இட ஒதுக்கீடு என்பது சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் இழைக்கப்பட்ட சமூக அநீதியோடு நேரடியாக தொடர்புடையது. இட ஒதுக்கீட்டின் விதை சாதி எதிர்ப்பு போராட்டங்களின் மூலம் கண்டெடுக்கப்பட்டது. இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை சமூக அரசியலில் உறுதி செய்யவும் சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கும் நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்டது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அரசியல் நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், அரசுத் துறைப்பணிகள் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டது. ஆனால், தேசியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அன்றும் இன்றும் என்றுமே உவப்பானதாக இல்லை. அவர்கள் சமத்துவத்தை நோக்கி நகர்வதை விட சனாதானத்தை தான் உயர்த்திப் பிடித்தார்கள்.

இட ஒதுக்கீடு என்பது அனைத்து மக்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவே தவிர வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்று அம்பேத்கரும் பெரியாரும் மிகத்தெளிவாக வரையறுத்தார்கள். ஆனால், நூற்றாண்டு காலப் போராட்டங்களின் செயல் வடிவங்களை மறுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 10% EWS இட ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களின் மைய நூலாக தகுதி, திறமை என்பவையே மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டு வருகின்றன. வரலாற்றில் பன்னெடுங்காலமாக பார்ப்பனர்கள் வழிபாடு, கல்வி, ஆன்மிகம், அதிகாரம் என ஏகபோக உரிமைகளை அனுபவித்தனர். வைசியர்கள் செல்வம் கொழிக்கும் தொழில்களை செய்தனர். சாதி ரீதியிலான அடக்குமுறைகளை, செல்வம், கல்வி, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றின் மீதான் ஏகபோக உரிமைகளை மநு தர்மம், அர்த்தசாஸ்திரம் ஆகிய புராண பொய்களின் வழியே நிறுவினார்கள். சாதிய அடுக்கில் முதல் மூன்று வர்ணங்களுக்கே கல்விக்கான உரிமை இருந்தது. காலனியாதிக்க ஆட்சிக் காலத்தில் நவீனமயமாதல், ஜனநாயகமாதல் ஆகியவற்றின் வழியே வர்ணாசிரமத் தடைகள் உடைக்கப்பட்டன. சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஜோதிராவ் பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்கள் புராண. இதிகாச கதைகளின் வழியே வந்த வர்ணசிரம தர்மத்தை ஒழிக்கப் போராடினார்கள். சுருக்கமாக, கல்வியிலும், வேலையிலும் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே அனுபவித்த வந்த ஏகபோக உரிமைகளை அனைத்து சமூக மக்களுக்குமாக மாற்றப் போராடினார்கள்.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து திறமை, தகுதி எனக் குரல் கொடுத்தவர்கள் EWS இட ஒதுக்கீடு என்று வரும்போது அமைதி காத்தனர். தகுதி, திறமை பற்றி பேச்சே இல்லை.

EWS இட ஒதுக்கீட்டை பாரதிய ஜனதா கட்சி (BJP) 'ஏழைகளுக்கான நீதி' என வரவேற்றுள்ளது. EWS இட ஒதுக்கீடு சட்டத்தின் படி, வருடத்திற்கு 8 லட்சம் வருமானம் உள்ளவர்களும், 1000 சதுர அடியில் சொந்த வீடு கொண்டவர்களும் "ஏழைகளாக" வரையறுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 30 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் (கிராமங்களில் தினம் 27 ரூபாய் வருவாய் உள்ளவர்களும், நகரங்களில் 32 ரூபாய் வருவாய் உள்ளவர்களும்) இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நகரங்கள், கிராமங்கள் பாகுபாடின்றி இருக்கும் ஏழை மக்களில் பெரும் பகுதியினர் SC, ST, OBC வகுப்பைச் சார்ந்த மக்களே. நாளொன்றிற்கு ரூ.75 வருவாய் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என வரையறை செய்துள்ள நிலையில் உயர் சாதியினர் நாளொன்றிற்கு ரூ.2,222 வருவாய் இருந்தாலும் ஏழை என்கிறது இச்சட்டம். வருவாய்த் துறை தரவுகளின்படி, இந்திய மக்கள்தொகையில் 1% மட்டுமே வருடத்திற்கு 10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்கள்.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த 1990 களில் அன்றைய பிரதமர் வி.பி. சிங் முயற்சி எடுத்தபோது, உயர்சாதியைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையின் தரவுகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று கூறி கடுமையாக விமர்சித்தனர். உண்மையில், மண்டல் கமிஷன் அறிக்கையானது 1891, 1931 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் அமைந்தது. மேலும், பி.பி. மண்டல் பல்வேறு சாதிச் சமூகங்களின் சமூக, கல்வி, பொருளாதாரப் பரிமாணங்களைக் காரணிகளாகக் கொண்டு பின்தங்கிய நிலையை அளவிட அளவுகோல்களை உருவாக்கினார். ஆனால் இப்போது, ​​உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வாதிடுவதில் நியாயமோ, நம்பகமான தரவுகளோ முன்வைக்கப்படவில்லை. மண்டல் கமிஷன் அறிக்கை, சமமற்றவர்களை சமன் செய்வது என்பது சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதாகும் என்றது. EWS ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளித்ததன் மூலம், சமத்துவமற்றவர்களை சமம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. EWS இட ஒதுக்கீடு நியாயமற்றது. ஏனெனில் அது சாதி அமைப்பில் வரலாற்று ரீதியாக பயனடையும் சமூகங்களுக்கு மேலும் சிறப்புரிமையை வழங்குவதன் மூலம் சமூக நீதிக்கான களத்தை சீரழிக்கிறது.

1990 களில் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட இருந்தபோது, ​​பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் அதை எதிர்த்தன. பாஜக தலைமையிலான வலதுசாரிகள் ரத யாத்திரையை அறிவித்து, மண்டல் கமிஷன் அறிக்கை உருவாக்கிய எழுச்சியிலிருந்து பிற்படுத்தப்பட்ட சாதியினரின் கவனத்தை வெற்றிகரமாக திசை திருப்பினார்கள். ராமர் கோவில் எனச் சொல்லி, அநீதியாக பாபர் மசூதியை இடித்து, ஒடுக்கப்பட்ட சாதியினரை மத ரீதியாக தூண்டியதின் மூலம், ஒடுக்க்கப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கான நியாயமான போராட்டங்கள் பின்தள்ளப்பட்டன. மண்டல் கமிஷனுக்கான நாடு தழுவிய எதிர்ப்புக்கு மாறாக, EWS இட ஒதுக்கீடு நாடு தழுவிய பல அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுகிறது.

முன்னுதாரணம் இல்லாமல், உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு இப்போது பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் மீற முடியாதது அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதின் மூலம் ஒரு நன்மை ஏற்பட்டால், அது இறுதியில் பெரியார் கற்பனை செய்த விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கும்.

நன்றி: The Hindu ஆங்கில நாளிதழ் (2022, நவம்பர் 28 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: செல்வகுமார்

Pin It