புலி உள்ள காடே வளமான காடு. வளம் உள்ள காடுகளால் தான் நிலத்திலுள்ள மனிதன் வாழ்கிறான்.
இங்கு எல்லாமே சுழற்சி. ஒன்றிலிருந்து தொடங்குவது தான் இன்னொன்று. அதன் நீட்சி தான் மானுடம் தழைக்கச் செய்த மந்திரமாகி இருக்கிறது. எங்கோ படபடக்கும் பட்டாம்பூச்சியின் அசைவில் இருந்து தான் வேறெங்கோ நிகழும் பூகம்பத்தின் தொடர்ச்சி நிகழ்கிறது என்று சொல்லும் கேயாஸ் தியரி தான் இந்த உலகம். பிரபஞ்சத் துகள் பூமி என்றால் பூமிக்குள் நிகழும் எல்லாமும் துகள்களின் அசைவு தான்.
காடு.. புலி.... பல்லுயிர்.... என்று சூழலியல் பற்றிய சிந்தனை தொடர்ந்து ஓடுவதால்.... புலி பற்றிய சில பகிர்தல்கள் இங்கே.
சிறுத்தை மீது எப்போதும் வசீகரம் இருந்தாலும் புலி மீது வியப்பிருக்கிறது. யானைகள் காட்டின் பிரம்மாண்டம் என்றால் புலிகள் காட்டின் வேலிகள். புலி இயல்பிலேயே கூச்ச சுபாவம் உடையவை. அவை பசித்தால் மட்டுமே வேட்டையாடும். அதுவும் வயிற்றில் குட்டிகள் கொண்ட எதையும் தாக்காது என்பது மிருக விதி போல. மீறாது தான் போல.
எத்தனை பசித்தாலும்... எந்த குட்டிகளையும் அது ஒன்றும் செய்வதில்லை. ஒரு காணொளியில் கூட மான் குட்டியைத் தூக்கிக் கொண்டே செல்வதையும்...... கிட்டத்தட்ட அது தான் அதை வளர்ப்பதையும் கண்டோம். அதன்பிறகு வேறொரு பார்வை புலி மீது கொண்டோம். புலியை இன்னும் கொஞ்சம் விரட்டி நெருங்கி கவனிக்க...... இந்த புலி இனம் உலகிலேயே மிகப்பெரிய பூனை வகைமையைச் சார்ந்த இனம் என்று தெரிய வருகிறது. 3.3 மீட்டர் நீளமும் 670 பவுண்ட் எடையும் சராசரியாக இருக்கும் என்று ஆய்வு சொல்கிறது. ஒரு புலியின் வாழ்நாள் சராசரியாக 20 இருந்து 26 வருடம் இருக்குமாம். இந்த புலி இனம் பூமியில் தோன்றி 20 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட புலி ஒன்று உயிர் வாழ 1000 சதுர மீட்டர் காடு வேண்டும் என்கிறது புள்ளி விபரம். காடுகளின் வாழ்வு புலி என்னும் வேலியில் தான் இருக்கிறது. ஒவ்வொரு புலியும் ஒரு மைல்கல் காடுகளுக்கு. அது எப்படி புலிக்கும் காடுக்குமான தொடர்பு என்றால்... சுவாரஷ்யங்களின் கூட்டு தான் இந்த பூமியின் சுழற்சி. முன்பே சொன்ன கேயாஸ் தியரி தான் இங்கும் மிக மெலிதாக தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாக போய் விடும் என்று "பூவுலக நண்பர்க"ளில் ஒருவர் எழுதிய- ஒரு கட்டுரையில்- இந்த சொற்றொடர் தூக்கி வாரிப் போட்டது. அதன் நீட்சியில் அந்த கட்டுரை சொல்லும் செய்திகள் மூலம்... புலி வால் பிடித்த கதை தான் இங்கே நடக்கும் எல்லாக் கதைகளும் என்று புரிய நேர்ந்தது.
முன்பே சொன்னது போல இந்த உலகம் உயிக்ச் சங்கிலியின் வழியாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றிலிருந்து முளைக்கும் இன்னொன்று. ஒன்றின் வினையால் ஏற்படும் இன்னொன்றின் எதிர்வினை. இங்கு இது இருப்பதால் தான் அங்கு அது இருக்கிறது போன்ற சமன்பாடுகள்... அப்படி... ஒவ்வொரு புலியும் காடுகளின் காவலாளி என்றால் மிகை இல்லை.
வேட்டை சமூகத்தில் இந்த மானுடம் இருந்த போது தண்ணீரின் தேவை மிகக் குறைவாக இருந்தது... அதுவே அவன் உழைத்து விதைத்து வாழத் தொடங்கிய பிறகு.... தேவைக்கதிகமான நீரை அபகரிக்க ஆரம்பித்தான். முன்பு சொன்ன சுழற்சியில் நீரின் பங்கு தான் முக்கால்வாசி என்றறிவோம். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவன் சொன்ன வலுவான செய்தி தான் காலத்துக்கு காலர் தூக்கி நிற்கிறது. சுழலும் பூமியின் சூத்திரம் இது தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற ‘பூங்குன்றன்’ கொளுத்திப் போட்ட புதிர் தான் புலிக்கும் மனிதனுக்குமான சங்கிலி; யானைக்கும் நமக்குமான பந்தம்; நீருக்கும் நெருப்புக்குமான இணக்கம்; காற்றுக்கும் வெளிக்குமான விசேஷம்; நமக்கும் நமக்குமான இடைவெளி.
எல்லா உயிரினங்களுக்கும் ஆதாரம் நீர். அந்த நீர் எப்படி உருவாகும். ஒரே வழி மழை. அந்த மழைக்கு எது காரணம்... வெயில். அந்த வெயிலுக்கும் மழைக்குமான இடைவெளியை இட்டு நிரப்பும் சில பல வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளும் புலிகளை நாம் சாக விடலாமா? எப்படி அதன் பங்கென்று பார்த்தோமானால்... காடுகளில்... தாவரத்தை தின்று உயிர் வாழும் பன்றி... முயல்... மான் என்று சில சிறிய விலங்குகளுக்கு வேலையே வயிறு முட்டத் தின்பதும்.... இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் தான். அப்படி ஈன்றெடுக்கும் குட்டிகள் மீண்டும் உணவுக்கு தாவரங்களைத் தான் தின்னும். தாவரங்கள் தான் காடு. அவையே காலியானால் ஒரு முறை உருவான காடு மீண்டும் உருவாக காலக்கணக்கில் ஆகி விடும். ஒவ்வொரு காடும் சாதாரணமாக உருவானது இல்லை. அதில் பறவைகளின்.... தேனீக்களின்...... அயராத உழைப்பிருக்கிறது. முன்பே சொன்ன...... இங்கு இது நிகழ்ந்தால் தான்.... அது அங்கு நிகழும் என்பது. அப்படி ஒவ்வொரு பறவையும் ஒரு மரத்தை தூக்கிச் சென்று விதைக்கிறது. மகரந்த சேர்க்கை என்ற மகத்துவம் தேனீக்கள் இல்லை என்றால் எப்படி நிகழும். தேனீக்கள் இல்லாத உலகில் நான்காண்டுகளில் மானுட இனமே அழிந்து போகும் என்கிறது அறிவியல்.
ஆக....... தாவரப் பட்சிகள் தாவரங்களை பெருமளவு உண்டு தீர்க்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு புலிகளுக்கு உண்டு. அவைகளை புலிகள் அடித்துத் தின்று விடுவதால்... தாவரங்கள் காக்கப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் வீழும் அத்தனை அருவிகளும் எங்கிருந்து வருகின்றன? மழைக்காலங்களில் ஸ்பாஞ் போல இருக்கும் புல்வெளிகள் உறிந்து கொண்ட நீர்த் துளிகள் தான் கொஞ்ச கொஞ்சமாக எல்லாக் காலங்களிலும் உருட்டி விடப்பட்டு...... அது ஓடையாக...... வாய்க்காலாக..... சிறு நதியாக.... அருவியாக விழுகிறது. ஆக...... நீரை அடை காக்கும் புற்களை மான்கள் மேய்ந்து விட்டால்...... நீர் எப்படி சேகரமாகும்? நீண்ட நெடிய தோற்றத்துக்கு அதன் ஓட்டம் எங்ஙனம் நடக்கும்? ஆறு இல்லாத சமூகத்தில்...... நாகரீகம் எங்ஙனம் பிறக்கும்?
பொதுவாகவே தாவரப் பட்சிகள் மரத்திற்கு ஊடாக இருக்கும் செடி கொடி கிழங்குகளைத் தின்ன வேண்டும். அப்போது தான்.. அடர்ந்த மரங்களுக்கிடையே உருவாகும் இடைவெளியில்... சூரிய ஒளி புகுந்து பூஞ்சைக்காளான்...... சிறு செடி..... கொடிகளுக்கு உயிர் அளிக்க முடியும். அப்படித்தான் வனம் உயிர்ப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது என்று அந்த பூவுலக நண்பரின் கட்டுரை விரிகிறது. அளவுக்கு மிஞ்சினால் தாவரப் பட்சிகளும் ஆப்பு தான் என்பது இயற்கைக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அதை விட பெரிய அகப்பையை புலி வடிவத்தில் உலவ விட்டது இயற்கை. அதன் நீட்சியில் மானுடம் என்ற வகைமை பூமியில் தழைத்தோங்க முடிந்தது.
நரி, சிறுத்தைகள் எல்லாமே புலியோடு சேர்ந்து வசிக்க பல கால கட்டங்களில் புலி அனுமதிக்கும் என்ற செய்தி அதன் மீதான வியப்பை இன்னும் இன்னும் அதிகப்படுத்துகிறது. பிறந்த புலிக்குட்டிகளுக்கு ஒன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு கண்கள் தெரியாது... என்பது நம் கண்களை அகல திறக்கும் செய்தி. ஒரு புலியின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு 65 கி மீ வேகம் என்பது திக் திக் செய்தி. எல்லாம் தாண்டி புலியைப் பற்றிய இன்னொரு செய்தி ஆச்சரியப்படுத்தியது. எப்படி நமக்கு காதில் சுரக்கும் ஒரு வகை லிக்யுட் தான் நம்மை சரிந்து விடாமல் நிற்கச் செய்கிறதோ அப்படி புலியின் வால் தான் அதனை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறதாம். புலி பிறந்து 6 மாதங்களிலேயே எப்படி வேட்டையாடுவது என்று கற்றுக் கொள்ளுமாம். வேட்டை அதன் ரத்தத்தில் இருக்கிறது. வேகம் அதன் யுத்தத்தில் காணலாம். பல புலி இனங்கள் அழிந்து விட்ட இக் கால கட்டத்தில் இருக்கும் புலிகளையாவது காத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இக்கட்டுரையின் செய்தி.
ஏன் கோவில்களில் முதல் சிற்பமென புலியின் சிற்பம் இருக்கிறது என்று இப்போது புரிகிறதா? திருவிழாக்களில் ஏன் ஆட்டங்களில் முதல் ஆட்டம் புலி ஆட்டம் என்று இப்போது தெரிகிறதா? தஞ்சை தொல்குடிகள் புலியை கடவுளாக வணங்கினார்கள்....... என்றால் ஓடும் ஒவ்வொரு நதிக்குப் பின்னும் புலிகளின் உழைப்பிருக்கிறது. நாம் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீருக்குப் பின்னும் புலியின் வியர்வை இருக்கிறது... என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். நாமும் புரிந்து கொள்ள வேண்டும். காட்டில் என்ன இருக்கிறது என்று என்றோ கேட்ட நண்பனுக்கும் இது தான் பதில்.... காட்டில் தான் எல்லாம் இருக்கிறது.
நீருக்கு ஆதாரம் செடி, கொடி, புல், பூண்டு, மரங்கள். நீரின் அவதாரம் அவைகளைக் காக்கும் புலிகள். ஆக... காடுள்ள நாடே வளமாகும். அதற்கு வளமான காடே பலமாகும்.
- கவிஜி
நன்றி : செய்திகள் - பூவுலக நண்பர்கள் மற்றும் இணையம்