டால்,பிறகு பட்டினிதான். நடக்க முடியாது.

பேட்டரி கார்கள், மிதிவண்டிகள்

சற்றுத் தொலைவில், பேட்டரி கார்களில் செல்வதற்கான முன்பதிவு வரிசை. முப்பது பேர்களுக்கும் மேல் வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள்.அதில் இரண்டு வரிசை. மற்றொரு வரிசை, சிங்கங்கள் உலவுகின்ற இடங்களுக்கு எனத் தனியாக உள்ளது. பிற்பகல், மூன்று மணிக்கு மேல்தான் சிங்கங்களைப் பார்க்க முடியுமாம். எனவே, பொது வரிசையில் நின்றேன். பத்து நிமிடங்கள் கழிந்தன. வரிசையில் நின்ற ஒருவர் சொன்னார்: ‘3.30, 4.00 மணிக்கான பேட்டரி கார்களில் போவதற்குத்தான் இப்போது சீட்டு கொடுக்கிறார்கள்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது.

11 பேர் சேர்ந்து 1.15 மணி நேரம் பூங்காவைச் சுற்றி வர தனியாக வண்டி கொடுக்கிறோம். அதற்கு வாடகை ரூ. 350 என்று எழுதி இருந்தார்கள். அதுவும் எல்லோருக்கும் கிடையாது. ஒன்றிரண்டு வண்டிகள்தான் உள்ளன.

இத்தனை ஆயிரம் மக்கள் வருகிறார்கள்;ஒருசிலருக்குத்தான் பேட்டரி கார்களில் இடம்; அதுவும் பல மணி நேரம் காத்து இருக்க வேண்டும் என்கிறபோது,வேறு வழி இன்றி, எல்லோரும் நடக்கத் தொடங்கி விடுகிறார்கள். அயல்நாடுகளில், பேட்டரி கார்கள் அல்ல; சாலையில்ஓடுகின்றபேட்டரிதொடர்வண்டிகளில்,ஒரேவேளையில்நூற்றுக்கணக்கானவர்களை அமர வைத்துச் சுற்றிக் காண்பிக்கிறார்கள்.இங்கே அத்தகைய ஏற்பாடு இல்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பேட்டரி காரில் இடம் கிடைக்கும்.நான் அதை நம்புவது இல்லை என்பதால், நடக்கத் தொடங்கினேன்.

சற்றுத் தள்ளி இன்னொரு கூட்டம்.அங்கே புத்தம் புதிய மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. சைக்கிளிலும் சுற்றிப் பார்க்கலாம். ஒரு வண்டிக்கு ஒரு மணி நேர வாடகை 15 ரூபாய்; ஆனால், முன்பணம் 200  ரூபாய். அப்போதுதான், வண்டிகள் ஒழுங்காகத் திரும்பி அங்கே வந்து சேரும்;இல்லாவிட்டால்,எடுத்துக்கொண்டு போகின்ற இளைஞர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், குழந்தைகளை வைத்துக்கொண்டு போவதற்கு  வசதியாக, பின் இருக்கை இல்லை. என்னிடம் ஒரு குழந்தை இருக்கிறது. வேறு வழி இல்லை என்பதால், அதையும் தவிர்த்துவிட்டு நடக்கத் தொடங்கினோம். எங்களால் முடியும். சற்றே வயது முதிர்ந்தவர்கள், நடக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்?

ஒளிந்து இருக்கும் ஊழியர்கள்

மிதிவண்டிகளுக்குத் தனித்தடம் இருக்கின்றது. ஆனால், கும்பலாக வருகின்ற இளைஞர்கள், மக்கள் நடக்கின்ற வழிகளிலும் ‘சைட், சைட்’ என்று கத்திக்கொண்டு வருகிறார்கள். அதைத் தடுப்பதற்கும் யாரும் இல்லை.சீருடை அணிந்த இரண்டு ஊழியர்கள், உள்ளே நுழைகையில் உடைமைகளைச் சோதித்தார்கள் அல்லவா?அதற்குப்பிறகு,பூங்காவுக்கு உள்ளே நாள் முழுவதும் சுற்றினாலும், பேட்டரி கார்களை ஓட்டுகின்ற ஓட்டுநர்களைத் தவிர,சீருடை அணிந்த ஒரு ஊழியரையும் நீங்கள் பார்க்க முடியாது.பார்வையாளர்களுக்குஎந்த விளக்கத்தையும் தர மாட்டார்கள். அவர்களுக்கு வேறு இல்லையா என்ன? விலங்குகளை மேய்ப்பதா வேலை?

வண்டலூர் விலங்குகள் பூங்காவுக்கு உள்ளே ஒளிந்து இருக்கின்ற ஊழியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பவர்களுக்கு 100 ரூபாய் பரிசு.

பறவைகள்

தொடக்கத்தில் சிங்கவால் குரங்குகள், சிம்பன்சி ஆகியவற்றைப் பார்த்துவிட்டு இடதுபுறமாக நடந்தால், பறவைகளின் கூண்டுகள். மயில் கூண்டு சற்றே பெரிதாக இருக்கிறது. வெள்ளை மயில் தோகை, விரித்து ஆடிக்கொண்டு இருந்தது. எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்தார்கள்.அந்த மயிலும்,எவ்வளவு வேண்டுமானாலும் படம் பிடித்துக் கொள்ளுங்கள் என்று, நீண்ட நேரமாக அப்படியே நின்றுகொண்டு இருந்தது.

அடுத்து வரிசையாக கிளிகள், புறாக்கள். ஒவ்வொன்றிலும் ஒரு சோடிதான். கூண்டுக்கு உள்ளே அவை எங்கே நிற்கின்றன என்று தேடித்தான் பார்க்க வேண்டும். பல கூண்டுகளில் ஒன்றும் இல்லை.

பயணிகளுக்கு வசதிகள்

தொடர்ந்து நடந்தால், ஆங்காங்கே பார்வையாளர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக பல மண்டபங்களைக் கட்டி வைத்து இருக்கின்றார்கள்.தண்ணீர்த் தொட்டிகளும் உள்ளன. வழிகாட்டிப் பலகைகளும் வைத்து இருக்கின்றார்கள்.நடைவழிகளில் மரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்து இருப்பதால்,நல்ல நிழல் தருகின்றன.ஒரு காடு போன்ற தோற்றத்திலேயே இருக்கின்றது. நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். பாராட்ட வேண்டிய நடவடிக்கைகள். மே மாதம் கோடையிலும் கூட,நடந்தே சுற்றிப் பார்க்கலாம்.எல்லோரும் நடக்கின்ற வழியிலேயே நாமும் நடக்கலாம்.

இடையில் கழிப்பு அறை. ‘சிறுநீர் கழிக்க 1 ரூபாய்; இரண்டுக்கு இரண்டு ரூபாய்’ என்று பெரிதாக எழுதி வைத்து இருக்கின்றார்கள்.ஒரு ரூபாயை எடுத்து நீட்டினால்,அங்கே அமர்ந்து இருந்த பெண்மணி, ‘இரண்டு ரூபாய்’ என்றார். நான் ஒரு ரூபாயை வைத்து விட்டு உள்ளே போய் வந்தேன். இப்போது மூன்று பெண்கள் நிற்கின்றார்கள்.

‘ஐய, ஆளப் பாரு; ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து காண்ட்ராக்ட் எடுத்து வெச்சிருக்கிறோம்; தொர வந்துட்டாரு மோள’ என்று வாழ்த்து வசைமொழிகளை அள்ளி வழங்கினார்கள். அப்போது குறைந்தது, நூறு பேர் என்னைப் பார்த்தார்கள். என் மகள் முறைத்துப் பார்க்கிறாள். கண்டிப்பாக வீட்டில் போய்ச் சொல்லுவாள். எதிர்காலத்திலும் சொல்லிக் காட்டுவாள். கேவலமாக இருந்தது.  நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. உண்மையை ஊருக்குச் சொல்ல வேண்டியது ஒரு எழுத்தாளனின் சமூகக் கடமை அல்லவா?

வண்டலூர் விலங்குகள் காட்சியகப் பொறுப்பாளருரக்கு வேண்டுமானால் ராஜமரியாதை கிடைக்கலாம்; வேறு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாதாரண உடை அணிந்து, என்னைப் போல அங்கே சட்டம் பேசி இருந்தால்,அவருக்கும் இப்படித்தானே மரியாதை கிடைத்து இருக்கும்? என்று எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.

அடுத்த கழிப்பு அறையில், வழக்கம்போல கட்டணத்தை மறைத்து ஒரு பலகையை வைத்து இருக்கின்றார்கள்.

முதலைகள்

தொடர்ந்து நடக்கிறோம். சிறுத்தை, காட்டுக் கழுதை கண்ணில்படுகின்றது. ஆனால், ஒன்று இரண்டு என மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன.

முதலைகள்தாம் நிரம்ப உள்ளன.உலகின் பல கண்டங்களில் வாழுகின்ற பலவகையான முதலைகள். ஆனால், அவற்றுக்கு உடலை மறைத்துக் கொள்ளக்கூடப் போதுமான அளவில் நீர் இல்லை. ஒரு பெரிய முதலையின் மீது சிறுவர்கள் எறிந்த கல் அப்படியே கிடந்தது.  மற்றொரு முதலை உடலில் பெரிய பிளவு.ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்தன. முதலைகள் இருக்கின்ற இடத்தில் மட்டும் சுவர் உயரம் குறைவாக இருக்கின்து.அவை வெளியே வர முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இரண்டு மூன்று அடி உயரத்துக்கு, சிறுவர்கள் கல் வீச முடியாத அளவுக்கு ஒரு வலை அமைப்பது சிறந்தது. தண்ணீர் கருப்பாக இருக்கின்றது. கழிவுகள் நிரம்ப இருக்கும் போலும்.

அயல்நாடுகளில் பாலங்கள் எப்படிக் கட்டுகிறார்கள் என்பதைப் பார்க்க பொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்புவது போல, விலங்குகளை எப்படிப் பராமரிக்கின்றார்கள், கழிவுகளை எப்படி அகற்றுகிறார்கள் என்பதை அறிந்து வர, பூங்கா பொறுப்பாளரையும், நிரந்தர ஊழியர்கள் பத்துப் பேரையும் அனுப்பி வைக்க வேண்டும்.

பாம்புகளைப் பார்க்கத்தான் மக்கள் முண்டியடித்துக் கொண்டு போகிறார்கள்.

பாம்புகளோடு தவளைகளும் சேர்ந்து தண்ணீரில் நீந்திக்கொண்டு இருக்கின்றன;ஒரு மலைப்பாம்புக்கு உணவாக, உயிருள்ள கோழியை உள்ளே விட்டு இருந்தார்கள். அது, பம்மிப் பதுங்கியபடி ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கின்றதமூன்று அடி தொலைவில் மலைப்பாம்பு படுத்துக் கிடக்கின்றது. பசி எடுக்கும்போது, கோழி காலியாகி விடும். இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த மகள் சற்றே அதிர்ச்சி அடைந்தாள்.கோழிக்காகவும், தவளைக்காகவும் வருந்தினாள். அது இயற்கையின் படைப்பு; நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை.

அடுத்து, நாரைகள், கொக்குகள். நிரம்ப உள்ளன. ஆனால், தண்ணீர்தான் இல்லை. இருக்கின்ற ஒரு அடி உயரத் தண்ணீரில் ஏதாவது கிடைக்குமா?உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றுக்கு எப்போதும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.அதைப் பார்த்து நமக்கும் வருத்தமாக இருந்தது, தாகமாகவும் இருந்தது.

அடுத்து, ‘எச்சரிக்கை; சிங்கங்கள் உலவுகின்ற பகுதி’ என்று ஒரு அறிவிப்புப் பலகை.

அப்படியா திறந்தவெளியில் விட்டு வைத்து இருக்கின்றார்கள்?எதற்காக இப்படி அச்சுறுத்த வேண்டும்?

சிங்கங்களைப் பார்க்கத் தனிக்கட்டணம், தனி நேரம் என்பதால், எல்லோரும் பார்க்கின்ற வாய்ப்பு இல்லை.ஒன்றிரண்டு சிங்கங்களையாவது ஒரு இடத்தில் வைத்துக் காண்பிக்கலாம்.புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும், வரிக்குதிரையும் கண்ணில்பட்டன. காட்டுப்பன்றிகள், நரிகளைக் காண முடியவில்லை.புதர்களுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கலாம்.அல்லது இல்லாமல்கூட இருக்கலாம்.

வறண்டலூர்

சிங்கப்பூர், மலேசிய விலங்குகள் பூங்காக்களில், சிங்கம் உலவும் இடம் என்றால், பத்துக் கிலோ கறி மீந்து கிடப்பதைப் பார்த்து  இருக்கிறேன். அதே போல  இதர விலங்குகள், பறவைகளுக்கும் இழை தழைகளும், பச்சைப் புற்களும் இறைந்து கிடக்கும்; தெளிந்த நீர் நிரம்பி இருக்கும். ஆனால், வண்டலூர், வறண்டலூர் ஆகக் காட்சி அளிக்கின்றது. கூண்டுகளில் போதுமான உணவைப் பார்க்க முடியவில்லை. எதிர்வரும் கோடையின் வெப்பத்தை விலங்குகள் எப்படித் தாங்கப் போகின்றனவோ?

செய்தி ஏடுகளில், ராஜநாகத்தின் கூண்டுக்கு ஏ.சி. பொருத்தி இருப்பதாகச் செய்தி படித்தேன். இதர விலங்குகளுக்கு ஏ.சி. வேண்டாம்; தண்ணீர் நிரம்பி இருந்தாலே போதும்.

இரண்டு நீர்யானைகள் தென்பட்டன.அவைகள் இருந்த தடாகத்தை சில பெண்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.கழிவுகளை மலையெனக் குவித்து வைத்து இருந்தார்கள்.குறைந்தது பத்து நாள் கழிவாக இருக்கலாம்.நாற்றம் நமது மூக்கைத் துளைத்தது. எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அகற்றுகிறார்கள் என்ற அறிவிப்பு இல்லை.

3 மணி முதல் 4 மணி வரையிலும், பூந்தெளிப்பான் குழாயில் யானைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். அதில் வருகின்ற தண்ணீரில் யானையை நனைக்கலாம் அவ்வளவுதான். அதுவும் ஒவ்வொரு யானைக்கும் ஒருசில நொடிகள்தான். ஐந்து குட்டி யானைகளை சுற்றிச்சுற்றி வலம் வரச்செய்து குளிப்பாட்டினார்கள்.அதைப் பார்த்துக்  குழந்தைகள் குதூகலித்தன.

அடுத்து, ‘இரவுப் பறவைகள்’ என்று ஒரு கூண்டு. உள்ளே கும்மிருட்டு. என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.ஏமாந்தபடியே வெளியே வந்தோம்.சுறா மீன் வடிவிலான கட்டடத்துக்கு உள்ளே மீன் காட்சியகம்.உள்ளே நுழையும்போது சரியாக நான்கு மணி. மின்சாரம் போய்விட்டது. இரண்டு வரிசைகளில், சுவரில் கண்ணாடிக்கு உள்ளே மீன்கள் நீந்துகின்றன.ஆனால்,பார்வையாளர்கள் போவதற்கும் வருவதற்கும் இடமே இல்லை. இடித்துக் கொண்டுதான் முன்னேற வேண்டும். இதில் விளக்கு வேறு அணைந்து விட்டால், ஒரேயொரு தொட்டியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.
காட்டுக்குள் காதல்

‘காட்டுப் பகுதிக்கு உள்ளே யாரும் செல்லக்கூடாது’ என்று ஒரு அறிவிப்புப் பலகை. அங்கேதான்,இளஞ்சோடிகள் அமர்ந்து,ஒட்டி உரசிக் கொண்டு,கட்டிப் பிடித்துக் காதலித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.  அவர்களை எச்சரித்து எழுப்பி விடவும் ஊழியர்கள் இல்லை. குழந்தைகள் இந்தக் காட்சியைப் பார்த்துச்  சிரிக்கின்றன. கும்பலாக வருகின்ற இளைஞர்கள் காடுகளுக்கு உள்ளே போய்,விதம்விதமாகப் படம் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒருவழியாக மாலை நான்கரை மணி அளவில் வெளியே வந்தோம்.மறுநாள் காலை எழுந்தவுடன்,இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன்.இதை,வண்டலூர் பூங்கா பொறுப்பாளருக்கும் அனுப்பி உள்ளேன்.அவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார்?விளக்கம் ஏதும் கொடுக்கின்றாரா? என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். பதில் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.

அரசு அதிகாரிகளிடம் தகவலைப் பெற முடியாது என்பதால்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்தது.அதுவும் என்ன பாடுபடுகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.குறைந்தபட்சம்,கழிப்பு அறையில் நான் வாங்கிய வசவு,இதர பார்வையாளர்களுக்கும் கிடைக்காமல் இருந்தாலே போதும்.

நமக்கு விளக்கம் கிடைக்கிறதோ,இல்லையோ,எதிர்காலத்தில் எதிர்பார்த்து வருகின்ற பார்வையாளர்கள், ஏமாறாமல், மனமகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றால் நமக்கும் மகிழ்ச்சி.

குற்றவாளிகளே

திருவனந்தபுரம், தில்லி, பெங்களூரு, கோலா லம்பூர், சிங்கப்பூர், சான் பிரான்சிஸ்கோ என பல ஊர்களில், விலங்குகள் பூங்காக்களை நான் பார்த்து இருக்கின்றேன். மலேசியா, சிங்கப்பூரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அருமையாக இருக்கிறது. திருவனந்தபுரம் விலங்குகள் காட்சியத்தை நன்றாகப் பராமரிக்கின்றார்கள். இந்தியா முழுமையும் பெயர் பெற்று இருக்கின்றது.ஆனால் அதைவிடச் சிறப்பாக வண்டலூரை உருவாக்க முடியும். அதற்கான இடவசதிகள் உள்ளன.

நிறைகளும், குறைகளும் இருந்தாலும், சென்னைவாசிகள், கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் வண்டலூர் பூங்கா.அரக்கப்பரக்க அரை நாளில் சுற்றிவந்து விட வேண்டும் என்று முனையாமல்,அந்த நாளில் அடுத்து எந்த வேலையையும் வைத்துக் கொள்ளாமல், முழுமையாக ஒரு நாளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே இளைப்பாறுகின்ற இடங்களில் தங்கி, மெல்ல நடந்து சுற்றிப்பார்த்தால், புத்துணர்ச்சி பெறலாம்.

நான் போகாதது மட்டும் அல்ல,அங்கே இதுவரை என் மகளை அழைத்துச் செல்லவில்லையே என்ற குற்ற உணர்ச்சி உறுத்திக் கொண்டே இருந்தது.ஆம்; குற்றம்தான். குழந்தைகளுக்கு விலங்குகள் பூங்காவைக்  காண்பிக்காமல் இருப்பது குற்றம்தான்.  பத்து வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும், கண்டிப்பாக விலங்குகள் பூங்காவுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்க வேண்டும்.அவ்வாறு செய்யாத பெற்றோர்கள், குற்றவாளிகளே. நான் அந்தக் கடமையைச் செய்து விட்டேன். நீங்கள்?

 

Pin It

ஒட்டக்கூத்தரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அம்பிகாபதி - அமராவதி காதலுக்கும், புலவர் புகழேந்திக்கும் எதிரியாக சித்தரிக்கப்பட்டவர் அவர். உண்மையில் மிகச் சிறந்த புலவர். தமிழின் முதல்  பிள்ளைத்தமிழ் இலக்கியமான 'குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றியவர். அது மட்டுமல்லாது மூவருலா, ஈட்டி எழுபது, தக்கயாகபரணி போன்ற நூல்களையும் படைத்தவர். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன் ஆகிய மூன்று சோழப் பேரரசர்களின் அவைப் புலவராக விளங்கியவர்.

ஒட்டக்கூத்தர், தாராசுரம் வீரபத்ரர் கோயிலில் ஒரே இரவில் தக்கயாகபரணியை இயற்றியதாகவும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் அரங்கேற்றியதாகவும் சொல்வார்கள். அவர் இறந்தப் பின் அவருக்கு அமைக்கப்பட்ட சமாதிக் கோயிலான பள்ளிப்படையும் தாராசுரத்தில் தான் உள்ளது - அதே வீரபத்ரர் கோயிலில்.

veerapadrar_temple_1

பட‌ம்: வீரபத்ரர் கோயில்

தஞ்சை - குடந்தை சாலையில், குடந்தை நகருக்கு ஒரு கி.மீக்கு முன்னதாகவே, அரிசிலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது தாராசுரம். 'அழியாத சோழர் பெருங்கோயில்கள்' என போற்றப்படும் மூன்று சோழர் கோயில்களுள் ஒன்றான ஐராவதீஸ்வரர் கோயில் இங்கு தான் உள்ளது. சிற்பப் பெட்டகமான இக்கோயிலுக்குப் பின்பக்கம் இருக்கும்  வீரபத்ரர் கோயிலில் தான் ஒட்டக்கூத்தருக்கு பள்ளிப்படை அமைக்கப்பட்டது. நான் ஓராண்டுக்கு முன் அங்கு சென்ற பயணத் தொகுப்பே இது. 

veerapadrar_temple_2

பட‌ம்:  வீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரமும், ஆக்ரமிப்புகளும்

வீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரம், கருங்கல் தாங்குதளத்தின் மேல் செங்கல் கோபுரமாக‌ உயர்ந்து நிற்கிறது, செடிக்கொடிகளுக்கு வாழ்விடம் அளித்துக்கொண்டு. கோபுரத்தைக் கடந்து சென்றால், ஒரு சிறிய நந்தி மண்டபமும் வீரபத்ரர் சன்னதியும் இருக்கின்றன‌. கோயிலை சுற்றியும் இடம் விஸ்தாரமாக இருக்க, அங்கு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். கோயிலினுள்ளே, பூசாரி ஒரு பையனுக்கு மத்தளம் வாசிக்கக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை எங்கே என்று சுற்றும் முற்றும் தேடினேன். ஆனால் அங்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு வழியின்றி பூசாரியை விசாரிக்க வேண்டியதாயிற்று. அவரும் பொறுமையாக, என்னை அந்த சிறிய கோயிலின் பின் பக்கம் அழைத்துச் சென்று, ஒரு சிமெண்ட் மேடையைக் காட்டி "இது தான் ஒட்டக்கூத்தர் சமாதி", என்றார். பள்ளிப்படை என்றால், கோயில் அமைப்பும், அதனுள் லிங்கமும் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமாய் போய்விட்டது.

நான் பள்ளிப்படையைப் பற்றி பூசாரியிடம் பல கேள்விகளைக் கேட்க, அவர் கோயில் பொறுப்பாளரான ஜீவா என்பவரின் கைப்பேசி எண்ணைக் கொடுத்து அவரிடம் கேட்க சொல்லிவிட்டார். கைபேசிக்கு அழைத்த அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜீவா கோயிலில் இருந்தார். நான் கேட்டவைகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் தந்தார்.

எதிர்பார்த்தது போல, பள்ளிப்படை முற்காலத்தில் கோயிலமைப்பையும், அதனுள் லிங்கம் நந்தி சிலைகளைக் கொண்டிருந்தது. இன்னும் சில மண்டபங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை ஆகிய காரணங்களினால் அவை கொஞ்சக்கொஞ்சமாக இடிந்து விழத் தொடங்கியிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு, எஞ்சியுள்ள சிதைந்த பகுதிகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து இருந்தபடியால் அவற்றை முழுவதுமாக இடித்து விட்டனர். இடிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜீவா என்னிடம் காட்டினார். அவற்றில் சிலவற்றை என் கேமராவில் பதிந்து கொண்டேன்.

 

veerapadrar_temple_3

பட‌ம்: வீரபத்ரர் கோயில் - சிதைந்த பகுதிகளை இடிக்கும் முன்பு... காவி வேட்டி அணிந்திருப்பவர் ஜீவா. 

veerapadrar_temple_4

பட‌ம்: வீரபத்ரர் சன்னதிக்குப் பின்புறம் இருந்த ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை. லிங்கமும், நந்தியும் தெரிகின்றன.

பள்ளிப்படையில் இருந்த லிங்க, நந்தி சிலைகள் இப்போது வீரபத்ரர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிப்படை இருந்த அதே இடத்தில் ஒட்டக்கூத்தர் நினைவு மண்டபம் அமைக்கப்போவதாக சொன்னார் ஜீவா. அதற்காகவே அந்த சிமெண்ட் மேடை எழுப்பபட்டிருக்கிறது. 

 veerapadrar_temple_5

பட‌ம்:  செங்கல் மேடை

கோயில் வளாகத்திலேயே ஒரு பழங்கால செங்கல் மேடை இருக்கிறது. அதுவும் ஒரு பள்ளிப்படையாக இருக்கலாம் என்றார் ஜீவா. மேலும், இரண்டாம் ராஜராஜ சோழன் மற்றும் அரச குடும்பத்தினர் சிலருடைய சமாதிகளும் கூட கோயில் வளாகத்திலேயே இருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார். கோயில் வளாகம், அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரக்கூடும்.

- ராஜ சிம்ம பாண்டியன் (simmapandiyan.blogspot.in) (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

kunderipallam_dam_640

குண்டேரிப்​பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை தமிழகத்தின் பசுமை நுரையீரல் எனலாம். ஓங்கு தாங்காய் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு நடுவே சுழித்துக்கொண்டு ஓடும் நதிகளும் காட்டாறுகளும்தான் இந்த வனத்தை வளம் கொழிக்கச் செய்கின்றன. காணும் திசையெங்கும் பச்சைப் போர்வை போர்த்தி நிற்பது போலத் தோன்றும் இந்தக் கானகம் ஒரு கனவுலகம். இந்த எழில்மிகு பகுதிகளின் சுற்றுலாக் குறிப்புகள் இதோ....

சத்தியமங்கலம் வனப்பகுதி காட்டு யானைகளின் புகழிடமாய் இருக்கிறது. முதுமலை, பந்திப்பூர் சரணாலயங்களில் கிடைக்காத அரிய தாவர வகைகள் கூட இங்கு கிடைக்கின்றனவாம். அது மட்டுமா எந்நேரமும் சளைக்காமல் ஓடும் பவானியாறும், மோயாறும் வன விலங்குகளின் தாகத்தைப் போக்கி தண்ணீர்த் தாயாக விளங்குகிறது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகரான கிளைமேட் வேண்டுமா? அப்படியென்றால் இங்குள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருக்கும் கெத்தேசாலுக்குத்தான் வர வேண்டும். சத்தியமங்கலத்திலிருந்து சரியாக 54 கி.மீ தொலைவில் இருக்கிறது கெத்தேசால். ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத அழகிய மலைகிராமமான இந்த கெத்தேசாலின் கிளைமேட்டுக்கு மசியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஊர் மட்டுமல்ல இந்த ஊர் மக்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ஊராளி இனப் பழங்குடி மக்கள் வாழும் இந்த கெத்தேசாலுக்கு ஒரு முறை வந்து பாருங்கள் இந்த மக்களின் வாழ்க்கை முறையினையும் கற்றுக் கொள்வீர்கள்.

டணாய்க்கன் கோட்டை

டணாய்க்கன் கோட்டை

சத்தியமங்கலம் என்றாலே பண்ணாரி மாரியம்மன் கோவில்தான் நினைவுக்கு வரும். சத்தியமங்கலத்திலிருந்து சரியாக 12 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பண்ணாரி அம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி, அதுவும் ஆண்டுதோறும் நடைக்கும் குண்டம் திருவிழா என்றால் சொல்லவே தேவையில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகா மாநிலத்திலிருந்தும் கூட லட்சக்கணக்கான பக்தர்கள் பண்ணாரியை வழிபட்டு குண்டம் இறங்குவர். இந்தக் கோவிலிலிருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கிறது காட்டு பண்ணாரி அம்மன் கோவில். இங்குதான் பண்ணாரி தோன்றியிருக்கிறது. இந்தக் கோவிலுக்குப் போக பஸ் வசதி ஏதும் இல்லையெனினும் தீவிர பக்தர்கள் நடந்தே செல்கிறார்கள்.

கொடிவேரி

கொடிவேரி

சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது பவானிசாகர் அணைக்கட்டு. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை, ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை என்று பல சிறப்புக்கள் இருந்தாலும் இங்குள்ள பூங்கா சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்கு. அது மட்டுமல்ல இந்தப் பூங்கா, காதல் ஜோடிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. இங்கு வாய்க்கு ருசியாய் பொரித்து எடுக்கப்பட்ட அணை மீன்கள் கிடைக்கின்றன. அணையின் மேல்பகுதிக்குப் போக பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆண்டுக்கு காணும் பொங்கல் மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய இரு நாட்களுக்கு மட்டும்தான் அனுமதி. ஒரு சுவாரஸ்யத் தகவல் என்னவென்றால் இந்த அணைக்குள் டணாய்க்கன் கோட்டை எனும் ஒரு கோட்டை மூழ்கிக் கிடக்கிறது. அணையின் நீர்மட்டம் 25 அடியாகக் குறையும் போது இந்த கோட்டை நம் கண்களுக்குத் தெரியும். குடும்பத்தோடு குதூகளிக்க ஒரு நல்ல இட‌ம் பவானிசாகர் அணைக்கட்டு.

சத்தியமங்கலத்திலிருந்து 14 கிமீ தூரத்தில் கண்ணைக் கவரும் கொடிவேரி அருவி இருக்கிறது. இந்தக் கொடிவேரியை மினி குற்றாலம் எனலாம். கரைபுரண்டு வரும் பவானியாற்று நீர் அருவியாகக் கொட்டுவது அழகோ அழகு. அருவியில் குளிக்க விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

maththalakombu_640

மத்தாளக்கொ​ம்பு

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது குண்டேரிப்பள்ளம். குன்றி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடியும் இடம்தான் இந்த குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு. மூன்று பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்து நிற்க நடுவே இந்த அணைக்கட்டு இயற்கை அழகினை வாரி இறைக்கிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்களின் சுவையே தனி அது மட்டுமில்லாமல் மீன்களின் விலையோ மிகவும் குறைவு. இந்த அணை அழகுற காட்சியளித்து கண்களுக்கு விருந்தளிப்பது மட்டுமில்லாமல் மீன் விருந்தும் அளிக்கிறது.

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் தூக்கநாயக்கன்பாளையம் எனும் விவசாய கிராமம் இருக்கிறது. இங்கு 500 ஆண்டுகளாக வற்றாத நீரூற்று ஒன்றுள்ளது. பார்ப்பதற்கு நீச்சல் குளம் போலக் காட்சி தரும் இந்த நீரூற்றின் பெயர் மத்தாளக்கொம்பு. இப்பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்கள் விடுமுறைக்காலத்தை இங்குதான் கழிக்கின்றனர். இந்த நீரூற்றோ படிகத்தைப் போலத் தூய்மையானது என்பதால் இங்கு குளிப்பதற்காகவே கூட்டம் அலைமோதும். இப்படியாக சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் கண்டுகளிக்க இன்னும் பல இடங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

- கி.ச.திலீபன்

Pin It