இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பில் இன்றியமையாத கூறு தத்துவார்த்தப் போராட்டமாகும். இடதுசாரிகள் பல்வேறு கூறுகளாக செயல்படுவதற்கு இந்தப் புரிதலே காரணமாக உள்ளது. ஒரு நாட்டில் நிலவும் உற்பத்தி முறையைப் புரிந்துகொள்வதில் இடதுசாரி அமைப்புகளிடையே ஏற்படும் புரிதல் குறைபாடு அல்லது ஒரு புரட்சிகர நடவடிக்கை மீது ஏற்படும் அவ நம்பிக்கை போன்ற பல்வேறு காரணங்களால் இடதுசாரி அமைப்புகள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து இயங்குவதற்குக் காரணமாக உள்ளது.
அமைப்புப் பெரியதா? அரசியல் பெரியதா? என்னும் கேள்வியை எழுப்பினால் அமைப்பைவிட அரசியல்தான் பெரியது என்பது தெளிவாகும். ஆனால் இதை உணராமல் அமைப்பியல் வாதத்திற்கு ஆளாகி இடதுசாரிகள் வழிவிலகுவதால் பல்வேறு அமைப்புகள் உருவாகின்றன.
இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் உற்பத்தி முறையையும் சாதி என்னும் சிறப்புக் கூறையும் சரியாகப் புரிந்து கொண்டால் பல்வேறு அமைப்புகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அடிக்கட்டுமானம், மேல் கட்டுமானம் ஆகியவற்றின் தாக்கத்தைச் சரியாக ஆய்வுசெய்து முடிவு எடுத்தால் இடதுசாரிகள் இணைப்பு சாத்தியமாகும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் விவசாயத்தில் உற்பத்திமுறை நிலவுடைமை முறையில் இருந்து முதலாளித்துவ முறைக்கு மாறிவிட்டதாகவும் அதனால் இந்தியாவில் சோசலிசப் புரட்சிதான் நடத்த வேண்டும் என்னும் கருத்தியலைக் கொண்ட அமைப்புகள் ஒருபுறம் இயங்குகின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தில் விவசாயத்தில் நிலவுடைமை உற்பத்தி முறைதான் நிலவுகிறது. அதனால் இந்தியாவில் புதிய சனநாயக புரட்சிதான் நடத்த வேண்டும் என்னும் கருத்தியலைக் கொண்ட அமைப்புகள் ஒரு புறம் செயல்படுகின்றன.
புதிய சனநாயகப் புரட்சியையோ சோசலிசப் புரட்சியையோ ஆதரிக்காமல் ஆய்வுசெய்கிறோம் என்று சொல்லி எந்த நிலைப்பாடும் இன்றி விழலுக்கு நீர் இரைக்கும் போக்கில் செயல்படும் சில அமைப்புகளாலும் தனிமனிதர்களாலும் குழப்பவாதமே மிஞ்சுகிறது. இவர்களால் புதிய சனநாயக முகாம், சோசலிச முகாம் இரண்டிற்குமே எந்தவகையான பயனும் இல்லை.
இந்தியாவிற்குத் தேவை புதிய சனநாயகப் புரட்சியா? சோசலிசப் புரட்சியா? என்பதைச் சரியாக ஆய்வுசெய்தால் மட்டுமே இடது சாரிகளின் இணைப்புச் சாத்தியமாகும்.
இப்போதைய சூழலில் புதிய சனநாயகப் புரட்சியை ஆதரிக்கும் அமைப்புகளும் சோசலிசப் புரட்சியை ஆதரிக்கும் அமைப்புகளும் ஆங்காங்கே இயங்கி வருகின்றன. ஆனால் இந்த இருவேறு கருத்தியல் கொண்ட அமைப்புகளும் இன்னும் இரு முகாம்களாக வளரவில்லை. அதற்கான முயற்சிகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில் எமது தமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் நிலைப்பாட்டைக் கூறி இக் கட்டுரையை முடிப்போம்.
இந்தியாவில் நிலவும் உற்பத்திமுறை இன்னும் நிலவுடைமை முறையிலிருந்து முற்றும் முழுமையான முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறவில்லை. முதலாளித்துவத்தின் தாக்கத்தால் மேலோட்டமாக ஏற்பட்டுள்ள உற்பத்தி உறவு தளர்வு நிலையை உற்பத்தி முறையைத் தவறாகப் புரிந்து கொண்டு சோசலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்று அமைப்புகள் தடுமாறுகின்றன. இந்தியாவில் இன்னும் கிராமங்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அதனால் நிலவுடைமை உற்பத்தி முறையே நீடிக்கிறது. உலகமயமாக்கல் என்னும் வல்லரசியக் காலகட்டத்தில் தேசிய முதலாளித்துவம் முழுமை பெறாமல் தரகு முதலாளித்துவம் என்னும் புதிய நிலை தோன்றியுள்ளது. ஆனால் நிலவுடைமை உற்பத்தி முறையில் முழுமையான அளவில் மாற்றம் ஏற்படாததால் இந்தியாவிற்குப் புதிய சனநாயகப் புரட்சியே தேவை என்பதே எமது தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடாகும்.
கம்யூனிஸ்டு இயக்கங்கள் புரட்சிகரப் பாதையை விட்டு தேர்தல் பாதை என்னும் தேய்ந்துபோன வழித்தடத்தில் அண்மைக்காலமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. இது முற்றிலும் பெரிய வழிவிலகல் ஆகும். இதைத் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஏற்க மறுக்கிறது. எனவே தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் நிலைப்பாட்டின்படி புதிய சனநாயகப் புரட்சியை ஆதரிக்கும் அமைப்புகளின் கூட்டமைப்பே இடதுசாரிகளின் இணைப்புக்கு உகந்தது என்று உறுதியாகக் கூறுகிறோம்.
(இதுபற்றிய அரசியல் கருத்துகளைத் தோழர்கள் தருக்க மேடை பகுதிக்கு அனுப்பலாம்.)
- தங்க குமரவேல், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்
***
வெள்ளையனுக்கு வீரவணக்கம்....
வெள்ளையன் பெயர் மட்டுமல்ல.. உள்ளமும் வெள்ளைதான்! எடுப்பான தோற்றம், முறுக்கிய மீசை, எவரையும் ஈர்த்து விடும் கனிவான அணுகுமுறை, இவற்றுக்குச் சொந்தக்காரர் -தான் ஐயா வெள்ளையன் அவர்கள்.
கடந்த செப்டம்பர் 10ஆம் நாள் ஐயா வெள்ளையன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வணிகர் சங்கத் தலைவராக இருந்த ஒருவர் மறைவு என்பது வணிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்க அரசியல் தலைமைகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வேதனையில் ஆழ்த்தியது. ஐயா வெள்ளையன் அவர்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் என அறியப்பட்டிருந்தாலும் அவர் ஒரு தமிழ்த் தேசிய சிந்தனையாளர் மட்டுமல்ல; அதைச் செயல்படுத்தியவரும் கூட. பெரும்பாலான தமிழ்த் தேசியப் போராட்டங்களில் நேரடியாகப் பங்கு எடுத்தவர், சில போராட்டங்களுக்குப் பின்னணியில் இருந்து ஆதரவு கொடுத்தவர். ஏழு தமிழர் விடுதலையில் முக்கியப் பங்காற்றியவர். தமிழீழப் பிரச்சினையில் மிக முக்கியமான ஆளுமையாகச் செயல்பட்டவர்.
ஈழப் போர் என்பது இலங்கையில் மட்டும் நடந்த போராட்டம் அல்ல, அந்தப் போராட்டத்திற்கான பொருளாதார அடித்தளம் மற்றும் ஆதரவுக் களமாகத் தமிழ்நாடு இருந்தது. அப்படியான ஆதரவு ஆற்றல்களில் முக்கியமானவராக ஐயா வெள்ளையன் அவர்கள் இருந்திருக்கிறார். அவரைப் போன்று எண்ணற்றவர்களின் ஈழத்திற்கான உழைப்பு எங்கேயும் பதிவாகவில்லை. அதுபற்றி அவர்கள் எங்கேயும் சொன்னதும் கிடையாது. மேலும் தமிழ்நாட்டைப் பாதிக்கக்கூடிய அணு உலை, ஸ்டெர்லைட், மீத்தேன், ஐட்ரோ கார்பன், நியூட்ரினோ, சேலம் எட்டு வழிச் சாலை போன்றவற்றிற்கான எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் வணிகர் சங்கங்களையும் ஈடுபடச் செய்துப் போராட்டங்களுக்கு வலு சேர்த்தவர்.
சிறு வணிகர்களை நேரடியாக பாதிக்கக் கூடிய இணைய வழி வர்த்தகம், தனியார்மய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், சிறு வணிகத்தில் அந்நிய முதலீடுகள் போன்றவற்றிற்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்து அதற்காகச் சிறை சென்றவர். ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளின் வணிகங்களைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என வணிகர்களைத் திரட்டிப் போராடிய தேசிய நாயகர் ஆவார். ஒரு வணிகராக, வணிகர் சங்கத் தலைவராக மட்டும் இருந்திடாமல், தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த, அனைத்துப் போராட்டங்களிலும் தமிழ் உணர்வோடு, பங்கெடுத்த ஐயா வெள்ளையன் அவர்களைத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். மீண்டும் புகழ் வணக்கத்தையும் வீரவணக்கத்தையும் செலுத்துவோம்!
- தமிழ் முகம்