இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் முற்பகுதியிலேயே அதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. சந்திரனில் முதன் முதலாகக் கால் வைத்தவர்கள் அமெரிக்கர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். விண்வெளியிலே முதன் முதலில் பறந்தவர்கள் சோவியத்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இரண்டு பேருமே இந்தக் களத்திற்குப் பின்னால் வந்தவர்கள்.

இந்தச் சிந்தனை முதலில் எந்த நாட்டில் தோன்றியது, எந்த விஞ்ஞானிகளிடமிருந்து அது வெளிப்பட்டது, எந்த நாடு முதல் முதலாக ராக்கெட்டைக் குறைந்தது 1000மீ. தூரத்திற்குப் பறக்கவிட்டுப் பரிசோதித்துப் பார்த்தது என்று கேட்டால் அந்த நாட்டினுடைய பெயர் இன்னமும் உலக வரலாற்றின் ஏடுகளில் சரியாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. ஜெர்மனிதான் முதன் முதலில் இந்த ஆய்வுக் களத்தில் முன்னால் நின்றது. ஜெர்மனிக்குத்தான் இதில் ஒரு மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது.

1903-ஆவது ஆண்டில் ரைட் சகோதரர்கள் விமானம் பற்றிய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த முயற்சிகள் நடைபெற்று வெற்றி பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் விமானங் களுக்கும் ராக்கெட்டுக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில் விமானங் கள் காற்று மண்டலத்துக்குள்ளே பறக்கின்றன. ராக்கெட்டுகள் காற்று மண்டலத்தைக் கீறி வெளியில் பிரபஞ்சத்துக்குப் போகின்றன. இதுதான் அதனுடைய அடிப்படையான வேறுபாடு.

ஜெர்மன் நாட்டைச் சார்ந்த எருமன் என்கிற ஒரு விஞ்ஞானிதான் முதன் முதலாக ராக்கெட் பற்றிய சிந்தனையை வெளியிட்டார். 19-ஆம் நூற்றாண்டினுடைய இறுதியிலேயே அந்தச் சிந்தனைகள் வெளிப்பட்டன. ஆனாலும் அதற்கான முயற்சிகள் 1920-களிலே தான் நடைபெற்றன. முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஒரு ராக்கெட் 1000 மீட்டர் அதாவது 3000 அடிக்குச் செங்குத்தாக மேலே எழுந்தது. அதுவரையிலே விமானம் என்பதெல்லாம் ஊர்ந்து, ஓடி, எழுந்து, பறப்பது, அதுதான் விமானத்தினுடைய அடித்தளம்.

ஆனால் ராக்கெட் என்பது நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக வானை நோக்கிப் பறப்பது. அப்படி முதன் முதலில் பறந்த ராக்கெட் ஜெர்மனியிலேயிருந்துதான் பறந்தது. அது 1931. பிறகு மெல்ல மெல்ல அந்தத் தொழில் நுட்பம் அங்கே வளர்ந்தது. ஹிட்லர் அந்த நாட்டுக்கு அதிபரானதற்குப் பிறகு ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதற்கு அவர் பேருதவிகளைச் செய்தார். அவருடைய நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனாலும் அந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் பேருதவிகளைச் செய்தார்.

அதனுடைய விளைவு என்னவாயிற்று என்றால் இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனிதான் முதன் முதலாக இங்கிலாந்தை நோக்கி ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான செய்தி.

ராக்கெட் தாக்குதலை முதன் முதலில் நடத்திய நாடு ஜெர்மனிதான். ஹிட்லர் அதிபராக இருக்கிறபோது இங்கிலாந்து நாட்டின் மீது அந்த தாக்குதல் நடைபெற்றது.

ஆனால் இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்குப் பிறகு, அமெரிக்கர்களும் சோவியத்து நாட்டைச் சார்ந்தவர்களும் அந்தத் தொழில் நுட்பத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். அதுவும் சொல்ல வேண்டுமென்றால் சோவியத்துதான் இரண்டாவது உலகப்போரின் இறுதியில் ஜெர்மனியை வெற்றி கொண்டது. அங்கே போன சோவியத்து விஞ்ஞான அறிஞர்கள் வீட்டோ என்கிற ராக்கெட்டையும் அதனுடைய தொழில் நுட்பங்களையும் கைப்பற்றித் தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

பிறகுதான் சோவியத்திலே விண்வெளி ஆய்வகம் வளர்ந்தது. அதைப் போல ஜெர்மன் நாட்டிலே இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் சிலர் உலகப் போரினுடைய தோல்விக்குப் பிறகு அமெரிக்காவிலே குடி புகுந்தார்கள். அவர்கள் தான் அமெரிக்காவிலே இந்த விண்வெளி ஆய்வை வளர்த்தார்கள்.

எனவே சோவியத்தில் வளர்ந்தது ஜெர்மினியிலே தொடங்கிய ஆய்வு; அமெரிக்காவிலே உருவானது ஜெர்மனியில் இருந்து போன விஞ்ஞானிகள் கொண்டுபோன ஆய்வு. ஜெர்மனி தான் அதனுடைய அடித்தளமாக இருக்கிறது. ஆனாலும்கூட அவற்றைப் பயன்படுத்தி சோவியத்தும் அமெரிக்கர்களும் மிகப்பெரிய வெற்றியை இந்த அறிவியல் உலகத்திலே, விண்ணியல் உலகத்திலே அடைந்திருக்கிறார்கள். அதை மறுக்க முடியாது.

வரலாற்றிலே நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு சில நாட்கள் உண்டு. 1957-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி, அது தான் முதன் முதலாக விண்வெளியில் ஒரு ராக்கெட் சீறிப் பாய்ந்த நாள். ரஷ்யாதான் அதை அனுப்பிற்று ஸ்புட்னிக்-1 என்று அதற்குப் பெயர்.

அந்த ஏவுகணைதான் முதன்முதலாக பூமியைச் சுற்றி வந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த ஏவுகணைக்குள்ளே ஒரு நாயை வைத்து அனுப்பினார்கள். ‘லைக்கா’ என்று அந்த நாய்க்குப் பெயர் பாருங்கள், வரலாற்றில் முதன் முதலாக ஏவுகணையில் பறந்தது காற்று மண்டலத்துக்கு வெளியேபோன பூமியைச் சேர்ந்த ஜீவன் ஒரு நாய்தான். ஆனால் மூன்று வாரத்திற்குப் பிறகு அந்த ஏவுகணையும், அந்த நாயும் அப்படியே எரிந்துபோய் விட்டன. எனினும் அந்த முயற்சி ஒரு பெரிய வெற்றி பெற்றது.

பிறகு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, 1916-இல் மறுபடியும் சோவியத்து ஸ்புட்னிக்-2 என்கிற இன்னொரு ஏவுகணையை அனுப்பியது. முதன் முதலாக ஒரு மனிதன் பயணம் செய்தான், மிகத் துணிச்சலாக அந்த ஏவுகணையிலே. ஏனென்றால் முன்னாலே போன நாய் எரிந்து போயிற்று. இவன் திரும்ப வருவானா என்று தெரியாது. ஆனால் முதன் முதலாக ஒரு மனிதன் யூரிகாகரின் என்பது அவனுடைய பெயர். அவன்தான் முதன் முதலாக விண்வெளியிலே பயணம் செய்தான்.

அதற்குப் பிறகு 62-ஆவது ஆண்டு விண்வெளியிலே எழுந்து நடந்து, நடந்து என்பதைவிட மிதந்துகாட்டிய முதல் பெண்மணி வாலன்டினா என்பதை நாம் அறிவோம். வாலன்டினாவினுடைய பெயர் இன்னமும் வரலாற்றில், அறிவியலின் பக்கங்களில் எழுதப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணம் அந்த பெண்மணி தான் முதன் முதலாக வான்வெளியிலே மிதந்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியவர்.

சோவியத்துதான் விண்வெளி ஆய்விலே இப்படிப்பட்ட முயற்சிகளிலே முதல் வெற்றி பெற்றது. ஆனாலும் நிலவில் போய் கால்வைத்த பெருமை அமெரிக்கர்களுக்கு வந்து சேர்ந்தது. அடுத்தடுத்த முயற்சிகளிலே அவர்கள் இருந்தார்கள். அன்றைக்கு அந்தத் தொழில் போட்டி என்பது தொழில் நுட்பப் போட்டியாக, விண்வெளி ஆய்வுப் போட்டியாக அடிமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையிலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதி வெற்றியை அமெரிக்கர்கள் பெற்றார்கள்.

1969-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20-ஆம் தேதி மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக நிலவில் மனிதன் கால் வைத்தநாள் அது. மூன்றுபேர் போனார்கள். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் கால்வின் என்கிற மூன்று பேர் அந்த ஏவுகணையிலே பயணம் செய்தார்கள்.

அதிலே கூடப் பாருங்கள் மூன்றுபேரும் வான்வெளிக்குப் போனார்கள். ஆனால் மைக்கேல் கால்வின் அந்த ஏவுகணையிலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. இரண்டு பேர்தான் நிலவில் கால் பதித்தனர். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் தான் முதன் முதலாகச் சந்திரனின் மீது கால் வைத்தார்.

உலகமே அந்த நாளைக் கொண்டாடியது. உலகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக, விஞ்ஞானத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.

சந்திரனில் மனிதன் கால் வைத்தான். நிலவே வா… வா… என்று நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். நிலா…நிலா…ஓடிவா என்றோம். அது ஓடிவராது என்று தெரிந்தது. சந்திர பகவான் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம். இல்லை சந்திரன் என்பது ஒரு துணைக்கிரகம். பூமியைப்போல அது இன்னொரு கிரகம் என்பதையெல்லாம் அந்த அறிவியல் ஆய்வு இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியது.

எனவே அன்றைக்குத்தான் மனிதர்கள் முதன் முதலாக நிலவிலே கால் வைத்தார்கள் என்பதைக் காட்டிலும் முக்கியமானது, ஜுலை மாதம் 24-ஆம் தேதி அவர்கள் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார்கள் என்பது தான். இது விண்வெளி ஆய்விலே மகிப்பெரிய வெற்றிப்படி என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இதிலே மிகப்பெரிய பங்கு இருந்தாலும்கூட, இந்த விண்வெளி ஆய்வைத் தொடக்கி வைத்தது ஜெர்மனிதான் என்பதை இந்த நேரத்திலே நாம் நன்றியோடு நினைவுகூர வேண்டும்.

(ஒன்றே சொல்! நன்றே சொல்! நூலிலிருந்து)

Pin It

இறந்த விண் மீனைக் கண்டறிந்த தொலை நோக்கி..!!

இறந்த 3 தாய் விண்மீன்களைச் சுற்றி வரும் மூன்று கோள்களை சர்வதேச வானியல் ஆராய்ச்சியின் குழு கண்டுபிடித்து,உள்ளது. இவர்கள் பென் மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளியாளர்கள். இந்தத் தகவலை இவர்கள் 2011, அக்டோபர் 27 ம் நாளில் வெளியில் அறிவித்துள்ளனர். இவற்றை எல்லாம் இந்த ஆராய்ச்சிக் குழு ஒரு தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே. அந்த தொலைநோக்கியின் பெயர் ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET)).

 exo_planets_370ஹாபி எபெர்லி தொலைநோக்கி..!

 ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET) ) என்பது உலகத்தின் நான்காவது பெரிய தொலைநோக்கி. இது மெக்டொனால்டு பார்வையகத்தில்/நோக்ககத்தில் (McDonald Observatory) அமைந்துள்ளது . டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் பெயர் மற்றும் ராபெர்ட் E.எபெர்லியின் பெயர்களை (Texas Lieutenant-Governor Bill Hobby and for Robert E. Eberly, a Penn State benefactor.) இணைத்து இதற்கு சூட்டியுள்ளனர். 1997லிருந்து இந்த தொலைநோக்கி செயல்படுகிறது. பென் மாநிலம், டெக்சாஸ் பலகலைக்கழகம், ஸ்டேன் போர்ட் பல்கலைக்கழகம், லுட்விக் பல்கலை, மூன்சென் பல்கலை மற்றும் கோயட்டின்ஜென் பல்கலை (collaboration between Penn State and the University of Texas at Austin, Stanford University, Ludwig-Maximilians-Universitaet Muenchen, and Goerg-August-Universitaet Goettingen) என அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்பட்டு வானை தன் நுண் கண்களால் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இணைப்புகளுள் பென் மாநிலம்தான் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றுகிறது.

 திறமைசாலி தொலைநோக்கி.!

 ஹாபி எபெர்லி தொலைநோக்கியில், ஒளி வரும் துளையின் விட்டம் 9 .2 மீட்டர். ஒளி பிரதிபலிக்கும் ஆடியின் அளவு 9 .2 மீட்டரைவிட அதிகம். இதில் முதன்மை ஆடியில் 91 அறுகோண கண்ணாடிகள் உள்ளன, ஒளி பிரதிபலிக்க. இந்த ஹெட்(HET) தொலைநோக்கியின் அடிப்பகுதி அப்படியே 70- 81 பாகை வட்டமடித்து வானை ஆராயும். அப்போது இதுவரை நமக்குத் தெரியாமல் விண்வெளியில் வலம் வரும் பல விண்மீன்கள், அவைகளின் புதல்வர்களான கோள்கள் மற்றும் புதிய அண்டங்கள் போன்றவற்றை சல்லடை வலை போட்டுத் தேடும். சுமார் நொடிக்கு ஒரு மீட்டர் சுற்று வேகத்தில் நகரும் விண்மீன்களைக்கூட துல்லியமாய் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது இந்த தொலைநோக்கி. இதுவரை அவற்றில் பல விண்மீன்களை கண்டுபிடித்துள்ளது. அந்த வலையில் சிக்கிய மீன்கள்தான் அக்டோபர் 27 அன்று அறிவிக்கப்பட்ட, இறந்து போன மூன்று விண்மீன்களும், அவற்றைச் சுற்றிவரும் மூன்று கோள்களும்.

அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டமூன்று புதிய கோள்களும் சுற்றி வரும் தாய் விண்மீன்களின் பெயர்கள்: HD 240237, BD +48 738, & HD 96127 -என்பதாகும். இவை நம் சூரிய குடும்பத்திலிருந்து பல பத்து ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. இதில் ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால், இவற்றில் ஒன்று மிக மிக அதிக நிறை உள்ளது மற்றும் அது இறந்த விண்மீனாகும் . இதனை அந்தக் குழுவின் தலைவரான அலெக்ஸ் வோல்ஸ்க்சான் ( Alex Wolszczan, an Evan Pugh Professor of Astronomy and Astrophysics at Penn State) என்ற வானவியல் பேராசிரியர்தான் கண்டுபிடித்தார். இவர்தான் முதன் முதல் 1992ல் வானில் சூரிய மண்டலத்திற்கு வெளியே சுற்றிவரும் வெளிக் கோள்களைக் கண்டுபிடித்தவரும் கூட. இந்த இறந்த விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்கள் நமக்கு பல எதிர்காலக் கனவுகளை, திட்டங்களை, புதிய வானியல் ஆராய்ச்சிக்கு தடம் போடும் என்று தெரிய வருகிறது. இப்போது இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த புதிய கோள்கள், அவற்றைப் பற்றிய புதிய ஆராய்ச்சிக்கு நிறைய வழி வகை செய்துள்ளன. இது உலோகங்கள் எவ்வாறு இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை வானவியலாளர்கள் அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன.

வெளிக் கோள்களின் (Exo -Planets ) புதிய பரிமாணம்..!

இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்தக் கோள்களின் மண்டலம், நம் சூரிய குடும்பத்தை விட அதிகமான பரிணாமமும், பரிமாணமும் பெற்றது எனத் தெரியவந்துள்ளது. "இந்த மூன்று விண்மீன்களும், ஏற்கனேவே தம்மிடமுள்ள ஆற்றலை எல்லாம் இழந்துவிட்டு, சிவப்பு அரக்கனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இது தன்னருகே சுற்றி வரும் கோளை கபளீகரம் செய்துவிடும்", என வோல்ஸ்க்சான் கூறியுள்ளார். நமது சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு என்ன நிகழும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ/ எதனைச் சந்திரசேகர் சொன்னாரோ அதுவே இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களின் தலையெழுத்தும் என்று சொல்கிறார் வோல்ஸ்க்சான். நம் சூரியனும் எதிர்காலத்தில், தன் ஆற்றலை எல்லாம் இழந்து அதன் பூத உடல் ஊதிப் போய் சிவப்பு அரக்கனாக ஊதி ஊதி விரியும். அது சமயத்தில் நம் பூமியையும் கூட விழுங்கி விட நேரிடும். அது நடக்க இன்னும் 600 கோடி ஆண்டுகள் ஆகும்.

பழுப்புக் குள்ளனா..?

இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களில் ஒன்று பெரியது; அதிக நிறையுள்ளது மட்டுமல்ல. இதற்கு நம் வியாழன் அளவு பெரிய கோள் உள்ளதுதான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல அதன் அருகில் இரண்டாவது ஒரு புதிரான பொருளும் காணப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக் குழுவின் கணிப்புப் படி, இந்த பொருள் வேறொரு கோளாகவும் கூட இருக்கலாம். அல்லது இது குறைவான நிறையுள்ள விண்மீனாகவோ இருக்கக் கூடும் என்று இந்த வானியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அல்லது நம் வானியலாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான பழுப்புக் குள்ளனாகவும் கூட இது இருக்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த பழுப்புக் குள்ளன் என்பது, விண்மீன் போன்ற வான்பொருள் ஆனால் இது மிகமிகக் குளிர்ந்த விண்மீன்களுக்கும், அசுரன் விண்மீன்களுக்கும் இடைப்பட்ட வான்பொருளாகும். “நாங்கள் தொடர்ந்து இந்த வான் பொருளைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்போம், இன்னும் சில வருடங்களில் இவர் யார் என்பதும் இவரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் நாங்க புட்டு புட்டு வைப்போம், அதன் முழு வண்ணமும் அடையாளமும் தெரிந்துவிடும்..” என்று சர்வதேச வானியல் ஆராய்ச்சி குழுவின் தலைவர் வோல்ஸ்க்சான் அறுதியிட்டுத் தெரிவிக்கிறார்.

ஓயாத இரைச்சல்..!

HET_250வோல்ஸ்க்சான் இன்னும் சில சுவையான தகவல்கள் தருகிறார். என்ன தெரியுமா? இந்த மூன்று விண்மீன்களும் சண்டைபோடுவது போல ரொம்பவும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம். நம் சூரியனைவிட அதிக ஜொலிப்புடனும் , ரொம்பவும் ஆட்டம் போட்டு ஆடிக் கொண்டும் இருந்தனவாம். இந்த சத்தம் இவர்களை அதிகமாக கவனிக்க விடாமல் தடுத்தனவாம். நம் வீட்டுக் குட்டிகள் போடும் கும்மாளம் போல. ஆனால் பிரச்சினைகளுக்கும் மேல் ஒரு சவாலாகத் தான் இறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறை அதிகமுள்ள விண்மீன்களையும், அவற்றைச் சுற்றி வரும் புதிய கோள்களையும், அவற்றைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் மிகப் பெரிய சாதனைதான். இவற்றை எல்லாம் சூரியக் கதிர்களின் ஒளிவண்ணப் பட்டையைப் பிரித்து பதிவு செய்யும் நிழற்படக் கருவி(spectrographs) மூலமே கண்டறியப்பட்டது.

மலை முழுங்கி மகாதேவன்..!

இந்த குழு வேறொரு இறுதி முடிவையும் கூட செய்தது.. அதுதான் இன்னும் ஆச்சரியமான, சுவாரசியமான தகவல். இந்த மூன்று விண்மீன்களுக்கும் அவைகளின் சுற்றுப் பாதையில் நிறைய கோள்கள் இருந்திருக்கலாம். அவற்றை எல்லாம் இவை, மலை முழுங்கி மாகாதேவன் போல காலப்போக்கில் எல்லாவற்றையும் விழுங்கி விட்டன. இப்போது நமக்குத் தெரியும் ஒன்றை மட்டுமே தற்சமயம் பாக்கி வைத்துள்ளளது என்று கருதுகின்றனர். இபோது காணப்படும் கோள்களும் கூட தனது தாயிடமிருந்து சுமார் 0.6 வானியல் அலகு தொலைவில்தான், அதாவது 9 கோடி கி.மீ தூரத்தில்தான் சுற்றுகின்றன என்ற தகவல்களையும் தெரிவிக்கிறார் வோல்ஸ்க்சான். இந்த 0.6வானியல் அலகு என்ற மாய எண் கோள்களை விழுங்கும் தொலைவாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான்..

மிச்ச சொச்சமான கோள்...!

இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மற்றும் அதன் கொலைகளைப் பற்றி அறியும் தகவல்கள் நமது சூரிய குடும்பத்தின் தலையெழுத்தையும் கூட துல்லியமாய்த் தெரிவிக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமல்ல எப்படி நம் சூரியன் எதிர்காலத்தில் புதன், வெள்ளி, நம் பூமி, அதன் துணைக்கோள்களை விழுங்கும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர்.

Pin It

இந்நிகழ்வின் அறிவியல் முக்கியத்துவமும்  வரலாற்றுப் பின்னணியும்

17-ஆம் நூற்றாண்டில் கெப்ளரது கோள்களின் விதிகள் மற்றும் நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்தி சூரியக் குடும்பத்தின் அளவினை ‘வானவியல் அலகின்’  வாயிலாகக்  கணித்தனர். வானவியல் அலகு (Astronomical Unit or A.U) என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரி தொலைவாகும்.  மேற்கூறிய விதிகள் சூரியக் குடும்பத்தின் கோள்களின் தொலைவை வானவியல் அலகில் கணித்தன.  ஆனால் வானவியல் அலகு என்பதன் அளவைக் கணிக்க இயலவில்லை.  18 ஆம் நூற்றாண்டில்  இந்த  அளவைத்துல்லியமாகக் கண்டறிய கடும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.  இந்த அலகில் ஏதேனும் தவறு நேரிட்டால், பேரண்டத்தின் அள வைக் கணிக்கையில் அந்தத்தவறு பல்கிப் பெருகிவிடும் அச்சம் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டில்  வெள்ளி  மற்றும் புதன் கோள்கள் 1631  ஆம் ஆண்டில்  சூரிய வட்டைக் கடப்பதைக் காண இயலும் என கெப்ளர் கணித்தறிந்தார். எனினும் 1631-ல் நிகழ்ந்த வெள்ளியின்  சூரியக்  கடப்பு  ஐரோப்பிய நாடுகளில்  புலப்படாத காரணத்தால் யாரும் அதனைக் காணவில்லை. பின்னர் ஜெரேமியா ஹாரக்ஸ்  எனும் இளம் ஆங்கிலேயர் 1639-ல் மீண்டும் ஒரு முறை வெள்ளியின் சூரியக் கடப்பு நிகழும் எனக் கணித்தார். அதனை உடனடியாக உலகிற்குத்தெரிவிக்க இயலாததால்   அவரும்  அவரது நண்பரான  வில்லியம் கிராப்ட்ரீ என்பவரும் மட்டுமே 1639-ல் வெள்ளி யின் சூரியக்கடப்பினைக் கண்ணுற்றனர்.  இதன் மூலம் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினை முதன் முதலில் பார்த்தவர்கள் எனும் வரலாற்றுச் சிறப்பை இவர்கள் பெற்றனர்.

பின்னர் 1677-ல் புதன் கோளின் சூரியக் கடப்பை எட்மண்ட் ஹாலி  கண்டார்.  இதன்மூலம், வெள்ளிக்கோளின் சூரியக் கடப்பின் உதவி கொண்டு பூமிக்கும் சூரியனுக்கு முள்ள தொலைவைக் கண்டறிய முடியும் என்று உணர்ந்தார். பூமியின்  பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளியின் சூரியக் கடப்பை  ஆய்வு செய்து வெள்ளியின் கோண மாற்றத்தை (Parallax) அளப்பதன் மூலம் வானவியல்  அலகின் அளவைக் கண்டறியும் முறையையும் அவர் வகுத்தார். இதன் பின்னர் 1761, 1769, 1874 மற்றும் 1882ல் நிகழ்ந்த வெள்ளியின் சூரியக் கடப்பின்போது உலகெங்கும் வானவியல் அலகின் அளவைக்காணும் பெரு முயற்சி வானவியலாளர்களின் ஒன்றிணைந்த உழைப்பால் நிகழ்ந்தது..

கருந்துளி விளைவு

வெள்ளியின் சூரியக்கடப்பைப் பயன்படுத்தி வானவியல் அலகைக் கண்டறியும் முயற்சியால் மிகவும் முக்கியமான பகுதி வெள்ளிக்கோள் சூரிய வட்டினுக்குள் முழுமையாகச் சென்றடையும் நேரத்தைக் கண்டறிவதாகும்.  இதனை இரண்டாம் தொடுநிலை   (II  contact) அல்லது (Interior Ingress)  என்பர் .

பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் இந்த நிகழ்வை ஆராயும்போது இந்தக் கட்டத்தைக் கடந்து சற்று உட்புறமாக வெள்ளிக்கோள் நகர்ந்த பின்னரும் சூரிய வட்டின் விளிம்புடன் கரிய     இணைப்பு ஒன்று தோன்றி ஒரு கருப் புத்திரவத்துளி போன்ற தோற்றத்தை   உருவாக்கியது.  இதனைக் கருந் துளி விளைவு (black  drop effect) என்பர்.

நாம் காணும் சூரிய வட்டின் ஓரத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் அதிகத்தொலைவு பயணம் செய்வதால் ஏற்படும் சூரிய விளிம்புக் கருமையும்  (limb darkening) பூமியின் வளிமண்டல  மாற்றங்களால் தோன்றும் ஒளிவிலகல் விளைவும் இணைந்து கருந்துளி விளைவைத்தோற்றுவிக் கின்றன.  இந்த விளைவின் காரணமாக சூரிய வட்டினுள் மிகச் சரியாக எந்த நேரத்தில்  வெள்ளிக் கோள் நுழைந்தது என்பதனைக் கண்டறிவதில் பிழை  நேரிட்டது.  இதன் காரணமாக வானவியல் அலகைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.  1882-ஆம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளியின் சூரியக்கடப்பின்போது பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு சைமன் நியூகோம்ப் என்பவர், வானவியல்  வானவியல் அலகு என்பது 149.59 ± 0.31 மில்லியன்  கிலோ மீட்டர்  எனக்கணித்தார்.

என்றபோதும் சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு இந்த அளவில் தவறிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது.  ரேடார் அலைகளை சூரியனுக்குச்  செலுத்தி, அவை சென்று திரும்பும்  நேரத்தைக் கணித்து தற் காலத்தில் சூரியனின் தொலைவு கணக்கிடப் படுகிறது.  இதன்படி சூரியன் தொலைவு 149, 597, 870.691 ±  0.030 கிலோமீட்டர்   என்று அறியப் பட்டது.  இதில்  வேறுபாடு  30 மீட்டர்  அளவே யிருக்கும் என்பது குறிப்பி டத்தக்கது.  என்ற போதும் ரேடார் தொழில் நுட்பம் இல்லாத அக் காலத்தில்  வெள்ளியின் சூரியக்கடப்பின் மூலம் நம் முன்னோர் கள் சூரியனின் தொலைவைக் கண்டறிந்த  கடும் முயற்சி இணையற்றது.  இன்றும் பள்ளிக் குழந்தை கள்  உதவியுடன் சூரியனின் தொலைவு காணும் முயற்சி 2012 ஆம் ஆண்டின் சூரியக் கடப்பின்போது பல்வேறு நாடுகளில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், வெள்ளி, சூரியன், கோள்களின் இயக்கம், கணிதம் போன்ற பல்வேறு  துறைகளில் அனுபவம் பெறுகின்றனர்.

கண்  பாதுகாப்பு

சூரியனை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் ஆபத்தானது.  மேலும் எக்காரணத்தைக் கொண்டும், தொலை நோக்கி அல்லது  பைனா குலர் மூலமோ அல்லது எந்த உருப்பெருக்கு கருவியைக் கொண்டோ சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது .  அப்படிச் செய்தால் கண் பார்வையை இழக்க நேரிடும்.  சூரியனைக் காண எளிய  ஒரு வழி சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்து பார்ப்பதாகும்.  ஒரு  சிறிய  5 மில்லி மீட்டர் அளவிலான துளையை ஒரு அட்டையில் ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கண்ணாடியின் உதவி கொண்டு சூரிய ஒளியைப் பாய்ச்சினால் அட்டையின் மறுபக்கத்தில் சற்று தூரத்தில் சூரியனின் பிம்பம் உருவாகும்.  அங்கு ஒரு வெண்ணிற அட்டையைப் பயன்படுத்தி சூரியனின் பிம்பத்தைக் காணலாம்.  இதில் ஒரு சிறு புள்ளிபோல வெள்ளிக்கோள் நகர்வதைக் காணலாம்.

ஒரு சிறிய கண்ணாடியில் சிறு துளையிட்ட அட்டையை ஒட்டி சூரியனின் பிம்பத்தை அந்தத்துளை வழியே ஓர் இருண்ட அறையில் அமைந;த வெண்திரையில் பாய்ச்சியும் காணலாம்.  தொலைநோக்கி அல்லது பைனாகுலரின் வழியே வெளிவரும் சூரியனின் பிம்பத்தைத் திரையில் விழச்செய்தும் காணலாம்.  பற்ற வைப்பவர்கள் பயன்படுத்தும் 14-ம் எண்  (Welders glass shade No.14) ஒளி வடிகட்டி கொண்டும் சூரியனைக் காணலாம்.  எனினும் ஒளிவடிகட்டிகளில் கீறல்களோ, துளைகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம் பி.எம்.பிர்லா கோளரங்கத்தில்  2004 ஜுன் மாதம் 8 ஆம் நாள் பொதுமக்கள் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினைப் பாதுகாப்பாகக் காண தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு 8 தொலைநோக்கிகள் வாயிலாக சூரியனின் பிம்பத்தைத் திரையில் விழச் செய்து பொதுமக்கள் காணும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.   காலை 10.45 மணி முதல் மாலை 4.51 மணி வரை அதனை பொது மக்கள் கண்டுகளித்தனர்.  இவ்வரிய காட்சியை   சுமார் 11,000 பேர் கண்டு களித்தனர்.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It

கருந்துளை(Black hole) என்றால் என்ன?

கருந்துளை என்பது விண்வெளியிலுள்ள வலிமைமிக்கதும் அதிக ஈர்ப்புவிசை கொண்டதுமான ஒரு பொருளாகும். நாமறிந்த பொருட்களிலேயே மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது ஒளியாகும் (300000 கி.மீ/நொடி). கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து ஒளிகூடத் தப்ப முடியாது. ஒளியே கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பமுடியாதென்றால் நாமறிந்த வேறு எந்தப்பொருளும் தப்பமுடியாது.

கருந்துளை என்றவுடன் அது ஏதோ ஒரு துளை என்று நினைத்து விடாதீர்கள்.  அது துளையோ வெற்றிடமோ இல்லை. கருந்துளை என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பலபொருட்களின் தொகுப்பாகும். மிகக்குறைந்த இடத்தில் நிறைய பொருட்கள் அதிக அழுத்தத்தில் அடக்கிவைக்கப்படும்போது அவற்றின் ஈர்ப்புவிசை அதிகமாகும். எனவே கருந்துளை தம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் அதிகவிசையுடன் ஈர்க்கும். அதை ஏன் கருந்துளை என்கிறோம் என்கிறீர்களா? கருந்துளைகள் விண்வெளியில் எவ்வித ஒளியையும் வெளிவிடாததாலும் கருநிறத்திலுள்ள ஒருதுளையைப் போன்று தோன்றுவதினாலும் கருந்துளைகள் என அழைக்கப்படுகின்றன.

கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன?

பெரிய விண்மீனின் எரிபொருள் தீர்ந்துவிட்டால்  அவ்விண்மீனால் அதன் எடையைத் தாங்க முடியாது. விண்மீனிலுள்ள ஐட்ரசன்(Hydrogen) அடுக்குகள் விண்மீனின் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இவ்வழுத்தத்தினால் விண்மீன் சுருங்கி அளவில் சிறியதாகும். இறுதியில் விண்மீன் அணுவைவிட(Atom) மிகச் சிறியதாகும். ஒரு பெரிய விண்மீன் சுருங்கி அணுவைவிடச் சிறியதாகும்போது அதன் அடர்த்தியும் ஈர்ப்புவிசையும் மிகமிக அதிகமாகிக் கருந்துளை உருவாகின்றது. இந்த மீப்பெரு ஈர்ப்புவிசையால் அது தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் தன்னுள் ஈர்க்கிறது.

விண்மீன் மிகச்சிறியதாவதால் அதன் எடை குறையுமா?

இல்லை. ஒருவிண்மீன் சுருங்கி கருந்துளையானால் அதன் நிறை குறையாது. சிறிதளவு பஞ்சைக் கையில் எடுத்துக்கொண்டு அதை நன்றாகச்சுருட்டிச் சிறியதாக்கினாலும் அதன் எடை குறையாது அல்லவா? அதைப்போன்றுதான் விண்மீன் சிறியதானாலும் அதன் எடைகுறையாது.

கருந்துளைகள் எவ்வளவு பெரியதாக இருக்கும்?

கருந்துளைகளின் அளவு அவற்றில் எந்த அளவுக்குப் பொருட்கள் உள்ளனவோ அதைப்பொறுத்து வேறுபடும். மிகப்பெரிய வீண்மீன்கள் அழிந்து அவற்றின் எச்சங்கள் கருந்துளைகளாகியுள்ளன. நமது சூரியனைவிடச் சிலமடங்கு பெரிய கருந்துளைகள் உள்ளன. இவை மற்ற கருந்துளைகளோடு ஒப்பிடும்போது அளவில் மிகச்சிறியதாகும்.  சில விண்மீன்மண்டில‌ங்களின்(Galaxy) மையத்தில் சில கருந்துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சூரியனுள்ள பொருட்களைக்காட்டிலும் 100 மில்லியன் மடங்குப் பொருட்களையோ அதைவிட அதிகமான பொருட்களையோ கொண்டிருக்கும்.

கருந்துளைகளைப் பார்க்க முடியுமா?

கருந்துளைகளை நம்மால் பார்க்கமுடியாது. ஆனால் விண்வெளியாளர்கள் கருந்துளைகள் உள்ள இடத்தினைக் கண்டறியமுடியும். கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அதிவேகத்தில் இழுப்பதினால் அப்பொருட்கள் அதிகவெப்பமடைந்து X-கதிர்களை வெளியிடும்.  இந்த X-கதிர்களைப் புவியிலிருந்து கண்டறியலாம்.

நம்முடைய பால்வீதியின்(Milky Way) மையத்தில் கருந்துளைகள் உள்ளனவா?

ஆம். நமது பால்வீதியின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. அது சூரியனைவிட 3 மில்லியன் மடங்கு எடைகொண்டது.  புவியிலிருந்து 24000 ஒளிஆண்டுகள்(Light Years) தொலைவில்உள்ளது. இக்கருந்துளை புவியிலிருந்து  மிகத்தொலைவிலுள்ளதால் அதனால் நமக்கு பாதிப்பு ஏதுமில்லை.

நமது சூரியன் கருந்துளையாக வாய்ப்பு உள்ளதா?

இல்லை.நமது சூரியன் அளவில் மிகச்சிறியது. சூரியன் கருந்துளையாக மாறவேண்டுமானால் அது இப்போது இருப்பதைவிட பலமடங்கு அதிக எடைகொண்டதாகவும் பெரியதாகவும் இருக்கவேண்டும்.

ஆங்கில மூலம்http://coolcosmos.ipac.caltech.edu/cosmic_kids/AskKids/blackholes.shtml , http://www.kidsastronomy.com/black_hole.htm

- வி.நரேந்திரன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It