இட ஒதுக்கீடு பட்டியலைத் திருத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தும், வெகுஜன ஊடகங்களின் போக்கும், இட ஒதுக்கீடு என்பது தலித்துகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது, இட ஒதுக்கீட்டை பெற்ற பின்னர் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மீண்டும் இட ஒதுக்கீட்டு பெறுவதை தவிர்க்க வேண்டும். அப்படித் தவிர்த்தால் மீதமுள்ள வசதியற்ற தலித்கள் இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் பகுதி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்போது இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் பெருங்குரல் எழுப்புகின்றனர். தற்போது ​SC, ST வகுப்பிற்குள் சமூகப் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவுகள் உள்ளன. சில SC, ST பிரிவுக்குள் உள்ள, இன்னும் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறாதவர்களின் சமூக மேம்பாட்டிற்காக பெருங்குரல் எழுப்பப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, SC, ST, OBC வகுப்புக்குள் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாகப் போய்ச் சேராதவர்கள் நடத்தும் போராட்டம் உள்ளது. ஆகவே எங்கள் கருத்துப்படி, இட ஒதுக்கீடு பெறும் சாதிகளின் பட்டியலை அரசு திருத்த வேண்டும் என்று டாக்டர் ராஜீவ் தவான் கேட்டது மிகச் சரி. இட ஒதுக்கீட்டின் ஒட்டுமொத்த அளவிற்கு எவ்வித இடையூறு இல்லாமல் இதைச் செய்யலாம். இதனால் இட ஒதுக்கீட்டின் பலன்கள் தேவையானவர்களுக்கு சென்று சேரும். கடந்த 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்றவர் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறாத மற்ற வகுப்பினரின் வாய்ப்புகளை பறிக்க மாட்டார்கள்.

parliament 500செப்ரோலு லீலா பிரசாத் ராவ் (2020) வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மேற்சொன்ன கருத்தை வெளியிட்டது. இட ஒதுக்கீட்டின் பொருளாதாரக் கோணம் மேலே உள்ள கருத்தில் வெளிப்படையாக உள்ளது. இந்த கருத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கத்துடன் ஒத்துப் போகின்றனவா என்பதை ஆராய முனைந்தால், இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(4) பின்வருமாறு கூறுகிறது.

அரசின் கீழ் உள்ள துறைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட குடிமக்களுக்கு ஆதரவாக நியமனங்கள் அல்லது பதவிகளில் இட ஒதுக்கீடு செய்யும் எந்த ஏற்பாடுகளையும் இந்தப் பிரிவில் உள்ள வேறந்த விதிகளும் எதுவும் தடுக்காது.

அரசு வேலைவாய்ப்புகளில் SC, ST, OBC வகுப்பினருக்குப் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக இட ஒதுக்கீடு இயற்றப்பட்டது என்பதை சட்டப்பிரிவு 16(4) தெளிவுபடுத்துகிறது. அரசு அதிகாரத்தைப் பகிர்வது என்பது போதுமான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதின் தொடர்ச்சி. மேலும் இது இந்திரா சஹானி வழக்கின் (1992) தீர்ப்பின் நோக்கமாக மேற்கண்ட அதிகாரப் பரவல் விதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்பு நிர்ணய சபையில் சுட்டிக் காட்டியது போல், சுதந்திர கால கட்டத்தில் ​​ஒரு சில சமூகங்களால் மட்டுமே அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தப்பட்டு வந்ததால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரத்தைப் பகிர்வது அவசியம். இருப்பினும், மற்ற சமூகத்தினரால் ஏன் பொது சேவைகளில் சேர முடியவில்லை?

அதற்கான பல்வேறு காரணங்களை அரசியலமைப்பு நிர்ணய சபையில் இருந்த பிரதிநிதிகள் பட்டியலிட்டனர். உதாரணமாக, ஆர்.எம். நளவாடே, பி.கக்கன் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, பட்டியலின மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கூறினார். பாகுபாட்டின் தொடர்ச்சியை விளக்கிய ஹெச்.ஜே. காண்டேகர், "நிலைமை மிகவும் பரிதாபகரமானது, ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அரசுப் பதவிகளுக்கு விண்ணப்பித்தாலும், அப்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஏனெனில் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல, வேறு சமூகத்தை சார்ந்தவர்கள்" எனக் கூறினார்

அவர்களுக்கு அரசு வேலை பறிபோனதற்குக் காரணம் ஏழ்மையல்ல, சாதிதான். இத்தகைய சூழ்நிலையில், அரசுத் துறைகளில் SC, ST மக்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி இட ஒதுக்கீடு மட்டுமே. இட ஒதுக்கீட்டின் தவிர்க்க முடியாத தன்மையை உணர்ந்த ஏ.ஏ. கான் அரசியலமைப்பு நிர்ணய சபையில் “அரசு சேவைகள் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு ஏகபோகமாக இருந்தால், மற்றவர்கள் தங்களின் இருத்தல் புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கலாம். இந்த யோசனையே நாட்டில் விரும்பத்தகாத தன்மையை உருவாக்கும்” என எச்சரித்தார்.

எனவே, இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்கும் கருவியாகப் பார்க்கப்படவில்லை. பொருளாதாரத்தில் வறிய ஏழைகளுக்கு ஆதரவாகவும் கோரப்படவில்லை. இட ஒதுக்கீடு இல்லாமல், உயர்சாதியினரை மட்டுமே உள்ளடக்கிய ஏகபோக ஆதிக்கம் பெற்ற தேர்வுக் குழுக்கள், தங்களின் வேரூன்றிய வர்க்க சார்பு காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களைப் பணியமர்த்த முன்வர மாட்டார்கள் என்பதால் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

இச்சூழலில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16(4) இன் கீழ் கூறப்பட்ட "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்ற கருத்தாக்கத்தை எப்படி வரையறுப்பது என்பதில் மற்றொரு நீடித்த கேள்வி எழுகிறது. இருப்பினும், பிரிவு 16(4) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தீர்மானிக்கம் கடமையை, "அரசின் கருத்தில்" என்ற சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஒன்றிய மாநில அரசுகளுக்கு விட்டுச்செல்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு (Backward Class) என்ற கருத்தாக்கம் குறித்து அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள் பயனுள்ள ஆதாரமாக விளங்குகின்றன

அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தில் சில உறுப்பினர்கள் SC (Harijans), ST ஆகியோரை "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Class)" என்று வரையறுக்க பரிந்துரைத்தனர். மற்றவர்கள் தங்கள் வகுப்பின் நலன்களைப் பாதுகாக்க இயலாத வகுப்பினரையும், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என வாதிட்டனர். சிலர் பொருளாதார மற்றும் மத ரீதியாக பின்தங்கிய நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர். இருப்பினும், மேலே விளக்கப்பட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 16(4) உருவாக்கப்பட்ட வரலாற்றை முழுவதுமாகப் படித்தால், பொருளாதாரப் பின்தங்கிய நிலை இட ஒதுக்கீட்டிற்கான தனித்த காரணியாக இல்லை என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்திரா சஹானி வழக்குத் (1992) தீர்ப்பில், “விவாதம் சமூக பின்தங்கிய நிலையை மையப்படுத்தி இருந்தது. இந்தியச் சூழலில், சமூகப் பின்தங்கிய நிலை கல்வியில் பின்தங்கிய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவை இரண்டும் சேர்ந்து வறுமைக்கு இட்டுச் செல்கின்றன. இப்படி உருவாகும் வறுமை நிலை சமூகப் பின்தங்கிய நிலையும் கல்விப் பின்தங்கிய நிலையையும் மென்மேலும் நிலைநிறுத்துகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் கே.எம். முன்ஷியின் உரைகள் மூலம், அரசின் கீழ் உள்ள துறைகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறாத வகுப்பினர் என்பது அவர்களின் சமூகப் பின்தங்கிய நிலையின் காரணமாக பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்பினரை மட்டுமே குறிக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டது” என மிகத் தெளிவாக, யார் பிற்படுத்தப்பட்டவர்கள், அவர்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு யார் காரணம் என்றும் இந்திரா சஹானி தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, இட ஒதுக்கீடு பற்றிய முழு விவாதமும் சமூகப் பின்தங்கிய நிலையையும், பல்வேறு வகையான சாதி அடிப்படையிலான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களையும் மையமாகக் கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய மக்களும் ஏழைகளாக இருக்கிறார்கள். எனவே, இட ஒதுக்கீடு என்பது ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பொதுத்துறையில் உயர்சாதியினரின் ஏகபோகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.

பொருளாதார அளவுகோல் பற்றிய விவாதங்களைத் தவிர, அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் இட ஒதுக்கீட்டிற்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நிராகரித்தனர். அரசுத் துறைகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமை உள்ளிட்ட சமூகப் பின்தங்கிய தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் உயிர்ப்புடன் உள்ள வரை இட ஒதுக்கீடும் உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதினர்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மேற்சொன்ன செப்ரோலு லீலா பிரசாத் ராவ் (2020) வழக்கில், எந்த தரவுகளையும் முன்வைக்காமல், SC, ST வகுப்பினரில் வசதிபடைத்த, சமூகப் பொருளாதார ரீதியாக முன்னேறிய வகுப்பினர் உள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தனர். இந்த கருத்தின் உண்மை என்ன?

அரசுத் துறை பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும், உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறையிலும், காவல்துறையிலும், கொள்கை உருவாக்கம், பிற அரசுத் துறைகளிலும் உயர்மட்ட அதிகாரங்க்களில் SC, ST வகுப்பினர் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனரா? கடை நிலை பணியிடங்களில் வேலை செய்யும் ST, ST வகுப்பினர் பொருளாதார வளத்தை பெற்று விட்டனரா? சமூகப் பின்தங்கிய நிலையில் இருந்து வெளியே வந்துவிட்டனரா? இந்திய சமூகத்தில் இருந்து சாதி அடிப்படையிலான பாகுபாடு முற்றிலும் துடைத்தெறியப்பட்டதா? பொதுத்துறை நிறுவனங்களில் உயர்சாதி ஏகபோகம் முற்றிலுமாக மறைந்து விட்டதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "இல்லை" என்பதே பதில். தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி பாலகிருஷ்ணன் 2010 ஆம் ஆண்டு ஒய்வு பெற்ற பின்னர் 9 ஆண்டுகள் கழித்து, 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு தலித் நீதிபதி (பூஷன் ராமகிருஷ்ண கவாய்) நியமிக்கப்பட்டதையும், இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அவருக்கு இடம் இல்லாததையும் பொறுத்திப் பார்த்தால் பொதுத் துறை நிறுவனங்களின் அனைத்து மக்களுக்கான பிரதிநிதித்துவத் தன்மையின் அவலம் வெளிப்படுகிறது.

மேற்கண்ட நிலையையும் அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 70 ஆண்டுகளில் எவ்வளவு பிற்போக்காக மாறினோம் என்பது புரியும். யார் பிற்படுத்த வகுப்பினர் (Backward Class) என்பது பற்றி அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்த விவாதத்தில் பட்டியலின வகுப்பினர் தங்கள் பிரதிநிதிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டனர் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களைப் பாதிக்கும் சட்டப் பிரிவுகளைக் குறித்த விவாதத்தில் கூடுதல் நேரத்தையும் அனுமதித்த அரசியல் நிர்ணய சபையின் வளமான மரபுகளை நினைவுகூர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இட ஒதுக்கீடு தொடர்பான சட்டப்பிரிவு 16(4) மீதான விவாதத்தின் போது, ​​காண்டேகர் அரசியலமைப்பு நிர்ணய சபையில், "இங்கே பேசுபவர்கள் பெரும்பாலும் ஹரிஜன் வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். எனவே அவர்கள் தங்கள் நிலைமையை விளக்க கூடுதல் நேரம் தேவை. எனவே அவர்கள் இந்த சட்டப் பிரிவை நன்றாக விவாதிக்கும் வகையில் அவர்களுக்கான காலக்கெடுவை அதிகரிக்குமாறு தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவரிடம் வேண்டிக் கொண்டார். இந்தக் கோரிக்கையை அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர் ஹரேந்திர கூமர் முகர்ஜியும் ஏற்றுக் கொண்டார்.

- கைலாஷ் ஜீங்கர், டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர்

நன்றி The Wire இணையதளம் (2020, மே 18 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: லோக நாயகி

Pin It