(நியூட்ரினோ எதிர் கருத்துக்கள் விவாதத்தில் தோழர் த.வி வெங்கடேஸ்வரன் முன்வைத்த வாதத்திற்கான மறுப்பு)

நியூட்ரினோ திட்டம் தொடர்பாக இரு வேறு எதிர்நிலைப்பாட்டினைக் கொண்டுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(ஆதரவு) மற்றும் பூவுலகின் நண்பர்கள்(எதிர்ப்பு), விவசாயிகள் விடுதலை முன்னணி (எதிர்ப்பு) யினர் தங்களின் நிலைப்பாட்டிற்கான நியாயப்பாட்டினை ஒரே மேடையில் மக்கள் மன்றத்தில் முன்வைப்பது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தோழர் ஞானியால் முன்னெடுக்கப்பட்ட கருத்தியல் விவாதக் கூட்டமொன்று நேற்று (மே 7, 2015) சென்னையில் நடைபெற்று முடிந்தது.

anti capitalismமேற்சொன்ன விவாதத்தின் சாரம்சத்தை பார்த்தோமானால்- இத்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப அறிவியலை முதன்மைப்படுத்தி நியூட்ரினோ ஆதரவு அணியினரும், இத்திட்டத்தின் சமூகப் பொருளியில் நலன், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற காரணிகளை மையப்படுத்தி நியூட்ரினோ எதிர் அணியினரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக பார்வையாளர்கள் துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுத்த கேள்விகளுக்கு இரு தரப்பினரும் பதிலுரைத்தனர்.

இத்திட்டம் தொடர்பான சாதக பாதக அனுமானங்கள் மற்றும் ஆய்வுகளுக்குள் நாம் இங்கு செல்லப் போவதில்லை. மேலும் நேற்றைய நிகழ்வு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருக்கும் ஒரு சார்பான பார்ப்பனத்துவ பாணியிலான கட்டுரை குறித்தும் இங்கு அலசப் போவதில்லை. திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பேசியவர்களும் அதை நியாயப்படுத்தி எதிர்ப்பவர்களிடம் எழுப்பப்பட்ட இரு குறிப்பான கேள்விகளை அடியொற்றி இங்கு நமது விவாதத்தை சுருக்கமாக முன் வைக்கிறோம்

கேள்விகள்:

அறிவியலை ஏன் அரசியலோடு இணைக்கிறீர்கள்?

அடிப்படை அறிவியல் ஆராய்சி அனைத்திற்கும் சமூகப் பொருளியில் நலன் இருந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் என்ன?

அறிவியல் – தொழில்துறை இணைவு:

அறிவியலானது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஓர் அங்கமாகும். அறிவியல், சமூகப் பயன்பாடு எனும் சமூகப்பணியை ஆற்றும்பொருட்டு சமூக வரலாற்றின் ஒவ்வொரு வளர்சிக்கட்டங்களிலும் முன்னேறி வருகிறது.

கண்டுபிடிப்புகளின் நூற்றாண்டு என்று அழைக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட முக்கிய மூன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்றைய முதலாளித்துவ அரசுகளின் உருவாக்கத்திற்கும் அதன் அதிகாரப் பரவலுக்கும் அடித்தளம் அமைத்துகொடுத்தது எனலாம். அக்கண்டுப்பிடிப்புகள், அச்சு, வெடிமருந்து மற்றும் காந்தம். இவை மூன்றும் முறையே இலக்கியம், போர் மற்றும் கப்பல் வழித்தடத்திற்கு வித்திட்டு ஐரோப்பியர்களின் காலனியாதிக்கப் பரவலை சாத்தியப்படுத்தியது. கொலம்பஸ் சென்று திரும்பிய தீவுகளில் எல்லாம் பூர்வ குடி மக்கள் தங்கத்திற்காகவும் பிற பணப்பயிர்களை பயிரிடுவதற்காகவும் வேட்டையாடப்பட்டனர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனல் ஆற்றல் மற்றும் மின்சார ஆற்றல் தொடர்பான அடிப்படை கருத்துருக்கள் உருவாக்கப்பட்டன. இங்கிலாந்தில் துவங்கப்பட்ட ராயல் கழகம் அறிவியல் கோட்ப்பாடுகளையும் நடைமுறையையும் ஒன்றிணைப்பதில் மிக்கிய பங்களிப்பு செய்தது.

காலனியாதிக்கத்திற்கான போராட்டத்தில் போர்ச்சுகீசு, டச்சு, பிரஞ்சு அரசுகளை வென்று இங்கிலாந்து அரசு வலுவாக இந்திய துணைக் கண்டத்தில் கால்பதித்திருந்தது. தனது காலனியாதிக்க காலகட்டத்தில் பொருளாதார நலனைக் கருதி வேகமான தொழில் முனைப்புகளில் இங்கிலாந்து அரசு தீவிரம் காட்டியது. மேற்குலகில் நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் வேகமாக தொழிற்துறையின் வளர்ச்சிக்காக சந்தைப்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுச்சி பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழிற்துறையுடனான அதன் உறவும் மேற்சொன்ன இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக நிலைமைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தின. ஆனால், நிலவிய சமூக அடுக்கை அது முற்றாக தகர்க்கவில்லை. அதேவேளையில், நிலவிய வருணசாதி பண்பாட்டை இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடாக ஏற்றுக்கொண்டிருந்த காலனியாதிக்க அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்பு வசதிகளை உயர் சாதியினருக்கே வழங்கியது. சர் சி.வி ராமன், சகதீசு சந்திர போசு, ராமுனுஜன் போன்ற உயர் சாதி அறிவியலாளர்களே இந்தியத் துணைக்கண்டத்தின் அறிவியல் துறையை ஏகபோகமாக குத்தகைக்கு எடுத்தனர், இன்று வரை எடுத்தும் வருகின்றனர். இந்தியா தன்னளவில் வர்ண நிலப்பிரபுத்துவ சமூகமாகவும், புதிதாக எழுச்சி பெற்ற தொழிற்துறையின் விளைவாக உருவான குட்டி தொழில் முதலாளிகளின் அரசியல் அதிகார மேலாதிக்கமென, இரு சக்திகளின் இணைப்பாக, அரைக் காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக புதிய பரிமாணம் பெற்றது. இதை இந்திய பிரத்யேகம் என்றே மொழியெலாம்.

மேற்குலக அறிவியலுக்கும் தொழில்துறைக்குமான இணைப்பு யுகத்தில் தொழில் நிறுவனங்களின் சேவகனாக, தொழிற்துறை முதலாளிகளின் அடிமையாக அறிவியல் மாறியது. லாபத்தை குவிக்கிற உற்பத்தி முறைக்காக அறிவியல் சக்திகளும் கண்டுபிடிப்புகளும் வீணடிக்கப்பட்டன. தொழிற்துறை உபரியில் மேற்குலகில் முதலாளி வர்க்கம் எனும் புதிய சமூக அடுக்கு தோற்றம் பெற அறிவியல் வளர்ச்சி வித்திட்டது. தனியுடமையும் லாபமும் இவ்வமைப்பின் ஆன்மாவாகும். உலகின் புதிய அதிகார அடுக்குகள் பொருளாதார சந்தை வாய்ப்பைப் பெற நவீன ஆயுத உற்பத்தியும் ஆய்வும் அவசியப்பட்டன. அறிவியல் ஆய்வுகள் வீணான அழிவு வேலைக்கு திருப்பப்பட்டது. செர்மனி, அமெரிக்கா இதில் முன்னோடி நாடுகள். வேதியல் நச்சு ஆயுதங்கள், அணு குண்டுகள், ஏவுகணைகள் என அறிவியல் முனைப்புகள் சமூக பயன்பாட்டிலிருந்து வீணான அழிவு பயன்பாட்டிற்கு திருப்பப்பட்டன.

மார்க்சிய அறிஞரும் தேர்ந்த இயற்கை அறிவியலாளருமான ஜே. டி பெர்னல் தனது புகழ்பெற்ற “மார்க்சும் அறிவியலும்” நூலில் முதலாளித்துவ அறிவியல் குறித்து இவ்வாறு கூறுகிறார்.

“முதலாளித்துவ நாடுகளில் அறிவியலாளர்கள் இப்போதெல்லாம் நேராடியாக அரசாலும் அல்லது ஏகபோக நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், அது விசித்திரமான அருவெறுப்பான முறையில் நடைபெறுகிறது. ”

இன்று நிலைமையில் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் நவீன தாரலமயமாக்கள் சூழலில் அறிவியல் ஆய்வுகளையும் அதையொட்டி உருவாக்கப்பட்ட சரக்குக்குகளுக்கான சந்தைக்காகவும் அறிவியல் வரலாறு வேறு வகையில் வேகமாக திசை மாற்றமடைந்தது.  

இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் அறிவியல் ஆய்வு முயற்சிகள் அனைத்தும் வர்த்தக நோக்கங்களுக்காகவும் அதிகாரத்தை கைப்பற்ற அல்லது மேலாண்மையை தக்க வைக்கப்பதற்கான வாய்ப்பிற்காக மட்டுமே வளர்த்தெடுக்கப்படுகிறது. அனைத்து அறிவியல் வளர்ச்சிகளும் ஆய்வு முடிவுகளும் பெரும் தொழில்நிறுவனங்களுக்கு சேவை செய்கிற நோக்கத்தோடு இணைக்கப்படுகிறது. .

அறிவியலானது தொழில் துறையுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி அறிவியல் என்ற நிலையில் அது பெரு முதலாளிகளின் தனியுடைமை சொத்தாக மாற்றப்படுகிறது. நுகர்வு நிலையில் விற்பனைக்கான போட்டியின் காரணமாக சமூக தளத்தில் குறைவான விலையில் அறிவியல் தொழில்நுட்பம் மக்களிடம் சேர்கிறது. உதாரணமாக கைபேசி தொழில்துறை, அதனுடன் தொடர்புடைய/அடிப்படையான அறிவியல் ஆய்வுகள், உற்பத்தியை மையப்படுத்தி பெரு நிறுவனங்களால் வளர்க்கப்படுகிறது. நுகர்வு மட்டத்தில், போட்டியின் காரணமாக மலிவான விலைக்கு மக்களுக்கு பயனளிக்கிற விதமாக சென்று சேர்க்கிறது. இது அனைத்து அறிவியல் உற்பத்திக்கும் பொருந்தாது. உதாரணமாக, பில் கேட்ஸ் உரிமையாகக் கொண்டுள்ள மைக்ரோ சாப்ட் தொழில் நுட்பம் அல்லது சரக்கிற்கு போட்டியாளரே கிடையாது. சொல்வதுதான் விலை...

அறிவியல் இன்று முதலாளிய சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் லாபகரமான விற்பனைக்கும், விற்பனைக்கான போட்டியில் முன்னேறி லாபம் ஈட்டவும் அறிவியல் ஆய்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அறிவியல் கோட்பாடுகள், அறிவியல் ஆய்வுகள் போன்றவற்றில் அது ஆர்வம் செலுத்துகிறது. உற்பத்தி விரிவாக்கத்திற்கும் லாபத்திற்கும் அறிவியல் ஆய்வுகள் முன் நிபந்தனையாக இருக்கிறது.

அறிவியலின் வரலாற்றில் இன்றைய எதார்த்தத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ள இம்மாற்றங்களை கணக்கில் கொள்ளாமல் அறிவியலை அரசியலுடன் இணைப்பது முறையல்ல என்பதும், அறிவியல் ஆராய்சி அனைத்திற்கும் சமூகப் பொருளியில் நலன் அவசியமில்லை என்கிற வாதங்கள் ஒரு பக்க சார்பான முதலாளிகளுக்கு ஆதரவான வாதமாகும். மேலும் “அறிவியலுக்காக அறிவியல்” என்ற வாதம் அடிப்படையில் பிற்போக்கானது. அப்படியொன்று இருக்கவே முடியாது. அப்படி ஒரு வேலை, சமூகப் பயன்பாடு இல்லாத அல்ல அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யாத அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வதென்பது வீணான பிற்போக்கு முயற்சியாகும். ”அறிவியலின் சமூகப்பணி வெறுமென ஆழ்ந்த ஆராய்ச்சியின் பாற்பட்டதாக மட்டுமல்லாமல் தீவிர செயல் வடிவம் கொண்டதாக இருக்கவேண்டும்” என்கிற ஜே.டி பெர்னலின் கருத்தை நமது அறிவியலாளர்கள் கணக்கில் கொள்வதாக தெரியவில்லை. 

Pin It