பூமியில் இருந்து 60 மில்லியன் மைல் தொலைவில் உள்ள 4.6 பில்லியன் ஆண்டு பழமையான பெனு (Bennu) என்ற விண்கல்லிற்கு நாசா அனுப்பிய ஓசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-rex) விண்கலன் சேகரித்த மாதிரிகள், கடந்த செப்டம்பர் 24 2023 அன்று பூமிக்கு வந்தது. அமெரிக்கா யூட்டா (Uta) பாலைவனப்பகுதியில் விஞ்ஞானிகளால் சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகள் இப்போது ஆராயப்படுகிறது.

இந்த சேகரத்தில் பழமையான கல் துகள்கள், மண் துகள்கள், மற்றும் கறுப்பு நிற தூசுகள் உள்ளன. இப்பொருட்களில் கார்பன் மற்றும் நீர் அதிக அளவு இருப்பது ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இப்பொருட்கள் அடங்கிய பெட்டகம் பூமியில் வந்து தரையிறங்கியது முதல் இதை விஞ்ஞானிகல் ஆராயத் தொடங்கினர். இப்பெட்டகம் ஒரு அறிவியல் பொக்கிஷம் என்று ஹூஸ்ட்டன் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்த கூட்டத்தில் இது பற்றிப் பேசிய இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், அரிசோனா பல்கலைக்கழகத்தின் டக்ஸன் (Tucson) பிரிவு விஞ்ஞானியுமான டாண்ட்டே லொரேடா (Dante Lauretta) கூறுகிறார்.

வரலாற்றுச் சாதனையாக மிக அதிக அளவில் கொண்டு வரப்பட்ட இந்த கார்பன் செழுமையுடைய மாதிரிகள், பூமியில் உயிரின் தோற்றம் பற்றி வரும் தலைமுறைகள் அறிய உதவும் என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் (Bill Nelson) கூறுகிறார். பெனுவில் இருந்து மூன்றாண்டு காலம் பயணம் செய்து ஒரு விண்கலன் பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது என்பதே பெரிய வெற்றி.

விண்வெளியில் இருந்து வந்த போனஸ்

தொடக்கத்தில் பெனுவில் இருந்து 2oz அல்லது 60 கிராம் அளவுள்ள பொருளை எடுத்து வர மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு oz என்பது 28.349 கிராம் நிறையுள்ள பொருளின் அளவு. இப்பொருட்களை ஆராய மையத்தில் புதிய தூய்மையான அறைகள் கட்டப்பட்டுள்ளன. பெட்டகத்தின் மூடி திறக்கப்பட்டபோது, சேகரிக்கும் கலனின் தலைப்பகுதியின் வெளிப்புறம், அதன் அடிப்பகுதி மற்றும் மூடியில் கூடுதல் விண்கல் பொருட்கள் போனஸாக கிடைத்துள்ளதை ஆய்வாளர்கள் அறிந்தனர்.

bennu sample

(ஓசைரிஸ்-ரெக்ஸ் சேகரித்து அனுப்பிய விண்கல் பொருட்கள்)

எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் கிடைத்ததால் முதன்மை சேகரத்தில் இருந்தவற்றைப் பகுத்து வகைப்படுத்த, பிரித்து வைக்க தாமதம் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த செயல்முறை மெதுவாகவும், கூடுதல் கண்காணிப்புடனும் நடக்கிறது. இதுவரை மேலோட்டமான பகுப்பாய்வு மட்டுமே நடந்துள்ளது.

பொருட்கள் அனைத்தும் ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் படமெடுத்தல், அகச்சிவப்புக்கதிர் அளவீடுகள், x கதிர் சிதறல் மற்றும் வேதிப்பொருள் பகுப்பாய்வு போன்ற முறைகளைப் பயன்படுத்தி ஆராயப்பட்டது. மாதிரிகளில் ஒன்றின் முப்பரிமாண கணினி மாதிரியைப் பெற x கதிர் கணினி டோமோகிராபி கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த மாதிரியின் உதவியுடன் அப்பொருளின் பன்முகத் தன்மை வாய்ந்த உட்கட்டமைப்பை அறிய முடியும்.

இதன் மூலம் இப்பொருட்களில் ஏராளமான கார்பனும், நீரும் இருப்பது முதல்நோக்கில் தெரிய வந்துள்ளது. “ஆய்வுகளின் ஆரம்ப கட்டமே இது. உண்மை ஆய்வுகள் இனியே தொடங்கவுள்ளது. நாம் யார், எங்கிருந்து வந்தோம் போன்ற கேள்விகளுக்கு பதில் பெறுவதையே இந்த ஆய்வுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஓசைரிஸ்-ரெக்ஸ் போன்ற விண்கலன்கள், பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கற்கள் பற்றிய நம் அறிவை மேம்படுத்த உதவும். அதே நேரம் உயிரின் தோற்றம், வாழ்வின் தொடக்கம் பற்றிய தேடல்களுக்கு பதில் கிடைக்கும்” என்று பில் கூறுகிறார்.

சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது, உயிர் தோன்ற காரணமான பொருள் எவ்வாறு பூமிக்கு வந்தது, பூமியின் மீது விண்கற்கள் மோதாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்றவற்றிற்கு விடை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அண்டவெளியில் நமது பாரம்பரியம்

“பெனுவை ஆராய்வதன் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு சிறு தகவலும் நம் அண்டவெளிப் பாரம்பரியத்தின் (Cosmic heritage) இரகசியங்களை அறிய உதவும் சிறு சிறு முன்னேற்றங்களே” என்று லொரெடா கூறுகிறார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் விஞ்ஞானிகள் இந்த பொருட்களின் பண்புகளை ஆராய்வர். சேகரத்தின் 70% ஜான்ஸன் மையத்தில் அமெரிக்க மற்றும் பல உலக நாடுகளின் விஞ்ஞானிகள் ஆராய்வதற்காக பாதுகாத்து வைக்கப்படும். கூடுதல் மாதிரிகள் ஸ்மித்சோனியன் மையம், ஹூஸ்ட்டன் விண்வெளி மையம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்கள் பார்வைக்காக கடனாகக் கொடுக்கப்படும்.

தொடரும் விண்கலனின் பயனம்

பெனுவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்த ஓசைரிஸ்-ரெக்ஸ் ஆய்வுக்கலன் அமெரிக்கா மேரிலாந்ந்து க்ரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கார்டெடு விண்வெளி ஆய்வு மையத்தால் (Goddard Space Flight Center) நிர்வகிக்கப்பட்டு, 2029ல் பூமிக்கு அருகில் வரும் அப்பாபிஸ் (Apophis) என்ற விண்கல்லை நோக்கி தன் அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளது. 2068ல் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்பு கருதப்பட்ட இது, 2021ல் ஐரோப்பிய விண்வெளி முகமையால் ஆபத்தான விண்கற்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

உயிரின் தோற்றம், சூரியக்குடும்பம் மற்றும் அதில் பூமி தோன்றிய கதையை பெனுவின் மாதிரிகள் விரைவில் எடுத்துச் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/science/2023/oct/11/nasa-asteroid-samples-osiris-rex?

&

https://www.mathrubhumi.com/science/news/nasa-s-bennu-asteroid-sample-contains-carbon-water-1.8980369

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It