மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாளான நவம்பர் 1 ஆம் நாளைத் தாயக நாளாக நாம் கொண்டாடி வருகிறோம் இது குறித்தும் தனித் தமிழ்நாடு குறித்தும் தேசிய இன சிக்கல் குறித்தும் தேசிய இனங்களின் விடுதலை குறித்தும் நாம் மீளாய்வு செய்து நடைமுறைக்கு உகந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய காலமாக இது உள்ளது.
ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்திய ஒன்றியம் 1947 ஆகஸ்ட் 15 விடுதலை பெற்றது. 1950 சனவரி 26 ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தியா விடுதலை அடைந்தபோது 562 சிற்றரசுகள் இருந்தன இவற்றை நிர்வகிக்க எப்படி பிரிப்பது என்ற பிரச்சினை தொடங்கியது. எதன் அடிப்படையில் பிரிப்பது என்று ஆராய்ந்து இந்திய அரசுக்கு தெரிவிக்க தார் கமிசன், ஜே.வி.பி கமிட்டி, பசல் அலி கமிசன் என்று பல கமிசன்கள் உருவாக்கப்பட்டன அவர்கள் தங்கள் அறிக்கைகளை அன்றைய பிரதமர் நேருவிடம் கொடுத்தனர். அவர்கள் அனைவரும் மொழிவழி மாநிலங்கள் இந்தியாவிற்கு ஒத்து வராது என்று கூறினர். ஏற்கனவே இருக்கும் மாகாணங்களை மாநிலங்களாக மாற்றி அமைத்தால் சிக்கல் குறையும் என்று நேரு நினைத்தார். சென்னை, பம்பாய், கல்கத்தா, திருவாங்கூர் என்று இருக்கும் மாகாணங்களை அப்படியே மாநிலங்களாக அறிவித்து விடலாம் என்று முடிவு செய்தார். 1956 சனவரியில் நிர்வாக வசதிக்காக தட்சணப் பிரதேசம், உத்திரபிரதேசம், கிழக்கு பிரதேசம், மேற்கு பிரதேசம், மத்திய பிரதேசம் என ஐந்து பெரும் மாநிலங்கள் உருவாக இருப்பதாக நேரு அறிவித்தார். இந்தியாவை மொழி, இன, மத அடிப்படையில் பிரிக்காமல் ஆங்கிலேய காலத்தில் உருவாக்கப்பட்ட அதே மாகாண முறையே தொடரலாம் என்று அறிவித்தார்.
முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் கேட்டபோது பெரியார் திராவிட நாடு கேட்டார். நேருவின் தட்சணப் பிரதேச அறிவிப்பு பெரியாருக்கு உகந்ததாக இருந்தது.
அதனால் மொழி வழி மாநிலங்கள் அமைவதற்கு பெரியார் எதிராகவே இருந்தார். ராஜாஜி தட்சண பிரதேசத்தை ஆதரித்தார். சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக வருவது தமிழரான காமராசரா தெலுங்கரான சஞ்சீவ் ரெட்டியா என்ற போட்டி ஏற்பட்டபோது டெல்லி அரசு தலையிட்டு ராஜாஜியை அறிவித்தது. ராஜாஜி ஆதரித்த தட்சணப் பிரதேசத்துக்குத் தென்னிந்திய எங்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டில் தோழர் ஜீவானந்தம், ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட பலரும் கேரளத்தில் அச்சுத மேனன், ர.கே. கோபாலன் உள்ளிட்ட இடதுசாரிகளும் கடுமையாக எதிர்த்தனர்.
1956 சனவரி 27 ல் ஜீவா, பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, டி.கே. சண்முகம், பி.டி. இராசன், அறிஞர் அண்ணாதுரை, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கூடினர் ஆனந்த தியேட்டர் உரிமையாளர் உமாபதி வீட்டில் கூட்டம் நடந்தது தட்சண பிரதேசத்தை எதிர்த்து மொழிவழி மாநிலங்கள் அமைப்பது மதராஸ் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட காமராசர் அரசை வலியுறுத்துவது இதை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் கடையடைப்பு செய்வதென்றும் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதே ஆண்டு பிப்ரவரி 19 மாலை 4:00 மணிக்குத் திருவல்லிக்கேணி தீவு திடலில் தொடங்கிய ஊர்வலம் மவுண்ட் சாலையை நோக்கி வந்த போது போலீசார் நடத்திய தடியடியில் தோழர் ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகிய தோழர்கள் காயம் அடைந்தனர் அடுத்த ஒரே வாரத்தில் தட்சண பிரதேச கொள்கையை நேரு அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திரா என்னும் மொழி வழி மாநிலம் அமைக்க வேண்டி பொட்டி ஸ்ரீ ராமுலு அவர்கள் 1952 அக்டோபர் 19 அன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி டிசம்பர் 16 அன்று தன் இன்னுயிரை ஈந்தார்: அவர் இறப்புக்குப் பின்பு ஏற்பட்ட மக்கள் போராட்டங்களாலும் கலவரங்களாலும் 1953 அக்டோபர் ஒன்றாம் நாள் கர்னூல் தலைநகராகக் கொண்டு ஆந்திரா மாநிலம் நிறுவப்பட்டது பின்னர் தெலுங்கானா என்று அழைக்கப்படும் ஹைதராபாத் மாநிலத்தில் தெலுங்கு பேசும் மாவட்டங்கள் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப் பெற்று ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்ட ஆந்திர பிரதேசம் 1956 அன்று நவம்பர் ஒன்றாம் நாள் ஆந்திர பிரதேசம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் அமைந்த முதல் மொழி வழி மாநிலம் ஆந்திர பிரதேசம் ஆகும்.
இதே போல 1950 சூலையில் மொழி வழி மாநிலம் அமைக்க வேண்டும் என்றும் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் சூலை 27 ஆம் நாள் சூலை கரை மேட்டில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார். ஆனால் சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை 79 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்திற்கு பிறகு 1956 அக்டோபர் 13 அன்று தியாகியானார். தியாகி சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செய்தனர். இறந்த பின் தன் உடலைப் பொதுவுடைமை கட்சியினரிடம் ஒப்படைத்து இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று சங்கரலிங்கனார் கூறி இருந்தார். அதன்படி தோழர் கே.டி.கே தங்கமணி கே.பி. ஜானகி அம்மாள் ஆகியோர் மருத்துவமனை பதிவேட்டில் கையொப்பமிட்டு உடலைப் பெற்று மதுரை தத்தனேரி சுடுகாட்டில் தலைவர்கள் புடை சூழ தகனம் செய்தனர். விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சிப் பூங்கா அருகில் தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பிரிவினைக்குப்பின் பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு கோரிக்கைக்கு வந்து சேர்ந்தார்.
1962 இல் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு கோரிக்கைக்காகத் தனி மசோதா தாக்கல் செய்யப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டது. 1964 சனவரியில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்ட தீர்மானம் கொண்டு வந்தபோது அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு 1967 ஏப்ரல் 14 இல் அறிஞர் அண்ணாதுரை தலைமையிலான திமுக ஆட்சியில் சென்னை மாகாணம் தமிழக அரசு என்று மாறியது. அதன் பின் 1968 சூலை 18 இல் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் தீர்மானம் அறிஞர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது.
1968 நவம்பர் 23 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1968 திசம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு முழுக்க பெயர் மாற்று விழா கொண்டாடப்பட்டுத் தியாகி சங்கரலிங்கனாருக்கு நன்றி செலுத்தப்பட்டது.
இப்படியாக இந்தியாவின் மொழிவழி மாநிலங்கள் பல்வேறு தியாகத் தலைவர்களின் முயற்சியில் உருவாயின தங்களின் மொழிவழித் தேசங்களை இயற்கை வளங்களைச் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தும் பன்னாட்டு வல்லாதிக்கத்திலிருந்தும் பாதுகாப்பதே இன்றைய தேசக் கடமையாகும்.
மொழிவழி தேசம் என்பது அந்தத்தேசியங்களின் முதலாளியத்தின் நலனிற்கான கோரிக்கையாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல மொழிவழி தேசங்கள் உருவாயின அக்காலகட்டத்திற்கு முன் கடந்த 7 ஆயிரம் ஆண்டுகளாகத் தேசம் என்பது மன்னர்களின் ஆளுகை பிரதேசங்களைக் குறித்தது மொழிவழித் தேசங்கள் என்பவை நவீன முதலாளிய வளர்ச்சியின் கட்டமைப்புகளாகும்.
தமிழ் பேசும் நிலப்பரப்பின் பார்வையில் இதைக் காண்போம்
பாரி, ஓரி, காரி, அதியமான், ஆய் உள்ளிட்ட குறு நில மன்னர்கள் ஆண்ட பகுதிகளும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆண்ட தமிழ் நிலப் பகுதிகள் நாடுகளாக வரையறுக்கப்பட்டன. அந்த நாடுகளின் உற்பத்தி முறை நிலவுடைமை உற்பத்தி முறையாக இருந்தது.
மன்னர்களுக்குள் ஏற்படும் போர்கள் வாயிலாக அரசு வழி நாடுகளின் எல்லைகள் மாற்றத்திற்கு உள்ளாயின. அரசர்கள் வழி தேசங்கள் நிலையற்றதாகவும் மொழிவழித் தேசங்களின் எல்லைகள் நிலையானதாகவும் மாறும்.
மொழிவழித் தேசிய இனங்களின் சிக்கல் என்பது ஒடுக்கும் தேசிய இனம் அல்லது இனங்கள் ஒடுக்கப்படும் தேசிய இனம் அல்லது இனங்கள் என்றும் இரு வகையாக மாறும். ஆனால் இந்த விதியை மீறி இந்திய ஒன்றியத்தில் ஒடுக்கும் தேசிய இனம் அல்லது இனங்கள் எதுவும் இல்லை. அதற்கு மாறாக தாய்மொழி அற்ற மற்றும் தாய்நாடு அற்ற ஆரியப்பார்ப்பனிய கும்பல் இந்தியாவின் அனைத்துத் தேசிய இனங்களையும் அரசியல், பண்பாடு ஆகிய துறைகளில் அடக்கி ஆளுகிறது. பொருளாதார வகையில் பணியா என்று அறியப்படும் குசராத், ராசஸ்தானை சேர்ந்த மார்வாரி கும்பல் அனைத்துத் தேசிய இனங்களின் பொருளாதாரத்தின் மீதும் தனது ஆளுமையைக் கொண்டுள்ளது. சாதியை நிலை நிறுத்தும் ஆரியப்பார்ப்பனக் கும்பலுக்கென்று மொழிவழித் தேசியம் என்று எதுவும் இல்லை. எனவே இந்து, இந்தி, இந்தியா என்ற ஒரு போலியான தேச கட்டமைப்பு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால்தான் அவர்கள் அகண்ட பாரதத்தை அமைப்பதை முன்னெடுக்கிறார்கள்.
நாம் இந்துத்துவ ஒற்றை இந்தியாவிற்கு எதிராகத் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கும் ஒன்றிய இந்தியாவை முன்மொழிகிறோம். ஒன்றிய இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை மட்டும் பிரிக்கும் தனித்தமிழ்நாடு கோரிக்கை வலிமைமிக்க இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு வெல்ல வேண்டிய நிலையுடையது.. முறையாக முன்னெடுக்கப்பட வில்லையானால், தமிழ் இன அழிப்பிற்கே வழிவகுக்கும். எனவே தமிழ்நாட்டு விடுதலையை மட்டும் தனித்து முன்னெடுத்து நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது. அதற்கு மாறாக இந்திய ஒன்றியத்தில் உள்ள மொழிவழித் தேசிய இனங்களும் இந்திய ஒன்றியத்திலிருந்து தங்களுக்கான தேசங்களை விடுவித்து அமைத்துக் கொள்வதற்கான கோரிக்கையும் போராட்டங்களும் வலிமை பெற வேண்டும், ஒரு தேசத்திற்கு இன்னொரு தேசம் துணையாக இருக்கும் போது தான் தனி தமிழ்நாடு சாத்தியமாகும். மொழி வழி மாநிலங்கள் அமைந்த நவம்பர் ஒன்றாம் நாளைத் தாயக நாளாக கொண்டாடும் மொழிவழித் தேசங்களாக இந்திய மாநிலங்கள் என்று அறியப்படும் தேசிய இனங்கள் பல சுய நிர்ணய உரிமை குறித்தும் பிரிந்து செல்லும் உரிமை குறித்தும் புரிதல் அற்றவர்களாகவே உள்ளன. புரட்சியாளர் லெனின் சோசலிச சோவியத் ஒன்றியத்தை அமைத்த போது தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்பதை கொள்கையாக கொண்டுதான் பாட்டாளி வர்க்க அரசை நிறுவினார். அவரது தெளிவான புரிதல் இந்தியாவில் இயங்கும் பல்வேறு பொதுவுடைமை இயக்கங்களிடம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் மாவோயியப் புரட்சிகர இயக்கத்தினரிடையே லெனினின் இந்த கோட்பாட்டுப் புரிதல் சரியாக உள்ளது. அவர்கள் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கின்றனர். அந்த வகையில் காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டத்தையும் அசாம் மக்களின் இன விடுதலைப் போராட்டத்தையும் நாகலாந்து, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்கின்றனர். JKLF எனப்படும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்னும் அமைப்பின் போராட்டங்களையும் அசாம் விடுதலை இயக்கத்தின் போராட்டங்களையும் நாகலாந்து விடுதலை இயக்கத்தின் போராட்டங்களையும் மாவோயியக் கட்சி வெளிப்படையாக ஆதரிக்கிறது.
அந்த வகையில் மொழிவழி மாநிலங்கள் அமைந்த நவம்பர் ஒன்றாம் நாளைக் கொண்டாடும் நாம் இந்தியாவில் உள்ள பிற தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாகத் தான் தமிழ்த் தேசமும் அமைய முடியும். மாற்றாக தென் மாநிலங்கள் என்பவை இந்திய ஒன்றியத்தின் முன்னேறிய மாநிலங்களாக உள்ளன. அவை இந்திய ஒன்றியத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தனித் தேசங்களாக மாற விரும்பினால் அந்தப் போராட்டங்களையும் ஆதரிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலைக்குப் போராடும் தேசிய இனங்களின் போராட்டங்களோடு நம்மை இணைத்துக் கொள்ளாமல் தனித்தமிழ்நாடு என்பது சாத்திய மற்றது என்பதே உண்மை.
விடுதலையை விரும்பும் இந்திய மொழிவழித் தேசங்களே தேசிய இனங்களின் கூட்டமைப்பாகத் திரள்வோம்!
- தங்க.குமரவேல்