கேள்வி: பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது தீர்ப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். EWS இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்த சிறுபான்மை நீதிபதிகளின் தீர்ப்பும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒரு ஒற்றைக் காரணியாக பொருளாதார அளவுகோல் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால், இட ஒதுக்கீடு என்பது பல்வேறு காரணிகளால் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினரின் பிரதிநிதித்துவத்திற்கான கருவி என்பது உச்ச நீதிமன்றத்தில் EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனுதாரர்களின் வாதங்களில் ஒன்று. எனவே, வரலாற்று அநீதியை சரி செய்வதற்காகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதே தவிர இட ஒதுக்கீடு வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் அல்ல. ஒருபுறம் பொருளாதார நிலை என்பது ஒரு நபரின் தனிப்பட்ட நிலையே ஆகும். மேலும் அது அடிக்கடி மாறக்கூடிய நிலை ஆகும். மறுபுறம் ஜாதியால் பின்தங்கிய நிலை. ஒருமுறை ஜாதி அடையாளத்தால் பின்தங்கிய நிலை ஏற்பட்டுவிட்டால், அது ஒரு நபர் பொருளாதார வளர்ச்சியை அடைந்தாலும் அவரை விட்டு நீங்காது என்பது மனுதாரர்களால் எழுப்பப்பட்ட ஒரு முக்கிய வாதமாகும். இருப்பினும் பொருளாதார அந்தஸ்து என்ற ஒரே அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொருளாதார அளவுகோல்கள் தொடர்பான வாதங்களுடன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு பொருந்தி போகிறது?
மோகன் கோபால்: இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான கருவி, அதையும் தாண்டி வேறு காரணங்களுக்காக இட ஒதுக்கீட்டை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்தால் அது பெரும் ஆபத்தில் தான் முடியும். மேலும் அது மக்களுக்கிடையிலான வாய்ப்புகளின் சமத்துவத்தைப் பறித்து விடும். உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையின் பயன்பாடு ஏழு இடங்களில் மட்டுமே உள்ளது. EWS இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியதற்கு முன்பு பற்றிய நிலையைப் பற்றி பேசுகிறேன். அவை அனைத்தும் ஏதோ ஒரு வடிவில் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கத்தையே கொண்டுள்ளன.கூடுதலாக பார்த்தால், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 16(4) இல் “அரசின் கருத்துப்படி, அரசின் கீழ் உள்ள துறைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத குடிமக்களுக்கு ஆதரவாக நியமனங்கள் அல்லது பதவிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதற்கான எந்த ஏற்பாடுகளையும் இந்தப் பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது” என்று தெளிவாக உள்ளது. மேலும் 103 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 16(6), ”ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடுகளுடன் சேர்த்து, பிரிவு 16(4) இல் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்புகளைத் தவிர, பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடிமக்களுக்கு ஆதரவாக நியமனங்கள் அல்லது பதவிகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கான எந்த ஏற்பாடுகளையும் இந்த பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது. அப்படி வழங்கப்படும் இட ஒதுக்கீடு அதிகபட்சம் பத்து சதவீதம் வரை இருக்கலாம்.” என்கிறது.
16(4) பிரதிநிதித்துவத்தை பற்றியது. பிரிவு 16இன் கீழ் உள்ள ஒட்டுமொத்த உட்பிரிவுகளும் பொது வேலைவாய்ப்புகளில் சமத்துவத்தைப் பற்றியது. பிரிவு 16(1) அனைத்து குடிமக்களுக்கும் அரசின் கீழ் உள்ள அனைத்து துறை வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, பிரிவு 16 இன் முழு நோக்கமும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்வதாகும். அதாவது எந்த ஒரு குடிமகனுக்கும் பாகுபாடும் இருக்கக்கூடாது. எந்த ஒரு குடிமகனும் விலக்கப்படவும் கூடாது என்பதே ஆகும். 14,15,16,17,18 ஆகிய அனைத்து பிரிவுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் குறியீட்டின் ஒரு பகுதியாகும். பிரிவு 15(1) மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கிறது. மேலும் இனம், சாதி பாலினம், பிறந்த இடம் ஆகிய எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் கூறுகிறது. எனவே, பிரிவு 15க்கும் 16க்கும் இடையே உள்ள மிக இறுக்கமான தொடர்பை காணலாம். “சட்டத்தின் முன் அனைவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும், சட்டங்களின் சம பாதுகாப்பை எந்த ஒரு தனி நபருக்கும் மறுக்கக்கூடாது” என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவே அனைவருக்கும் சம பாதுகாப்பு, சட்டத்தின் முன் சமத்துவம், பாகுபாடு காட்டமை, பாகுபாடு, சமத்துவமின்மை ஆகியவற்றால் தடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் ஆகியவை பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக உள்ளது.
இந்த விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பை எந்தவொரு புதிய விதியாலும் மீற முடியாது. எனவே, பொருளாதாரம் சமத்துவமின்மையை ஏதோ ஒரு வகையில் நிவர்த்தி செய்கிறது என்றால் மட்டுமே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த முடியும். சமத்துவமின்மை என்பது பாகுபாடு, விலக்கு, பிரதிநிதித்துவமின்மை ஆகிய மூன்றையும் உள்ளடக்கும். பிரிவு 16 பொது வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவத்தைக் கையாள்கிறது. பிரிவு 15 பாகுபாடு மற்றும் விலக்கலை கையாள்கிறது. எனவே, பிரதிநிதித்துவம் என்பது யாரையும் விலக்காமல் சேர்த்துக்கொள்வதற்கான மற்றொரு சொல் ஆகும்.
பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொல்வதற்கான மற்றொரு வழி தான் பிரதிநிதித்துவம். பிரிவு 16ஐ எடுத்துக் கொண்டால், பொது வேலை வாய்ப்பில் சமத்துவம் இருக்க வேண்டும் என்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஒரு குழு பொது வேலைவாய்ப்பில் பின்தங்கி இருக்குமேயானால், அரசு நிச்சயமாக அதை எதிர்கொண்டு சரி செய்ய வேண்டும். அப்படி இருக்குமேயானால் பிரதிநிதித்துவத்தின் கருவியாக இருக்கக்கூடிய இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரம் ஒரு அளவுகோலாக இருக்க முடியும் என்று கூறுவதில் எந்த தவறும் கிடையாது.
பொருளாதாரம் என்றால் என்ன? பொருளாதாரப் பின் தங்கிய நிலை பல பரிமாணங்களைக் கொண்ட மிகவும் பரந்த அளவுகோல்களைக் கொண்டது. வறுமை என்பது பொருளாதார அடிப்படையில் ஆன வரையறை தானே தவிர, வறுமை என்பது ஒரு தனித்த நிதிக் கருத்து அல்ல. வறுமை பல பரிமாணங்களை கொண்டுள்ளது. இது அரசாலும் நிதி அயோக்காலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் சமூக விலக்கு மற்றும் சமூகப் பாகுபாடு ஆகியவையும் அடங்கும். எனவே, நாம் பொருளாதார அளவுகோலைப் பார்க்கும்போது, அதை வெறுமனே வருமான அடிப்படையிலான அளவுகோல் என்று நாம் தவறாக நினைக்கக்கூடாது. இது மிகவும் பரந்த கருத்து, பல பரிமாணங்களைக் கொண்ட கருத்து. அது சமூகப் பின்தங்கிய நிலையுடன் ஒன்றிணைகிறது. பிரிவு 46இல் குறிப்பிடப்பட்டுள்ள பின்தங்கிய நிலை பற்றி நான் நீதிமன்றத்தில் வாதிட்டேன். EWS இட ஒதுக்கீட்டில் அடிப்படையாக சொல்லப்படும் பின்தங்கிய நிலை என்பது ஒரு குழுவிற்கு இருக்கும் பின்தங்கிய நிலையாக இருக்கவேண்டும். மாறாக அது பொருளாதாரத்தில் பின்தங்கிய தனி நபர்களை பற்றியதாக இருக்க கூடாது.
பின்தங்கிய நிலை என்பது தரம். பொருளாதார நிலை என்பது ஒரு அளவு. அதாவது, ஒருவர் பின்தங்கியும் இருக்கமுடியும் அல்லது முன்னாலும் இருக்க முடியும். எனவே பொருளாதார அளவுகோல் என்று கூறும்போது, மக்களின் வளங்கள், சமூக வளங்கள், நிதி ஆதாரங்கள், சமூக மூலதனம், நிதி மூலதனம் போன்ற அனைத்து அம்சங்களையும், அவற்றை அணுகும் அனைத்து அளவுகோல்களையும் மனதில் கொள்ள வேண்டும்.
சமூக ரீதியாகவும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அளவுகோலில் இதைப் போன்ற பரந்த வரையரையைக் காண்கிறோம். சமூக ரீதியாகவும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது சாதியை பற்றியது அல்ல. மாறாக சமூக ரீதியாகவும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர் எந்த சாதியிலிருந்தும், எந்த மதத்திலிருந்தும், எந்தப் பகுதியிலிருந்தும் இருக்கலாம். சமீபத்தில், திருநங்கைகளை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அனாதைகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள் சேர்க்க வேண்டும் என்று கூறியது. ஏனென்றால் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் அடிப்படையிலான அளவுகோல்கலையும், ஓரங்கட்டப்படுவதையும் மொத்தமாக சேர்த்தே பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை தீர்மானிக்கின்றோம். அதைப் போலவே, பொருளாதார அளவுகோலையும் பரந்த பல பரிமாண அனுமுறையோடு அணுக வேண்டும்.
இன்று அதிக சம்பளம் கிடைத்தால், ஒருவருடைய வருமானம் உயரும். இல்லையென்றால், அவருடைய வருமானம் குறைந்து விடும். ஒரு லாட்டரியில் பரிசு வென்றால் ஒருவருடைய சொத்து மதிப்பு அதிகரிக்கலாம், செல்வ நிலை உயரலாம். எனவே வருமானம் என்பது ஒருவருடைய பொருளாதார பலவீனத்தை குறிப்பதாக ஒருநாளும் இருக்காது. குறிப்பதாக கல்வி மற்றும் பொருளாதாரப் பின்தங்கிய நிலையை மதிப்பிடுவதற்கு அது ஒருபோதும் அடிப்படையாக இருக்காது. EWS இட ஒதுக்கீடு பிரிவு 46 இன் படி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பாஜக அரசு சொல்வதை நினைவில் கொள்ள வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரப் பின்தங்கிய நிலையை கண்டறிய வகுக்கப்பட்ட அளவுகோல்கள் பிரிவு 46 ஐ அடிப்படையாகக் கொண்டவை.
SC, ST, OBC இட ஒதுக்கீட்டை சாதிவாரியான இட ஒதுக்கீடு என சிறுமைப்படுத்த கூடாது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் 16(4), 15(4) ஆகிய பிரிவுகளின் வழங்கப்படும் SC, ST, OBC இட ஒதுக்கீட்டிற்கு சாதி மட்டும் தகுதியான ஒரு காரணி அல்ல. மாறாக சாதி என்பது இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான ஒரு குழு, மதம் என்பது தகுதியான ஒரு குழு, திருநங்கைகளின் மேல் இருக்கும் தப்பெண்ணம் போன்ற காரணங்களால் ஓரங்கட்டப்பட்டதால் அவர்களும் (திருநங்கைகள்) இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான குழு.
ஒரு குழுவாக ஒதுக்கப்படுவது, பிரதிநிதித்துவம் இல்லாதவர்களாக இருப்பது, மதச்சார்பற்ற அளவுகோல்கள் அனைத்தையும் பூர்த்திசெய்வது, விளைவாக ஓரங்கட்டப்படுதல், பிரதிநிதித்துவமின்மையை சந்தித்தல், ஒரு குழுவாக இழிவுபடுத்தப்படுதல், உடல் உழைப்பை வாழ்வாதாரத்தின் ஆதாரமாக சார்ந்திருப்பது ஆகியவையே SC, ST, OBC இட ஒதுக்கீட்டின் சாராம்சம். எனவே, ஒருபுறம் SC, ST, OBC இட ஒதுக்கீட்டை ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று சொல்லிவிட்டு, மறுபுறம் EWS இட ஒதுக்கீட்டை பொருளாதார இட ஒதுக்கீடு என்று சொல்வதே முற்றிலும் தவறானது. இது முழுக்க முழுக்க புரிதல் இல்லாமையையே காட்டுகிறது. வேண்டுமென்றே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை தவறாக சித்தரித்தும், திரித்தும் காட்டுவதாக நான் நினைக்கிறேன்.
சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார அளவுகோல் வேறு பட்டது மட்டுமல்ல. மாறாக, இந்த பொருளாதார பின்தங்கிய நிலையை சமாளிக்க பல வழிகள் உள்ளன. ஆனால் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் இயலாமையை சமாளிக்கவோ பிரதிநிதித்துவம் தேவை. SC, ST, OBC வகுப்பினரின் பின்தங்கிய நிலைக்கும் ஓரங்கட்டப்பட்ட நிலைக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது அதிகார மேசையில் அவர்களுக்கான இடம் இல்லை என்பதுதான். மாறாக அதிகார மேசையில் இடம் இருந்தால், அவர்களுக்கான பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்து கொள்வார்கள். பிரிவு 16(4), 15(4) ஆஅகியவற்றின் படி, SC, ST, OBC மக்களின் வறுமைக்கு காரணம் அவர்களின் மேல் இருந்த தப்பெண்ணம், அவர்களிடம் காட்டப்படும் பாகுபடும், அவர்களை சமூகத்தோடு அண்ட விடாமல் தள்ளி வைத்திருப்பதும் தான் அவர்களின் வறுமைக்கு காரணமே தவிர, அவர்களின் திறனின்மை காரணமாக அவர்கள் ஏழைகள் ஆகிவிடவில்லை.
எனவே, சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படும் போதும், பொருளாதார அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமல் இருக்கும் போதும், பொருளாதாரத்தை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுவதாக சொல்லும் அடிப்படையில் பார்த்தாலும் EWS இட ஒதுக்கீட்டில் பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்றால் EWS இட ஒதுக்கீடு 103 வது சட்டத்திருத்தத்தின் படியே அமல் படுத்தப்பட்டு இருந்தாலும், பிரிவுகள் 15(4), 16(4) ஆகியவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட மக்களிள் உள்ள ஏழைகளை EWS இட ஒதுக்கீடு விலக்குகிறது.
தற்போது உள்ள SC, ST, OBC இட ஒதுக்கீட்டை ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று வேண்டுமென்றே திரித்து சொல்லப்படுகிறது. இது நேர்மையற்ற திரிபு. ஜாதிகள் அற்ற மதங்களும் SC, ST, OBC இட ஒதுக்கீட்டில் அடங்குகின்றன. ஜாதியற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். பிராமண, வைசிய, ஷத்ரிய வர்ணத்தின் உள்ள ஜாதியினரும் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். திருநங்கைகளும் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். அனாதைகள் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். இப்படி இருக்கையில், இதை எப்படி சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்கிறீர்கள்? இப்படி நேர்மையற்ற விதத்தில் திரித்து பேசுவதை, அனுமதிக்ககூடாது. அதை வேறு எப்படி அழைக்கலாம் என்றால், அதை பிரதிநிதித்துவத்திற்கான இட ஒதுக்கீடு எனலாம். பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு, பாகுபாடு காட்டப்படுபவர்களுக்கான இடஒதுக்கீடு என்று எல்லாம் சொல்லலாம். இது சமத்துவப் பிரிவின் ஒரு பகுதியாகும். எனவே இது ஏற்றத்தாழ்வால் அவதிப்படுபவர்களுக்கான இட ஒதுக்கீடு, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அல்ல. சில மாநிலங்களில், சமூக நிலையில் முன்னேறிய வகுப்பை சேர்ந்த பிராமணர்களுக்கு கூட இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது அவர்களும் கூட 15(4) பிரிவு வழங்கும் இட ஒதுக்கீட்டிற்குள் அடங்குகிறார்கள்.
கேள்வி: மனுதாரர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு வாதம் என்னவென்றால், EWS இட ஒதுக்கீடு, ஏழைகளில் ஒரு பிரிவைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தருகிறது என்பது தான். இதை நீதிமன்றம் எப்படி நியாயப்படுத்தியது?
மோகன் கோபால்: 103வது திருத்தச் சட்டத்திருத்தம் 5-0 என்ற வீதத்தில் செல்லும் என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்திருந்தாலும், 3-2 என்ற வீதத்தில் தான் ஒப்புதல் கிடைத்தது. இந்திய தலைமை நீதிபதி யு. யு. லலித், EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறது என்ற முடிவுக்கு வந்திருந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ரவீந்திர பட், அரசியலமைப்புச் சட்டத்தின் இட ஒதுக்கீடுகள், அரசியலமைப்புச் சட்டத்தின் பிற அம்சங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பற்றி நன்கு அறிந்தவர். பல தீர்ப்புகளை எழுதி உள்ளார். இந்த இரண்டு நீதிபதிகளும் EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே உச்ச நீதிமன்றம் EWS இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்தது என்று சொல்ல முடியாது.
EWS இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்த மூன்று நீதிபதிகளும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட வழக்குகளில் விரிவான அனுபவம் பெற்றவர்கள் அல்ல. இருப்பினும் EWS இட ஒதுக்கீட்டு வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளின் முடிவுகளும் சமமான அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை தான். அவர்களையும், அவர்களின் முடிவுகளையும் நாம் மதிக்கிறோம். அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையாக உண்மையில் மிகவும் சிக்கலானது. இந்தியத் தலைமை நீதிபதியை குறைத்து மதிப்பிட முடியுமா?. இந்திய தலைமை நீதிபதி, EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக கூறுகிறார். இது ஒரு நிதர்சனமான பார்வை. ஆனால் பெரும்பான்மையான நீதிபதிகள் இதில் உடன்படவில்லை. எனவே, நான் இந்த வழக்கை ADM ஜபல்பூர் வழக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். அதனால் தான் இது சமூக நீதியின் ADM ஜபல்பூர் என்று நான் கூறினேன். அது 4-1 என்ற வீதத்தில் இருந்தது, இது 3-2 என்ற வீதத்தில் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த பெரும்பான்மைத் தீர்ப்பு, என்றேனும் ஒரு நாள் பெரும் அவமானத்தைத் கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக இந்த தீர்ப்பு ஒரு நாள் தலைகீழாக மாறும் என்பதில் எந்த சந்தேகமில்லை. எனவே ADM ஜபல்பூர் வழக்கை நாம் எப்படி எதிர்கொண்டோமோ அதே போல் இந்த வழக்கையும் எதிர் கொள்ள வேண்டும். அந்த 4-1 தீர்ப்பிலும் நான்கு நீதிபதிகளின் தீர்ப்பை சரியான தீர்ப்பாக எடுத்துக் கொண்டோம். அந்த 4 நீதிபதிகள், இந்த வழக்கை போலல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளாக இருந்தனர். எல்லா நீதிபதிகளின் ஒருமித்த கருத்தாக இந்த தீர்ப்பை பார்க்க முடியாது.
EWS இட ஒதுக்கீட்டு சட்டத்திருத்தத்தை செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மைத் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொண்டாலும், செல்லாது என அறிவித்த இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புகளை நாம் மனதில் கொள்ள வேண்டும். மிகவும் அனுபவம் வாய்ந்த இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு அது. அவர்கள் EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல, சமத்துவத்தின் கட்டமைப்பையும் சீரழிக்கிறது என்றனர்.
பெரும்பான்மைத் தீர்ப்பு SC, ST, OBC வகுப்பினர் மற்ற இட ஒதுக்கீடுகள் பெறுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கியும், இட ஒதுக்கீடு வழங்கப்படாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியும் EWS இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்துகிறது.
இதன் படி SC, ST, OBC இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு, EWS இட ஒதுக்கீடு பெறும் தகுதி இல்லை என்று கூறினால், இந்த EWS இட ஒதுக்கீட்டை பெறுபவர்களுள் பலர் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு, வசிப்பிட இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு தகுதி பெற்றுள்ளனர். அதிகாரிகளின் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. இவை எல்லாம் இரட்டை இட ஒதுக்கீடுகள் இல்லையா?
அப்படி இருக்கும் போது, இந்த சட்டத் திருத்தம், வேறு எந்த இட ஒதுக்கீடும் பெறாதவர்கள் மட்டுமே EWS ஒதுக்கீடு பெற முடியும் என்று கூறுகிறது. வேறு இட ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு தான் EWS இட ஒதுக்கீடு என்று கூட அந்த சட்டம் கூறவில்லை. மாறாக, மற்ற இட ஒதுக்கீடு பெற தகுதி உடையவர்களாக இருந்தாலே, அவர்கள் அந்த இட ஒதுக்கீட்டை பெறுகிறார்களோ இல்லையோ, பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அவர்கள் EWS இடஒதுக்கீடு பெறத் தகுதி இல்லாதவர்கள் என்று கூறுகிறது. SC, ST, OBC இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான ஒரு குழுவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள், EWS இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிப்பதில் இருந்து கூட விலக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பெண்கள் இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர் இட ஒதுக்கீடு, ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு, குடியுரிமை இட ஒதுக்கீடு, இதர இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தகுதியானவர்கள் EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படவில்லை. அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் EWS இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்படவில்லை.
எனவே, SC, ST, OBC வகுப்பினருக்கு EWS இட ஒதுக்கீடு தராமல் இருப்பதற்கு இரட்டை இட ஒதுக்கீடுதான் காரணம் என்பது ஒரு தவறான வாதம்.
SC, ST, OBC இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு என்றும் தவறான ஒதுக்கீடு என்றும் ஏன் கூறப்படுகிறது? ஏன் இந்த தாக்குதல்? இந்த இட ஒதுக்கீட்டின் மேல் நடைபெறும் தாக்குதல்களைப் போல் EWS இட ஒதுக்கீடு, பொது வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் தகுதியைக் குறைக்கிறது என்பது போன்ற கடுமையான தாக்குதல்களை கேள்விப்பட்டிருக்கிறோமா? அதே போன்று விளையாட்டு வீரர் இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்வோம். புத்திசாலித்தனமான விளையாட்டு வீரர்கள் சிலர் திறமையான அறிஞர்களாக உள்ளனர். ஆனால் சிலர் பெரும் அறிவாளிகளாக இல்லை. இருப்பினும் விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இன்று வரை யாரும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டை விமர்சிக்கவில்லை. விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு தகுதியை குறைக்கிறது என்று யாரும் பேசுவதில்லை. அப்படியான விமர்சனங்கள் தவறானவை தான் என்றாலும் SC, ST, OBC இட ஒதுக்கீட்டை விமர்சிப்பவர்கள் ஏன் மற்ற இட ஒதுக்கீடுகளை விமர்சிப்பதில்லை. SC, ST, OBC இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?
உண்மையில் இட ஒதுக்கீட்டிற்கும் வறுமைக்கும் பொருளாதார பின் தங்கிய நிலைக்கும் சம்பந்தமில்லை. மாறாக, நீதித்துறை, நிர்வாகத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருசில சமூகங்களின் ஏகபோக கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து அதை எல்லா சமூகத்திற்கும் பொதுமை படுத்துவதே இட ஒதுக்கீட்டின் நோக்கமாகும். பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் இதை நிறைவேற்றலாம்.
ஆனால் EWS இட ஒதுக்கீட்டின் நோக்கம் என்ன? நீதித்துறை, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கும் குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் தந்து, அவற்றை ஜனநாயகப் படுத்துவதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என்று தான் அர்த்தம். எனவே, EWS இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் என்னவென்றால் இந்திய அரசு ஒரு சிறு தன்னலமிக்க குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாக இருப்பதிலிருந்து பிரதிநிதித்துவம் மிக்க அரசாக மாறுவதைத் தடுக்க முனையும் தன்னலமிக்க குழுவின் முயற்சியே ஆகும். பிரதிநிதித்துவம் இல்லாத பிரிவினர்களை சாதி இட ஒதுக்கீடு பெறுபவர்கள், தகுதி இல்லாதவர்கள், திறமையற்றவர்கள் என்று கூறி அவர்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவம் தரத்தை குறைத்துவிடும் என்கிறார்கள். உண்மையில், EWS இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் என்னவென்றால், நீதித்துறை மற்றும் நிர்வாக துறைகளில் ஒருசில பிரிவினரின் ஏகபோக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே.
ஒடுக்கப்பட்டவ அனைவரும் பிரதிநிதித்துவம் இல்லாதவர்கள். 10% வேலைவாய்ப்பையும் கல்வியையும் பிரித்து எடுத்து ஒரு குறிப்பிட்ட தன்னலம் வாய்ந்த குழுவிற்கு மட்டுமே சொந்தமாக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாதாடிய வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஒரு தருணத்தில் இந்த உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டார். அதாவது இந்த தன்னலக்குழுவை (EWS இட ஒதுக்கீடு பெறும் உயர்சாதியினரை) அவர் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அட்டர்னி ஜெனரல் இவர்களை ஏழைகளிலேயே மிகவும் ஏழ்மையானவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தாலும், மகேஷ் ஜெத்மலானி தற்செயலாகவோ அல்லது கவனக்குறைவாலோ அல்லது உண்மையின்படியோ அவர்களை நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார். அப்படி பார்த்தாலும் இந்த நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்கள், இந்திய மக்கள்தொகையில் 96 விழுக்காடு உள்ளனர். மாதம் 25,000 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கிற 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தை நடுத்தர் வர்க்கம் என அழைக்கலாம்.
உயர்சாதி மக்களில் பெரும்பாலோர் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, பாஜக அரசின் நோக்கம் பொது வேலைவாய்ப்பிலிருந்து 10% இடங்களை பிரதிநிதித்துவத்திலிருந்து விலக்கி, தன்னலமிக்க குழுவை மட்டுமே கொண்டு அதை நிரப்ப வேண்டும் என்பதே ஆகும். இதுதான் பாஜக அரசின் நோக்கம் என்றால் 15(6), 16(6) ஆகிய பிரிவுகளில் “15(4), 16(4) ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள குழுக்களை தவிர்த்து மற்ற சமூகங்களில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு” என்று சொல்வதற்கு பதிலாக நேரடியாகவே “உயர் சாதியில் உள்ள பொருளாதார நலிந்தவர்களுக்கு மட்டுமே ஆன சிறப்பு ஏற்பாடு” என்று சொல்ல ஏன் முன்வரவில்லை? நீட்டி மழுப்பி சொல்வதற்கு பதிலாக நேரடியாவே சொல்லிவிடலாமே. 15(4), 16(4) ஆகிய பிரிவுகளில் இட ஒதுக்கீடு பெறும் வகுப்புகளைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே EWS இட ஒதுக்கீடு பொருந்தும் என்று ஏன் நீட்டி மழுப்பி சொல்ல வேண்டும்? உண்மையான நோக்கத்தை மறைக்க தான் இப்படியான வார்த்தைகளை பாஜக அரசு பயன்படுத்துகிறது.
பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்புகளைத் தவிர மற்றவர்களுக்கு என்றோ ஏற்கனவே மிகுதியான பிரதிநிதித்துவம் வகிக்கும் வகுப்புகளுக்கு என்றோ தான் சொல்லி இருக்க வேண்டும். பிரிவு 16(4) போதிய பிரதிநிதித்துவத்தைப் பற்றித்தான் பேசுகிறது. அப்படி பார்த்தால் பாஜக அரசு போதிய அளவு பிரதிநிதித்துவத்தை மீறி செயல்படுகிறது. போதுமான அளவை விட அதிகமாக பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகைகளை பாஜக அரசு தர முன்வந்துள்ளது. பிரிவு 16(4) போதுமாக அளவு பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு என்று கூறுகிறது. பிரிவு 16(6) தேவைக்கு அதிகமாக பிரதிநிதித்துவம் உள்ள குழுவிற்கான இட ஒதுக்கீடு தரலாம் என்று கூறுகிறது. அதுதான் உண்மை.
கேள்வி: இந்த இரண்டு நீதிபதிகள் EWS இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்தியதோடு நில்லாமல், இட ஒதுக்கீட்டை ஒரு காலக்கெடுவுக்குள் முற்றிலுமாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அதைப் பற்றிய கருத்து?
மோகன் கோபால்: அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறுவதாகும். அரசியலமைப்புச் சட்டத்தை செயல்படுத்துவது தான் நீதிபகளின் வேலை. நீதித்துறை, நிர்வாகம், பொது வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டு வர, அரசியலமைப்பு இட ஒதுக்கீடு வழங்கும்போது, அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவோம், அதைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்ற அவர்கள், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே அவர்கள் கடமையாகும். அதாவது கல்வி, பொது வேலை வாய்ப்பில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே நீதிபதிகளின் வேலையாகும். ஜனநாயகம் என்பது இறுதியானது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். அந்த இலக்கை முன்னெடுத்துச் செல்வதும், அந்த இலக்கைக் காப்பதும்தான் நீதிபதிகளின் வேலை.
நாம் இட ஒதுக்கீட்டிற்காக போராட வில்லை. மாறாக நாம் பிரதிநிதித்துவத்திற்காக தான் போராட நினைக்கிறோம். இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான ஒரு கருவி. அதன்படி பிரதிநிதித்துவத்தை நிறுத்துவதற்கான ஒரு கருவியாக EWS இட ஒதுக்கீடு பயன்படுத்தப்படுகிறது. சமத்துவத்தை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை தவிர பல சிறந்த வழிகள் உள்லன என்று நீதிபதிகள் சொல்லி, அதை நமக்கு விளக்கினால், நாம் இட ஒதுக்கீட்டை விட்டு விட்டு நீதிபதிகள் சொல்லும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், SC, ST, OBC இட ஒதுக்கீடு ஒழிய வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், EWS இட ஒதுக்கீட்டை செல்லும் என்று சொல்லுவதின் மூலம் தன்னலமிக்க ஒரு ஒற்றை குழுவின் ஏகபோக உரிமையே தொடர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றுதானே எடுத்துக் கொள்ள முடியும்
இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற சொல்லுவதின் மூலம் பிரதிநிதித்துவத்துவத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்கிறார்களா? ஜனநாயகத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்களா?
என்னிடமிருந்து ஒரு கருவியை பறிக்க நினைக்கிறீர்கள் என்றால், அந்தக் கருவியின் மூலம் நான் அடைய விரும்பும் இலக்கை அடையக் கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். எடுத்துக்காட்டாக, நான் A என்கிற ஒரு இடத்திலிருந்து B என்கிற மற்றொரு இடத்திற்கு என் காரில் செல்ல முற்படும் போது, நீங்கள் என்னிடமிருந்து காரை பறித்துக் கொள்கிறீர்கள் என்றால், நான் அந்த இடத்திற்கு போய் சேர கூடாது என்பதைத் தவிர உங்கள் நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும்?. நான் உங்கள் காரை எடுத்துக்கொள்கிறேன். அதற்கு பதிலாக விரைவாக செல்லும் ஒரு விமானத்தை தருகிறேன் என்று கூறினால் உண்மையிலேயே என் நோக்கத்தை அடைய துணை புரிகிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம். நீதிபதிகள் அப்படிச் சொல்லவில்லையே. SC, ST, OBC வகுப்பினர் பிரதிநிதித்துவம் எனும் இலக்கை அடைவதை நீதிபதிகள் விரும்பவில்லை. இங்கு இட ஒதுக்கீடு ஒரு கருவி, பிரதிநிதித்துவத்திற்கான கருவி, ஜனநாயகத்திற்கு அவசியமான ஒரு கருவி என்று தங்களுக்கு முன்வைக்கப்பட்ட வாதத்தை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பிரதிநிதித்துவத்தை அடைய இட ஒதுக்கீடு ஒரு சரியான வழி இல்லை. அதற்கு பதிலாக இந்த வழிமுறையை பயன்படுத்தலாம், இது பிரதிநிதித்வத்தை சிறப்பான முறையில் அமைத்து கொடுக்கும் என்று கூறினால், அப்படி ஒரு சிறப்பான வழியை காண்பித்தால், நிச்சயமாக இட ஒதுக்கீட்டை காப்பாற்ற விரும்ப மாட்டோம். இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் நமக்கு அக்கறை இல்லை. மாறாக பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் மட்டுமே நாம் ஆர்வமாக உள்ளோம்.
ஆனால், இந்த EWS இட ஒதுக்கீடு ஜனநாயகத்துக்கு எதிரானது. பிரதிநிதித்துவ சமத்துவத்திற்கு எதிரானது.
இந்த EWS இட ஒதுக்கீடு என்பது பொது வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் 10% இடங்களை எடுத்து, அதை நிரந்தரமாக பிரதிநிதித்துவமற்றதாக ஆக்குகிறது. இந்த 10 விழுக்காட்டில் சமத்துவமான சமூகப் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், அது சமூகத்திலும், கல்வியிலும் முன்னேறிய வகுப்புகளுக்கு மட்டுமே என்கிற போக்கில் வடிவமைக்கப்பட்டுவிட்டிருக்கிறது. அது நாட்டுக்கு நல்லதில்லை. சமூகத்திலும், கல்வியிலும் முன்னேறிய வகுப்பைச் சார்ந்த ஏதேனும் ஒரு குழு, முற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் தாராளமாக 15(4),16 (4) பிரிவுகளின் கீழ் உள்ள இட ஒதுக்கீட்டை பெறலாம். உண்மையில் அப்படி எந்த குழுவும் இல்லையே. உண்மை இதுவெனும் போது, அவர்களுக்கென்று ஒரு தனிப் பிரிவை உருவாக்குவதற்கான அவசியம் என்ன? எனவே இங்கு நடந்து கொண்டிருப்பது, அந்த குறிப்பிட்ட தன்னல மிக்க குழுவினர் ஜனநாயகத்திற்கு எதிராக நடத்தும் ஒரு அரசியல் போர். இது ஆச்சர்யப்பட கூடிய விஷயம் அல்ல. தன்னலமிக்க அந்தக் குழு தங்கள் அதிகாரத்தையும் ஏகபோகத்தையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடும் என்று எதிர்பார்க்க கூடாது. எனவே இந்த போராட்டம் தொடரும். இது தொடர்பான விவரங்களில் சிலவற்றை நாம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து எதிர்வினை ஆற்றுவோம். நிச்சயமாக நாம் இதில் வெற்றி பெற மாட்டோம் என்று நமக்குத் தெரியும், ஆனால் இப்படி செய்வதால் நாம் அரசை பொறுப்பேற்கச் செய்து பதிலளிக்க வைக்க முடியும்.
மேலும் அவர்கள், தாங்கள் செய்வதை நியாயப்படுத்த முடியாவிட்டால், அது பொதுமக்கள் அனைவருக்கும் வெளிப்படையானதாகிவிடும். நமது இந்த செயல், அவர்களின் இந்த நடவடிக்கை சரியா தவறா என்பதைத் தீர்மானிக்க உதவும். பின்தங்கிய வகுப்பினர் என்று நாம் குறிப்பிடுவது, பிரதிநிதித்துவத்தில் பின்தங்கியவர்களே தவிர, அறிவில் குறைந்தவர்களோ, கலாச்சார ரீதியில் பின்தங்கியவர்களோ, திறன் குறைந்தவர்களோ அல்ல. பின்தங்கிய வகுப்பினர் என்ற சொல்லை பயன்படுத்தும் போதெல்லாம், அதன் அர்த்தத்தை பிரிவு 16(4)இன் படி தான் நாம் மனதில் கொள்ள வேண்டுமே தவிர, திறன் குன்றியவர்கள் என்றோ முட்டாள்கள் என்றோ எண்ணக் கூடாது. எனவே, பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்புகள் இப்போது ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும். அரசியலமைப்பில் இருந்து 103வது திருத்தத்தை நீக்குவதற்கு, பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்புகள் ஒன்றுபட்டு அணிதிரண்டு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களித்து அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை அழிக்கும் இந்த புற்றுநோயை நீக்க வேண்டும். இதை நான் மட்டும் சொல்லவில்லை, இரு வேறு நீதிபதிகளின் கூற்றுப்படி, இது சமூகத்தின் சமத்துவ கட்டமைப்பை அழித்துவிடும்.
எனவே இது ஒரு புற்றுநோய். அந்த புற்றுநோய், நம் சமூகத்தின் சமத்துவ கட்டமைப்பை அரிக்க விடாமல் நாம் தான் பாதுகாக்க வேண்டும். இந்த புற்றுநோய்க்கு சட்ட ரீதியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டியது. சட்ட ரீதியான சிகிச்சை தோல்வியுறும் போது அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழி இல்லை. இந்த நாட்டின் 90% மக்கள், அதாவது பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்புகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபித்து, அரசியலமைப்பில் இருந்து இந்த புற்றுநோயை நீக்க வேண்டும். நாம் கவனம் செலுத்த வேண்டிய அடுத்த இலக்கு அதுதான்.
(உயர்சாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி, அவ்வழக்கில் ஆஜரான பிரபல கல்வியாளர், வழக்கறிஞர், முனைவர் மோகன் கோபாலின் ஆங்கில நேர்காணலின் சுருக்கப்பட்ட தமிழ் மொழியாக்கம் இது.)
நன்றி: LiveLaw.in இணைய தளம் (2022, நவம்பர் 13 ஆம் தேதி வெளிவந்த நேர்காணல்)
தமிழ் மொழியாக்கம்: ராஜாராம் சிங்கப்பூர், ஆயிஷா உமர்