அண்டார்க்டிகாவில் மட்டுமே காணப்படும் இரண்டு பெங்குயின் இனங்களில் ஒன்றான எம்பரெர் பெங்குயின்கள் இன்று கடுமையான இன அழிவு அச்சுறுத்தலை சந்திக்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. காலநிலை மாற்றத்தின் கெடுதியால் வரும் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கையில் மோசமான அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று அர்ஜெண்டினா அண்டார்க்டிகா ஆய்வுக்கழகத்தின் (IAA) நிபுணர்கள் கூறுகின்றனர்.

 பசியும் பட்டினியும்

உணவுப் பற்றாக்குறை போன்ற கடும் பிரச்சனைகளால் இவை இன்று அழிந்து கொண்டிருக்கின்றன. உலகின் இப்பகுதியில் மட்டுமே காணப்படும் இவை பெங்குயின்களின் இனத்தில் மிகப்பெரியவை. புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் பனிப்பாறைகள் உருகுதல் இவற்றின் இனப்பெருக்க சுழற்சியை பாதிக்கிறது.

emperor penguinகடலில் கரையுடன் தொடர்புள்ள பனிப்பாறைகளில் இவை முட்டைகளை பொரிக்கின்றன. புவி வெப்ப உயர்வு காரணமாக பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகுவதால் இவை ஆண்டுகள் கணக்கில் இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் இவற்றின் எண்ணிக்கை குறைகிறது. பனிக்கட்டிகள் உருகிய பகுதியில் குளிர்ந்த நீரில் நீந்துவதற்கும் முன்பே இவற்றின் குட்டிகள் நீரில் விழுந்து இறக்கின்றன. இது இவற்றின் இனம் பெருகத் தடையாக உள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழக்கும் பெங்குயின் குட்டிகள்

அண்டார்க்டிகாவில் ஹாலி பே காலனியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக முட்டை பொரிந்து பிறந்த குட்டிகள் முழுவதும் இது போல நீரில் விழுந்து குளிர்ச்சியைத் தாங்க முடியாமல் மூழ்கி உயிரிழந்தன.

சுற்றுலா மற்றும் மீன் பிடித் தொழிலில் ஏற்பட்ட பெருத்த மாற்றங்கள் இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணமாகிறது. இது உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வு இன்றுள்ள இதே நிலையில் தொடர்ந்தால் இந்த பெங்குயின்களின் காலனிகளில் 81% வரும் 2100ம் ஆண்டுடன் இன அழிவைச் சந்திக்கும் என்று அண்டார்க்டிகா பற்றிய ஆய்வறிக்கை (Scientific Community of Antarctica Research) கூறுகிறது.

கிழக்கிலும் மோசமான நிலை

கிழக்கு அண்டார்க்டிகாவிலும் பெரிய அளவில் வெப்பநிலை உயர்கிறது. இன்று நிலை அந்த அளவு மோசமானதில்லை என்று தோன்றினாலும் இந்த நூற்றாண்டின் இறுதியுடன் இவற்றின் எண்ணிக்கை இங்கு 31% குறையும் அபாயம் உள்ளது என்று உலக வன நிதியம் (WWF) கூறுகிறது.

எடுத்துக்காட்டாகும் எம்பரெர் பெங்குயின் குடும்பம்

இப்போது அண்டார்க்டிகாவில் 595,000 வயது வந்த எம்பரெர் பெங்குயின்கள் மட்டுமே வாழ்கின்றன. இவற்றை உயிரினப் பாதுகாப்பிற்கான சிறப்புப் பட்டியலில் உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெண் பெங்குயின்கள் முட்டையிட்டு ஆண் பெங்குயின்களிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு உணவு தேடிச் செல்லும். அவை திரும்பி வரும்வரை ஆண் பெங்குயின்கள் முட்டையைப் பாதுகாத்து தன் இணையின் வரவிற்காகக் காத்திருக்கும். இந்த காத்திருப்பு 65 நாட்கள் வரை தொடரும்.

குழந்தை பிறந்தவுடன் பயணம்

இதன் பிறகு ஆண் பெங்குயின் முட்டை விரிந்து பிறக்கும் குட்டியை பையில் வைத்து பாதுகாக்கும். தாய் பெங்குயின் திரும்ப வரும்போது குழந்தையை இணையிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஆண் பெங்குயின் உணவு தேடிச் செல்லும்.

புவிப் பந்தின் தென் கோடி அழகு என்று வர்ணிக்கப்படும் இந்த அற்புத உயிரினங்கள் பேரழிவில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ வேண்டுமென்றால் புவியின் வெப்ப உயர்வு குறைக்கப்பட வேண்டும். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு குறைய வேண்டும். இதையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் வாய்த்த பூமியின் ஒரே ஒரு உயிரினம் மனிதன் மட்டுமே. காலநிலையில் நிகழும் மாற்றம் மனித மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It