இன்று நாம் காணும் கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி அடிப்படையில் ரெட் ஜங்கிள் பவுல் எனும் காட்டுக் கோழியிலிருந்து வந்ததே ஆகும். இதில் பரிணாமத்திற்கும் மிக முக்கிய பங்குள்ளது. மேலும் மனிதனின் உணவுத் தேவைக்காக அவைகள் இனவிருத்திக்கு உட்பட்டு இன்று நாம் காணும் கறிக்கோழியாகவும், முட்டைக் கோழியாகவும் உருவெடுத்துள்ளது. வணிகக் கோழியின் உற்பத்தித் திறன் அதன் மூதாதையரை விட அதிகமாகும்.         

desi chicken

நாட்டுக் கோழி (Native / Desi Chicken)

அடிப்படையில் இந்த காட்டுக் கோழிகள் வீட்டு விலங்காக காலப் போக்கில் மாற்றப்பட்டப் பின்னர், அறிவியலின் புரிதலால் அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு அவைகள் மனிதனின் தெரிவுக்கு உட்படுத்தப்பட்டது. அதாவது மனிதன் விரைவாக வளரும் கோழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவைகளை இனவிருத்திக்கு உட்படுத்தினான். அடுத்த தலைமுறையில் கோழிகளின் வளர்ச்சி முந்தைய தலைமுறையைக் விட கூடியிருந்தது. இப்படி அதிக வளர்ச்சிக்கான மரபணுக்களைக் கொண்டு உருவானதே இன்று நாம் காணும் கறிக் கோழிகள்.

Deep Litter System

ஆழ்கூள முறையில் (Deep Litter System) கறிக்கோழி வளர்ப்பு

இதைப் போலவே தான் முட்டைக் கோழிகளும். ஆரம்ப தலைமுறைகளில் சில கோழிகள் அதிக எண்ணிக்கையில் முட்டையிடுவதையும், அதிக குஞ்சு பொறிக்கும் திறனையும் பெற்றிருப்பதை கண்டுகொண்ட மனிதன், அந்தக் கோழிகளை மட்டும் அடுத்த தலைமுறையை உருவாக்குமாறு செய்தான். இப்படி செய்ததன் விளைவாக புதிதாக வரும் சந்ததிகள் அதிக உற்பத்திக்கான பண்புகளைப் பெற்றிருந்தன. அதன் விளைவாக அதிக விளைச்சலை மனிதன் பெற்றான். இந்த உற்பத்தி சார்ந்த இனவிருத்தி முறை இன்றளவும் நடைபெற்று கொண்டுள்ளன.

ஆரம்பத்தில் 100 முட்டைகளுக்கும் குறைவாக இருந்தவை இன்று 300 முட்டைகளை இடும் வகையில் முன்னேறியுள்ளது. இது மனிதனின் புரதத் தேவையை பூர்த்தி செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கறிக்கோழியும் இன்று ஆறு வாரங்களில் இரண்டு கிலோ எடையை அடையுமாறு அதன் வளர்ச்சித் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Cage System

(கூண்டு முறையில் (Cage System) முட்டைக் கோழி வளர்ப்பு)

இந்த முன்னேற்றத்தில் இனவிருத்தி, மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு போன்ற துறைகளுக்கு முக்கிய பங்குள்ளது. இயற்கை திடமான கோழிகளை மட்டும் ஆதரிக்கும். ஆனால் மனிதனின் தொழில்நுட்பம் உற்பத்தித் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அந்தக் கோழிகளை மட்டும் ஆதரிக்கும். மேலும் தற்போது உற்பத்தியுடன் கோழியின் திடம் சார்ந்த பண்புகளும் முக்கியம் என்பதை மனிதன் உணர்ந்துள்ளான்.

ஆக சுருக்கமாகக் கூறுவதென்றால் காட்டுக் கோழிகள் வணிகக் கோழிகளாக மாறியதில் மனிதனின் செயற்கை முறை தெரிவும், தொழில்நுடபம் மிகுந்த மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகளும் குறிப்பிடத் தக்கவை. கோழிகளின் நலன் பாதிக்காமல் அதன் உற்பத்தியை எப்படி அதிகரிப்பது என்பது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும்.

செந்தமிழ்ச் செல்வன்

Pin It