நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயங்களில் அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்களிலும் தேர்தல் சூதாட்டங்களிலும் ஈடுபடுவதை நாம் கண்கூடாகக் காணலாம். கவர்ச்சி அரசியலில் வெல்லப் போவது யார் என பெரும்போட்டியே நடக்கும் அரசியல் களத்தில், தேர்தல் கண்கட்டி வித்தைகளிலும் ஓட்டு வங்கியை குறிவைக்கும் வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதிலும் ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமல்லாது ஏறக்குறைய அனைத்து கட்சிகளுமே ஈடுபடுவது என்பது இந்தியத் தேர்தல்களின் இலக்கணமாகி விட்டது. சமீபத்தில் (2019) மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்தபின் காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது போன்ற கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகளை காலம்காலமாக இந்திய வாக்காளர்கள் பார்த்து வருகின்றனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி பல மட்டங்களிலும் தோல்வியை சந்தித்து வந்தது. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் பலவும் கண்டு கொள்ளப்படாமல் காற்றில் பறக்க விடப்பட்டது அக்கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. வேளாண் சட்ட மசோதாவில் ஏற்பட்ட பின்னடைவு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. விவகாரங்களில் ஏற்பட்ட சறுக்கல், மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், இல்லந்தோறும் சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின் போதாமைகள், நாட்டில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், ‘அச்சே தின்’ என்ற கேலிக்கூத்து உள்ளிட்ட நெருக்கடிகளை சந்தித்து வந்த பாஜக அதிலிருந்து தப்பிக்க ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தான் தடாலடியாக இரண்டு சட்டத் திருத்தங்களைப் புகுத்தியது. சரிந்த தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க தனது பாரம்பரிய வாக்கு வங்கியான உயர்சாதியினரின் வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான அரசியல் உத்தியே அது. அந்த இரு சட்டத்திருத்தங்களை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.parliament 600முதலாவது, உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% EWS இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா. இது நாடாளுமன்றத்தின் இரு மன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்சாதியினரின் அனுசரணையைப் பெற பாஜக கொண்டுவந்த மசோதா இது. இரண்டாவது சட்டத்திருத்தம் குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா (2016). நாடாளுமன்ற கூட்டுக்குழு பச்சைக்கொடி காட்டியபின் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (2016) மூலம் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், அப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த முஸ்லீம்கள் தவிர்த்த பிற மதத்தினரான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிக்கள், கிறுத்துவர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் பின்புலம்:

10% EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அமைச்சரவை அவசர சட்டம் கொண்டு வந்தபோது அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உத்தரபிரதேசத்தின் ராஷ்ட்ரிய லோக் தல், பீகாரின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அதை ஆதரித்தன. இந்த கட்சிகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீடு சட்டங்கள் குறித்து ஆழமான பார்வை இல்லை என்பதையே அவர்களின் ஆதரவு நிலைப்பாடு எடுத்துக்காட்டியது. சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் உரிமை மறுக்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட அனைவரும் இடஒதுக்கீடு உரிமையை பெற அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது மற்றும் 16 ஆவது உறுப்புகள் வழிவகை செய்கின்றன. சமூக நீதிக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளே கூட இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் தங்கள் உயர்சாதி எஜமானர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டனர்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீடு உரிமைகளை இரு வகைப்படுத்துகிறார் பேராசிரியர் குர்பிரீத் மகாஜன். முதலாவது, பட்டியலின பழங்குடி சமூகங்கள் பெறும் இட ஒதுக்கீட்டு உரிமை. காலம் காலமாக சமூக, அரசியல், கல்விப் புலங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் அம்மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை வழங்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக அம்மக்கள் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டனர், பண்பாட்டு ரீதியில் புறக்கணிக்கப்பட்டனர், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டனர், கல்விக் கூடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, இன்றும் பீகாரின் கிராமப்புறங்களில் மகா தலித்துகள் கடுமையான சமூக புறக்கணிப்புக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர் என்பது எவ்வளவு பெரிய முரண்? தலித் சமூகங்களிலேயே மிகவும் நலிவடைந்த சமூகங்களை மகா தலித்துகள் என பீகார் அரசு வகைப்படுத்துகிறது. இந்தியாவின் மத்திய பகுதிகளில் வாழும் முசாகர் என்னும் தலித் சமூகம் இன்றும் கூட எலி வேட்டையாடி தங்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த சமூகங்கள் போன்று வரலாற்று வழியில் ஒடுக்கப்பட்டு, மற்ற சமூகங்களுடன் தொடர்புபட முடியாதவாறு கடுமையான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல கொண்டுவரப்பட்டதே இட ஒதுக்கீடு. அம்பேத்கரும் காந்தியும் இது தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தைகள் முக்கியமானவை. 1932இல் நடந்த வட்டமேசை மாநாட்டில் ஆங்கிலேய அரசு தலித் மக்களுக்கு வழங்கிய தனி வாக்காளர் தொகுதி, தலித் மக்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் தனி குடியேற்றங்கள் போன்ற உரிமைகளை விலை கொடுத்தே அம்பேத்கர் இட ஒதுகீட்டு உரிமையை பெறவேண்டி இருந்தது.

இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பெறும் இடஒதுக்கீட்டு உரிமை. பட்டியலின, பழங்குடி மக்கள் சந்தித்த அளவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஒடுக்குமுறைகளை சந்திக்கவில்லை என்றபோதிலும் உயர்சாதியினரின் சமூகப் பாகுபாடுக் கொடுமைகளை அனுபவித்தனர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கப்படுகிறது. சூத்திரர்கள் என்றும் நான்காம் வருணத்தார் என்றும் அழைக்கப்பட்ட அம்மக்கள் இந்து சமூகத்தின் மற்ற மூன்று வருணத்தாருக்கும் சேவகம் செய்து மட்டுமே தங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அதற்காக அவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது, சொத்துரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதியில்லை, அம்மக்களின் அரசியல் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

கல்வி இல்லாமலும், அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமலும் சுரண்டப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட பட்டியலின, பழங்குடி சமூக மக்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இட ஒதுக்கீடு உரிமையை வழங்கியது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது உயர்சாதிகளுக்கு பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது இட ஒதுக்கீடு சட்டத்தையே நீர்த்துபோகச் செய்யும் நடவடிக்கையாகும். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது என அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(4) வரையறுக்கிறது. மேலும், வரலாற்று வழியில் கல்வி, சமூக, பண்பாட்டு, அரசியல் தளங்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களே இடஒதுக்கீடு பெற உரிமையுள்ளவர்கள். பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினர் என பாஜக அரசு சொல்லும் வாதத்தையே எடுத்துக் கொண்டாலும் கூட, உயர்சாதிகளையும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளையும் இட ஒதுக்கீடு என்னும் ஒரே தராசில் வைத்து தீர்வு கொடுக்க முடியாது. தலைவலிக்கும் கால்வலிக்கும் எப்படி ஒரே மருந்து கிடையாதோ அதேபோல இருவேறு சமூகப் பின்புலம் கொண்ட உயர்சாதிகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு என்னும் ஒரே தீர்வு என்பதும் கிடையாது.

சமூப ரீதியாகவும், கல்வியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு உரிமையை பெறுவதற்கு நீண்ட நெடிய போராட்டங்களை வரலாறு முழுவதும் நடத்த வேண்டி இருந்தது. ஆனால் எந்தப் போராட்டமும் இல்லாமலும் எந்த ஏரணமும் இல்லாமலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவிவிட்ட உயர்சாதியினர் தற்போது 10% இடங்களை எடுத்துக்கொள்வார்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பெறும் இடஒதுக்கீடு உரிமையை இவ்வளவு காலம் மட்டம் தட்டியும், விமர்சித்தும், எள்ளி நகையாடியும் எதிர்த்தும் வந்தன இடது, வலது, மய்ய (கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ்) கட்சிகள். பார்ப்பனத் தலைமை கொண்ட இக்கட்சிகள் மண்டல் குழு பரிந்துரைகளின் போது நடத்திய தாண்டவத்தை நாடறியும். ஆனால் இதே கட்சிகள் உயர்சாதிகளுக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வரிந்துகட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன.

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல:

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், மத்திய அரசின் வீடு கட்டித்தரும் திட்டம் போன்று இடஒதுக்கீடு என்பதும் ஒரு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்பதை முதலில் நாம் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ள வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழிருப்பவர்கள், வறுமைக்கோட்டுக்கு மேலிருப்பவர்கள் என இந்திய அரசால் மக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இது அனைத்து சாதியினருக்கும் பொதுவானது. அரசிடம் இருக்கும் இந்த தரவுகளின் அடிப்படையில் அம்மக்கள், அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலன்களை பெற்றுக் கொள்ளலாம். உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் எனக்கூறி அதுவும் உயர்சாதியினருக்கு மட்டும் 10% இடதுக்கீடு என்னும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருப்பது தேர்தலில் உயர்சாதியினரின் வாக்குகள் காங்கிரசுக்கோ மற்ற கட்சியினருக்கோ சென்றுவிடக் கூடாது என்னும் பாஜகவின் தேர்தல் தந்திரமே ஆகும். அதுமட்டுமின்றி, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் உழல்கின்ற நாட்டிலே மாதம் 66 ஆயிரம் வரை வருமானம் ஈட்டும் உயர்சாதியினரை பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினர் என்று அரசு வகைப்படுத்துவது பொருளாதார அறிஞர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் (2016) நிலை:

இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதன் வாயிலாக தங்கள் அரசியல் நாட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான எதிர்ப்பார்ப்புகளை இந்து சமூகத்திடம் ’நாடாளுமன்ற கூட்டுக் குழு’ ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் ‘கடந்த காலங்களில் நடந்த அநீதிகளுக்கான விமோசனம்’ என்று 2019 நாடாளுமன்ற தேர்தலில் அசாம் சில்சாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி இது பாரதமாதாவின் புதல்வர்களான இரத்தசொந்தங்களை பாதுகாக்கும் என்றும் தெரிவித்தார். 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிருத்துவர்கள், பார்சிக்கள் மற்றும் பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. முஸ்லீம்களுக்கு குடியுரிமை கிடையாது.

10% இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் உயர்சாதிகளின் வாக்குகளை அறுவடை செய்வதோடு, குடியுரிமை சட்டத்திருத்தத்தின் மூலம் அந்த வாக்குவங்கியை அண்டை நாடுகளில் இருந்து புலம்பெயரும் இந்துக்கள் மூலம் விரிவுபடுத்துவதே பாஜகவின் திட்டம். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல்கள், உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீதான அரசின் வன்முறை, தலித்துகள் மீது நாளும் தொடரும் ஒடுக்குமுறைகள் போன்றவை இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் மீது இந்த அரசுக்கு இருக்கும் அக்கறையின்மையின் சான்றுகள் ஆகும்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வாழும் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் அங்கு போராடி வருகின்றன. இதில் ஆளும் அரசின் இரட்டைத்தன்மையும் இந்திய சனநாயகத்தின் கேலிக்கூத்தும் என்னவென்றால், அசாம் சமூகங்கள் சிலவற்றை பழங்குடியின பட்டியலில் சேர்த்து அவற்றை பாதுகாப்போம் என்று சொல்லிக் கொண்டே ஒட்டுமொத்த அசாம் மாநிலத்தையே சீர்குலைக்கும் இந்த சட்டத்திருத்தத்தை இரும்புக்கரம் கொண்டு ஒன்றிய அரசு அமல்படுத்துகிறது. இந்த இரு சட்டத்திருத்தங்களுக்கு இருக்கும் ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால் இவை இரண்டும் இரண்டு நாட்களுக்குள் மக்களவையின் ஒப்புதலைப் பெற்று விட்டன. நாடாளுமன்ற செயல்பாடுகளில் இது ஒரு மைல்கல் வரலாற்றுச் சாதனையாகும்.

இந்த இரண்டு சட்டத்திருத்தங்களின் மீது போதுமான விவாதங்கள் நடைபெறவில்லை என்பதோடு இவற்றை மதிப்பாய்வு செய்வதற்கு குழுக்கள் கூட அமைக்கப்படவில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் குழுவான காகா காலேகர் குழு, மண்டல் குழு போன்றவற்றின் பரிந்துரைகளை பெற்று பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்பது சட்டவரைவாக முன்வைக்கப்படுவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு மேலானது என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த சட்டத்திருத்தங்கள் மீதான சமூகநீதி பேசும் கட்சிகளின் நிலைபாடும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. மசோதாவின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது என்பது அதன் மீது முடிவெடுக்கும் கடமையை தட்டிக் கழிக்கும் செயலே ஆகும். பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103 ஆவது சட்டத்திருத்தம் போதுமான அளவு மதிப்பாய்வோ, கூறாய்வோ செய்யப்படாததே இந்த அரசின் நோக்கம் மீதான ஐயத்தை அதிகப்படுத்துகிறது.

1931 ஆம் ஆண்டிற்குப் பின் இதுநாள் வரை இந்தியாவில் இருக்கும் சாதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மேலும் சமூகப் பொருளாதார, சாதிக் கணக்கெடுப்புத் (SECC 2011) வெளியிடப்படவில்லை எனும்போது குடிமக்களின் உண்மையான சமூகப் பொருளாதார நிலையைக் கணிப்பது கடினம். அரசின் கொள்கை உயர்சாதிக்காரர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தாலும் கூட அதற்காக சமூகநீதியைப் பலி கொடுக்க முடியாது. இந்தியர்கள் அனைவருக்குமான சனநாயகமும் சம உரிமையும் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தியா விடுதலை அடைந்தது. அந்த நம்பிக்கை மெய்ப்பட வேண்டுமென்றால் சாதிக் கணக்கடுப்பு நடத்தப்பட்டு, விகிதாச்சார இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

- ஓம்பிரகாஷ் மகடோ

நன்றி Round Table India இணையதளம் (2019, ஜனவரி 11 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: நாசர்

Pin It