இட ஒதுக்கீடு என்பது படிநிலை ஏற்றத்தாழ்வுடன் கூடியது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாகும். இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என அழைக்கப்படுகிறது; சமூக நீதி என்றும் அழைக்கப்படுகிறது. சமூக நீதியில் சென்னை மாகாணம் என்று அன்று அழைக்கப்பட்ட தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இன்று திகழ்கிறது.
சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவதில் பலருக்கும் பெரும் குழப்பம் உள்ளது. இதனை இரண்டு எடுத்துக்காட்டுகள் வாயிலாக நாம் விளக்கலாம். ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் அந்த நால்வருக்கும் ஆளுக்கு நான்கு இட்டலிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டால் அது சமத்துவம் ஆகும். நான்கு குழந்தைகளின் ஆரோக்கிய நிலைகளும் கணக்கில் கொள்ளப்பட்டு, ஆரோக்கியம் குறைவாக உள்ள குழந்தைக்கு ஒன்று அல்லது இரண்டு இட்டளிகள் அதிகமாகக் கொடுத்தால் அது சமூக நீதியாகும்.
ஒரே அளவு உயரமுள்ள மேசை (டேபிள்) போட்டு அதன் மீது ஏறி நின்று கால்பந்தாட்ட மைதானத்தில் பார்ப்பது சமத்துவம். ஆட்டம் பார்ப்பவர்களின் உயரத்திற்கு ஏற்ப மேசைகளைப் போட்டு அனைவருக்கும் ஆட்டத்தைப் பார்க்க ஏற்படுத்திக் கொடுப்பது சமூக நீதி ஆகும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை ஓரளவு பயனுடையதாக இருந்தாலும், 50 சதவீத பொதுப் பிரிவு என்பதை ஒரு மோசடியாகவே நாம் பார்க்கிறோம். மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய சாதிகளுக்கு (அரிய வகை ஏழைகள்) இட ஒதுக்கீடு என்பது ஒரு பெரும் மோசடி ஆகும்.
முன்னேறிய சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு தேவை
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் பலர் அதிர்ச்சி அடையலாம். ஆனால் பொதுப்பிரிவு என்னும் சட்டகத்துக்குள் இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதமே உள்ள முன்னேறிய உறுப்பினர் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். இது எவ்வளவு பெரிய மோசடி என்பதை இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களே புரிந்து கொள்ள வேண்டும். பொதுப் பிரிவு என்பதையே நீக்கிவிட வேண்டும் என்பதுதான் நம் நிலைப்பாடாகும்.
100 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் முன்னேறிய சாதிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு என்பதுதான் நாம் முன்வைக்கும் புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கையாகும்.
100 சதவீத இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு 100 சதவீதம் ஆக்கப்பட்டு பொதுப் பிரிவு முறை நீக்கப்பட வேண்டும். மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பட்டியல் பழங்குடிகள், பட்டியல் வகுப்பினர், சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினர், மதச் சிறுபான்மையினர் ஆகிய சமூகப் பிரிவினருடன் சாதி மறுப்பு திருமணம் செய்தோர் மற்றும் அவர்களின் வாரிசுகள் சாதி, மதம் குறிப்பிட விரும்பாதோர் ஆகியோரை உள்ளடக்கிய சாதியற்றோர் என்னும் புதுப் பிரிவை உருவாக்கி, தொடக்க நிலையில் அவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சாதியற்றோர் எண்ணிக்கை பெருகும் போது அதற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு சதவீதம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். இதுதான் இட ஒதுக்கீடு குறித்த நம் நிலைப்பாடாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாம் செய்ய வேண்டியது
இந்திய ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சாதி, மதம் கேட்கும் இடத்தில் சாதியற்றோர், மதமற்றோர் என்று புதிய ஓர் இடத்தைப் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை நாம் வலியுறுத்துகிறோம். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோர், அவர்களின் வாரிசுகள், சாதியை ஒழிக்க விரும்பும் முற்போக்காளர்கள் ஆகியோர் தங்களைச் சாதியற்றோர் என மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின்படி சாதியற்றோர் பிரிவும் இல்லை; அதற்கான இட ஒதுக்கீடும் இல்லை. இந்த நிலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதி அற்றோர் என்று பதிந்தால், நடைமுறையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் இட ஒதுக்கீட்டுப் பயனை இழக்க நேரிடும் என்கிற அச்சம் சாதியை ஒழிக்க விரும்பும் முற்போக்காளர்களிடமும் நிலவுவதால், தமிழ்நாடு அரசு சாதியற்றோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர அவசர சட்டம் இயற்ற வேண்டும். அப்பொழுதுதான் இட ஒதுக்கீடு என்னும் சமூக நீதி சாதி ஒழிப்புக்கான கருவியாக மாற்றப்படும்; அதுவரை அது பல்வேறு படிநிலையில் உள்ள சாதிகளுக்கான உரிமையாக மட்டுமே நீடிக்கும்; அது எப்போதும் சாதியை ஒழிக்காது.