அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

saptharishi_560

 

தற்போது திருமணங்களை பிரமாண்டமானதாக நடத்துவது தான் கௌரவமானது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பார்ப்பனர்களை அழைத்து திருமணச்சடங்குகளை செய்யாத சமுகங்கள் கூட யாககுண்டம் வளர்த்து, வேதங்கள் முழங்க திருமணம் செய்வதை பெருமையாக கருதுகிறார்கள்.பார்ப்பன‌ சடங்குகளின் படி நடைபெறும்  திருமணங்களில் முக்கியச் சடங்கு "அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது". இதில் அருந்ததி யார்? நாம் ஏன் அருந்ததியை பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தேடலாம்....

ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச்சிறந்த "பிரம்மரிசிகள்"(முனிவர்கள்) ஏழுபேரும் (சப்த-_ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக இருப்பவர் (நட்சத்திரம்) வசிஷ்டர். இவரின் மனைவிதான் அருந்ததி. வசிஷ்டர் அருந்ததிக்குமான தனிச்சிறப்பு உண்டு. என்னவென்றால் மற்ற ரிஷிகள் சபலத்தால் ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற  வானதேவதைகளிடம் நிலை தடுமாறியவர்கள். இவர்களின் மனைவிமார்களும் தேவேந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். இதில் வசிஷ்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது  வாழவேண்டும் என்பது ஒரு புராணக்கதை, இனி உண்மை ....

இரவு நேரத்தில் வடக்கு வானில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று சப்தரிசி மண்டலம்". இந்த நட்சத்திரத் தொகுதிக்கு (தொகுதி என்பது நம் கண்களுக்கு தொகுப்பாக தெரிகிறது என்பதால் மட்டுமே. உண்மையில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் உள்ளவை) ஒவ்வொரு நாட்டிலும் வேறுவேறு பெயர்கள் உண்டு. உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறான வடிவங்களில் தெரிவதால் பெரும்கரண்டி, கலப்பை என மேலைநாடுகளில் அழைப்பர். இந்தியாவில் பொதுவாக இதனை சப்தரிசி (ஏழு முனிவர்கள்)என அழைக்கின்றனர். இதில் உள்ள ஏழு நட்சத்திரங்களுக்கும் இந்தியாவில் ஏழு முனிவர்களின் பெயர்கள் உண்டு. அவை கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்ரி, அங்கிரஸ், வசிஷிட, மரீசி என்பனவாகும்.

இந்த ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக உள்ள வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகில் சற்று கூர்ந்து கவனித்தால் மங்கலான வெளிச்சத்தில் தெரிவதுதான் அருந்ததி நட்சத்திரம். இவை இரண்டுக்குமான விஞ்ஞானப் பெயரும் உண்டு. வசிஷ்ட நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிஷ்டரும், அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம்தான் வானவியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்ட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார்_ எ,மிஸார்_பி என்ற இருநட்சத்திரங்களும் ஒற்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன.

சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஒரே தன்மை உள்ளவை அல்ல. துபே, அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ்,வரிசையில் ஒன்றைவிட ஒன்று மங்கலானது. துபே சற்று ஆரஞ்சு நிறம் கொண்ட 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 டிகிரிக்கும் மேலான வெப்பம் உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெவ்வேறான திசைகளில் அதிவேகமாக பயணம் செய்கின்றன. அதனால் சப்தரிசி மண்டலம் தற்போதுள்ள தோற்றத்தில் ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முன்னிருந்ததில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் தற்போதைய தோற்றத்தில் இருக்கபோவதில்லை.(படம் 1ல் சப்தரிசிமண்டலத்தின் முன்று நிலைகளும் காட்டப்பட்டுள்ளது. முதல் நிலை 1லட்சம் ஆண்களுக்கு முந்தையது,  நடுவில் இருப்பது தற்போதைய நிலை, அடுத்ததாக இருப்பது 1லட்சம் ஆண்டுகளுக்கு பின் ஏற்படப் போகும் நிலை)

சப்தரிசி மண்டலத்தின் முதல் ,இரண்டாவது நட்சத்திரமான துபே, மெராக்கும் காட்டிகள்" என அழைக்கப்படுகின்றன. ஏன் என்றால் இந்த இரு நட்சத்திரங்களிலிருந்து அமையும் கற்பனைக்கோடு  தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டும். (இதற்கான விளக்கப் படம் 2)பூமியின் தற்சுழற்சி அச்சு தற்போது இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம்மாறினாலும் துருவநட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும்.

அருந்ததி - ஒரு குறியீடு. முற்காலங்களில் அரசர்களுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் (தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள்) இருந்தாக புராணங்கள் கதை கூறுகின்றன‌. இது தவிர போரின் வெற்றியாக பிறன்மனைவி கவர்தல்(எதிரியின் மனைவியை கவர்ந்து வருதல்) என்பதை சங்ககாலப் பாடல்களில் கூறப்படும் செய்தி. அருந்ததியைப் பார்க்கும் பழக்கம் எப்பொழுது ஏற்பட்டது என்பது தனியான ஆய்வுக்குரியது. ராமாயணத்தில் ராமனும், சீதையும் லட்சிய தம்பதிகளாக சொல்லப்படும் கதையும், சிலப்பதிகாரத்தில் முறைதவறிய கணவனை திருத்தி கணவனுக்காக மதுரையை எரித்த கண்ணகி, கோவலன் கதைகளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதியை நிலைநாட்டுவதற்காக வரலாறு நெடுக தனிச்சொத்துடமை கருத்தாக்கத்தை உருவாக்க சொல்லப்பட்டு வரும் கதைகளாகும்.

திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட  தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

saptharishi_561

Pin It

 

மின்சாரம் தடைப்படுகிற இரவு நேரம்; மொட்டை மாடியில் நின்று கவனித்தால் நமக்குமுன் எல்லையற்ற விரிந்து பரந்துள்ள பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்கள் அற்புதமானது. சப்தரிசி மண்டலம், ஓரியன் மண்டலம், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், வெண்பனி போன்ற "ஆகாயகங்கை" என்று அழைக்கப்படுகிற மில்கிவே என கண்கொள்ளா காட்சி. நமக்கு முன் உள்ள இந்த வெளியில் உயிர்களைத் தேடுவோம்.

நீண்ட நெடுங்காலமாகவே வானவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு `பிரபஞ்சத் தனிமையில்' இந்த உலகம் இருக்கிறதா என்ற கேள்வி ஏற்பட்டது. இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆராயவும், தெரிந்து கொள்ளவும்  நாம் மட்டுமே முயற்சி செய்கிறோமா, நமக்கு துணையாக வேறு கிரகவாசிகள் இல்லையா என்ற ஆதங்கம் இருக்கிறது.

பிரபஞ்சத் தனிமை ஒரு பக்கம் இருந்தாலும், உயிர் தேடலில் மற்றொரு விசயமும் அடங்கியுள்ளது. கொஞ்சம்,கொஞ்சமாக பூமிக்கு வயது ஆகிக்கொண்டே போகிறது. அதோடு நாமும் பூமியை ஒரு கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றிவிட்டோம். இதனால் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மனித இனம் தளைக்க வேறு ஒரு இடம்(கிரகம்) வேண்டுமே.

இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய  விஞ்ஞானிகள் செயற்கைகோள்களையும், `கலீலியோ' போன்ற வானில் மிதந்த கொண்டே ஆராய்கிற டெலஸ்கோப்புகள், பூமியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான டெலஸ்கோப்புகளை கொண்டு இந்த பிரபஞ்சத்தை துருவித்துருவி ஆராந்து கொண்டிருக்கிறார்கள்.

உயிர்களைத் தேடுவதற்கு முன்னால் உயிர் என்பது என்ன என தெரிந்துகொள்வோம். 'புரதப்பொருட்களின் புதிர் வடிவமே உயிர்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவை போக இன்னும் சில நிபந்தனைகளும் உண்டு.

 1. டி.என்.ஏ (டி ஆக்ஸிரிபே நியூக்ளீக் அமிலம்), ஆர்.என்.ஏ (ரீபோ நியூக்ளீக் அமிலம் கொண்டதாக இருக்க வேண்டும்

2. இனப்பெருக்கம், உறுப்பசைவு, நகர்தல் இருக்கவேண்டும்.

3.ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுதல் அடையவேண்டும்(பரிணாமம்)

4.வளர்ச்சிதைமாற்றம்.

5.வேதிமாற்றம் போன்ற செயல்பாடுகள் இருக்கவேண்டும்.

உயிர் என்றால் என்ன எனப் பார்த்தாயிற்று.

 உயிர் உருவாக என்ன மாதிரியான சூழ்நிலைகள் வேண்டும். ஒரு கிரகத்தின் சூழ்நிலையை மாற்ற இயலாதவை, மாற்றக்கூடியவை   என இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு கிரகம் சூரியனில் இருந்து உள்ள தொலைவு, சுழற்சி வேகம்,நாள் சலனம், ஆண்டு சலனம், சுழற்ச்சி ஆச்சின் சரிவு, நிறை, ஆரம், சுற்றும் பாதை இவை மாற்ற இயலாதவை. மாற்றகூடிய சூழ்நிலைகள் என சில உண்டு. மனிதனின் விஞ்ஞான முயற்சியால் ஒரு கிரகத்தின் வளிமண்டலம், வளிமகலவை, அழுத்தம், தட்பவெப்பம், ஈரப்பதம் இவற்றை மாற்றலாம்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நமது சூரியமண்டலத்தில் உயிர் வாழத் தகுதியான, அல்லது ஏதேனும் புதிய உயிர்கள் வாழ்கின்றதா எனத் தேடுவோம்.

வேற்று கிரகங்களில் உயிர்தேடல் என பேச ஆரம்பித்தாலே நமக்கு முதலில் தோன்றுவது செவ்வாய் கிரகமாகத்தான் இருக்கும். நமது சூரியமண்டலத்தில் பூமியை அடுத்த நான்காவது கிரகமாகும். கிட்டதட்ட பூமியின் பரப்பளவு கொண்டது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 1/2 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்ற இரண்டு வருடங்கள் (பூமி வருடங்களில்). தைமாஸ், போபாஸ் என இரண்டு சந்திரன்கள். தைமாஸ் 16 கிமீ சுற்றளவு, போபாஸ் 28 கிமீ. சுற்றளவு கொண்டது. தைமாஸ் செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகவும், போபாஸ் மேற்கிலிருந்து கிழக்காகவும் சுற்றுகின்றன. செவ்வாயின் மேற்பரப்பு இயக்கமற்று காணப்பட்டாலும் எரிமலை வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்கின்றன. செவ்வாயின் அதிகாலைப் பொழுது பூமியின் காலை பொழுதைப்போலவே மெல்லிய பனிப்படலத்துடனேயே துவங்கிறது. மிக மெல்லிய காற்றுமண்டலம் அதில் குறைந்த அளவில் ஆக்ஸிஸன், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் உள்ளது. ஒரு காலத்தில் ஆறுகள் ஒடி வற்றிப்போன கிரகமாக செவ்வாய்  காட்சியளிக்கிறது. பாத்பைன்டர் ஆய்வுகள் செவ்வாயின் மையப்பகுதியல் செய்யப்பட்டது. துருவப்பகுதியில் நீர் பனிகட்டியாக இருக்கிறது. பாக்டிரீயாக்கள் போன்ற சிறு உயிரினங்கள் இருக்கலாம். தற்பொழுது உயிர் இருக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வாழ ஏற்ற கிரகம்.

செவ்வாய்க்கு அடுத்தாக சனிகிரகத்தின் சந்திரனான டைட்டன். கி.பி.1655ல் கிருஸ்டியன் ஹூயுஜென்னால் கண்டுபிடிக்கபட்ட்து. 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்ததோ அதே போன்ற தன்மையில் இருக்கிறது. சனிகிரகத்திலிருந்து 12,22,000 கி.மீ. துரத்தில் உள்ளது. 180 டிகிரியில் தண்ணீர் உறைந்திருக்கிறது. அந்த கிரகம் முழுவதும் மீத்தேனும், ஈத்தேனும் நிறைந்தருக்கிறது. இக்கிரகம் உயிர்வாழ தகுதியானதாக மாற 400 கோடி ஆண்டுகளாகலாம். காத்திருப்போம்!!

சூரிய மண்டலத்தில் மற்றொரு நம்பிக்கை தரும் கிரகமாக வியாழன் கிரகத்தின் யூரோப்பா. வியாழன் கிரகம் மற்றொரு சூரியமண்டலத்தை போலவே 20க்கும் மேற்பட்ட சந்திரன்களுடன் திகழ்கிறது. வியாழனின் காந்தப்புலனும், ஈர்ப்புவிசையும் சூரியனின் ஆற்றலில் பாதியைப் பெற்றுள்ளது. யுரோப்பாவின் மேற்பரப்பில் 10 கி.மீ. அழத்தில் தண்ணீர் உள்ளது என்றும், அதன் வளிமண்டல அழுத்தம், வாயுகள், தட்பவெப்பநிலை, சுழற்சிவேகம் போன்றவை டைட்டனைப் போலவே எதிர்கால நம்பிக்கையளிக்கக் கூடியது.

எதிர்காலத் தேவை விண்வெளி ஆய்வின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் சூரியமண்டலத்தில் உயிர் தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சூரியமண்டலத்திற்கு வெளியேயான உயிர்த் தேடல் விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது. இதன் வெளிப்பாடாகவே பறக்கும் தட்டு கதைகள். பறக்கும் தட்டுகள் உண்மையில்லை என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உறுதிசெய்துள்ளது. ஆனால் கென்னத் ஆர்னால்டு என்பவர் "மூன்றடி வெள்ளி மனிதர்கள்" என்ற நூலை வெளியிட்டு பலகோடி டாலர்கள் சம்பதித்தார். ஹர்பெர்ட்ஜார்ஜ் எழுதிய "உலகங்களுக்கிடையே போர்" போன்ற நாவல்களும், மென்இன்பிளாக், மார்ஸ்ஆட்டாக், அவதார் போன்ற திரைப்படங்களும் வந்துள்ளன.

நாம் வாழும் பிரபஞ்சம் மிகப் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒருபகுதியே. இதில் உயிர்களைத் தேடுவது அசாத்தியமான பணியாகும். பல சமன்பாடுகள், டெலஸ்கோப்புகள், ஒளியுணர்கருவிகள், டிஸ்ஆண்டனாக்கள், செயற்கைகோள்கள் மூலமாக விண்வெளியில் பிற கிரகவாசிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகவாசிகள் நிச்சயமாய் இருப்பார்கள் என்கிறார் பிராங்டிரேக் என்ற விஞ்ஞானி. அவரின் கணிப்புப்படி நம் சூரியன் அங்கம் வகிக்கும் ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் 60 கோடி கிரகங்களில் உயிர் வசிக்கலாம். அதிலும் சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம் என்கிறார். இந்த முடிவை ஒருசமன்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

N=n.p1,p2,p3,p4ti/t

N-வெளியுலக சமுக எண்ணிக்கை, n- பால்வெளிமண்டல நட்ச்சத்திரங்களின் எண்ணிக்கை, p1-நட்சத்திரங்களை சுற்றி கிரகங்கள் இருப்பதற்கான நிகழ்தகவு, p2-கிரகத்தில் உயிர் தோன்றுவதற்கான் நிகழ்தகவு, p3-நூண்ணிய பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்தகவு, p4-நூண்தொழில் சகாப்த நிகழ்தகவு, t1- தொழில் கலை சகாப்த நிகழ்தகவு, T- பால்வெளிமண்டலத்தின் வயதுடன் ஒப்பிடக்கூடிய கால அளவு.

இந்த சமன்பாட்டை வைத்து கொண்டு ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் தேட ஆரம்பித்தால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.

இதுபோன்ற விண்வெளி மனிதர்களைத் தேடுவதற்கு 'சேதி'(SETI) என்று பெயர்.(SETI- search for terrestial intelligen). 1974 நவம்பர் 16ல்  நமது சூரியனுக்கு ஓர் ஓளியாண்டு தூரத்தில் உள்ள சீரிஸ் நட்சத்திரத்திற்கு மின் அலைகள் மூலம் விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி அனுப்பப்பட்டது. இதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் அனுப்புகிற செய்தி சரியான நட்சத்திரத்திற்கு போய்ச் சேருமா? சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஓர் ஒளியாண்டு தூரத்தில் (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்) இருப்பதாக வைத்துக் கொண்டால் நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஓர் ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும்.வேறு என்ன தான் வழி?. விண்வெளி மனிதர்கள் செய்தி அனுப்பினால் பெறுவதற்காக 1985 முதல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மாபெரும் அலைதிரட்டி செயல்பட்டு வருகிறது. இதைப்போன்று ஒளி சமிக்ஞை மூலம் செய்தி அனுப்பினால் ஒரு நொடியில் நூற்றில் ஒருபங்கு  நேரத்தில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்ய ஒளிவாங்கி அமைத்து கண்காணிக்கிறார்கள். ஆனால் இதுவரை நாம் சந்தோசப்படும்படியாக எந்த செய்தியும் வரவில்லை.

மற்ற நட்சத்திரங்ளை சுற்றி வருகிற கிரகங்களைக் கண்டுபிடித்திருந்தாலும் கூட ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி நிலைத்து பரிணாம வளர்ச்சியடைவது சாதாரண விசயம் அல்ல. பூமி தோன்றி 400 கோடி ஆண்டுகளில் 150 கோடி ஆண்டுகளாகத்தான் உயிர்த் தோற்றமும், அதிலும் சில லட்சம் ஆண்டுகளாகத்தான் மனிதப் பரிணாமமும் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் நமது ஆகாய கங்கையில் மட்டுமே 1 அல்லது 2 கிரகங்களில் அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிறகு ஏன் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள்? சில விஞ்ஞானிகள் சொல்வதைப்போல நம் பூமியில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சிகளுக்கு இடையே ஏற்படும் மிகநுட்பமான தகவல் பரிமாற்றத்தைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது பிறகிரகவாசிகள் அனுப்பும் செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் என்கிறார்கள்.

யாதார்த்தமாகப் பார்த்தால் இது வரை பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்களோ, வேற்றுகிரகவாசிகளோ இல்லை. அரிதிலும் அரிதாக பூமியில் உயிர்கள் அதிலும் தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்கள். பிறகு ஏன் நம்மை நாம் அழித்துக்கொள்ள அணு ஆயுதங்கள் எதற்கு? மனிதன் மனிதன் சுரண்டுவது எதற்கு? நாடு, இனம், மதம் என்ற பாகுபாடு எதற்கு? பூமியைப் பாதுகாப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்.

Pin It

முதன் முறையாக ஒரு கருந்துளையின் இருப்பிடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கருந்துளை கற்பனைப் பொருளாகவும் கருத்தளவில் மட்டுமே நிரூபிக்கப்பட்டதாவும் இருந்தது. பூமிக்கு மிக அருகில் (பயப்பட வேண்டாம்) 7800 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சிக்னஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

black_holeபக்கத்திலிருக்கும் ஒரு அப்பாவி நட்சத்திரத்தின் புற அடுக்கு வாயுவை அந்த கருந்துளையானது உறிஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது. நேரடியாக அந்த நட்சத்திர வாயு அதனுள் நுழையாமல் சற்று சுற்றி வளைத்தபடி செல்வதால் அதிலிருந்து அபரிமிதமாக எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகிறது. இந்த எக்ஸ் கதிர் வெளிப்பாடுதான் கருந்துளையைக் காட்டிக் கொடுத்திருக்கிறது.

கருந்துளைகள் என்பவை தமது சொந்த நிறையீர்ப்பு அழுத்தத்தால் சுருங்கி நசுக்கப்பட்டு ஒற்றைப் புள்ளியாக மாறிவிட்ட நட்சத்திரம். சுருங்கிவிட்டபோதிலும், அளப்பரிய தனது நிறையீர்ப்பு விசையால் ஒளிகூட அதைவிட்டு வெளியேற முடிவதில்லை. அதனால் கருந்துளை நமது பார்வையில் படுவதில்லை. அதன் இருப்பை மறைமுகமான அனுமானத்தின் பேரில்தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருந்தது.

இப்போது நேரடியான சாட்சியம் கிடைத்ததால் கருந்துளையின் இருப்பு நிச்சயமாகி உள்ளது என சர்வதேச விண்வெளிக்குழு அறிவித்துள்ளது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

epson_340எப்சிலான் ஆரிகே என்பது வட வானில் மின்னும் பிரகாசமான நட்சத்திரம். இது 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெள்ள பார்த்துக் கொண்டிருக்கும் போதே பார்வையிலிருந்து மறைந்து போகும் அதிசய நட்சத்திரம். மறுபடியும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புலப்படும். சூரியக் கிரகண‌த்தைப் போல இது தோன்றினாலும் ஏன் 2 ஆண்டுகள் அது நீடிக்கிறது? ஏன் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறைந்துவிடுகிறது என்பதற்கான சரியான விளக்கம் கிடைக்காமல் சென்ற 100 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருந்தனர்.

சென்ற வருடம் ஆகஸ்ட் அன்று எப்சிலான் ஆரிகே மீண்டும் மறைய ஆரம்பித்ததும் நாசாவின் ஸ்பிட்செர் ஆகாயத் தொலைநோக்கி அதை தனது புற ஊதாக்கதிர் கேமரா மூலம் படம்பிடித்தது. எப்சிலான் நட்சத்திர கிரகண‌த்திற்கு விளக்கம் உருவாகியிருக்கிறது. அது: எப்சிலான் ஆரிகே ஒரு பிர‌ம்மாண்டமான நட்சத்திரம். அதைச் சுற்றியபடி இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன. அவை பிரும்மாண்டமான தூசிப்படலத்தில் மூழ்கியுள்ளதால் ஒவ்வொரு முறையும் அந்தத் துணை நட்சத்திரங்கள் நமக்கும் எப்சிலானுக்கும் இடையில் வரும்போது குறிப்பிட்ட கிரகண‌ம் நிகழ்கிறது; எப்சிலான் மறைந்துவிடுகிறது.

படத்தில் புகை மண்டலம் நட்சத்திரத்தை மறைப்பது காட்டப்பட்டுள்ளது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It