கொட்டும் முழக்கும் அடங்கிப் போயின!
கூத்தும் ஆட்டமும் கலைந்து போயின!
தோரணங்கள் உதிர்ந்துவிட்டன!
அலங்காரங்கள் கசங்கிவிட்டன!
சரவிளக்குகள் ஒளிஇழந்தன!
இரவு விடிய,
விடியல் மெல்லக் கதவைத் திறக்கிறது!

கரைந்து கொண்டிருக்கின்றன கனவுகள்!
கண்விழிக்க முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறது நகரம்!
கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்!

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
பெற்ற பெருவளம் கணக்குப் பார்த்துப்
பேருந்துகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்!

வளமாக விருந்தளித்துக் கவனிக்கப்பட்ட
ஆய்வாளர்கள்
தம் துணிமணிகளை மடித்து வைத்து,
இலவசமாகக் கிடைத்த பைகளைக்
கவனமாக எடுத்துவைத்து
அறைகளைக் காலிசெய்து கொண்டிருக்கிறார்கள்!

கரை வேட்டிகளோடு
இலவசப் பேருந்துகள் ஏறிக்
கூட்டம் கூட்டமாக வருகைதந்த உடன்பிறப்புகள்!
காலை எழுந்து முகம் கழுவ
சோமபான, சுராபானக் கடைகளை நோக்கிச்
சாரைசாரையாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள்!

சரியான உணவின்றி,
பலநேரம் குடிக்க நீரின்றி,
நின்று நின்று கால்கடுத்து
வயிறும் உடலும் வாடி வருந்திச்
சோர்வுற்று, நோவுற்ற காவலர்கள்
கெட்ட கெட்ட சொற்களால்
'அருச்சித்துக்' கொண்டிருக்கிறார்கள்!

'அருச்சனை பாட்டே யாகும்!
ஆதலால் மண்மீது நம்மைச்
சொற்றமிழ் பாடுக' என்றார் தலைவர்!

தலைவரின் மனமறிந்து
தமக்கான வரவறிந்து
சொற்றமிழ் பாடிச் சொறிந்து முடித்த
செந்தமிழ்ப் பாவலர்கள்
பாட்டுக்கேற்ற பொற்கிழி
வந்துவிட்டதா என்று
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

 பாவம் கிழவி
எம் தமிழன்னை!
பல நூறாயிரவர்
தன் மூத்த பிள்ளைகள்
படுகளத்தில்
கொலைபட்டது கண்டு,
பதறித் துடித்துக்
கதறிக் கிடந்தவளை,
ஒன்றுக்கும் உதவாத சில
ஊதாரிப் பிள்ளைகள்,
காட்டிக் கொடுத்துக்
காசு பொறுக்கிகள்

தேடிப் பிடித்துத்
தேரில் ஏற்றின!
மகுடம் சூடின!
மாலைகள் இட்டன!

கொம்பும் முழவும்
பறையும் துடியும்
கொட்டி முழக்கின!
சங்குகள் ஊதின!
சூடம் கொழுத்தின!
தூபம் காட்டின!

வாழ்க வாழ்க எங்கள்தாய் என்று
வாழ்த்துகள் முழங்கின!
வீதிவீதியாய் இழத்துவந்து
மேடை ஏற்றி விழுந்து வணங்கின!

தாயை வணங்கும் தனையரைக் கண்டு
ஊர் வியந்தது! உலகு வியந்தது!

ஆட்டமும் பாட்டமும்
அணிமணி வகுப்பும்
ஊரை உலுக்கின!

புலவோர் புகழ்ந்தனர்
பாவலர் பாடினர்!
அறிஞர்கள் ஆய்ந்தனர்!

கதைகள் படித்தனர்!
கைகள் தட்டினர்!
மங்கலம் பாடி
மனநிறைவுற்றனர்!

பொழுது விடிய,
பறந்தனர் யாவரும்!

கிழவி மட்டும்
தனியே கிடந்தாள்!
பசி! தாகம்!
மாலைகளையும் மகுடத்தையும்
கழற்றி வீசிவிட்டு
நடக்க முயன்றாள்!
கால்களில்
நடுக்கம்!
திரும்பிப் பார்க்க எவருமே இல்லை!
தரையில் கிடந்த
காகிதக் குவளையை எடுத்து,
நாயர் கடைக்கு முன்னே
கொஞ்சம் தேத்தண்ணி கேட்டுக்
கெஞ்சிக் கொண்டிருந்தாள் கிழவி!

தொலைவில்,
ஊர் திரும்பும் ஊதாரிப் பிள்ளைகள்
ஓலி எழுப்பினார்கள்
    “எங்கள் தாய்
    வாழ்க! வாழ்க!”

Pin It