தமிழ்-தமிழன்-தமிழ்நாடு ஆகிய மூன்றுக்காகவும் முக்கால் நூற்றாண்டுகாலம் எழுதியும் பேசியும் செயல்பட்ட தமிழ்த் தேசியரே தந்தை பெரியார்.

அவர் நடத்திய இந்தி - சமஸ்கிருதப் போர் என்பது தமிழ் காக்கும் போரே!

இடஒதுக்கீடு - சமூகநீதி என்பது தமிழனை முன்னேற்றும் கொள்கைத் திட்டமே!

வடவர் மற்றும் பிற மொழியாளர் எதிர்ப்பும், தனி நாடு முழக்கமும் தமிழ்நாடு காக்கும் அரணே!

periyarஇந்தியை எதிர்த்தவர் உண்டு. ஆனால் அவர்கள் சமஸ்கிருதத்தை எதிர்த்திருக்க மாட்டார்கள். சமூகநீதியை ஆதரித்தவர்கள் உண்டு. ஆனால் ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டத்தை அவர்கள் கண்டித்திருக்க மாட்டார்கள். தமிழக எல்லை காத்த போர் வீரர்கள், மாகாணக் காவலர்கள் உண்டு. ஆனால் அவர்கள் வடவர் ஆதிக்கம், பனியா - மார்வாடி, இந்தியப் பேரரசவாதத்தை மறந்தும் விமர்சித்திருக்க மாட்டார்கள். இம்மூன்றையும் ஒன்றாய்ச் செய்த ஒரே தலைவர் தந்தை பெரியார்!

தமிழ்காக்கும் போராட்டத்தில் இந்தித் திணிப்புக் காலகட்டத்தில் மட்டும் வந்து போனவர்கள் உண்டு.தமிழக எல்லைக் காப்புப் போராளிகள் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு 'இந்திய தேசியம்' காக்கப் போய் விட்டார்கள். ஆனால் 1925 முதல் 1973 வரை தன் இலக்கு மாறாத, எந்தத் திசைக்கும் மாறாமல் தமிழ் - தமிழன் - தமிழ்நாடு என இருந்தவர் தந்தை பெரியார் மட்டுமே.

ஒரு தமிழ்த்தேசியர் எதைப் பேசவேண்டுமோ அவை அனைத்தையும் பேசிய 'ஒரே' தமிழ்த் தேசியர் தந்தை பெரியார் மட்டும் தான், ‘தமிழ்த்தேசியர்' என்று சொல்லிக் கொள்ளாமலேயே!

மனிதர்களில் இரத்தபேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதே அவரது ஒற்றை வரிக் கொள்கை. தமிழினத்துக்குள் இரத்த பேதம் செய்த ஆரியத்துக்கு எதிராக, தமிழின விரோதிகளுக்கு எதிராக அவர் தொடங்கிய தன்மான இயக்கமே சுயமரியாதை இயக்கம்.

இவ்வியக்கம் 1929 செங்கற்பட்டில் நடந்த முதலாவது சென்னை மாகாணச் சுயமரியாதை மாநாட்டில் முழுவடிவம் எடுத்தது. சமூகநீதி, பெண்களுக்குச் சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்பு, அனைத்துப் பொது இடங்களிலும் பட்டியலினத்தவர்க்கு தடை இருக்கக்கூடாது, நிலஉரிமை, விதவை மணம்-என்ற உரிமை சார்ந்த விழுமியங்களை இம்மாநாடு தனது வேலைத் திட்டமாகக் கொண்டது. இந்த நாத்திக இயக்கமானது, சுயமரியாதை - சமதர்ம இயக்கமான கால கட்டம் இது. இதற்குள் தமிழியத்தைக் கொண்டு வந்து சேர்த்தது 1938.

பெரியார், 1926-ஆம் ஆண்டிலேயே இந்தியை எதிர்த்து எழுதியவர். 1930 நன்னிலம் சுயமரியாதை மாநாட்டில் இந்திக்கு எதிராக தீர்மானம் போடப்பட்டது. அதனைப் பெரும் போராட்டமாக மாற்றியவர் இராஜாஜி. ‘இது மொழித் திணிப்பு மட்டுமல்ல, கலாச்சாரப் படையெடுப்பு. வடநாட்டாரின் ஆதிக்கப் படையெடுப்பு' என்றார் பெரியார். திருச்சி யில் இருந்து இந்தி எதிர்ப்புத் தமிழர் படை புறப்பட்டது. இதை திருச்சியில் வழியனுப்பி வைத்தவரும், சென்னையில் வரவேற்றவரும் பெரியாரே. ‘தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் தான் தமிழர் உரிமை பாதுகாக்கப்படும். பிரிவினை தவிர இதற்கு வேறு வழியில்லை' என்றார் பெரியார்.

1940-இல் கட்டாய இந்தி ஒழியும் வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். 1940களின் தொடக்கக் காலத்தில் நடந்த தமிழிசை இயக்கத்தையும் முழுமையாக பெரியார் ஆதரித்தார். பாடல் கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்; தெலுங்கில், சமஸ்கிருதத்தில் கூடாது என்றார். 1948-இல் மீண்டும் இந்தி திணிக்கப்பட்ட போதும் போராட்டங்களை முன்னெடுத் தார். இதைத் தொடர்ந்து திருக்குறளை பெரியார் கையில் எடுத்தார். ‘ஆரியம் இல் லாத இலக்கியம் குறள்' என்றார். ‘திராவிட நாடு தனியாக வேண்டும், வெள்ளையனைப் போல வடநாட்டான் சுரண்டிக் கொண்டிருக் கிறான் என்று தொடர்ந்து பேசினார். எனவே காங்கிரஸ் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தினார். இந்தியைத் தார் கொண்டு அழித்தார். அப்போது, மண்ணெண்ணெய் கொண்டு அதைத் துடைக்கும் பணியைச் செவ்வனே செய்த இயக்கம்தான் தமிழ்த்தேசியப் பேரி யக்கங்களின் மூலஇயக்கமான ம.பொ.சி.-யின் ‘தமிழரசுக் கழகம்'.

இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட் டத்தை நடத்திய பெரியார் இந்தி ஆதிக்கம், வடநாட்டு ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத் தையே எரிக்கத் திட்டமிட்டார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் (1952) இதே காலகட்டத்தில் தான் உருவானது. இதன்மூலமாகத் திருக்குறள் மலிவுப் பதிப்பு கள் விற்பனை செய்யப் பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனியாக பிரிந்த நேரத்தில் சென்னை என்பது தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்று பெரியார் வாதிட் டார். சென்னையை ஆந்திராவுக்கும் பொது தலைநகராக்கலாம் என்பதை ஆராயவந்த வாஞ்ச் ஆணையத்தைக் கடுமையாக எதிர்த் தார். இராஜாஜி பதவி விலகி காமராசர் முதல்வர் ஆனபோது மகிழ்ந்தார். ‘நீண்ட நாட்களுக்குப் பின் பார்ப்பனரல்லாத - ஆந்திரரல்லாத - தெலுங்கரல்லாத - ஒரு தமிழர் முதல் மந்திரியாக வந்துள்ளார்' - என்று பெருமைப் பட்டவர்தான் தந்தை பெரியார். காமராசரை ஆதரித்ததன் நோக்கம் என்பது இராஜாஜியின் எதிரி என்பதற்காக; தமிழர் என்பதற்காக; தெலுங்கரல்லாதவர் என்பதற்காக; ஆந்திரர் அல்லாத ஒருவர் என்பதற்காக; தமிழர் என்பதற்காக. இவர் தான் பெரியார்!

தமிழரல்லாதார் பெரிய பதவிகளில், அரசு வேலைகளில் உட்கார்ந்திருப்பதை 1954 முதல் கண்டித்தார். ‘ஆந்திரா தனியாகிவிட்டது, கேரளாவும் கன்னடமும் போய்விட்டால் அதுதான் தனித்தமிழ்நாடு' என்றார்.

மலையாளிகள் 100க்கு 8 பேர் கன்னடத் தார் 100க்கு 5 பேர் பார்ப்பனர் 2 3/4 சதம், கிறிஸ்தவர் 4 பேர், முஸ்லீம்கள் 5 பேர், மொத்தம் 25 சதவிகிதமாக உள்ள தமிழரல் லாதார் அரசு உத்தியோகங்களில் 60 சதவிகிதம், 70 சதவிகிதம் இருக்கிறார்கள் என்று வருந்தினார். 'மலையாளிகள் தொல் லையே பெருந்தொல்லை' என்றார். ஒன்று பார்ப்பான் இருக்கிறான், பார்ப்பான் இருக்க முடியாத இடத்தில் மலையாளியை ஆதரிக் கிறான் என்றார். 'இப்படியே நீடித்தால் தமிழன் வாழ்வது எப்போது?' என்று கேட் டார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் அடக்கப்படுவதை எதிர்த்து எழுதினார் (17.9.1954).

இந்தக் காலகட்டத்தில் தட்சிணப் பிரதேசம் எண்ணத்தை மத்திய அரசு விதைத்தது. தென் மாநிலங்களை இணைத்து ஒரே மாநிலம் ஆக்குவது என்பதே அத்திட்டம். இதனைக் கடுமையாக எதிர்த்தார். 'தட்சிண பிரதேசம் வந்தால் தமிழர்களுக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால் பார்ப்பானுக்கு போக மற்ற உத்தியோகமெல் லாம் மலையாளி, கன்னடியர் கைக்கே போய் விடும். நமக்கு கக்கூஸ் எடுத்தல், போலீஸ் காண்ஸ்டபிள், ரயில்வே கூலி போர்ட்டர் உத்தியோகம் தான் மிச்சமாகும். இப்போதே நம்மை அடிமைபோல் நடத்துகிறார்கள். தட்சிணப்பிரதேசம் என்று சொல்லிக் கொண்டு அன்னியர்தான் ஆதிக்கம் செலுத்தி வருவார்கள். ஆந்திரா பிரிந்ததே நல்லது. இனி மலையாளியும் கன்னடியரும் ஆளுக் கொரு ஜில்லாதானே?'-இவர்களும் போகட் டும். மீதி 12 ஜில்லாக்களையும் கொண்ட தமிழ்நாடு தனிச் சுதந்திர நாடாகி நமது சமய சமுதாய தேசிய சுதந்திர முயற்சிகளுக்கு எதிர்ப்பு இருக்காது என்று நம்பினேன். இப்போது இதற்கும் தமிழ்நாடு என்று பெயர் தராமல் சென்னை ராஜ்யம் என்பதாகத்தான் பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது சகிக்க முடியாத அக்கிரமம். அவமானம். இதைத் திருத்துமாறு தமிழ்நாட்டு மந்திரி களையும் சென்னை தில்லி சட்டசபை மேல்சபை அங்கத்தினர்களையும் இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லாமல் எங்களுடைய வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?' - என்று கேட்டவர் பெரியார்.

எப்போது 1954-ல்! கேட்டவர் பெரியார்!

தட்சிணப் பிரதேசத்தின் தீமையை முதல்வர் காமராசருக்கு உணர்த்தியவர் பெரியாரே. 'இது தமிழர்களுக்கான தற்கொலை' என்றவர் பெரியார். (1956 - பிப்ரவரி) அதன்பிறகே காமராசர் நிராகரித்தார். (23.2.1956) திருவண்ணாமலையில் பேசும்போது, ‘இப்போது ஆந்திரம் பிரிந்துவிட்டது. அடுத்து சென்னை மாகாணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு மாவட்டம் தென்கன்னடம், கர் நாடகத்தோடும் தென்மலபார் கேரளத் தோடும் போய்விடும். மிச்சமுள்ளது தமிழ்நாடு. அந்தத் தனித்தமிழ்நாடே திராவிடநாடு. அதற்குத்தான் இனி சுதந்திரம் கேட்போம்' என்றார் (19.8.1956) இதன் பிறகு அவர் பேசியது எல்லாமே 'தனித்தமிழ்நாடு' தான் 'திராவிடநாடு' அல்ல. 1956ல் பெரியார் கைவிட்ட 'திராவிடநாடு' சொல்லைப் பிடித்துக் கொண்டு தமிழ்த்தேசியர்கள் இன்று தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘திராவிட நாடு' என்ற சொல்லை 1956-இல் கைவிட்டு விட் டார் பெரியார் என்பதே தெரியாமல் வரலாறு வாசிக்கும் குருட்டுத்தனம் கொண்டவர்கள் இவர்கள்.

தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழி யாக்கும் சட்ட முன்வடிவு 22.12.1956 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை பெரியார் வரவேற்றார். தமிழகக் கோவில் களில் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பதற்காக குன்றக்குடி அடிகளார் போராட் டம் நடத்தியதை ஆதரித்தார்.

  1. தமிழ்நாட்டில் தமிழன் கோயில் உள்ள கடவுளுக்கு தமிழில் பூசை செய்யப் படவேண்டும்.
  2. தமிழ்நாட்டில் தமிழன் கோவிலுக்குள் தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும் என்று அடிகளாருக்கு எழுதினார் பெரியார்.

‘இந்த இரண்டு காரியங்களும் தமிழனின் தன்மானத்தையும் தமிழ்மொழியின் தன்மானத்தையும் பற்றியவையாகும். தமிழ் மிலேச்ச மொழி என்பதாலும், தமிழன் சூத்திரன் என்பதாலுமே இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன' என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்ட பெரியார், ‘நான் தமிழன் என்று கருதுவது நம் நாட்டிலுள்ள சூத்திரர்களே யாகும்' என்றும் விளக்க மளித்தார்.

1957-ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று அரசியல் சட்டத்தில் சாதியை பாதுகாக்கும் பிரிவுக்குத் தீ வைத்து கைது ஆனார். 1958 சூன் 13-ஆம் நாள் பெரியார் விடுதலை செய்யப்பட்டார். ‘சாதி ஒழிப்புக்கு நாடு பிரிவினையே முன்னணித் திட்டம். தமிழக விடுதலையை வற்புறுத்தத் தமிழ்நாடு நீங்கலாக உள்ள இந்திய யூனியன் படம் எரிக்கப்படும்' என்று அறிவித்தார். வேலூரில் நடந்த நாம் தமிழர் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘தமிழர் திராவிடரே! தமிழ்நாடும் திராவிடமே!' என்றார் பெரியார். (25.8.1958). “முன்பு சென்னை ராஜதானி என்பது தமிழ்நாட்டுடன் ஆந்திர, கேரள, கர்நாடகமும் இணைந்திருந்த பகுதி. இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்பு சென்னை ராஜ்யம் என்பது தமிழ்நாடு மட்டுமே. அதனால் நம் கோரிக்கை மாறவில்லை. எல்லை தான் சுருக்கப்பட்டுவிட்டது' என்றார் பெரியார் (23.11.1958).

தமிழ் இலக்கியங்கள் மீதான அவர் விமர்சனம் என்பது தமிழ்மீதான வெறுப்பு அல்ல. ஆங்கிலம் படிக்கச் சொன்னது ஆங்கி லத்தின் மீதான ஆசை அல்ல. பார்ப்பான் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுகிறான்; தமிழா நீ தமிழை மட்டுமே படித்துத் தேங்கி விடாதே! ஆங்கிலம் படித்து முன்னேறிச் சென்றுவிடு என்று தான் சொன்னார் பெரி யார்; ஒரு தந்தையாக!

அவர் ஆங்கிலத்தைப் பரிந்துரைத்தது முன்னேற்றதுக்கான ஏணிப்படி என்பதால் தான். ஆங்கிலத்தின் இடத்தில் செர்மன், பிரஞ்சு இருந்திருந்தால் அதைத்தான் பரிந் துரை செய்திருப்பார். ‘உனது தலையில் இந்தியைக் கட்டிவிட்டு பார்ப்பான் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுகிறான்' என்ற தந்திரத்தை முதலில் சொன்னவர் அவர்தான். இன்றைக்கு இந்தியைத் திணித்துவிட்டு, ஆங்கிலத்தை அகற்றப் பார்க்கிறது வடவாரிய ஆதிக்க வர்க்கம். தமிழும் ஆங்கிலமும் வாளும் கேடயமுமாக இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டது. பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக மலை யாளிகள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்று பேசினார்.

1965 இந்திப்போர் காலகட்டம். இந்தப் போராட்டத்தை மொழி போராட்டமாக அல்லாமல் அரசியல் போராட்டமாகப் பார்த் தார் பெரியார். காங்கிரஸை வீழ்த்துவதற்கு தி.மு.க பயன்படுத்தும் ஆயுதம் இந்த மொழிப்போர் எனக் கணித்தார். 'இந்தியைத் திணிக்கும் பிரச்னைக்கே இப்போது இடமில்லை' என்று 17.1.1965 விழுப்புரத்தில் பேசினார். இதனை வெளியிட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' 'பெரியார் இந்தியை எதிர்க்கவில்லை' என்று எழுதியது. 'இப்படி திசை திருப்புவது அசல் அக்கிரகாரத்தன்மையல்லவா?' என்று பெரியார் எழுதினார். (19.1.1965) போராட்டத்தின் வன்முறையையும் கடுமையாக விமர்சித்தார். ‘இப்போராட்டத்தை அடக்கியாக வேண்டும்' என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார் (8.2.1965).

‘இப்போதும் நான் இந்தியை எதிர்க்கிறேன்' என்றார். (3.3.1965). ‘என்னைப் பொறுத்த வரையில் காமராசர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்றால் காமராசர் ஆட்சி இந்தியை ஒழித்து விடும் என நம்புவதால் முதலில் காமராசர் ஆட்சி நிலைக்கவே பாடுபடுவேன்' என்றார். (3.3.1965). இந்த ஆட்சியை ஒழிக்கவே இந்தப் போராட்டங்கள் என்றார். இந்திப் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சூழலிலும், இந்தித் திணிப்பின் நோக்கத்தை மிகச் சரியாகச் சொன்னார்.

“இந்தியைப் புகுத்தியவர்கள் அரசியலுக்கு ஆகப் புகுத்தவில்லை. கலாச்சார மாற்றத் திற்காகவே இன உணர்ச்சியை மறக்கடிப் பதற்காகவே புகுத்தினார்கள். காந்தியின் கருத்தும் ஆச்சாரியாரின் கருத்தும் வெறி யர்களின் கருத்தும் இதுவேயாகும்' என்றார். (விடுதலை 3.3.1965). ‘இந்தியை எதிர்க்கிறவர்களிடத்தில் நாணயம் இருக்குமானால் அவர்கள் எப்படி ஏக இந்தியாவை ஒத்துக் கொண்டு இந்தியை வேண்டாம் என்று தடுக்க முடியும்? இந்தியை ஏற்றுக் கொண்டவர்கள் பெரும்பான்மையான நாட்டுக்காரர்களா யிற்றே! இந்தி ஒழிய வேண்டுமானால் ஒரே வழி பிரிவினை தானே. இந்தப் பிரிவினை இலட்சியத்தை நாங்கள் தானே வைத்து இருக்கின்றோம்'' என்றும் பேசினார் (விடு தலை 15.6.1965).

போராட்டத்தைத் தூண்டினார், தடையை மீறினார் என்று கைது செய்யப்பட்ட குன்றக் குடி அடிகளாருக்கு 500 ரூபாய் அபராதம் போடப்பட்டதைப் பெரியார் கண்டித்தார். ‘ஒரு தமிழினத்தின் சன்னிதானத்துக்கு ஒரு தமிழர் மந்திரி ஆட்சியில் இப்படி அவமரி யாதை நடப்பதா?' என்று கேட்டார். (14.9.1965)

இந்தியை, இந்தித் திணிப்பை பெரியார் ஆதரிக்கவில்லை. இந்தியாவுக்குள் இருந்தால் இந்தி திணிக்கப்படத்தான் செய்யும் என்பதே அவரது நிலைப்பாடு. 1965 இந்திப் போராட் டத்தின் போது நடந்த நிகழ்வுகளை விமர் சித்தார் என்பதற்காக அவரை இந்தியின் ஆதரவாளர் என்று காட்டுவதுதான் தமிழ்த் தேசியர்களின் கடைந்தெடுத்த கயமை. இப்போராட்டத்தை ‘காலித்தனம்' என்ற பெரியார்தான் மாணவர்களின் எதிர்காலம், படிப்பு பற்றிய கவலையில் இருந்தார் என் பதற்கும் பல பதிவுகள் உள்ளன. (தமிழ்த் தேசியர்களின் மூலவரான ம.பொ.சி.1965 மொழிப்போராட்டத்தின் போது என்ன சொல்லை பயன்படுத்தினார் என்பதை ம.பொ.சி. தாசர்கள் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!)

1965 இந்திப் போராட்டத்தைப் பெரியார் ஆதரிக்கவில்லை என்று அவர் மீது பாய்ப வர்கள், 1965 இந்திப் போராட்டத்தை ஆதரிக்கிறார்களா? அப்படி ஆதரிக்கிறேன் என்றால் அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும் ஏனென்றால் அந்தப் போராட் டத்தை நடத்தியதும் தி.மு.க. என்ற ‘திராவிடக்' கட்சியே!

1967 தி.மு.க. ஆட்சியை சுத்தத் தமிழர் ஆட்சி என்றார் பெரியார். தி.மு.க. அரசு ஸ்ரீ, ஸ்ரீமதி என்பதற்குப் பதிலாகத் திரு, திருமிகு என வழங்க வேண்டும் என்ற உத்தரவை வரவேற்றார். மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு என்று மாற்றப்பட்டதை வரவேற்று எழுதினார். மும்பையில் சிவசேனா காரர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்தார். ‘பம்பாயில் சிவசேனாக்காரன் தமிழனை அடித்தால் அதற்குப் பரிகாரமாக இங்கிருக்கிற பம்பாய்க்காரனை நாம் விரட்ட வேண்டாமா? வெறுக்கத் துணிந்தவன்தான் வெற்றி பெறுவான்' என்று எழுதினார். சிவசேனை எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும் என்றார். திருச்சியில் நடந்த சிவசேனை எதிர்ப்பு மாநாட்டில் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்று கூறச் சொன்னார். 9 பேர் கொண்ட சிவசேனை எதிர்ப்புக் குழுவை அறிவித்தார். 1.10.1967 அன்று சென்னையில் நடந்த சிவசேனை எதிர்ப்பு ஊர்வலத்தில் பெரியாரும் கலந்து கொண்டார்.

உலகத் தமிழ்மாநாட்டை விமர்சித்தார். ‘உலகத் தமிழ்மாநாடு நடந்து முடிந்தபிறகும் சூத்திரன் சூத்திரனாகத்தானே இருக்கப் போகிறான். இழிவு ஒழியப்போகிறதா?' என்று கேட்டார். ‘தமிழ்நாடு' பெயர் மாற்றத்தை வரவேற்ற பெரியார், ‘ஆனாலும் இந்தியாவுக்குள்தானே இருக்கிறோம்?’ என்று கேட்டார். சென்னை உயர்நீதிமன்றத் தில் 16 பிரதிநிதிகளில் 10 பேர் தமிழர்கள் என பெருமைப்பட்டார். மேலக்கற்கண்டார் கோட்டை பொதுக்கூட்டத்தில். 5.3.1969 எழுதிய தலையங்கத்துக்கு ‘அரசாங்கம் கவனிக்க வேண்டும்' என்பது தலைப்பு. இந்த தலையங்கத்தைத் தமிழ்த் தேசியர்கள் படிக்க வேண்டும்.

“தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு பதவி, உத்தியோகம் பற்றிக் கையெழுத்துப் போடும் போதும் இந்த ஆள் பார்ப்பானா, கிறிஸ்தவனா, முஸ்லீமா, சைவனா, மலையாளியா, என் பதைப் பார்த்துத்தான் கையெழுத்துப் போட வேண்டும். காமராசர் தமிழனுக்குக் கண் கொடுத்தார். ஆனால் கண்ணிருந்தும் குருட ராயிருப்பதால் பயனில்லை. ஆகையால் தி.மு.க. ஆட்சி தமிழர்களை எழுந்து நடக்கச் செய்ய ஆவன செய்திட வேண்டும். கண்டிப் பாய் இதில் கவனம் செலுத்திட வேண்டும்'' என்று எழுதினார்.

தமிழர் ஒருவர் தலைமை நீதிபதி ஆனதைப் பாராட்டி எழுதினார். (1.5.1969) தி.மு.க. அமைச்சர்கள் 13 பேரில் 13 பேரும் தமிழர் கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 18 பேரில் 14 பேர் தமிழர்கள் என்று சொல்லிக் கொண் டார் (15.9.1969).

சூத்திரன் என்ற இழிவு நீக்க கோயில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி தொடங்கினார். ‘தமிழர் ஒரே இனம். நாம் ஒரே சாதி' என்று மதுரையில் பேசினார். (16.2.1970) அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் மசோதா, தமிழில் வழிபாடு ஆகியவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வரவேற்றார் (25.3.1970). ‘ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம், அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்ற தாலுமே தமிழர்களுக்கு இன உணர்ச்சி புலப்படவில்லை'' என்றார். (24.7.1972) ‘தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் தமிழரல்லாதாரின் ஆதிக்கமே மிகுந்துவிட்டது. பாதிக்கு மேல் மலையாளிகளின் ஆதிக்கம் தான் இருக்கிறது' என்று சோலையில் பேசி னார் (5.11.1972). “எல்லாத் துறைகளிலும் மலையாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட ஒரு திட்டம் வகுத்தாக வேண்டும். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிடர் கழகம் மாநாடு நடத்தும்' என்று மதுரையில் பேசினார். (1.12.1972). ‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்' என்று பல்லாயிரக்கணக் கில் அச்சடித்து அனை வருக்கும் கொடுக்கப் போகிறேன்'' என்று அறிவித்தார். (15.8.1973)

30.9.1973ஆம் நாள் மதுரையில் நடந்த கருஞ்சட்டை மாநாட்டில் பேசும்போது, ‘சுதந்திரத் தமிழ்நாடு கேட்பது சமுதாய விடுதலை பெறுவதற்காகத்தான். கேட்டது சட்டவிரோதம்தான் ஆனால் நியாய விரோதமல்ல! ஏழாண்டு சிறையிலிட்டால் பரவாயில்லை என நீங்கள் ஏற்க வேண்டும்’ என்று பேசினார். ‘தமிழர்களே பிரிவினைக் காகப் பிரிவினை கேட்கவில்லை. நான் சூத்திரன், தாசிமகன் என்கிற இழிவு நீங்கப் பிரிவினை தவிர வேறு வழி என்ன என்று கேட்டார். (30.10.1973) ‘வட நாட்டானே நீ உடனே உன்னுடைய மூட்டை முடிச்சுக் களைக் கட்டிக்கொள். இனிமேல் உனக்கு இங்கே வேலையில்லை' என்று திருச்சியில் பேசினார் (19.11.1973).

‘இனி நான் என் வாழ்நாள் முழுவதும் சிறையில் தான் கழிப்பேன்' என்று தஞ்சையில் பேசினார். ‘நான் மறைந்தால் ஆரியம் தலைதூக்கும். அப்புறம் தமிழர்களின் இழிவை ஒழிக்கப் போவது யார்?' என்றும் கேட்டார் (22.11.1973).

1973 டிசம்பர் 8, 9 தேதிகளில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. வரவேற்புரை ஆற்றிய ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், “அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு' தந்தார். அய்யா அவர்களே நீங்கள் ‘தமிழருக்கே' தாருங்கள்!'' என்றார். ‘இது நமது இறுதிப் போராட்டம்' என்றார் பெரியார்.

19.12.1973 இறுதி உரையாகச் சென்னை யில் பேசும்போது, ‘தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் ஒரு பத்து வருசத்துக்குள்ளாக நாமெல்லாம் 100 வயது வாழ்வோம் ஒவ்வொருவரும் தனித்தனியே இறக்கை வைத்துக்கொண்டு பறப்போம்’ என்று முடித் தார். 24.12.1973 காலை 7.22 மணிக்கு சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

1938ல் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்று தொடங்கியதுதான், 1973-இல் ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு' வரை தொடர்ந்தது. தொடக்கமும் முடிவும் ‘தமிழர்களே!'

சுயமரியாதை இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் - என எந்தப் பெயரில் இயக்கம் நடத்தினாலும் பேசியது எல்லாமே தமிழர் களுக்காகத்தான். தமிழ் நாட்டுக்காகத்தான். தமிழுக்காகத்தான்.

தமிழை விமர்சித்தார். தமிழ் மீதான வெறுப்பில் அல்ல. தமிழ் மீதான அதீதமான அன்பால். 'தமிழ்' என்று மட்டும் இருந்து தேங்கிவிடாதே, தமிழோடு சேர்த்து ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு முன்னேறி விடு, உலகின் எந்த மூலைக்காவது ஓடிச் சென்று முன்னேறி விடு' என்று ஒரு தந்தையைப் போல நினைத்தார். பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறிவிட்டார்கள். உயர்ந்த அரசுப் பதவிகளை அடைந்து விட்டார்கள் என்ற கோபம் அவரது பேச்சில் வெளிப்பட்டது. எனவேதான் பயிற்றுமொழி மட்டும் ஆங்கில மாக இருக்க வேண்டும் என்றார்.

மற்றபடி ஆட்சிமொழி, அலுவல்மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி தமிழாகத் தான் இருக்க வேண்டும், தமிழ் மட்டுமே இருக்க வேண்டும் என்றே செயல்பட்டவர் பெரியார்.

இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று கவலைப்படவில்லை. ஏனென்றால், ‘தமிழ் எதனாலும் அழியாது' என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இந்தியை ஏன் எதிர்க் கிறேன் என்றால் ‘தமிழர் பண்பாடு அழிந்து விடும்' என்றே 1938ல் அவர் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் சொன்னார். 1965-இல் அவர் ‘எதிர்த்த' இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் சொன்னார். இந்திய எல்லைக்குள் தமிழுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்திய எல்லைக்குள் தமிழனுக்கு உயர்வு இல்லை. இந்திய எல்லைக்குள் தமிழ் நாட்டுக்கு வளர்ச்சியும் உயர்வும் இல்லை என்பதற்காகவே துடித்த தமிழர் தலைவர் அவர்! உண்மைத் தமிழ்த் தேசியர் அவர்!

பெரியார், தமிழினத்துக்குத் ‘திராவிடர்'கள் என்று பெயர் சூட்டவில்லை. அவர் ஆரம் பித்த ஆரியருக்கு எதிரான இயக்கத்துக்குத்தான் ‘திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டினார். அந்த திராவிடர் கழகம் போராடியதும் வாதாடியதும் தமிழர்களுக்காகத்தான். 1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு முதல் 1973 தமிழர் இன இழிவு நீக்க மாநாடு வரை அவர் செயல் அனைத்தும் தமிழர்களுக்குத் தானே தவிர தெலுங்கர்களுக்கோ மலையாளிகளுக்கோ கன்னடர்களுக்கோ அல்ல என்பதை கருத்துக் குருடர்கள் அறிய வேண்டும்.

பெரியாரின் திராவிடம்தான் தமிழியத்துக்கு அரண் சேர்த்தது. அதுதான் அரண் சேர்க்கும். ஏனென்றால் திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்ட இயக்கம் தமிழர் களுக்காகவே செயல்பட்டது என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இவை. இப்படிச் செயல்பட்ட ஒரு தமிழ்த்தேசிய இயக்கம், தமிழ்த்தேசியத் தலைவர் யாராவது 1925 - 1975 காலக்கட்டத்தில் உண்டா?

- ப.திருமாவேலன்

Pin It