இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூரில் ஒரு மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டு இருபதாண்டு நிறைவடைய இன்னுஞ்சில மாதங்களே உள்ளன. இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் - ஒரு பெண் உட்பட - இந்தக் கிட்டத்தட்ட இருபதாண்டுக் காலமும் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்குத் தண்டனைச் சிறையாளிகளாகவும் நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் ஆயுள் (அல்லது வாழ்நாள்) சிறையாளிகளாகவும் இருந்து வருகிறார்கள்.

 இராசீவ் காந்தி கொலை வழக்கில் காவல் துறைப் புலனாய்வும் நீதிமன்ற உசாவலும் தடாச் சட்டத்தின் படி நடைபெற்றன. தடா என்பது பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் சுருக்கப் பெயராகும். புலனாய்வு செய்தது மையப் புலனாய்வுக் கழகத்தின் சிறப்புப் புலனாய்வு அணி. வழக்கு உசாவலை நடத்தியது சிறப்பு நீதிமன்றம். அந்நீதிமன்றம் 26 தமிழர்களுக்கு (தமிழகத் தமிழர்கள் - 13, ஈழத் தமிழர்கள் - 13) தூக்குத் தண்டனை விதித்த போது அதிர்ச்சியுற்ற தமிழ் உணர்வாளர்களும் மனித உரிமைப் பற்றாளர்களும் '26 தமிழர் உயிர் காப்பு நிதிக் குழு' அமைத்து மக்களிடம் நிதி திரட்டி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நடராசனை அமர்த்தி மேல்முறையீட்டில் வழக்காடச் செய்தனர். இதன் பயனாக 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய எழுவரில் நால்வருக்குத் தூக்கும் மூவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. நளினிக்கு மட்டும் தமிழக ஆளுநர் தூக்குத் தண்டனையை வாழ்நாள் சிறைத் தண்டனையாகக் குறைத்து ஆணையிட்டார்.

 இன்றளவும் இந்த 7 தமிழர்களையும் ஆங்கில ஊடகங்களும் சுப்ரமணிய சாமி போன்ற கேடர்களும் இராசீவ் கொலையாளிகள், பயங்கரவாதிகள் என்றே பட்டஞ்சூட்டிக் குறிப்பிடுவது வழக்கமாய் உள்ளது. இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இவர்கள் படிக்கவில்லை, படித்தாலும் மதிக்கவில்லை என்பதே இதிலிருந்து தெரியவரும் உண்மை. இராசீவ் கொலை என்பது ஒரு கொடிய குற்றம்தான், ஆனால் அதனை ஒரு பயங்கரவாதச் செயல் என்று சொல்ல முடியாது - இதுதான் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான கணிப்பு. இவ்வழக்கின் எதிரிகள் தடாச் சட்டப்படி குற்றவாளிகள் அல்ல என்பதே நீதிமன்ற ஆயத்தில் அமர்ந்த மூன்று அறிவார்ந்த நீதிபதிகளின் ஒரு மனதான தீர்ப்பு. நீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்தது, 7 பேர் மீதான குற்றத்தீர்ப்பை உறுதி செய்தது என்பதை விடவும் முக்கியமான செய்தி: 26 எதிரிகளையும் பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து, தடாச் சட்ட வரையறைகளின் படி அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்தியிருப்பதுதான்.

 தடாச் சட்டத்தின்படி குற்றமற்றவர்களான இந்த எழுவரையும் இயல்பான தண்டனைச் சட்டங்களின் படி குற்றவாளிகளாகக் கண்டு அவர்கள் மீதான குற்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் இந்தக் குற்றத் தீர்ப்புக்கு அடிப்படையான சான்றுகளும், அனைத்திலும் மிக முக்கியமான ஒப்புதல் வாக்குமூலங்களும் தடாச் சட்டத்தின்படியான புலனாய்வின் வாயிலாகN;வ பெறப்பட்டவை என்பதை உச்ச நீதிமன்றம் கருதிப் பார்க்கவில்லை. இயல்பான சட்டங்களின்படி நீதித்துறைக்கு அப்பால் காவல் துறையிடம் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்கத்தக்க சான்றாக நீதிமன்றங்களால் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் தடாச் சட்டத்தில் காவல்துறையால் பெறப்பட்ட வாக்குமூலங்களே நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

17 எதிரிகளிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களே இராசீவ் கொலை வழக்கைத் தாங்கிப் பிடித்த தூண்கள் என்பதை மறந்து விடக் கூடாது. தடாக் குற்றச்சாட்டில் இருந்து அனைத்து எதிரிகளையும் உச்ச நீதிமன்றம் விடுவித்ததுமே இவ்வழக்கிற்குத் தடாச் சட்டம் பொருந்தாமல் போய் விடுகிறது. தடாச் சட்டத்தின்படி நடை பெற்ற புலனாய்வும் நீதி மன்ற உசாவலும் செல்லாதவை ஆகி விடுகின்றன. எனவே உச்ச நீதி மன்றம் என்ன செய்திருக்க..... வேண்டும்? இவ்வழக்கை இயல்பான குற்றவியல் சட்டங்களின்படி மறு புலனாய்வு செய்யும் படியும், வழக்கை இயல் பான நீதி மன்றத்தில் மீண்டும் நடத்தும்படியும் ஆணையிட் டிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அப்படிச் செய்யாமல் விட்டது பெருங்குறை. இந்தப் பெருங் குறைதான் தமிழர் எழுவரை இருப தாண்டுக்கு நெருக் கமாகச் சிறையில் பூட்டி வைத்துள்ளது.

 ஒவ்வொரு வழக்கிலும் மேல்முறையீடு என்பது குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமை யாகும். தடாச் சட்டம் பிற உரிமைகளைப் போலவே மேல் முறையீட்டு உரிமையையும் சுருக்கி விட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது, நேராக உச்ச நீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும். இராசீவ் கொலை வழக்கிலும் இதுதான் நடந்தது. தடாக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்த பின் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காவது வழிவிட்டிருக்க வேண்டும். நீதிபதிகள் இதையும் செய்யவில்லை.

 ஏன்? கொல்லப்பட்டவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதுதான் காரணமா? இராசீவ் கொலை வழக்கில் அரசு தரப்பு சான்றாவணங்களின் படியே கூட இந்த 26 எதிரிகளில் யாரும் நேரடியாகக் குற்றம் புரிந்தவர் அல்லர். நேரடியாகக் குற்றம் புரிந்ததாகக் காட்டப்பட்டவர்கள் பிடிபடவில்லை அல்லது கொல்லப் பட்டு விட்டார்கள். இந்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர் போராட்டத்தோடு தொடர்புடையவர்களான 26 பேர் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டார்கள். இவர்களில் 19 பேரை விடுவித்த பின் எஞ்சிய 7 பேரில் சிலருக்குத் தூக்கும் சிலருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்காமல் போனால் இந்தியத் தேசத்தின் மதிப்பு, மரியாதை, மாண்பு, யோக்கியதை என்னாகும் என்ற எண்ணம் நீதிபதிகளின் உள்ளத்தில் ஓங்கி நின்றதால்தான் இந்தத் தீர்ப்பா?

 போகட்டும். இந்தக் கேள்விகளுடனேயே இருபதாண்டு காலம் ஓடிக் கரைந்து விட்டது. இப்போதாவது இந்தக் கொடுமைக்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? துக்குக் கயிற்றின் நிழலிலேயே 3 தமிழ் உயிர்கள் தவித்துக் கொண்டிருப்பதற்கு என்னதான் முடிவு?

 வாழ்நாள் சிறைத் தண்டனைக்கு வரம்பு விதிக்க வேண்டும் என்ற கருத்தை மனிதநேயமுள்ள பல நீதிபதிகள், சமூகச் சிந்தனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீதிபதி முல்லா குழு எவரையும் எட்டாண்டுக்கு மேல் சிறையில் வைத்திருக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது. மாருராம் வழக்கில் இதே கருத்தை உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. தமிழ்நாட்டிலும் 12, 10, 7 ஆண்டு கழித்தவர்கள் கூட அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சலுகையின்படி நளினி, பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் நால்வரும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்ற வாழ்நாள் சிறையாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை கூட இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படாதது ஏன்? அரசியலைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

 தம்பி பேரறிவாளன் தன் மீதான தூக்குத் தண்டனையை எதிர்த்து இந்தியக் குடியரசுத் தலைவருக்குத் திரும்பத் திரும்ப முறையீட்டு மடல் எழுதியுள்ளார். இது நூல் வடிவிலும் வந்துள்ளது. நீதிபதி கிருஷ்ணய்யர், எச். சுரேஷ் உள்ளிட்ட பல சான்றோர்கள் பேரறிவாளன் கோரிக்கையை ஆதரித்துள்ளனர். என்றாலும் அரசுகள் அழுத்தமாய் மௌனம் சாதிக்கின்றன.

 ஒரு பெண் என்ற முறையில் நளினியின் விடுதலைக்காகப் பல முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமான கலை, இலக்கியப் படைப்பாளிகள் கையொப்பமிட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு அரசின் வாதங்களை நீதிமன்றம் மறுதலித்துள்ளது என்றாலும் தமிழக அரசு அற்பத்தனமான காரணங்களைச் சொல்லி நளினி விடுதலையை மறுத்து வருகிறது. 20 ஆண்டு கழிந்த பிறகாவது இந்த 7 தமிழர்களையும் விடுதலை செய்வார்களா? அப்படி ஓர் எண்ணமே ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நாம் அரசுகளை அணுகினோம், நீதிமன்றங்களை அணுகினோம் - எதற்கும் பயனில்லை. இனி செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். மக்களிடம் இந்த வழக்கு பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்வோம். இவர்களை விடுதலை செய்வதற்கான குரலை ஓங்கி ஒலிக்கும் படி செய்வோம். தமிழக அளவில், இந்திய அளவில், ஏன் உலக அளவிலும் கூட தமிழர் எழுவர் விடுதலைக் குரலை வலிமை பெறச் செய்வோம். அரசுகளுக்குக் கடும் நெருக்குதலை உண்டாக்கு வோம். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகராதா?

தமிழர் எழுவர் விடுதலைக் குரலில் உங்கள் ஒவ்வொருவரின் குரலையும் இணைத்துக் கொள்ளுங்கள். 

 தமிழர் எழுவர் விடுதலைக் குரல்

 ஒருங்கிணைப்பாளர்: தியாகு

 தொடர்புக்கு: 044-23610603, 98651 07107 

Pin It