நீதித்துறையில் சமூக நீதி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்த கொள்கையை வடிவமைப்பதில் நீதித்துறையின் பாத்திரத்தை ஆராய வேண்டும். ஏனெனில் பாஜக அரசு 2019இல் நிறைவேற்றிய 10% EWS இட ஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் ஊற்றுக்கண்ணாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய நீதித்துறை பன்னெடுங்காலமாய் இரவு பகலாய் உழைத்து அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களே 103வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு அடிகோலின. சமூக நீதிக்கு வேட்டுவைக்கும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் போக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குகிறது. சமூக நீதி மீதான இத்தகைய வெறித்தனமான தாக்குதல்கள் நீதித்துறையில் SC, ST, OBC வகுப்பினரின் பிரதிநிதித்துத்தின் தேவையை உணர்த்துகின்றன. எவ்வாறாயினும், நீதித்துறையில் SC, ST, OBC வகுப்பினர் போதுமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிக கடினமாகவே தோன்றுகின்றன. காரணம், அதை முழுமையாக ஆக்கிரமித்துள்ள உயர்சாதியினர் தங்களுக்குள்ள சமூக வலைப்பின்னல் தொடர்புகளைப் பயன்படுத்தி SC, ST, OBC வகுப்பினரின் பிரதிநிதித்துவத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். பல்வேறு நிறுவனங்களில் குவிந்துள்ள உயர்சாதியினர் வலைப்பின்னல் போன்ற தொடர்புகளைத் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக்கொண்டு இதைச் சாதிக்கிறார்கள். எனவே நீதித்துறை தீர்ப்புகள் மூலம் 10 % EWS உயர் சாதி இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்வதன் மூலம் பார்ப்பன பனியா மேலாதிக்கத்தால் இயக்கப்படும் நிறுவனங்களில் மேலோங்கும் சாதிய பிணைப்பின் செயல்பாடு வெளிப்படும்.

1950 முதல் இன்று வரையிலான இட ஒதுக்கீடு பற்றிய நீதித்துறையின் தீர்ப்புகள் 15(1), 29(2) ஆகிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ள சமத்துவத்தை விரிவுபடுத்துவதிலும், சட்டப்பிரிவுகள் 14, 15, 16, 38, 46, 332, 335, 338, 340 ஆகியவற்றில் இயல்பாகப் பொதிந்துள்ள பொருண்மையான சமத்துவக் கோட்பாட்டை கடுமையாகக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தின.court symbol 640கல்வி நிறுவனங்களில் எழும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கான உரிமைக்குரல்களை முன்கூட்டியே தடுக்க இந்த உத்தி உருவாக்கப்பட்டது. இந்த உத்தி முதல்முறையாக செண்பகம் துரைராஜன் (1951) வழக்கில் பயன்படுத்தப்பட்டது எனலாம். 1920களில் நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையிலான இட ஒதுக்கீடு உயர்சாதியினரின் ஏகபோக உரிமைக்கு சில தடங்கள்களை ஏற்படுத்தியது. SC, ST, OBC வகுப்பினருக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது. எனவே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என செண்பகம் துரைராஜன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தன. இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றங்கள் கொடுத்த முதல் அடி இது. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எடுத்த கடும் முயற்சிகளாலும் போராட்டங்களாலும் கல்வி நிறுவனங்களில் SC, ST, OBC வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முதல் அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அப்போதிருந்த ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டது. இருந்த போதிலும், கல்வி நிறுவனங்களிலும் அரசுப்பணிகளிலும் SC, ST, OBC வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை குறைக்க சமூக நீதியை ஒத்திவைக்கும் கொள்கையை நீதித்துறை பயன்படுத்தியது.

தந்தை பெரியாரின் இடைவிடாத அரசியல் போராட்டங்களின் விளைவாக விழிப்படைந்த தென் மாநிலங்களில் சமூக நீதிக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. இது நீதிமன்றங்களுக்கு எரிச்சலூட்டியது. பாலாஜி வழக்கில் (1962) இட ஒதுக்கீட்டிற்கு முதல் பெரிய அடி விழுந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் மூன்று தந்திரமான நகர்வுகளை மேற்கொண்டது.

ஒன்று, சமூக ரீதியாகவும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்களை நிர்ணயிப்பதில் உச்ச நீதிமன்றம் சாதியின் பங்கைக் குறைத்து பொருளாதாரக் அளவுகோல்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண முனைந்தது. பார்ப்பனிய பனியா நீதிபதிகள் நிறைந்த அரசியலமைப்பு அமர்வு சமூக, கல்வி ரீதியிலான பின்தங்கிய தன்மையை குறைத்து மதிப்பிட்டு, பொருளாதார அடிப்படையிலான அளவுகோலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. பொருளாதார அடிப்படையிலான உயர்சாதி இட ஒதுக்கீட்டுக்கான விதைகள் அன்றே விதைக்கப்பட்டுவிட்டன. இந்து மதத்தை சாராத இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் சாதி அளவுகோல் பொருந்தாது என்ற காரணத்தை முன்வைத்து, பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்மானிக்கும் காரணிகளில் இருந்து சாதியை நீக்கும் வேலை ஆரம்பித்தது.

இரண்டாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கும் முயற்சிக்குத் தடை போட்டது. அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்துவதை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(4) அனுமதிக்கவில்லை என்ற காரணத்தை கூறியது.

மூன்றாவது, 15(4) ஆம் சட்டப்பிரிவின் பின்னணியில், சட்டப்பிரிவு 335 வது பிரிவை சாதிய நோக்கில் விளக்கி, இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை ஏற்படுத்தியது. அதன் மூலம் ரங்காச்சாரி வழக்கில் (1961) பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை மறுத்தது.

பாலாஜி விதியை சட்டமாக்குதல்

பாலாஜி வழக்கில் (1962) வழங்கப்பட்ட தந்திரமான பொருள்விளக்கம் பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற பலராலும் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றது. எடுத்துக்காட்டாக, தேவதாசன் (1963), சித்ரலேகா (1964) ஆகிய இரு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பாலாஜி வழக்கில் குறிப்பிடப்பட்ட பொருளாதார அளவுகோலுக்கு அதிக முக்கியவத்துவம் அளித்தது. இது போன்ற மோசடியான காரணங்களைக் காட்டி, இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் உத்திகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. இதன் மூலம், சமூக நீதி வழங்குவதை மேலும் தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் நீதிமன்றங்களால் இன்னும் ஊக்கம் பெற்றன. இருப்பினும், பல்வேறு சமூக இயக்கங்களின் இடைவிடாத முயற்சியால் உச்ச நீதிமன்றம் என்.எம் தாமஸ் வழக்கில் (1975) தன் நிலைப்பாட்டை சற்று தளர்த்திக்கொண்டது. அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் பின் வருமாறு கூறியது.

தலைமுறை தலைமுறையாக நீதி மறுக்கப்பட்ட, விழிப்புணர்வு பெற்ற வகுப்பினர் நீண்ட நேரம் தாழ்ந்து கிடக்க மாட்டார்கள். வெளி நாட்டில் பிளாக் பாந்தர்ஸ் செய்தது போல், இந்தியாவிலும் அவர்கள் தலித் சிறுத்தைகளாக வெடித்துச் சிதறக்கூடும். நீதிபதிகள் சமூகத்தில் எழும் உரிமைக் குரல்களை கேட்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நீதியைத் தடுக்கும் இடத்தில், நசுக்கப்பட்ட வர்க்கம் தெருக்களில் நம்பிக்கையைத் தேடும். 

ஓங்கி எழுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உரிமைக்குரல் இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றம் கொண்டிருந்த பிடிவாதமான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்தித்தது. இருப்பினும் மனந்தளராத உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை மறுக்க கிரீமி லேயர் எனும் புதிய வரையறையை முன்வைத்தது. என்.எம் தாமஸ் (1975) வழக்கிற்கு பின்னர் உயர்சாதி வழக்கறிஞர்களும் நீதிபதிகளும், சமூக நீதிக் கொள்கைகளால் கல்வி, வேலைவாய்ப்பில் குறைந்து வரும் உயர்சாதி பிரதிநிதித்துவம் குறித்து கவலை கொள்ளத் தொடங்கினர். அங்கு தொடங்கிய முயற்சியினால், 1991இல் பொருளாதார அடிப்படையிலான 10% உயர்சாதி இட ஒதுக்கீடு சாத்தியமானது. இந்திரா சஹானி வழக்கில் (1992), உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எப்படி நிலைநிறுத்துவது என்பதை உச்ச நீதிமன்றத்தால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த தீர்ப்பில் கிரீமி லேயர், 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது போன்ற பல சமூகநீதிக்கு எதிரான கருத்தாக்கங்கள் சட்ட வடிவம் பெற்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் வழிமுறைகளை உருவாக்க ஆளும் தரப்பினரை அறிவுறுத்தியது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அரைகுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கூட பொறுக்க இயலாத உயர்சாதியினர் எச்சரிக்கையாகினர். அரசியலமைப்புத் திருத்த உத்திகளை பயன்படுத்தி உயர்சாதி இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கும் பொறுப்பை உயர்சாதி வர்க்கத்தின் அரசியல் தரப்பு ஏற்றுக்கொண்டது. 2003இல் பா.ஜ.க ஆட்சியின் போது உயர்சாதி ஏழைகளுக்கென தனியாக இட ஒதுக்கீட்டை செயற்படுத்தக்கூடிய யோசனைகளை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது. 2004இல், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவுகோல்களை வகுப்பதற்காக ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு (மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற உயர்சாதியினர்களுக்காக நடத்தப்படும் இயக்கங்கள் துணை கொண்டு) பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதியினருக்கு தனி இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மேலும் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையம் தனது அறிக்கையை 2010இல் சமர்ப்பித்தது. அவ்வறிக்கையை செயல்படுத்துவதற்கான முன்மொழிவு 2013இல் மேற்கொள்ளப்பட்டது. அதில் அரசியலமைப்பில் வேண்டிய திருத்தம் செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், 2019 ஜனவரி 12 அன்று, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான சட்டத் திருத்தம் பாஜக அரசால் செய்யப்பட்டது. நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் பேரில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் துணையோடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிச் சட்டமாக்கப்பட்ட EWS 10% இட ஒதுக்கீடு தற்போது ஒன்றிய, மாநி]ல அளவில் பல்வேறு அரசுத் துறைகளில் மின்னல்வேகப் பாய்ச்சலில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடா அல்லது EWS இட ஒதுக்கீடா?

10% உயர்சாதி இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை மீறுகிறது என்ற வகையில் மட்டுமே அதனை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியும். எவ்வாறாயினும், இதை பாஜக அரசு எவ்வாறு செயல்படுத்திக் காட்டியது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு, உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டு, பின்பற்றப்பட்டுவரும் அடிப்படை கட்டமைப்புக் கோட்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பு நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டது. சொத்துரிமை கொண்டவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்த ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில், மாகாண சட்டசபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபை பெரும்பாலும் உயர்சாதியினரைக் கொண்ட சபையாக இருந்தது. அண்ணல் அம்பேத்கர் அதில் விதிவிலக்கு. அது அனைத்து மக்களும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பல்ல. மேலும் அவ்வமைப்பானது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தையும் முழு அங்கீகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆயினும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முழு அதிகாரமும் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு இருந்தது. அதன்படி அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரம் ஒவ்வொரு தலைமுறைக்கும் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின் மூலம் அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம், அந்தந்த தலைமுறைக்கேற்ற வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை புதுப்பிக்கக்கூடிய ஒரு சாதனமாக செயல்படுகிறது.

அரசியலமைப்பை புதிதாக உருவாக்கும் அதிகாரம் நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு இருந்ததைப் போன்றே, அதைத் திருத்தும் அதிகாரமும் நீதிமன்றங்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டதே. நீதிமன்றங்களும் தங்கள் அதிகாரத்தை அரசியலமைப்பிலிருந்தே பெறுகின்றன. அவ்வாறே அடுத்துவரும் தலைமுறைகளும் நாடாளுமன்றத்தின் மூலமாக சட்டப்பிரிவு 368 வழங்கும் சிறப்பு நடைமுறையைப் பயன்படுத்தி அரசியலமைப்பைத் திருத்தும் உரிமையை இந்திய அரசியலமைப்பும் தக்க வைத்திருக்கிறது.

கேசவானந்த பாரதி (1973) வழக்கில் உச்சநீதிமன்றம் 7:6 என்ற மெல்லிய பெரும்பான்மைத் தீர்ப்பில், புதிதாக இயற்றப்படும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறினால் நீதித்துறை தலையிடும் என்றது. அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. ஆனால் பாராளுமன்றத்தின் திருத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றவோ, அழிக்கவோ முடியாது. இருப்பினும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் உள்ளடக்கம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

இருப்பினும் அடிப்படை உரிமைகள், கூட்டாட்சி, மதச்சார்பின்மை, நீதித்துறையின் மீளாய்வு அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற ஆட்சிமுறை, நீதித்துறை சுதந்திரம், சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள், பிரிவு 32இன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம், பிரிவு 226இன் கீழ் உயர் நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம், மேலும் சில தெளிவற்ற கொள்கைகள் உள்ளிட்டவற்றை அரசிலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் கூறுகளாக உச்சநீதிமன்றம் நெடுங்காலமாக கருதிவந்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றமானது அதன் முன் வரும் எந்த ஒரு வழக்கிலும் தனக்குச் சரியெனப்படுவதை வேண்டியபடி வேண்டிய நேரத்தில் இப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் அதிகாரத்தை தானாகவே கையெலெடுத்துக்கொண்டது. இதன் விளைவாக, இத்தகைய தெளிவற்ற, பரந்த, தன்னிச்சையான அதிகாரங்களுடன், உச்ச நீதிமன்றம் மக்கள் அங்கீகாரமற்ற நிரந்தர அரசியல் நிர்ணயசபையாக மாற்றிக் கொண்டது.

வியக்கத்தக்க வகையில், 1975இல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியதை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டால் தடுக்க இயலவில்லை. மேலும் இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதமளித்தது. ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களைக் காக்க அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு ஒரு தடவை கூட பயன்படுத்தப்படவில்லை.

அதற்கு மாறாக, சமூகநீதி சார்ந்த அரசியலமைப்புத் திருத்தங்களைத் தடம்புரளச் செய்வதற்கு இக்கோட்பாட்டைப் பயன்படுத்த பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக எம். நாகராஜ் வழக்கு (2007). இறுதியில் ஒடுக்கப்பட்டோர் நலன் கருதி இயற்றப்படும் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்புத் தடுப்பானாக இக்கோட்பாட்டை பயன்படுத்துவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. தற்போதுள்ள சூழ்நிலைகளில், அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறது என்ற காரணத்தைக் காட்டி 103வது அரசியலமைப்புத் திருத்தத்தை செல்லாததாக்கிவிட முடியும். அந்த முடிவிற்கான காரணத்தை அடிப்படை கட்டமைப்புக் கோட்பாட்டின் மீதான உள்தர்க்கத்தின் அடிப்படையில் உருவாக்க இயலும். கீழ்க்காணும் விளக்கத்தைக் கூறி, 10% EWS இட ஒதுக்கீட்டை, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக் கோட்பாட்டின் பேரில் தடை செய்ய இயலும். “அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானத்தின் பகுதியாகும், அடிப்படை உரிமைகள் சமத்துவத்திற்கான உரிமையை உள்ளடக்கியவை, சமத்துவத்திற்கான உரிமை முறையான சமத்துவம், பொருண்மையான சமத்துவம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. சமூக, கல்விரீதியான பிற்பட்டநிலையின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பு பொருண்மையான சமத்துவத்தின் ஒரு பகுதியாகும். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பொருண்மையான சமத்துவக் கொள்கையை மீறுவதால் 103வது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானமாகிய அடிப்படை உரிமைகளை மீறுகிறது”. இந்தக் காரணமுறையின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தால் தெளிவுபடுத்தப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதெனினும், பார்ப்பன - பனியா வகுப்புகளின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள தற்போதைய உச்ச நீதிமன்றம் இந்தக் காரணமுறையைக் கருத்தில் கொள்வதற்கும், அதையொட்டி தீர்ப்பு வழங்குவதற்குமான சாத்தியம் இல்லை. தர்க்கமும், காரணமுறையும் எக்கேடு கெட்டாலும், என்ன விலைகொடுத்தாவது உயர்சாதிகளின் நலன்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நீதித்துறையின் நோக்கமாகும்.

மறதிநோயால் துன்புறும் நீதிமன்றங்கள்

விவரிக்கவியலாதவாறு, அரசியலமைப்பு பகுதி 3 உள்ள சமூக நீதி தொடர்பான அனைத்துப் பிரிவுகளும், அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிகளுக்கும் (Directive Principles of State Policy), அடிப்படை உரிமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறவே அழித்து செயல்படுத்தக்கூடிய வழிவகைகளின் வடிவத்தில் இருந்தன. அப்படிப்பட்ட தெளிவற்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் அரசாங்கமும் உயர் நீதித்துறையும் ஒடுக்கப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை எவ்வளவு காலம் இழுக்க முடியுமோ அவ்வளவு காலம் இழுக்க வகை செய்தன. இதன் விளைவாக, சட்டப்பிரிவு 16(4) இருந்தும் கூட, ஒன்றிய அரசுத்துறைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, 1990களின் முற்பகுதி வரை செயல்படுத்தப்படவில்லை. அதன்பிறகும், பல்வேறு மாநிலங்கள் இன்னமும் கூட சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு ஒடுக்கப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தவில்லை. ஒடுக்கப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டிற்காக அரைமனதுடனும், தாமதத்துடனும் செய்யப்பட்ட முயற்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி உயர் நீதித்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டன. எப்போதும் போல, அத்தகைய வழக்குகளில் அவற்றின் விளைவை கணிசமாக நீர்க்கச் செய்து, இழுத்தடிக்கும் நிபந்தனைகளை விதித்த பின்னரே இறுதித் தீர்ப்பு வந்தது. 103வது அரசியலமைப்புத் திருத்தத்தால் சேர்க்கப்பட்ட பிரிவுகளான 15(6), 16(6) ஆகியவை செயல்படுத்தக்கூடிய உட்பிரிவுகளேயானாலும், அவை மொத்தத்தில் வேறு தளத்தில் செயற்படுவது போலத் தோன்றுகிறது. அதை முதலில் செயற்படுத்துவதற்கு ஒன்றிய, மாநில அரசுகளின் வெவ்வேறு துறைகளுக்கிடையே தீவிர போட்டி நிலவுவதாகத் தெரிகிறது. இயற்றப்பட்ட சில நாட்களுக்குள், உயர்சாதி ஒதுக்கீட்டை செயற்படுத்துவதற்கான அமைச்சக அறிவிப்புகள் திடமாகவும், வேகமாகவும் வர ஆரம்பித்துவிட்டன. இதுவரை இந்த முயற்சிகள் எதுவும் உயர் நீதித்துறையால் தடுத்து நிறுத்தப்படவில்லை. மாறாக நீதிமன்றமே உயர்சாதி ஒதுக்கீட்டின் தீவிர ஆதரவாளராகி விட்டது. கடந்த காலத்தில் நீதித்துறை ஒடுக்கப்பட்டோர் தொடர்புடைய இட ஒதுக்கீட்டில் பின்வரும் தரவுகளை தொடர்ச்சியாக கோரியது.

  1. இட ஒதுக்கீடு வழங்கப்படும் வகுப்பினரின் பிற்படுத்தப்பட்ட நிலையின் மீதான அளவிடக்கூடிய தரவுகளை அரசு சேகரிக்கவேண்டும்.
  2. அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தின் போதாமை குறித்து அளவிடக்கூடிய தரவுகளை அரசு அளிக்க வேண்டும்.
  3. சட்டப் பிரிவு 335 பணித்தபடி, பணிகளில் பொதுவான செயல்திறன் பாதிக்கப்படாது என்பதை அளவிடக்கூடிய தரவுகள் வழியாக அரசு நிறுவ வேண்டும்.

10% உயர் சாதி இட ஒதுக்கீட்டிற்குத் தடை விதிக்கக் கோரும் வழக்குகளை முடிவு செய்யும்போது மேற்காணும் அளவிடக்கூடிய தரவுகளின் தேவைகளை நீதித்துறை அதிசயமாக மறந்துவிட்டது. 103வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டாயத் தேவை இருப்பதைக் காண்பிக்கும் ஆவணரீதியான ஆதாரத்தை முன்வைக்கும்படியும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தவில்லை. எம். நாகராஜ் (2007) வழக்கிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் கண்டிப்பான நிபந்தனையை பிகே பவித்ரா 1 (2017) வழக்கில் கர்நாடக அரசின் 2002 ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 3, 4 ஆவது பிரிவுகளை ஒழித்துக்கட்ட உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது. மேலும், ஒடுக்கப்பட்டவர்களுக்குரிய இட ஒதுக்கீடுகளை செயல்படுத்துவதைத் தடுக்க 50% உச்சவரம்பை உச்ச நீதிமன்றம் அடிக்கடிச் சுட்டிக்காட்டியது. இக்காரணங்கள் முறையற்ற 103ஆவது சட்டத் திருத்தத்தை தடை விதிக்கப் போதுமானதாக இருந்திருக்கவேண்டும். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை அளப்பதற்கும் உயர்சாதிகளின் நலன்களை அளப்பதற்கும் நீதித்துறைக்கு வெவ்வேறு அளவுகோள்கள் இருக்கின்றன. நீதித்துறையினால் ஒரு முறை செய்யப்பட்ட தவறல்ல இது. சமூக நீதி தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான போக்கு இது. பிரதிநிதித்துவமற்ற நீதித்துறையை பீடித்த தீராத மறதிநோயாகத் தெரிகிறது. அரசு வேலைவாய்ப்புகளில் உயர்சாதி வகுப்பின் பிரதிநிதித்துவத்தின் போதாமையை அளவிடக்கூடிய தரவுகளின் கட்டாயத் தேவை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் 103வது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரிவு 3 இலிருந்து நீக்கப்பட்டு, சட்டப் பிரிவு 16(6) இன் மூலம் அரசியலமைப்பில் நுழைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த காலந்தொட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விதிகள் மீளாய்வு செய்ய பயன்படுத்தப்பட்ட ஓர் அளவுகோலுக்கு மாற்றான அளவுகோலை உயர்சாதி ஒதுக்கீட்டை மீளாய்வு செய்யப் பயன்படுத்துவதற்கான ஒரு சாக்கை இது உயர் நீதித்துறைக்கு வழங்குகிறது. அது இல்லாமலிருந்தாலுமே கூட, அதே முடிவை எட்டுவதற்கு நீதித்துறை வேறொரு சாக்கைப் பயன்படுத்த எல்லா சாத்தியங்களும் உண்டு.

பிரதிநிதித்துவமில்லாத உயர் நீதித்துறையும், அதன் நிலையற்றத் தாக்கங்களும்

பிரிட்டிஷாரிடமிருந்து காங்கிரசுக்கு அதிகாரம் மாறிய காலத்திலிருந்தே, அனைத்து அரசு நிறுவனங்களும் சில ஆதிக்க சாதிக் குழுக்களின் வாழ்விடமாக இருக்கின்றன. அவை இந்திய அரசியலமைப்பினால் கொண்டுவரப்பட்ட அரசு நிறுவனங்களின் ஜனநாயகப் பண்பின் மீது மிகவும் விரும்பத்தகாத செல்வாக்கைச் செலுத்துகின்றன. அரசின் வெவ்வேறு துறைகளுக்கிடையில் உள்ள சரிபார்த்தல்கள் மற்றும் சமன்படுத்தல்கள் கோட்பாடு எனும் அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு இந்த பார்ப்பனநாயகத்தின் மூலம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது. பிறப்பின் வழி பாதுகாக்கப்படும் உயர் சாதி ஒற்றுமையின் விளைவாக பல்வேறு அரசு நிறுவனங்கள் முழுவதிலும் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டு எளிதில் கரைந்து போகிறது.

எடுத்துக்காட்டாக, ஆட்கொணர்வு மனு (1976) வழக்கில், தாக்குதலுக்குள்ளான மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றம் அவலமான முறையில் தோற்றது. சரிபார்த்தல்கள்-சமன்படுத்துதல்கள் கோட்பாடு கேலிப்பொருளானது. பிரதிநிதித்துவமற்ற உயர் நீதித்துறையால் தன் சொந்த சாதியிலிருந்து வந்த எதேச்சதிகாரப் பிரதம மந்திரியை எதிர்த்து நிற்க முடியவில்லை. மறுபடியும் கமண்டலப் போராட்டத்தின் போது, அரசியல் பேராசை கொண்ட சக சாதிச் சகோதரர்களால் ஆபத்திற்குள்ளாகப்பட்ட அரசியலமைப்பு ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு அரசாங்கத்தின் நாடாளுமன்ற, நிர்வாகப் பிரிவுகள் தவறியதைத் தடுத்து நிறுத்துவதற்கும் நீதித்துறை தவறியது. எதேச்சதிகாரப் போக்குகளுக்கு எதிராக, அத்தகைய அச்சுறுத்துவதல்களைத் தடுத்து நிறுத்த வடிவமைக்கப்பட்டதாக பொதுவாக சொல்லப்படும் எண்ணற்ற நிறுவனங்களைக் காட்டிலும், பரந்துபட்ட சமூகக் குழுக்களால் அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்படுவது சிறந்த உத்தரவாதமாக இருக்கும். ஒரு எதேச்சதிகார, ஜனநாயக விரோத ஆட்சியின் கீழ் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். பல்வேறு சமூகக் குழுக்களின் பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே நிர்வாகப்பிரிவின் மிகப்பரந்த அதிகாரங்களின் மீதான ஒரு சக்திவாய்ந்த தடுப்பாக நீதித்துறை செயல்பட முடியும். இத்தகைய பிரதிநிதித்துவப் பண்பில்லாத காரணத்தால் நிர்வாகப் பிரிவு எதேச்சதிகார சாகசத்தை நோக்கிப் பயணப்படும்போது இந்திய நீதித்துறை கடமையுணர்வோடு கண்சிமிட்டிச் செல்கிறது.

அதே போன்று, பிரதிநிதித்துவமற்ற நீதித்துறை அரசிலமைப்பு ரீதியாக கற்பனை செய்யப்பட்டிருந்த சமூகப் புரட்சியை தொடர்ந்து தடை செய்து வந்துள்ளது. அது ஆளும் உயர்சாதிகளின் சார்பாக பிற்போக்கு விளவுகளுடன் கூடிய பார்ப்பனிய சோஷலிச அரசாங்கத்திலிருந்து பார்ப்பனிய முதலாளித்துவ அரசாங்கத்திற்கு மாறுவதற்கு உதவி வருகிறது. ’உயர்நிலை’ என்ற முன்குறிப்பு கொண்ட எல்லா வெளிகளிலும் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவத்தை மறுக்கும் கொள்கைக்கு வடிவம் கொடுப்பதற்கு நேர்மையற்ற முறைகளை நீதித்துறை மேற்கொண்டு வந்துள்ளது.

நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை கோலோச்சும் இக்காலத்தில் உயர் கல்வியில் ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவப் பிரச்சினையையும், நீதித்துறையின் பங்கையும் எடுத்துக் கொள்வோம். உயர் கல்வியின் பெரும்பங்கு தனியார் கைகளில் இருக்கையில், பி.ஏ. இனாம்தார் வழக்கில் (2008) அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தனியார் நிறுனங்களின் மீது திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பிரகடனம் செய்தது. இந்தக் குறுகிய பார்வையை நிவர்த்தி செய்ய சட்டப்பிரிவு 15(5) அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது. ஏ.கே. தாக்கூர் வழக்கில் (2008) சட்டப்பிரிவு 15(5)இன் அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மை உறுதிபடுத்தப்பட்ட நிலையில் சமூக நீதியை ஒத்திப்போடும் நீதித்துறை கொள்கை தனியார் உயர் கல்வியிலும் முழுவீச்சோடு விளையாடியிருக்கிறது.

முதலாவதாக, இனாம்தார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்டோர் தனியார் உயர் கல்வியில் அதன் உருவாக்க நிலைகளில் பிரதிநிதித்துவம் பெறமாட்டார்கள் என்பதை உறுதி செய்தது. இரண்டாவதாக, சட்டப்பிரிவு 15(5) என்பது வெறும் செயல்படுத்தக்கூடிய ஏற்பாடு மட்டுமே. அதாவது ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் (ஆசிரியர், நிர்வாகப் பணியாளர்கள் இரண்டிலும்) பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை இப்போது ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற, நிர்வாகப் பிரிவுகளின் இனிய விருப்பத்தைச் சார்ந்தது. இனாம்தார் வழக்குத் தீர்ப்பின் மொத்த விளைவு என்பது தனியார் உயர் கல்வியில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம் என்கிற கேள்வியை அந்தந்த மாநிலங்களின் தற்செயலான அரசியல் நிலைமைகளைப் பொறுத்து ஓரிரு பத்தாண்டுகளுக்கு ஒத்திப் போட்டது. அரசியல் மனவுறுதியைத் திரட்டி சட்டப்பிரிவு 15(5) ஐ நடைமுறைப்படுத்த இயலும் இடங்களிலும் கூட நீதித்துறையின் முட்டுக்கட்டைகள் பெருமளவில் தொடர்கின்றன.

எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேச மாநிலச் சட்டமன்றம் இனாம்தார் வழக்கின் தீர்ப்பை மீறி தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் SC, ST, OBC வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யும் ”கல்வி நிறுவனங்களில் சேர்க்கை (SC, ST, OBC வகுப்புகள்) சட்டம், 2006” என்ற சட்டத்தை இயற்றியது. ஆனால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏதாவது காரணத்தைக் காட்டி தடுத்து, சுதா திவாரி வழக்கின் (2011) தீர்ப்பில் இச்சட்டத்தின் முக்கியமான பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பளித்து இறுதியாக அதற்குச் சாவுமணி அடித்தது. அதாவது, அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 15(5)இன் படி தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் கூட உத்தரப்பிரதேசத்தின் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டோருக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வழி இன்றளவும் இல்லை.

நீதித்துறையில் ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம்

சட்டப்பிரிவு 16(4) இன் கீழ், உயர் நீதித்துறையில் SC, ST, OBC வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்டமன்ற அல்லது நிர்வாக ஆணையின் வாயிலாகவே நனவாக முடியும். ஆனால் பிற்காலத்தில் அத்தகைய முயற்சிகளைத் தகர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றமானது உயர் சிறப்புப் படிப்புகளிலும், உயர் அதிகாரமட்டத்திலும் இடஒதுக்கீடு சட்டப்பிரிவு 335 இன் கீழ் நிர்வாகத் திறனை பாதிக்கும் என்ற எண்ணம் உருவாகும்படி பல ஆண்டுகளாக அடித்தளமிட்டுக்கொண்டிருக்கிறது. மாறாக, சட்டப்பிரிவு 335 இன் நோக்கமானது இட ஒதுக்கீட்டின் வாயிலாக பலத்தரப்பட்ட பிரிவுகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம் நிர்வாகத்தை திறன்மிக்கவதாக்குவது ஆகும். எனவே, உயர் நீதித்துறை உட்பட்ட ஒன்றிய அல்லது மாநில அலுவல்கள் தொடர்பான சேவைகளுக்கும் பதவிகளுக்கும் நியமனங்கள் செய்யும்போது SC, ST, OBC வகுப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். இவ்வாறாக, சட்டப்பிரிவு 16(4A) ஐயும், சட்டப்பிரிவு 335 ஐயும் ஒருசேர வாசிக்கும்போது, அது ஒடுக்கப்பட்டோருக்கு உயர் நீதித்துறையில் பிரதிநிதித்துவத்திற்கான முழு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் அதற்கு, உச்ச நீதிமன்றத்தின் முடிவெடுத்தலில் ஆழமாக பதிந்துள்ள பார்ப்பனீயப் போக்குகளை நாம் தோற்கடிக்க வேண்டியுள்ளது.

உயர் அதிகார வர்க்கத்தில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம்

உயர் அதிகார வர்க்கத்தில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநித்துவமும் அதே போன்று பொங்கியெழச் செய்யக்கூடியதே. 1950களின் இறுதி வாக்கில், உயர்சாதியினரின் அடிவயிற்றில் இருக்கும் வெறுப்பின் காரணமாக, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டிற்கான சிற்ப்பு ஏற்பாடு இல்லாமல், உயர் அதிகார வர்க்கத்தில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்த முடியாது என்பது தெளிவாகியது. பல மாநிலங்களில் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு செய்யும் சட்டமன்ற முயற்சிகள் உயர் நீதித்துறையால் தொடர்ந்து தடுக்கப்பட்டது. இந்திரா சஹானி வழக்கில் (1992), அரசியலமைப்புச் சட்டத்தின் 16(4) பிரிவின் கீழ் வழங்கப்படும் ஆரம்பகட்ட நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கமுடியும், பதவி உயர்வில் வழங்க முடியாது என தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றம் தடுத்த பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை வழங்க நாடாளுமன்றம் 77வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் புதிய சட்டப்பிரிவைச் 16(4A) சேர்த்தது. இருப்பினும் OBC வகுப்பினரைத் தவிர்த்து விட்டு, SC, ST வகுப்பினருக்கு மட்டும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மட்டுமே 77வது அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 16(4A)இல் பயன்படுத்திய SC, ST மற்றும் OBC வகுப்பினரைப் பிரிக்கும் சூழ்ச்சியைப் போல, இன்னொரு தந்திரம் கிரீமி லேயர் மூலம் பிற்படுத்தப்பட்டோரை இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலிருந்து வெளியேற்றி அவர்களை SC, ST குழுவிற்கு எதிராக நிறுத்தும் மற்றுமொரு கருவியாகும்.

இரண்டாவது பி.கே. பவித்ரா வழக்கில் (2019) சட்டப்பிரிவு 16(4A)இன் தந்திரமான பிரிவுகளை ஆதரித்த வேளையில், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் தான் உருவாக்கிய மேற்கூறிய இரண்டு தந்திரங்களை உச்சநீதிமன்றம் முன்னிலைப்படுத்தத் தவறவில்லை. மேலும் உச்சநீதிமன்றம் இவ்வழக்குத் தீரப்பில், கிரீமி லேயர் கொள்கையை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்போடு இணைக்க முயன்றது. கிரீமி லேயர் கொள்கையை SC, ST இட ஒதுக்கீட்டிற்கும் பொறுத்த உச்சநீதிமன்றம் கடுமையாக முயன்றது. உயர் நீதித்துறையின் இந்தத் தந்திரோபாயமான குறுக்கீடுகள் சட்டமியற்றும் பிரிவையும், நிர்வாகப்பிரிவையும் பின்வரும் இரண்டு வகையில் செயல்பட வைத்தன.

முதலாவதாக, உயர் அதிகார வர்க்கத்தை இயல்பாகவே பார்ப்பன-பனியா இரட்டையாதிக்கம் கொண்ட தொழில்துறை முதலாளிகளுக்கு அடிபணியச் செய்யப் பணிப்பதின் மூலம் உயர் அதிகாரப் பதவிகளை அடையும் சில SC, ST அதிகாரிகள், பார்ப்பன அதிகார வர்க்கத்திடமிருந்து உத்தரவுகளை பின்பற்றும் வகையிலும், இரண்டாவதாக, இட ஒதுக்கீடுகள் இன்றி, நேரடித் தேர்வுகள் மூலம் உயர் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கவும் வழிவகை செய்தது. இதன் மூலம், 1950களின் பிற்பகுதியில் இருந்து இரண்டாவது பி.கே. பவித்ரா வழக்கு (2019) வரை, SC, ST வகுப்பினருக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உயர் நீதித்துறை நிறுத்தி வைத்திருந்த காரணம் விளங்குகிறது. முற்போக்காக நாகராஜ் (2006) மற்றும் ஜர்னைல் (2019) தீர்ப்புகளில் இருந்து இரண்டாவது பி.கே. பவித்ரா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்ட கீழ்க்காணும் பகுதியில் நீதித்துறையின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

  1. இட ஒதுக்கீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் சாதியை தொடர்ந்து வைத்திருக்கும்.
  2. உயர் பதவிகளில் சிலவற்றில் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக அனுமதிக்கலாகாது.

இதில், இரண்டாவது கருத்து இந்திரா சஹானி (1992) வழக்கில் முதலில் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்டு, சமூக நீதி நடவடிக்கைகளுக்கு எதிரான ஒருவகை மனநிலையை உருவாக்க, ஜர்னைல் வழக்கில் (2019) திரும்பவும் எடுத்தாளப்பட்டு, இரண்டாவது பி.கே. பவித்ரா வழக்கில் (2019) மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்திய அதிகார வர்க்கத்தின் மூன்று பிரிவுகளன சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை ஆகியவற்றின் செயல்திறன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள, மேற்கண்ட துறைகளுக்கு இடையேயான அதிகாரங்களைப் பிரிப்பதற்கான பாரம்பரிய முறை போதுமானதாக இல்லை என்பதை நிறுவுவதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இந்திய அரசின் மூன்று பிரிவுகளின் செயல்திறன் பரிமாணம், சாதி ஒழுங்கை ஒன்றுபடுத்தி வலிமைப்படுத்துவதை புரிந்துகொள்ளும் போது, பிரதிநிதித்துவமற்ற உயர் நீதித்துறையின் சூழ்ச்சிகள் வெளிப்படையாகத் தெரியவரும். உண்மையில், இந்திய அரசு நிறுவனங்களுக்கிடையேயான சாதி வலையிணைப்பின் அச்சாணியாக விளங்கும் உயர் நீதித்துறை அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்பதாக கருதப்படுகிறது.

அரசியலமைப்பு விழுமியங்களின் காவலராக விளங்க வேண்டிய நீதித்துறை ஆளும்வர்க்க சாதிக் குழுக்களுடன் அணிசேருவதால் தவிர்க்கமுடியாத வகையில் அரசியலமைப்புச் ஜனநாயகமும், சமூக ஜனநாயகமும் பாதிக்கப்படுகின்றன. 13 பாயிண்ட் ரோஸ்டர் முறையின் அறிமுகமும், SC, ST வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துபோகச் செய்யும் நீதித்துறையின் தீர்ப்பும் அத்தகைய அணிசேர்க்கையை உணர்த்துகின்றன. உயர் நீதித்துறைக்கும் சட்டமியற்றும் பிரிவுக்கும் நிர்வாகப் பிரிவுக்கும் இடையில் உள்ள சாதி அடையாளத்தால் கட்டப்பட்ட தொப்புள்கொடி பிணைப்பை உடைத்து எல்லாவற்றையும் பிரதிநித்துவமுள்ள நிறுவனங்களாகச் செய்யும் வரை இந்திய ஜனநாயகம் மரணப்படுக்கையிலேயே இருக்கும்.

எனவே, பொருளாதார அடிப்படையிலான உயர் சாதி இட ஒதுக்கீட்டை பிரதிநிதித்துவத் தன்மையில்லாத உயர் நீதித்துறை கட்டியெழுப்பிய நிலைமைகளின் கீழ் பார்ப்பனமயமாக்கப்பட்ட அரசியல் வர்க்கத்தால் கற்பனை செய்ய முடிந்தது. அத்தகைய இட ஒதுக்கீட்டை வடிவமைக்கத் தேவையான சட்ட உத்திகளும் நீதித்துறையால் வளர்த்தெடுக்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, வழங்கப்பட்டன. ஆகவே, EWS இட ஒதுக்கீட்டையும், அதைப்போன்ற வேறு சட்டங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஒவ்வொரு நியாயமான முயற்சியிலும் உயர் நீதித்துறையில் ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் துணைபுரியும் வழிவகைகள் இருக்கவேண்டும். இம்முயற்சிகள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்படும் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் வழியாக, சட்டக்கல்வியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பூலே - அம்பேத்கரிய கருத்துக்களால் உயிரூட்டப்பட்ட சட்டத்தை, சமூக அறிவியலோடு இணைத்த கல்வி வெளி உயர் நீதித்துறையில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவத்திற்கான ஏவுதளமாக இருக்கும். உயர் நீதித்துறையில் ஒடுக்கப்பட்டோர் தலைமை இருந்தால், 103வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் போன்றவை நனவாக முடியாது. கூடுதலாக, பாபாசாகேப் அம்பேத்கர் எடுத்துரைத்தவாறு சமூக ஜனநாயகத்தை நிறுவுவதற்கு புரட்சிகர உள்ளாற்றலைக் கட்டவிழ்த்துவிடுவதும் சாத்தியமாகும். இறுதியாக, அரசியலமைப்பைப் பற்றியும் பாபாசாகேப் அம்பேத்கர் கூறிய புகழ்பெற்ற வரிகளை நினைவுகூர்வது சிறந்த அறிவுறுத்தலாக இருக்கும்.

“ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும். இருப்பினும், ஒரு மோசமான அரசியலமைப்பும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது நல்லதாகவே இருக்கும்”

அவ்வகையில், ஒடுக்கப்பட்ட சமூகம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும், அரசாங்கங்களிலும், மிக முக்கியமாக உயர் நீதித்துறையிலும் அரசியலமைப்பை செயல்படுத்துவதற்கு இது சரியான நேரம்.

- முனைவர் அயாஸ் அஹ்மத், தலைவர், குலோகல் சட்டப் பள்ளி, சஹரன்பூர், உத்தர பிரதேசம் 

&

முனைவர் யோகேஷ் பிரதாப் சிங், சட்டப் பேராசிரியர் மற்றும் பதிவாளர், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், கட்டாக், ஒடிஷா 

நன்றி: Round Table India இணையதளம் (2019, செப்டம்பர் 20 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: முனைவர் மு. சுந்தரமூர்த்தி