கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ப.செகநாதன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
அந்தி மாலைப்பொழுது. காயத்ரியும் அவளது தோழியும் தேயிலைத் தோட்டம் ஒன்றின் வழியாக கோவிலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இருவரும் வால்பாறையிலுள்ள நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அம்மனுக்கு கூழ் ஊற்றுவதால், அதை வாங்கிவர அவர்கள் இருவரையும் வீட்டிலிருந்து அனுப்பிருந்தார்கள். கோவில், குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கிறது. அப்போது நன்றாக இருட்டியிருந்தது. வளைந்து நெளிந்து சென்ற சாலையில் இருவரும் பேசிக்கொண்டே நடக்கையில்,...
அருகிலிருந்த தேயிலைப் புதர் ஒன்றில் இருந்து திடீரென பாய்ந்த ஒரு சிறுத்தை, கண்ணிமைக்கும் நேரத்தில் காயத்ரியை கவ்வி இழுத்துச் சென்றது. காயத்ரியின் அலறல் கொஞ்ச நேரத்தில் நின்றுபோனது. காயத்ரியை சிறுத்தை இழுத்துச் சென்றதைக் கண்ட அவளது தோழி, பயத்தால் கை கால் நடுங்க, பேசக்கூட முடியாமல் விக்கித்துப் போய் நின்றாள். முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு அருகிலிருந்த ஓடையின் பக்கத்தில் காயத்ரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஜுன்னார்... மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம். தன் வீட்டுக்கு முன்னே கிருஷ்ணா விளையாடிக் கொண்டிருந்தான். அந்தி கருக்க ஆரம்பித்திருந்தது, மாலை ஏழு மணியிருக்கும். அவனது பாட்டி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள். மென்மையான தென்றல் காற்று வீட்டைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டத்தினூடாக வீசியது. திடீரென ஏற்பட்ட மின்வெட்டினால் எல்லா விளக்குகளும் அணைந்தன. நிலவு வெளிச்சத்தில் ஏதோ ஒரு உருவம் தன்னை நோக்கி வருவதை கிருஷ்ணா கண்டான். பயத்தில் வேகமாக வீட்டை நோக்கி ஓட அவன் யத்தனிக்கையில், ஒரு சிறுத்தை அவனது காலை கவ்வியது. அலறல் சப்தம் கேட்ட அவனது பாட்டியும், அம்மாவும் கூக்குரலிட்டுக் கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தனர். அலறல் சப்தம் கேட்ட அச்சிறுத்தை, கிருஷ்ணாவை விட்டுவிட்டு வேகமாக விரைந்து கரும்புக் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
வால்பாறை மற்றும் ஜுன்னாரில் மட்டுமல்ல. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நடந்து கொண்டேயும் இருக்கின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டும் 2000ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஒரு ஆராய்ச்சி கட்டுரை குறிப்பிடுகிறது.
இதற்கெல்லாம் காரணம் என்ன? சிறுத்தைகள் காட்டைவிட்டுவிட்டு, மனிதர்கள் வாழும் ஊருக்குள் வருவதேன்? அவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டதா? மனிதர்கள் வாழுமிடத்தில் அவற்றுக்கு என்ன வேலை? குடியிருப்புப் பகுதியில் அவை நடமாடுவது தெரிந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன? அவற்றை கூண்டு வைத்துப் பிடித்து வேறெங்காவது கொண்டுபோய் விட்டு விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? இக்கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் முன் சிறுத்தைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
சிறுத்தையின் குணாதிசயங்கள்
உண்மையில் சிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள காட்டுயிர். அவை பொதுவாக காட்டுப் பகுதிகளி லேயே சுற்றித் திரிந்து இரைதேடுகின்றன. மனிதர்கள் உள்ள பகுதிகளில் உலவுவதை அவை பெரும் பாலும் தவிர்க்கின்றன.
ஒவ்வொரு சிறுத்தையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுற்றி அலைந்து இரை தேடவும், தனது துணையை கண்டுகொள்ளவும் செய்கின்றன. இப்பரப்பு ஆண் சிறுத்தைக்கும் பெண் சிறுத் தைக்கும் வேறுபடும். தான் சுற்றித் திரியும் இடத்தின் எல்லையை சிறுத்தை, தனது சிறுநீரால் குறிக்கிறது. சிறுத்தைகள் பெரும்பாலும் தங்களது வாழிட எல்லைக்குள்ளேயே சுற்றி திரிகின்றன. ஒரு சிறுத்தை தனது வாழிட எல்லையைவிட்டு இடம் பெயர்ந்து செல்ல நேரிட்டால் அல்லது இறந்தால், அந்த இடத்தை வயதில் குறைந்த வேறோரு சிறுத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
சிறுத்தை இந்தியா முழுவதும் பரவி காணப் படுகிறது. அடர்ந்த மழைக்காடுகள், இலையுதிர் காடுகள், புதர் காடுகள், காட்டை ஒட்டிய கிராமப் புறங்கள், ஓரினப்பயிர்கள் மிகுந்துள்ள (காபி, தேயிலை, மற்ற விளைநிலங்கள்) இடங்களிலும் இவை சுற்றித்திரியும்.
ஆனால் காடுகள் அழிக்கப்பட்டதாலும், தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாலும் அவை வசிக்கும் இடம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது.
சிறுத்தையின் உணவு
காட்டில் உள்ள மான்கள், காட்டுப்பன்றி, குரங்குகள், பறவைகளை சிறுத்தை வேட்டையாடி இரையாகக் கொள்கிறது. அவ்வப்போது, காட்டுப் பகுதியின் அருகில் உள்ள மனிதர்கள் வசிக்குமிடங் களுக்குள் புகுந்து கால்நடைகள், தெரு நாயை இரையாகக் கொள்கிறது. இது மட்டுமல்லாமல் பூச்சிகள், எலி, தவளை முதலான சிறிய உயிரினங் களையும் உட்கொள்கிறது.
சில வேளைகளில், மனிதர்கள் வீசி எறியும் இறைச்சிக் கழிவுகளையும் (கோழி மற்றும் ஆட்டு இறைச்சிக் கடைகளிலிருந்து வீசப்படும் கோழியின் இறக்கை, கால், தலை, ஆட்டு வயிற்றின் உட் பாகங்கள்), மருத்துவமனையிலிந்து தூக்கி எறியப் படும் மனித உடலின் சிறு பாகங்கள் (பிரசவத்தின் பின் கழிவென வீசப்படும் தொப்புள் கொடி முதலியவை) ஆகியவற்றையும் சிறுத்தைகள் அவ் வப்போது உட்கொள்கின்றன. இவ்வாறு பலதரப்பட்ட உணவுகளை உட் கொள்வதால் புலி, சிங்கம் போன்ற பெரிய ஊனுண்ணிகளைப் போல மனித இடையூறு இல்லாத, பரந்த காட்டுப் பகுதிகளில் மட்டுமே சிறுத்தைகள் வாழ்வதில்லை.
காடழிப்பு, சிறுத்தைகளின் இரையை மனிதன் திருட்டு வேட்டையாடுவதால் அவற்றின் எண் ணிக்கை குறைந்து போகும் நிலையில்தான் கால் நடைகளை பிடிக்க சிறுத்தைகள் ஊருக்குள் வருகின்றன. வேட்டையாடி தமது இரையைப் பிடிக்கமுடியாத, காயமடைந்த அல்லது மிகவும் வயது முதிர்ந்த சிறுத்தைகள் சிலவேளைகளில் மனிதர்களையும் தாக்குகின்றன. சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகேயும், பல நேரம் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் பல காலமாகவே வாழ்ந்து வருகிறது (உதாரணம்: சென்னை, மும்பை). பெருகும் மக்கள்தொகை, அதோடு பெருகும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கால்நடைகளின் எண்ணிக்கை, இதனால் சீரழியும் காட்டுப்பகுதி, காட்டினுள் போதிய மான், காட்டுப்பன்றி முதலான இரை உணவு இல்லாமல் போதல் ஆகிய காரணங்களால் தான் கால்நடைகளையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களையோ சிறுத்தைகள் தாக்க நேரிடுகிறது. இதுவே சிறுத்தை- மனிதன் மோதலுக்கு வித்திடுகிறது. சரி, சிறுத்தைகளை ஓர் இடத்திலிருந்துபிடித்து வேறு இடத்தில் விடுவிப்பதனால் இந்தப் பிரச்சி னையை தீர்த்துவிட முடியுமா?
மனிதர்களுக்கு ஊறுவிளைவிப்பவை எனக் கருதப்படும் சிறுத்தைகளை பொறி வைத்துப் பிடித்து, வேறு இடங்களில் விடுவிப்பதால் பிரச்சினை தீர்ந்துவிடாது. மாறாக இது பிரச்சி னையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன:
1. ஓர் இடத்திலிருந்து சிறுத்தையைப் பிடித்து விட்டால், அச்சிறுத்தை உலவி வந்த பகுதியை வேறொரு சிறுத்தை (பெரும்பாலும் வயதில் குறைந்த சிறுத்தை, அதாவது முன்னதைவிட வலுவான சிறுத்தை) ஆக்கிரமித்துக் கொள்ளும். எனவே, சிறுத்தைகளை பொறி வைத்து பிடிப்பதால் அந்த இடத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை பெருகும் வாய்ப்புகளே அதிகம். உதாரணமாக, மேற்கு மகாராஷ்டிரத்திலுள்ள ஓர் ஊரில் இவ்வாறு சிறுத்தையை பொறி வைத்து பிடித்த பின்பும், கால்நடைகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. மேலும் பல சிறுத்தைகள் தொடர்ந்து பொறியில் சிக்கின.
2. இடம் பெயர்க்கப்பட்ட சிறுத்தை, அது விடுவிக்கப் பட்ட இடத்துக்கு அருகில் உள்ள ஊரிலும் சென்று கால்நடைகளையும், மனிதர்களையும்தாக்கக்கூடும். உதாரணமாக, மகாராஷ்டிரத்தில் ஜுன்னார் எனும் ஊரில் பிடிபட்டு, ரத்தினகிரி சரணாலயத்துக்கு இடம்பெயர்க்கப்பட்ட பெண் சிறுத்தை, அது விடுவிக்கப்பட்ட காட்டுப்பகுதியின் அருகிலிருந்த ஊரிலுள்ள சிறுவனை தாக்கியது. அதே ஜுன்னார் காட்டுப்பகுதியில் பிடிபட்ட ஒரு பெண் சிறுத்தை, சுமார் 200 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள யாவல் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது.அச்சிறுத்தை தான் பிடிபட்ட இடமான ஜுன்னார் காட்டுப்பகுதியை நோக்கி சுமார் 90 கி.மீ. பயணித்து வந்த வழியெல்லாம் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கிக்கொண்டே வந்தது. இந்த இடங்களில் அதற்கு முன் சிறுத்தைகளால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜுன்னார் காட்டுப்பகுதில் 2001 முதல் 2003ஆம் ஆண்டு வரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சிறுத்தைகளால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் அந்த காலத்தில் 106 சிறுத்தைகள் தொடர்ந்து பிடிபட்டன.
மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் 2002 முதல் 2004 ஆண்டு வரை 24 பேர் சிறுத்தைகளால் தாக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியில் 1990 முதல் 1997ஆம் ஆண்டுவரை 121 பேர் சிறுத்தைகளால் தாக்கப்பட்டனர். குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவின் எல்லையை ஒட்டிய பகுதிதளில் 1990 முதல் 1999ஆம் ஆண்டு வரை 27 பேர் சிறுத்தைகளால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த இடங்கள் அனைத்தும் காட்டுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளன என்பதும், கடந்த பத்தாண்டுகளாக வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள், இந்த காட்டுப்பகுதிகளில் விடுவிக்கப் பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிறுத்தை-மனிதர் மோதலைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் உயிரியலாளர் வித்யா ஆத்ரேயா. இவரது ஆராய்ச்சியின் விளைவாக, சிறுத்தை-மனிதர் மோதல் அதிகரிப்பதற்கும் சிறுத்தைகளை இடம்பெயரச் செய்வதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
3. சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வெகு தூரத்தில் விடுவித்தாலும், அவை தான் பிடிபட்ட பகுதியை நோக்கியே திரும்ப பயணிக்கும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
4.சிறுத்தைகளைஅவற்றுக்கு பழக்கப்படாத இடத்தில் விடுவிப்பதால், அவை பல தொல்லை களுக்கு ஆளாகின்றன. அவை தான் வாழ்ந்த இடத்தை நோக்கிப் பயணிக்கும்போது வழியில் பெரிய நீர்நிலையோ, மிகப்பரந்த வறண்ட நிலப்பகுதியோ, மனிதர்கள் அதிகம் வாழும் பகுதியோ இருந்தால், அவை வழிதெரியாமல் தன் பூர்வீக இடத்தை அடையமுடியாமல், வந்த வழியிலேயே ஏதோ ஒரு இடத்தில் தஞ்சம் புக நேரிடுகிறது. இது புதிய பகுதியில் சிறுத்தை-மனிதர் மோதலுக்கு வழிகோலுகிறது.
5. பெரும்பாலும் சிறுத்தை-மனிதர் மோதல் உள்ள இடங்களிலேயே பொறி வைத்து சிறுத்தை பிடிக்கப்படுகிறது. ஆனாலும் மனிதர்களைத் தாக்கிய சிறுத்தைதான், அப்பொறியில் சிக்கியது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை பிடிபட்ட சிறுத்தை அதற்கு முன் கால்நடை களையோ, மனிதர்களையோ தாக்கும் பண்பை பெற்றிருக்காவிட்டாலும், தற்போது பிடிபட்டதால் ஏற்படும் மனஉளைச்சல், உடல் காயங்களாலும் தான் வாழ்ந்த இடத்தைவிட்டுவிட்டு முற்றிலும் புதிய இடங்களில் அவற்றை விடுவிப்பதாலும், மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கத் தொடங்குகிறது.
ஆக, சிறுத்தைகளை இடம்பெயர்ப்பதால் இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு வழியில்லை. இவ்வாறு செய்வதால் சிறுத்தை-மனிதர் மோதல் மேலும் தொடரவும், அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
என்னதான் வழி?
இந்தியாவில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோர் சாலை விபத்தில் பலியாகிறார்கள், விபத்துக்கு உள்ளாகிறார்கள். ஆண்டுக்கு சுமார் 35,000 பேர் வெறிநாய் கடித்து பலியாவதாக ஒரு குறிப்பு சொல்கிறது! ஆனால் சிறுத்தை மனிதனை எதிர்பாராவிதமாக தாக்கினாலோ, கொன்றாலோ அது மிகப்பெரிய செய்தியாக்கப்படுகிறது. உடனே சிறுத்தையை பிடிக்கும் படலமும் தொடங்கப்பட்டு விடுகிறது. மனிதர்களை மட்டுமே தொடர்ந்து குறிபார்த்து தாக்கும் சிறுத்தையை பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் கால்நடையையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களைத் தாக்கும் சிறுத்தைகளை பிடிப்பதையும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிந்த உடனேயே அதை கூண்டு வைத்துப் பிடிப்பதையும் முதலில் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பிரச்சனைக்கு சிறுத்தை மட்டுமே காரணமில்லை. பிரச்சினை உள்ள இடத்தின் சூழலும் காரணமாக இருக்கலாம். சிறுத்தை-மனிதர் மோதல் உள்ள பகுதிகளில் தெருநாய்களை ஒடுக்கியும், இறைச்சி - மருத்துவ கழிவுளை உடனுக்குடன் அகற்றியும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதன் மூலமாகவும், சிறுத்தைகளால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். சிறுத்தைக்கு வரவை ஈர்க்கும் விஷயங்களைத் தடுப்பதன் மூலமாகவே, இப்பிரச்சினைக்கு நீண்டகால தீர்வைக் காணமுடியும்.
இது மட்டுமல்ல, சிறுத்தைகள் நடமாடும் பகுதியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையும் மனநிலையும் மாற வேண்டும். சிறு குழந்தைகளை இரவு நேரங்களில் தனியே வெளியில் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் இரவில் தனியே செல்லும்போது கைவிளக்கை (டார்ச்) எடுத்துச் செல்லும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். வீட்டின் அருகில் புதர் மண்டிக்கிடந்தால், அவற்றை அகற்ற வேண்டும். வீட்டின் அருகில் இறைச்சிக் கழிவுகளை அதிக அளவில் கொட்டுவதைத் தவிர்க்கவேண்டும். கால் நடைகள், கோழிகள் வளர்த்தால், அவற்றை வீட்டைவிட்டு சற்று தொலைவில் பாதுகாப்பான மூடிய கொட்டகைக்குள் இரவில் வைத்து அடைக்க வேண்டும். நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை கூடுமானவரை தவிர்க்கலாம். அதைமீறி இருந்தால், இரவில் அவற்றை பாது காப்பான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் சாலையைக் கடக்கும்போது கண்ணை மூடிக்கொண்டு ஓடுவதில்லை. இருபுறமும் பார்த்து வாகனங்கள் ஏதேனும் வருகின்றனவா என்பதை கவனித்த பின்னரே கடக்க ஆரம்பிக்கிறோம். அது போலவே, சிறுத்தை உலவும் பகுதிகளிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயிர்ச் சேதம் ஈடு செய்ய முடியாதது. அதிலும் சிறுகுழந்தைகளாக இருப்பின் சோகம் பண்மடங்கு அதிகமாக இருக்கும். அப்போது சிறுத்தைகளுக்கு எதிரான கோபமும் அதிகமாகும், இது இயற்கைதான். இதற்கு எதிராக உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதால், வனத்துறையிடம் சென்று முறையிடுகிறோம். அவர்களும் மக்களின் ஆவேசம், உயரதிகாரிகள், முக்கியப்பொறுப்பு வகிப்பவர்களின் உந்துதலுக்கு இணங்க கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து, வேறு இடத்தில் கொண்டுபோய் விடுகின்றனர். முன்பு சொன்னதுபோல் இவ்வாறு செய்வதால், இப்பிரச்சினை மோசமான வகையில் அதிகரிக்குமே தவிர முடிவு பெறாது.
மனித உயிர்ச்சேதம் ஒருபுறம் இருக்க ஏழை விவசாயி அல்லது கால்நடையையே வாழ் வாதாரமாகக் கொண்டவர்களின் மாட்டையோ, ஆட்டையோ சிறுத்தை கொன்றுவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சில வேளைகளில் சிறுத்தையால் தாக்கப்பட்ட கால்நடை நமக்கு தென்பட்டால் அதை பூமியில் புதைப்பதோ, அப்புறப்படுத்துவதோ கூடாது. தாக்கப்பட்ட அந்தக் கால்நடை அச்சிறுத்தையின் உணவு என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். சிறுத்தையின் உணவை வலியச் சென்று தட்டிப் பறிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அப்படிச் செய்வது, பசியுடன் இருக்கும் சிறுத்தையை மேலும் பசிகொள்ளச் செய்து, வேறெங்காவது சென்று வேறு கால்நடையை தாக்கிக் கொல்லத் தூண்டும். ஆக, கொல்லப்பட்ட கால்நடையை பார்த்த இடத்திலேயே விட்டுவிடுவதே நல்லது.
சிறுத்தை இவ்வாறு மனிதர்களைத் தாக்கினாலோ அல்லது கொன்றாலோ உடனடியாக வனத்துறையினரின் மேல்தான் பழிபோடுகிறோம். நாம் வீட்டில் களவு போனால் காவல்துறை அதிகாரிகளை குற்றம்சாற்றுவதற்குச் சமம் இது.
சிறுத்தை - மனிதர் மோதல் வனத்துறை சம்பந்தப் பட்ட பிரச்சினை இல்லை. பல அரசுத்துறைகள் கூட்டாக செயல்பட்டால்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும். சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள சிறுத்தைகளின் பண்புகள், நடமாட்டம், அதன் முக்கிய இரைவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒரு வேளை சிறுத்தையை பிடிக்க நேரிட்டால், அவற்றுக்கு காயம் ஏற்படாத வண்ணம் சிறந்த முறையில் கையாள வனத்துறையினர், கால்நடை, காட்டுயிர் மருத்துவர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்கப்பட வேண்டும். வெகுசன ஊடகங்கள் மக்களை கொல்ல வந்த கொடூர மிருகமாக சிறுத்தைகளைச் சித்தரித்து மிகைப்படுத்தாமல், பிரச்சினையை அறிவுப்பூர்வமாக உணர்ந்து பொறுப்புடன் செய்தியை வெளியிடவேண்டும். சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இயற்கை பாதுகாப்பு, காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்கள் இதில் பெரும்பங்கு வகிக்கவேண்டும். இவை அனைத்தையும் கடைபிடிப்பதே சிறுத்தை - மனிதர் மோதலை கட்டுப்படுத்த சிறந்த வழி.
(கட்டுரையாளர் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர், தொடர்ச்சியாக எழுதி வருபவர்) முகவரி: ப. செகநாதன், இயற்கை பாதுகாப்பு நிறுவனம், 8/364, கோ-ஆபரேட்டிவ் காலனி, வால்பாறை - 642 127
பூவுலகு செப்டம்பர் 2010 இதழில் வெளியானது
- விவரங்கள்
- கோவை யோகநாதன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வாழ்வை இழக்கும் வெளவால்களின் சரணாலயமாக இருக்கும் மரங்கள் அழிக்கப் படுவதால் 5000க்கும் மேலான வெளவால்களும், காகம் மற்றும் குயில்களும் மற்றும பலவகையான பறவைகள் மரத்தை நம்பி வாழும் உயிரினங்கள் வாழ்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
கடந்த 2007ஆம் ஆண்டு கோவை அவிநாசி சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி துவங்கியது. அதற்காக சாலையோர மரங்கள் 250க்கும் மேற்பட்டவை வெட்டி சாய்க்கப்பட்டன. இந்த மரங்களை நம்பி வாழ்ந்து வந்த காகம், குயில் இன்னும் பிற உயிரினங்கள் வேறு வழியின்றி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தேன். இப்பறவைகளின் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டன. பெரும்பாலான பறவைகள் கோவை வ.ஊ.சி பூங்காவிலும் அதன் அருகிலுள்ள மத்திய சிறைச்சாலையில் உள்ள மரங்களிலும் தஞ்சம் அடைந்தன.
இம்மரங்கள் வெட்டப்படும்போதே பறவைகளின் வாழ்விடப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. அந்த மரங்களில் நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட காகங்களும் குயில்களுமே பெரும்பாலானவை. இந்நிலையில் தற்போது கோவை-&மேட்டுப் பாளையம் சாலை விரிவாக்கத்திற்காக 49 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் இச்சாலை மேம்படுத்தப்படுகிறது. இதற்காக சாலையோரத்தில் உள்ள பச்சை மரங்கள் சுமார் 400 மரங்களுக்கும் மேல் வெட்டும் பணி நடைபெறுகிறது. இந்த மரங்களில் பல்லாயிரக் கணக்கான பறவை களுக்கு வாழ்விடமாக உள்ளது. இந்த மரங்கள் வெட்டப்படும் நிலையில் இதை நம்பி வாழும் பறைவகள் வேறு இடத்திற்கு கட்டாயம் செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இப்பறவைகளும் வ.ஊ.சி பார்க்கிலும் மத்திய சிறைச்சாலையிலும் உள்ள மரங்களில்தான் தஞ்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கே பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தேவையில்லாத நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது.
கோவை வ.உ.சி பார்க்கிலும், மத்திய சிறையினுள்ளும் உள்ள மரங்களும் சுமார் 5000 வெளவால்களும், 100க்கும் மேற்பட்ட மைனா, காடை, கௌதாரி, கழுகு, ஆந்தை, தவிட்டுக் குருவி, மயில் இன்னும் நிறைய பறவைகளும¢ வாழும் இந்த இடத்தில்தான் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இங்குள்ள மரங்களையே நம்பி உயிர்வாழும் இந்த உயிரினங்களின் நிலை மிக சோகமாக அமையும். இந்த பறவைகள் பாதுகாப்பில்லா இடங்களில் தங்குவதால், அவற்றை வேட்டையாடும் நிலை அதிகரிக்கும். இப்படி இப்பறவைகள் அழிக்கப்பட்டால் பறவை இனமே அழிந்துவிடும். அபாயம் உள்ளது.
குறிப்பு
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொழிற்சாலைகளின் 5000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது-. 50,000 டன் இரும்பு உருக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் நச்சு புகையிலிருந்து இந்த மரங்கள்தான் ஓரளவேனும் மக்களை காப்பாற்றியது.
(பூவுலகு செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்ட ஆப்ரிக்க காண்டாமிருகங்களின் மிருகங்களின் எண்ணிக்கை 800 க்கும் அதிகம். தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகம்.
தென் ஆப்ரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 333 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை வேட்டையால் உயிரைவிட்டவை சுமார் 70 .
இவற்றின் கொம்புகள் மருந்தாக பயன்படும் என்ற மூட நம்பிக்கை காரணமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் இவற்றின் விற்பனை சந்தையாக உள்ளது. குறிப்பாக வியட்நாமிற்கு இவை அதிகமாக கடத்தப்படுகிறது. இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து செயல்படும், வேட்டை தடுப்பு அமைப்புகள் வியட்நாமின் அதிகாரிகளுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள போதும், இவற்றை வேட்டையில் இருந்து பாதுகாக்க ஆபரிக்க நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
தென் ஆப்ரிக்காவில் காடுகள் தவிர்த்து தனியார் நிலங்களிலும் காண்டமிருகங்கள் வந்து போவதால், பொது மக்களின் ஒத்துழைப்பும், காவல் துறையின் நடவடிக்கைகளும் நிச்சயம் தேவைப்படுகிறது. இன்னும் சில நாடுகளில் பயிற்சி பெற்ற வேட்டைக்காரர்களால் கொல்லப்படும் காண்டமிருகங்களின் கொம்புகள், விருதுகளாக வழங்கப்படுகிறது.
தன்னார்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், கொல்லப்பட்ட விலங்குகளின் மரபணுக்களை ஆய்வு செய்தல், காவல் துறைக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குதல் என தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வேட்டைகளை தடுக்கப் போதுமானதாக இல்லை. இன்னும் அதிகப்படியான தண்டனைகள், தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன காண்டாமிருகங்களின் தாயகங்கள்.
- விவரங்கள்
- ராமன்ராஜா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.
இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே? சென்னையில் கண் பூக்கத் தேடினாலும் சிட்டுக் குருவி தட்டுப்பட மறுக்கிறது. அன்றைக்கு உலக சிட்டுக் குருவி தினம் என்று மீடியாவில் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுப் பொடியன் மொட்டை மாடியில் அரிசி வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். மீதி இருக்கும் குருவிகள் எங்கிருந்தாலும் இதைத் தந்தி போல் பாவித்து உடனே வேளச்சேரிக்கு வரவும்.
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையே அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்தவரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக் கும் பிடிபடவில்லை.
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ். அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித் தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு!
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன்கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்கள் பங்கு பற்றிப் பார்க்கவேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன்முதலில் அமெரிக்கா வுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்த புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்த போது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங் குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை. குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற்புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்த போது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணை கள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக் காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரியதான போது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்தது தான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக் கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள் அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா.... இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலைவிதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக் கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள்! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக் கொண்டு ஊர்ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப்பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்து கொண்டார் கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார் கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின் றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விடுகிறது என்ப தற்கும் பல ஆராய்ச்சி முடிவு கள் சாட்சி இருக்கின்றன. அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள் கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்து களின் மிச்சங்களும் அதில், காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை!
மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான், ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத் தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.
- சொல்வனம்
(மாற்று மருத்துவம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)
- முதலைக் கண்ணீர்
- கங்கை முதலைகள்
- இயற்கை வேளாண்மை - தேனீக்கள் வளர்ப்போம்
- புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?
- வேங்கை வர்ணங்கள்
- நம்முடன் வாழும் யானைகள்
- இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்
- பறவைகளுக்கும் பொருந்துமா காதலர் தினம்?
- புலிகள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
- மனங்கவரும் பறவைகள்
- நான் ஒரு குட்டி யானை
- பாண்டா கரடிகள்: சீனாவின் சூப்பர் ஸ்டார்
- சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு
- வீழ்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள்
- காணாமல் போகும் நீர் நாய்கள்
- அழிந்து வரும் சோலை மந்தி
- பழனி மலை தொடர்ச்சி
- மிரட்டும் தவளைகள்
- எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
- டார்வினின் விதி மீறும் நாய்கள்