கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சிச் சார்பாகப் புதுதில்லியில் நடைபெறும் போராட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதொரு நிகழ்வாக மாறிவிட்டது. ஒன்றிய அரசின் கொடூரமான தாக்குதலுக்கு இரையாகும் மாணவர்களும், இளைஞர்களும் அலை அலையாக ஆர்ப்பரித்து எழுந்து கண்டு, 'இது இரண்டாவது சுதந்திரப் போர்' எனக் குறிப்பிட்டுக் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார் சோனம் வாங்சுக். சிலர் இந்தப் போராட்டத்தைப் ஜாலியன் வாலா பாக் படுகொலைகளுடன் ஒப்பிடுகின்றனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் சுடுவானேன்? ஆணி பொருத்தப்பட்ட லத்தியால் மாணவர்களின் மண்டையைப் பிளப்பானேன்? எனும் கேள்விகளை மக்கள் இன்று நாடு முழுவதும் எழுப்புகின்றனர்.

நீட் தேர்வு என்பது சித்திரவதை செய்யும் ஓர் ஆட்கொல்லியாக மாறி, மாணவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள 1,30,000 மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு இம்முறை 20 இலட்சம் மாணவர்கள் போட்டியிட்டனர். இதற்காக அவர்கள் உழைத்த உழைப்பு சொல்லி மாளாது. இது தவிரப் பயிற்சி வகுப்பு நடத்துபவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. நீட் தேர்வுக்காகப் பயிற்சி வகுப்புகள் ஓர் ஆண்டில் அடிக்கும் கொள்ளை 20,000 முதல் 25,000 கோடி எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த இலாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கணக்கீட்டின்படி இந்தியாவில் உயர்கல்விக்காகப் பட்ஜெட்டில் செலவிடப்படும் மொத்தத் தொகையை விட, தனிப் பயிற்சிக்காகப் பெறப்படும் தொகை அதிகம் என்ற செய்தி நம்மை மலைக்க வைக்கிறது.

நீட் பயிற்சி வகுப்புக்காக ஒரு மாணவன் ஓராண்டிற்கு ரூ.70,000 முதல் 2,00,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால் பெரும்பாலும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த மாணவனின் பெற்றோர்கள் செய்யும் செலவு அந்தக் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விடுகிறது. இவ்வளவு மன அழுத்தத்திற்குப் பிறகு தேர்வு எழுதச் சென்றால், நீட் தேர்வின் வினாக்கள் கள்ளச் சந்தையில் விற்பனையாகி விடுகின்றன. அதன் விளைவாகப் பணக்கார மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடமும் கிடைத்து விடுகிறது. இதற்குப் பிறகும் எவ்விதச் சலனமும் இல்லாமல் ஒன்றிய அரசு மறுதேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இம்முறை மறுதேர்வு எழுத வேண்டும் என அறிந்த பின், 20 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு முறைகளில் 150-க்கும் மேற்பட்ட தேர்வு மோசடிகள் நடைபெற்றபோதிலும் ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இதில் கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய அநீதிக்கு எதிராக மாணவர்களுக்கு ஏற்பட்ட கடும் கோபத்தின் விளைவுதான் தில்லி ஜந்தர் மந்தரில் வெளிப்பட்டது. இது குறித்துக் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா நேற்றுக் கூறியது அப்போராட்டத்தின் வீரியம் எவ்வளவு என்பதைத் தெளிவாக்குகிறது. 'புதுதில்லியில் சூலை 20 அன்று நடைபெற்றது ஒரு சிறிய முன்னோட்டம்தான் (only a trial). இப்போராட்டத்தில் இந்தியா முழுவதும் இன்னும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்கள் / தேசியப் புலனாய்வு முகமைச் சட்டங்கள் (UAPA / NIA) ஆகியவற்றின் கீழ் நாங்கள் கைது செய்யப்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்கள் போராட்டத்திற்கு நாங்கள் தரும் மிகச் சிறிய விலைதான் இந்தச் சிறைவாசம்... அரசு வன்முறை கண்டு நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. இந்த அரசைத் தூக்கி எறிவோம்' என அவர் கொந்தளித்துள்ளார்.

மாணவர்களின் இத்தகைய கோபத்தைச் சிறிதளவும் லட்சியம் செய்யாமல், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'போராடும் மாணவர்கள் பயங்கரவாதிகள் (B team of Terrorist)' என எள்ளி நகையாடுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனவும் The Print போன்ற ஊடகங்கள் தெரிவிக்கும் நிலையில், அமைச்சர் இப்படிப் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மாணவர்களின் இந்தப் போராட்டம் இப்பொழுது இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவில் பேசுபொருளாகி விட்டது. தில்லியில் மாணவர்கள் மீதான ஒன்றிய அரசின் கடும் தாக்குதல் குறித்து அயல்நாட்டு ஊடகங்கள் மிக விரிவான செய்திகளை வெளியிட்டு வருவதை அறிய முடிகிறது. 'இந்தியாவில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் தற்பொழுது நடக்கும் தில்லிப் போராட்டமே மிகவும் பெரியது. வினாத்தாள் கசிவு குறித்து அரசு பொறுப்பேற்க வேண்டும் என இந்திய இளைஞர்களும், ஜென் சி தலைமுறையினரும் கோருகின்றனர்' என அமெரிக்காவின் The Wall Street Journal / The New York Times மற்றும் இங்கிலாந்தின் The Guardian பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன. தவிரவும் சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International, மாணவர்கள் மீதான அரசு வன்முறையைக் கண்டித்துள்ளது.

மாணவர்களின் போராட்டம் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கையில் நடைபெற்ற போராட்டங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. எனவே ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், ஊழல் மலிந்த தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) கலைக்கப்பட வேண்டும் என்பதான கோரிக்கைகளை ஏற்று அமைதி திரும்ப ஒன்றிய அரசு முன்வர வேண்டும். மாணவர்களின் வாழ்வைச் சூறையாடிச் சீரழிக்கும் நீட் தேர்வை இறுதியாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- கண. குறிஞ்சி

***

டெல்லி போராட்டத்தை இந்திய அளவிலான மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்

நீட்டுக்கு எதிரான கரப்பான் ஜனதா கட்சியின் டெல்லி போராட்டத்தை இந்திய அளவிலான மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

  • ஒன்றிய அரசின் கல்வித்துறை முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும், கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி' அமைப்பினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த அமைதியான நாடாளுமன்றப் பேரணியின் மீது டெல்லி காவல்துறை நடத்தியுள்ள மிகக் கொடூரமான தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களைத் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
  • மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வுக்கு எதிரான குரல், பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் மட்டுமே முதன்மையாக ஒலித்து வந்த நிலையில், தற்போது நாட்டின் தலைநகரான டெல்லியிலும் வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டம், வெறும் ஒரு மாநிலத்தின் அல்லது சில மாணவர்களின் பிரச்சனை அல்ல; நாட்டின் ஒட்டுமொத்தக் கல்விச் சூழல், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான தேசியப் பிரச்சனை என்பதை உணர்த்துகிறது. எனவே, டெல்லியில் கிளம்பியுள்ள இந்தக் எதிர்ப்புக் குரலை இந்தியா முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
  • நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, அது ஏழை, எளிய மற்றும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப் பெரும் தடையாக உருவெடுத்துள்ளது. பல லட்சங்கள் செலவழித்துத் தனியார் பயிற்சி மையங்களில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ இடங்கள் சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. இது நாட்டின் அடிப்படைச் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது.
  • சமீபகாலமாக நீட் தேர்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ள வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகேடுகள், இத்தேர்வு முறையின் நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைத்துள்ளன. தமிழகம் தாண்டி வடஇந்திய மாநிலங்களிலும் மாணவர்கள் நடுவில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கட்ட மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை எவ்வளவு பலவீனமானது என்பதற்கு இதுவே சான்று.
  • ஒவ்வொரு மாநிலத்தின் பாடத்திட்டம், சமூக-பொருளாதாரப் பின்னணி மற்றும் மருத்துவக் கட்டமைப்பு ஆகியவை வெவ்வேறானவை. மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட்டு, அனைவருக்கும் ஒரே தேர்வு முறையைத் திணிப்பது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதாகும். கல்வி உரிமையை மாநிலங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.

எனவே, 'நீதி கேட்கும் மாணவர்களின் குரல் டெல்லி வீதிகளோடு நின்றுவிடக் கூடாது. அது இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தின் வீடுகளையும் சென்றடைய வேண்டும்.'

— க. இரா. தமிழரசன்

***

களம் காண உறுதியேற்போம்...

கல்விக் குறித்த சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களிடமிருந்துப் பறிக்கப்பட்டுப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டதன் விளைவு, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாணவர்களின் மருத்துவப் படிப்பைக் கனவாக மாற்றியுள்ளன.

தகுதியற்ற தகுதித் தேர்வுகள் பல மாணவர்களின் உயிரை இன்று வரை காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன.

இதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிற மாணவர்கள், இளைஞர்கள் மீது இந்திய ஒன்றிய அரசு எனும் ஆரியப் பாசிச பயங்கரவாத அதிகாரக் கூட்டம் இராணுவ ஏவல் படைகளைக் கொண்டு தொடர்ந்து மாணவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து வருகிறது தலைநகர் தில்லியில்.

காவிகளைக் கேள்வி கேட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து நிற்கின்றனர். தமிழகத்திலும் மாணவர்கள் அமைப்புகள் தில்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆனால், தமிழக அரசோ தலைநகர் தில்லியில் குருதி கொட்டப் போராடும் பிள்ளைகளைக் கொடூரமாக அடித்தும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் வன்முறை வெறியாட்டம் போடும் இராணுவத்தையும் வேடம் தரித்த ஆரியப் பார்ப்பனியக் கூலிப்படைகளையும் கண்டும் காணாமலும், கண்ட குரல் கூட எழுப்பாமலும் மௌனமாக இருக்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் குரல் எழுப்ப முன்வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பல்வேறு அமைப்புத் தோழமைகளைக் காவல்துறைைகளைக் கொண்டு அச்சுறுத்தியும் உரிமைகளை நசுக்குகிறது.

மறுபுறம் மாணவர்களின் போராட்டத்தைச் சில ஆரியப் பார்ப்பனியக் கூட்டங்கள் பலதரப்பட்ட பொய்மை விமர்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பிப் போலியாக்கத் துடிக்கின்றனர். இதனை அரசியலாக்க நினைக்கிறது சில கூட்டம்.

ஆனால், இந்தச் சில்லறைக் காரணங்களை எல்லாம் கடந்து நம் பிள்ளைகளின் கல்விக் கனவை வேரோடுச் சாய்க்கும் உயிர்க்கொல்லியான நீட் தேர்வை நீக்கம் செய்வதற்காகக் களத்தில் நிற்கும் பிள்ளைகளுக்குத் துணை நின்று கைதூக்கி விட வேண்டிய தேவை தமிழ்நாட்டு மக்களுக்கும், சனநாயக இயக்கங்களுக்கும் உண்டு.

ஆனால், அதை மறந்து தமிழக இளைஞர்கள் முதலமைச்சரின் 'நாயகம்' படம் வெற்றி பெற முட்டிப்போட்டு மண்சோறு உண்ணுகிற அவலம் அரங்கேறுகிறது தமிழ்நாட்டில்.

இச்சூழலில் தமிழ்நாட்டு மக்கள் மௌனத்தை உடுத்தி நிற்பது அவமானத்திற்குரியது.

தில்லியில் உள்ள பிள்ளைகள் மட்டும்தான் நீட் எழுதுகிறார்களா? தமிழகப் பிள்ளைகள் எழுதவில்லையா? அனிதா தொடங்கி இன்று வரை தமிழகத்தில் நீட் என்ற உயிர்க்கொல்லியினால் எத்தனை மரணங்கள்..!?

மாணவர்களே! இளைஞர்களே! பொதுவுடமை இயக்கங்களே! பெரியாரிய அம்பேத்கரிய கொள்கையாளர்களே! தமிழ்த் தேசிய விடுதலை தோழமைகளே! சனநாயக இயக்கங்களே! பொதுமக்களே! நாம் என்ன செய்யப் போகிறோம்?

இப்போது குரல் கொடுக்காமல் நாம் வேறு எப்போது குரல் கொடுக்கப் போகிறோம்? மாணவர்களின் மீதான தாக்குதல்களையும் அரசின் பயங்கரவாதத்தினையும் நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறோமா? வரலாற்றுப் பிழையைச் செய்து விடாமல் வாருங்கள்.. புறப்படுவோம்!

நாம் அமைத்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் மண்ணின், நம் மக்களின் ஒவ்வொரு உரிமையும் ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச பயங்கரவாத இந்திய ஒன்றிய அரசால் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை மறவாதீர்கள்.

ஓ..! தமிழ்நாட்டு மக்களே..! உறுதி எடுப்போம் நம் மண்ணிற்கான, நம் மக்களுக்கான, நம் பிள்ளைகளுக்கான உரிமைப் போராட்டத்தை முதல் வரிசையில் களம் காண உறுதியேற்போம்... வெற்றி பெறுவோம்...

— தமிழிசைப்பா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.