இப்பொழுது எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் நடைமுறையில் உள்ளது என்று உங்களைக் கேட்டால் உங்களால் கண்டிப்பாகக் கூற முடியாது. மேலும் ஒவ்வொன்றையும் உங்களால் விளக்கவும் முடியாது. அறிவியல் கோட்பாடு என்பது நடைமுறையில் நிருபிக்கப்பட்ட ஒன்று. இதில் வேறொரு வகையும் உண்டு. அது தான் "சதியாலோசனைக் கோட்பாடுகள்" (conspiracy theories). இதிலும் நிறைய கோட்பாடுகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் நடைமுறையில் நிரூபிக்கப்படாதவை அல்லது நிரூபிக்க இயலாதவை. தட்டை பூமி கோட்பாடு, வேற்றுகிரக வாசிகள் கோட்பாடு என நீண்டு கொண்டு போகும். அதனில் சுவாரசியமான ஒன்றை இங்கு காண்போம்…

அமெரிக்கர்கள் என்றாலே சதியாலோசனை மிக்கவர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில் நீங்கள் கேள்விப்பட்ட ஏலியன் வருகைகள் பாதிக்கும் மேல் அமெரிக்கர்களால் கூறப்பட்டவை. அப்படி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சதியாலோசனைக் கோட்பாடுகளில் ஒன்று தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பம் தொடர்பான கால பயணக் கோட்பாடு. அது என்ன என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்…

Marvellous Underground Journey1890ம் வருடம் பிரபல அமெரிக்க எழுத்தாளர் இங்கர்சால் லாக்வூட் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகத்திற்கு இவ்வாறு பெயரிடுகிறார் "Baron Trump: Marvellous Underground Journey". இதில் என்ன ஆச்சரியம் என்றால் டொனால்ட் ட்ர‌ம்பின் மகனின் பெயர் பரோன் டிரம்ப் என்பதாகும். சரி இப்பொழுது அவர் அந்தப் பெயரை சூட்டி இருக்கலாம் எனக் கொண்டால், அந்தப் புத்தகத்தில் Baron தான் ரஷ்யாவில் இருப்பதாகவும், அங்கு மிக துன்பத்தை சந்தித்தாகவும் கூறுவதாக இருக்கும். இப்பொழுது ஆச்சர்யம் என்னவெனில் ட்ரும்பின் மனைவி ரஷ்யாவைப் பூர்விகமாகக் கொண்டவர்.

1900 or The Last Presidentமேலும் அதே எழுத்தாளர் 1896ம் ஆண்டு இன்னொரு புத்தகத்தை வெளியிடுகிறார். அதன் பெயர் "1900; Or, The Last President". இந்தப் புத்தகத்தில் அவர் அதிபர் தேர்தலில் வெளியில் இருந்து குடியேறிய ஒருவர் (டிரம்ப் குடும்பம் ரெண்டு தலைமுறைகளுக்கு முன் அதாவது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய‌வர்கள்) அதீத எதிர்ப்பை சம்பாதித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்ந்து எடுக்கப்படுவார். அவரை சில தீவிரவாதக் குழுக்கள் முற்றுகையிடும் என்று கூறி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார், "The story begins with a scene from a panicked New York City in early November, describing a “state of uproar” after the election of an enormously opposed outsider candidate. The Fifth Avenue Hotel will be the first to feel the fury of the mob.”

இதில் ஒற்றுமை என்று பார்த்தால் ட்ரம்பிற்குச் சொந்தமான "டிரம்ப் டவர்ஸ்" நியூயார்க் 5th அவன்யூவில் தான் உள்ளது. மேலும் அதனில் அவர் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். அது பின்வருமாறு: விவசாயத் துறை அமைச்சர் Lafe Pence, தற்போதைய துணை அதிபர் பெயர் Mike Pence.

இப்பொழுது இவை அனைத்தையும் தள்ளி வையுங்கள். இந்தப் பெயரை கொஞ்ச நேரத்திற்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள் "சான் G டிரம்ப் ". இவர் டொனால்ட் ட்ரம்பின் பெரியப்பா ஆவார். இவர் 1907ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் பல விசயங்களை விக்கிபீடியாவில் தெரிந்து கொள்ளுங்கள் (https://en.wikipedia.org/wiki/John_G._Trump). அவர் அக்காலத்திய சிறந்த மின்னணுப் பொறியாளர்களுள் ஒருவர். இவருக்கும் நான் மேலே விவரித்தவற்றுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள். ஆனால், இதோ அதற்கான விடை, மிகச் சிறந்த பொறியாளரான நிகோலா டெஸ்லா 1943ம் ஆண்டு சனவரி 7ம் திகதி இறக்கிறார். அதைத் தொடர்ந்து சான் G டிரம்ப் சனவரி 9ம் திகதி நிகோலா டெஸ்லாவின் ஆய்வுக் கூடத்தை பரிசோதனை செய்ய அரசாங்கம் நியமிக்கிறது.

அமெரிக்காவின் Alien Property Custodian என்னும் அமைப்பின் கீழ் சான் G டிரம்ப் பரிசோதனை செய்கிறார். அதிலிருந்து மூன்று நாள் கழித்து அதாவது சனவரி 12ம் திகதி அவரது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறார். அதில் "நிகோலா டெஸ்லாவின் ஆய்வகத்தில் அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடிய எந்த ஒன்றும் இங்கு இல்லை" என முடிவுரை எழுதுகிறார். ஏன் இங்கு நான் நிகோலா டெஸ்லாவை உள்ளே சேர்த்தேன் என்றால், அவர் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், தான் காலப்பயண இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும், மேலும் எனது குறிக்கோள் உலகில் உள்ள அனைவருக்கும் இலவச கம்பி இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே ஆகும் என அறிவிக்கிறார்.

நாம் மேல் பார்த்த பத்தி உண்மையில் நடந்த ஒரு விடயம்.

இப்பொழுது நாம் முன் பார்த்த சதியாலோசனையைத் தொடர்வோம்...

சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் எனில் அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டு சான் G டிரம்ப் என்பவரை நிகோலா டெஸ்லாவின் காலப்பயண இயந்திரத்தைக் கண்டறிய நியமித்ததாகவும், ஆனால் சான் G டிரம்ப் அதனைக் கண்டறிந்து தன்னிடமே வைத்துக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். அதன் விளைவே டிரம்ப் குடும்பம் காலப் பயணம் செய்து உள்ளார்கள் எனவும் கூறுகிறார்கள்.

எது எப்படியோ இந்த சதியாலோசனைக் கோட்பாடுகள் என்பவை எப்பொழுதும் ஆதாரம் அற்றவை எனினும், எளிதில் அனைவராலும் நம்பத் தகுந்தவை. இன்னும் சில கோட்பாடுகளைப் பின் வரும் கட்டுரைகளில் காண்போம்.

நான் முதலில் கூறிய இரண்டு புத்தகங்களும் archive.org எனும் இணையத்தில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான "Library of Congress" பதிவேற்றி உள்ளது. நீங்கள் இலவசமாக மென்பொருள் வடிவில் படித்துக் கொள்ளலாம். அதற்கான இணைய முகவரிகள் கீழே உள்ளன:

https://archive.org/details/barontrumpsmarve00lock/page/n8

https://archive.org/details/1900orlastpresid00lock/page/n8

- வெ.சீனிவாசன்

Pin It