இந்தியாவின் தேசிய விலங்கு புலி. பூனை குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினராக புலி இருக்கிறது. புலியின் சராசரி ஆயுட்காலம் 11 ஆண்டுகள் ஆகும். கடந்த காலங்களில் 9 வகையான புலிகள் இருந்து வந்த நிலையில் தற்போது 6 வகையான புலிகள் மட்டுமே உள்ளன. புலிகளுக்கு வரலாற்றில் எப்போதும் தனித்த ஓர் இடம் இருந்தே வந்திருக்கின்றன. பண்டைய சிந்து நாகரிகத்தின் முத்திரைகளில் புலிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் சோழர்களின் கொடியில் புலி உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்து புராணங்களில் துர்காதேவியின் வாகனமாக புலி அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது. புலியை கடவுளாக கருதும் சமூகங்களும் இந்தப்புவியில் வாழ்ந்து வந்திருப்பதாக வரலாற்றில் அறிய முடிகிறது.
சீன நாட்காட்டியின் ஒவ்வொரு 12 ம் ஆண்டும் புலியின் ஆண்டாக குறிப்பிடப்படுகின்றது. அந்த ஆண்டுகளில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என சீனர்கள் கருதுகின்றனர். உணவுச் சங்கிலியில் புலி முக்கிய இடத்தை வகிக்கின்றது. புலியின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றது. புலிகள் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய இடத்தை வகுக்கின்றன. தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால், காட்டின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி காடுகளின் உற்பத்தியாகும் நதிகளையும் காப்பாற்றுகிறது.
புலி பசித்தால் மட்டுமே வேட்டையாட வேண்டும், வயிற்றில் குட்டி உள்ள எதையும் வேட்டையாட கூடாது என்ற கட்டுப்பாட்டை தனக்குள் வைத்திருக்கும் ஓர் அழகிய உயிரினம் புலி. உலகில் புலி தோன்றி ஒரு இருபது இலட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆசியா முழுவதும், துருக்கி முதல் தூர கிழக்கில் ஓகோட்ஸ்க் கடல் வரை, சுமத்ரா, ஜாவா மற்றும் பாலி தீவுகளில்கூட புலிகள் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகப் புலிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் என மதிப்பிடப்பட்டது. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன.
உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டுமே சுமார் 70 விழுக்காடு புலிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்மூலம் உலகில் அதிகமான புலிகள் இருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. 2018 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2,967 புலிகள் இருக்கின்றன. இவற்றில் 35 விழுக்காடு புலிகள் சரணாலயத்திற்கு வெளியே வாழ்கின்றன.
அழிந்து கொண்டிருந்த புலிகளை காப்பதற்காக இந்தியாவில் 1973 ம் ஆண்டில் ப்ராஜெக்ட் டைகர் எனும் அரசின் அமைப்பின் மூலம் 9 தேசிய புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. தற்போது 51 சரணாலயங்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010 ம் ஆண்டு ஒன்றுகூடி, 2022 ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவின்படியே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலகப் புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக பெருக்க வேண்டும் என்ற இலக்கில் இந்தியா வென்றிருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடித்திருக்கவில்லை. காரணம் இந்தியாவில் புலிகள் இறப்பு எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்து வருவதுதான்.
2021 ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 127 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டு கால தரவுகளில் 2021 ம் ஆண்டு தான் அதிக அளவில் புலிகள் இறப்பு பதிவாகியுள்ளது. 2012 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 987 புலிகள் இறந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
புலிகள் எண்ணிக்கை குறைவதற்கு அதன் வாழ்விட இழப்பு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. காடழிப்பு என்பது புலிகளின் சூழலை மட்டுமல்லாமல், அவற்றின் இரையின் சூழலையும் அழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதன் தனது சுயநலத்திற்காக காடுகளை துண்டாடியும், அழித்தும் வருகிறான். காடுகளின் குறுக்கே சாலைகள், காடுகளின் நடுவே கட்டடங்கள் என காடுகள் தனது இயற்கையான அழகை இழந்து நிற்கின்றன.
'புலிகள் மட்டுமின்றி அனைத்து காட்டுயிர்களும் வாழ்விடம் அழிக்கப்படுவது, துண்டாடப்படுவது போன்ற சிக்கல்களில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. ஒரு காட்டை ஊடுருவிச் செல்லும் சாலையை இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மூடி வைத்தாலே காட்டுயிர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கின்றன. பந்திப்பூரில் அதுதான் நடந்தது. இரவு நேரங்களில் பயணிப்பதை தடை செய்தார்கள். அந்த நேரத்தில் புலிகள் மிகவும் செழித்திருக்க தொடங்கின' என்கிறார் புலிகளின் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு.
அதேபோல் புலிகள் சந்திக்கும் இன்னொரு சவால் மின்சார வயர்கள். தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களை பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் சேதப்படுத்துவதை தடுக்க மின்சார வயர்கள் போடப்படுகின்றன. பல இடங்களில் இதில் சிக்கியும் புலிகள் இறந்துவிடுகின்றன. தங்கள் வாழ்வாதாரமான மாடுகளை புலிகள் அடித்து கொன்று விடுவதால், புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று விடும் போக்கும் நிலவுகிறது. கோவா போன்ற மாநிலங்களில் இது அதிகம் நடக்கிறது. வேட்டைக்காக புலிகளை சுட்டுக் கொல்லும் நிலையும் பல இடங்களில் நிலவுகிறது.
புலி - மனிதன் மோதல் அதிகரித்து வருவதை பல செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோடை காலங்களில் தண்ணீர் தேடியும், இரை தேடியும் வெளியில் வரும் புலி கண்ணில்படுபவர்களையெல்லாம் தாக்குகிறது. இதனால் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து என்றும், புலிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பலர் பேசுவதை காண்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு கூடலூரில் நான்கு நபர்களை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராடியது நம் நினைவுக்கு வரலாம். இது மிகவும் தவறான ஒரு பார்வையாகும்.
புலிகளின் இடத்தைத்தான் மனிதன் ஆக்கிரமித்திருக்கிறானே தவிர, மனிதனின் இடத்தை புலிகள் ஆக்கிரமிக்கவில்லை. பொதுவாகவே புலிகள் 50 முதல் 1,000 ச.கி.மீ. வரையில் தங்களது வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளும் என்று சொல்கிறார்கள். துரதிஷ்டவசமாக அதுபோன்ற காடுகள் இன்று அரிதாகிக் கொண்டு வருகின்றன. காடுகள் துண்டாடப்பட்டு வருகின்றன. 'புலிகளின் வாழ்விடங்கள் சுருங்கி விடுகின்றன. விலங்குகள் நடமாட்ட பாதைகள் துண்டு துண்டாக ஆக்கப்படுகின்றன. புலிகளுடன் மற்ற வன விலங்குகள் நடமாடுவதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. இப்படியிருக்கையில் மோதல் நடக்காமல் என்ன செய்யும்?' என கேள்வி எழுப்புகிறார் மகாராட்டிரத்தின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அசோக்குமார் மிஸ்ரா.
புலிகளை காப்பது பற்றியும், காடுகளின் சமநிலையை பேணுவது பற்றியும் அதிகமான விழிப்புணர்வு இன்று தேவைப்படுகிறது. காடுகளை காப்பதைப்போல இந்த உலகத்தையும் காத்து நிற்பதில் புலிகளுக்கு தனித்த இடம் இருப்பதை உணர்வது அவசியமாகும்.
- வி.களத்தூர் பாரூக்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
புலி உள்ள காடே வளமான காடு
- விவரங்கள்
- வி.களத்தூர் பாரூக்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்