முழு என்.எல்.சி.யை விற்றாலும் பாஜகவின் பணப்பசி அடங்காது!

கார்ப்பரேட்டுகளின் கையாள் பாஜக அரசின் என்.எல்.சி. பங்கு விற்பனை கைவிடப்பட வேண்டும்! அல்லது தமிழக அரசே 3 விழுக்காடு பங்குகளை விலைக்கு வாங்கிப் பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டும்!

பாஜக அரசின் என்.எல்.சி. பங்கு விற்பனையைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டின் அரசும் அவசரமாக இதுகுறித்துத் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்!

இந்திய ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தன் பணத் தேவையைத் தீர்த்துக் கொள்கிறது. இப்படிப் பொதுத்துறை நிறுவனங்களை விற்று ரூபாய் 4.73 இலட்சம் கோடிகளுக்கு மேல் பணம் திரட்டி ஊதாரித்தனமாகச் செலவழித்திருக்கிறது.

2002 இல் என்.எல்.சி. பங்குகளை விற்க வாஜ்பாய் முயற்சி செய்தபோது தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பால் விற்காமல் நிறுத்திக் கொண்டார்.

2013 இல் மன்மோகன் சிங் அரசு என்.எல்.சி. பங்குகளை விற்க முனைந்த போது, ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான தமிழக அரசே 3% பங்குகளை வாங்கி அதைப் பொதுத்துறையாகத் தொடரப் பாதுகாத்தது.

2014 இல் நரேந்திர மோடி பிரதமராக வந்த பிறகு 27% என்.எல்.சி. பங்குகளை விற்றுத் தீர்த்து இருக்கிறார். இப்போது, என்.எல்.சி.யின் 3% பங்குகள் 1257 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. இதனால் என்.எல்.சி. மீதான அரசின் கட்டுப்பாடு 69% ஆகக் குறைந்துள்ளது. எதை விற்றாலும் பாசிச பாஜக அரசின் பணத்தேவை தீரப் போவதில்லை.

ஊதாரி பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளிடம் விற்றுக் காசாக்கித் தன் தேவையை நிறைவு செய்து கொள்ள விரும்புகிறது.

2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது இந்தியாவின் மொத்த கடன் ரூ. 55.87 இலட்சம் கோடியாக இருந்தது. தற்போது நாட்டின் மொத்தக் கடன் ரூ. 214 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது அல்லாமல் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களை 4.73 இலட்சம் கோடிக்கு மோடி அரசு விற்பனை செய்து செலவு செய்துவிட்டது.

பாஜக அரசின் பொதுத்துறை நிறுவன விற்பனை தொடருமானால், ஒரு கட்டத்தில் என்.எல்.சி. முழுமையாகக் கார்ப்பரேட்டுகளின் கைக்குச் சென்றுவிடும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சொத்து, ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரி வயல், இயற்கை தமிழ்நாட்டுக்கு அளித்த பெருங்கொடை இன்று இந்திய ஒன்றிய அரசின் கையில் அகப்பட்டுச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

என்.எல்.சி.-யை இந்திய ஒன்றிய அரசிடம் இருந்து மீட்க வேண்டும். 1956-ஆம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது நிலக்கரி நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைத்துவிட்டு ஒன்றிய அரசு வெளியேற வேண்டும்!

1956 லிருந்து 2026 வரை 70 ஆண்டு காலத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசு அகழ்ந்தெடுத்த நிலக்கரி முழுவதும் தமிழ்நாட்டுக்கே சொந்தமானது! எந்த வகையில் பார்த்தாலும் என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தமானது! தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வாகக் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்யப்படும் 3% பங்குகளையும் தமிழ்நாடு அரசே வாங்கி என்.எல்.சி. நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகத் தொடர வழி செய்ய வேண்டும்! என்.எல்.சி. நிறுவனத்தைத் தமிழ்நாட்டுக்கு உரிமையாக்கும் கோரிக்கையைத் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எழுப்ப வேண்டும்!

- பேராசிரியர் த. செயராமன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.