காந்தியில் தொடங்கி, காமராஜரில் தொடர்ந்து, காங்கிரசைப் பிரிந்து, காவியில் கலந்திருக்கிறார் தமிழருவி மணியன்.

வகுப்பு வாதத்தை எதிர்த்து, வன்முறைப் பாதையை விமர்சித்து, மதச்சார்பின்மைத் தத்துவத்தை ஆதரித்து, மானுட சமத்துவத்தை வலியுறுத்தி ஆயிரமாயிரம் மேடைகளில் முழங்கிய அவரா இப்படி மோடிக்கு காவடி எடுக்கத் தொடங்கி விட்டார் என்று பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒரே நாளில் இப்படி ஒருவரால் இந்த எல்லையிலிருந்து அந்த எல்லைக்குச் சென்று விட முடியுமா? என்பதும் பலரின் கேள்வியாக உள்ளது.

மதச்சார்பின்மை முகம் ஒருபுறம், மதவெறியைத் தூக்கிச் சுமக்கும் கரம் மறுபுறம் என மணியன் போடும் இரட்டை வேடம் இன்று திடீரென அம்பலத்துக்கு வந்ததல்ல. அவ்வப்போது அவரே வெளிப்படுத்தி வந்ததன் உச்சக் காட்சிதான் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அடிப்படையில் அவரது அரசியல் பார்வையே மிகவும் கோளாறானது. அபாயமானதும் கூட. ஆதிக்கச் சக்தியையும், அடக்குமுறைகளைச் சந்திப்பவனையும் ஒரே அளவுகோல் கொண்டு அளப்பவர் அவர். அதற்கானச் சான்றுகள் நிறைய உள்ளன. ஒரு சிலவற்றையேனும் பார்ப்போம்.

விஸ்வரூபம் பட சர்ச்சை நேரத்தில் கமலுக்கு ஆதரவாக விகடனில் மணியன் ஒரு கட்டுரை எழுதினார். அதில்,’பம்பாய் படத்தில் முஸ்லிம்களுக்குச் சார்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், அந்தப் படத்தைத் திரையிடஅனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டல் விடுத்த பால்தாக்கரேவைச் சந்தித்து, அவர் இட்ட நிபந்தனைகளைஏற்றுக்கொண்ட மணிரத்னத்தின் படைப்புரிமை சிவசேனாவின் இந்துத்துவத்தால் பறிக்கப்பட்டது. அது கலாச்சாரப் பயங்கரவாதம் என்றால், இன்று விஸ்வரூபம் வெளிவர அனுமதிக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் அடம்பிடிப்பதை எந்தப் பெயரில் அழைப்பது?’ என கேள்வி எழுப்பியிருந்தார். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இந்தக் கேள்வி நியாயமானதாகவே தோன்றும். ஆனால், இதன் நுட்பமான அரசியலை ஊடுருவிப் பார்த்தால் அங்கே மணியனின் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படும்.

மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களைக் குடித்ததும், உடைமைகளை அழித்ததும் பால்தாக்கரேயின் பரிவாரங்களே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அரசு அமைத்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையமே அதை உறுதிப்படுத்தியும் உள்ளது. தன் குற்றம் வெளிப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில் பம்பாய் படத்தை திரையிட்டுக் காட்டச் சொன்ன பால்தாக்கரேயின் அடாவடித்தனத்தோடு, தம்மைப் பற்றிய தவறானச் சித்தரிப்புகள் இடம் பெற்று விடக் கூடாதே என்ற எச்சரிக்கையின் வெளிப்பாடாய் விஸ்வரூபத்தை திரையிட்டுக் காட்டச் சொன்ன முஸ்லிம்களின் அச்ச உணர்வையும் சமமாக்குகிறார் மணியன்.

பம்பாய் படத்தில் பால்தாக்கரே தவறாகச் சித்தரிக்கப் படவில்லை என்பதுவே உண்மை. அப்படியே சித்தரிக்கப் பட்டிருந்தாலும் அது ஏற்படுத்துகின்ற விளைவும், முஸ்லிம்களைப் பற்றிய திரைப்படச் சித்தரிப்புகள் ஏற்படுத்துகின்ற விளைவும் ஒன்றல்ல. பால்தாக்கரேயை வன்முறையாளர் என்று ஒருபடத்தில் காட்டியவுடன், மராட்டிய மண்ணில் இந்துக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்காதா? பெருநிறுவனங்களில் வேலை கிடைக்காதா? ரயிலிலும் பேருந்திலும் பயணிப்பவர்கள் எல்லாம் இந்துக்களை சந்தேகக் கண் கொண்டு காண்பார்களா? இந்து இளைஞர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது சிறப்பு விசாரணையைச் சந்திக்க வேண்டி வருமா? ஆனால், இவற்றையெல்லாம் முஸ்லிம்கள் நித்தம் நித்தம் சந்திக்கின்றார்களே.

இத்தகைய நெருக்கடிகளிலிருந்தும், பாதுகாப்பற்ற நிலையிலிருந்தும் கமலுக்கு முஸ்லிம்கள் தந்த அழுத்தத்தையும், மணிரத்னம் மீதான பால்தாக்கரேயின் ஆதிக்கத்தையும் ஒன்றாகவே கருதுகிறார் மணியன் என்றால், அவரது அரசியல் பார்வை எவ்வளவு அபத்தமானது.

முஸ்லிம்களில் சிலர் தீவிரவாதப் பாதைக்குச் சென்றது கூட இந்துத்துவ சக்திகளின் அடக்குமுறையினால் விளைந்ததே என்பதையும் மணியன் கருத்தில் கொள்வதில்லை. ‘தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்’ என வியாக்கியானம் பேசுவார். தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்க வேண்டும்தான். ஆனால், ஏன் வருகிறது, எதனால் வருகிறது என்ற கோணத்தில் ஆராய்வதும், அதன் வேர்க் காரணியை அம்பலப்படுத்துவதும் அதைவிட முக்கியமல்லவா?

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்படுவதற்கு முன் இந்தியாவில் முஸ்லிம் வன்முறையாளர்கள் உண்டா? பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு முன் இந்தியாவில் முஸ்லிம்களால் குண்டுகள் வெடித்ததுண்டா? காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தை அதிகாரத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மாறாக இந்து மன்னர் ஆண்டதும் – பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தியதும் தானே அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்கச் செய்தது. கோவையில் 19 முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதன் விளைவாகத்தானே குண்டுகள் வெடித்தன. ஆக, தீவிரவாதம் என்பது முஸ்லிம்களின் பிறப்புரிமை அல்ல. அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதுமல்ல. அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதுவே உண்மை.

‘மதத்தின் பெயரால் மனிதகுலத்தை அழித்தொழிக்க முயலும் மோசமான அடிப்படை வகுப்புவாதியராய் ஆயுதம்ஏந்திநிற்கும் கூட்டம் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களை எவ்விதம் ஆதரிக்கமுடியும்? பின்லேடனையும், தாலிபான்களையும் இஸ்லாமியர் என்பதற்காகவே, இங்குள்ள இஸ்லாமியர்கள் ஆதரிக்கக்கூடுமா? தன்னை ஓர் இந்து சந்நியாசி என்று நித்தியானந்தன் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக, அந்த வேடதாரியை எல்லா இந்துக்களும் ஏற்பது தகுமா?’
இதுவும் மணியனின் கேள்விதான்.

பின்லேடனும், தாலிபான்களும் ஏன் உருவானார்கள் என்பதும், அவர்களை உருவாக்கியது யார் என்பதும் மணியனுக்குத் தெரியாதா? ஆப்கானிலும், இராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்க வல்லூறு நுழையாமல் இருந்திருந்தால் பின்லேடன் உருவாகியிருக்க முடியுமா? தாலிபான்களுக்கான தேவைதான் ஏற்பட்டிருக்குமா? ஆக, வினையையும் எதிர்வினையையும் ஒன்றாகப் பார்ப்பது பிழையான பார்வையல்லவா.

பின்லேடனுடனும், தாலிபானுடனும் நித்யானந்தாவை மணியன் ஒப்பிட்டுள்ளார். தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இங்கே எந்த முஸ்லிமும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்குச் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை. அல்-காய்தாவோ, அல்-உம்மாவோ எவரையும் முஸ்லிம்கள் நேசிப்பதில்லை. குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டால் அவர்களிடமிருந்து இறுதிவரை முஸ்லிம் சமூகம் விலகியே நிற்கிறது. ஆனால், முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை மற்றவர்களிடம் இருக்கிறதா?

கோவை குண்டுவெடிப்பில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களுக்காக இங்குள்ள எந்த முஸ்லிம் அமைப்பாவது வாதிடுகிறதா? அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறதா? அவர்களின் படத்தைப் போட்டு தியாகிகளாகக் கொண்டாடுகிறதா? இல்லையே. ஆனால், நித்யானந்தாவை அழைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகிறார்களே. அது இங்கு யாருக்கும் எந்த உறுத்தலையும் தரவில்லையே. மிக இயல்பாக அதைக் கடந்து போகிறார்களே. அதே தொலைக்காட்சியில் மணியன் ஒரு பத்து முறையாவது பேசிவிட்டு வந்திருப்பாரே.

காந்தியைக் கொன்ற கோட்சேயை இந்துத்துவவாதிகள் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே. பாபர் மஸ்ஜிதை இடித்தப் பயங்கரவாதிகளை ‘கரசேவகர்கள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்களே. கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்று ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மறைந்தபோது, உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு தியாகி ஆக்கப்பட்டாரே. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியென லிபரகான் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட அத்வானி இன்றும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறாரே. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்ற பிறகும் மோடியால் பிரதமர் வேட்பாளர் ஆக முடிகிறதே. அவர்தான் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று மணியனால் வாதிட முடிகிறதே. இவையெல்லாம் ஒரு முஸ்லிம் குற்றவாளிக்கு இந்த மண்ணில் சாத்தியமா?

எனவே, முஸ்லிம் குற்றவாளியும், இந்துக் குற்றவாளியும் இங்கே ஒரே அளவுகோல் கொண்டு அளக்கப்படுவதில்லை எனும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

மதவாத சக்திகளையும் அவர்களால் பாதிக்கப்படும் முஸ்லிம்களையும் ஒரேவிதமாக அணுகுவதைப் போலவே, சாதியவாத சக்திகளையும் அவர்களால் பாதிக்கப்படும் தலித்களையும் ஒரேவிதமாகவே அணுகுகிறார் மணியன்.

தர்மபுரியில் தலித்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள், மரக்காணம் வன்முறைகள் ஆகியன குறித்து அவர் எழுதிய கட்டுரையில், சாதிவெறி பிடித்த ராமதாசைக் கண்டிக்கும் சாக்கில், விடுதலைச் சிறுத்தைகளையும் குற்றவாளியாகச் சித்தரித்தார்.

ராமதாஸ் திட்டமிட்டு வம்புக்கு இழுத்தபோதும், அவரது சூழ்ச்சிக்கு இரையாகாமல் பொறுமைகாத்து மதி நுட்பத்துடன் பிரச்சனையைக் கையாண்ட வகையில் திருமாவளவனை அனைவருமே பாராட்டிக் கொண்டிருக்கும் போது, மணியன் அதுபற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல், தலித்கள் பற்றி சாதியவாதிகள் பரப்பும் அவதூறை உண்மையாக்குவது போல எழுதியிருந்தார்.

இப்போது மணியன், மோடியை ஆதரிக்கும் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்த என்னென்னவோ பேசுகிறார். மோடியின் ஆட்சியில் 2002-ல் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் சமுதாயப் படுகொலைகளை யாரும் நியாயப்படுத்தமுடியாது. ஆனால், குஜராத் கலவரத்தை மறக்காதவர்கள் 1984-ல் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக ஊழிக்கூத்தை நடத்திய காங்கிரஸ் கலவரத்தை மட்டும் ஏன் வசதியாக மறந்து விடுகிறார்கள்? இந்த மறதிக்குப் பெயர்தான் மதச்சார்பின்மையா? எனக் கேட்கிறார்.

சீக்கியர் படுகொலையை நியாயப்படுத்த முடியாது தான். ஆனால், இந்திரா காந்தி படுகொலையான உடன் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் காங்கிரஸ்காரர்கள் நிகழ்த்திய சீக்கியர் படுகொலையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் திட்டமிட்டு நிகழ்த்தும் முஸ்லிம் படுகொலைகளும் எப்படி ஒன்றாகும்.

சீக்கியர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற இலக்குடனா காங்கிரஸ் இயங்குகிறது? ஆனால், ஆர்.எஸ்.எஸ் இயங்குவதே முஸ்லிம்களைக் கருவறுக்கத்தானே. சீக்கியர் படுகொலைக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்டதுபோல் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு மோடி இதுவரை மன்னிப்புக் கேட்டாரா? பாபர் மஸ்ஜிதை இடித்தது தவறுதான் என ஆர்.எஸ்.எஸ் வருந்தியதா? இல்லையே.

சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் தேடும் வகையில் ஒரு சீக்கியரை நாட்டின் பிரதமராகவே ஆக்கியிருக்கிறது காங்கிரஸ். ஆனால், குஜராத்தை ஆளும் மோடி, ஒரே ஒரு முஸ்லிமுக்கு கூட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லையே. முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசைன் போல பெயர் தாங்கிகள் ஒருவர் கூடவா கிடைக்காமல் போய்விட்டார்கள். ஒப்புக்குக் கூட முஸ்லிம்களை ஏற்கும் மனநிலையில் மோடி இல்லை என்பதையே அவரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஏறத்தாழ பத்து விழுக்காட்டுக்கும் மேல் குஜராத்தில் வாழும் முஸ்லிம்களை முழுக்க முழுக்க அதிகாரமற்றவர்களாக ஆக்கியிருப்பது தானே மோடியின் சாதனை.

ஊழல் கறைபடிந்த, தமிழர் விரோத காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தனது இலக்கு என்றும், அதற்கு ஒரே மாற்று மோடியே என்றும் திரும்பத் திரும்ப வாதிடுகிறார் மணியன். ஹிட்லருடன் நேதாஜி நேசக்கரம் நீட்டியபோது, ’ஜெர்மனியும், இத்தாலியும், ஜப்பானும் என்ன செய்கின்றன என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. என் கவலை முழுவதும் இந்தியா, இந்தியா மட்டுமே…’ என்றார். அதையே நான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன். என மோடியை ஆதரிக்கும் தன் முடிவை நியாயப்படுத்த நேதாஜியை வேறு துணைக்கு அழைக்கிறார்.

யாருக்கு என்ன தீங்கு நேர்ந்தாலும் பரவாயில்லை. என் பிரச்சனை தீர வேண்டும் என நினைப்பது முறைதானா? அது சுயநலப் பார்வை அல்லவா? அதை நேதாஜி சொன்னால் என்ன, காந்தி சொன்னால் என்ன. தவறு தவறுதானே. இப்படி தன் நிலைப்பாட்டை நியாயப் படுத்துவதற்காக எத்தகைய பாசிசத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஒருவர் செல்வதுதான் உச்சக்கட்ட பாசிசம்.

முழுக்க நனைந்த பிறகும் முக்காடு போட்டுக் கொண்டு சில சப்பைக் கட்டுகளைக் கட்டுகிறார் மணியன்.‘வகுப்புவாதத்தை வளர்த்தெடுக்காமல், மதவெறியைத் தூண்டி விடாமல், பாபர் மசூதிப் பிரச்சனையைப் பெரிதாக்காமல், இந்துக்களும் மற்ற சமயத்தவர்களும் சம உரிமையும் சம வாய்ப்பும் பெற்று இணக்கமான சூழலில் இந்தியர் என்ற உணர்வோடு வாழ்வதற்கு பா.ஜ.க துணை நின்றால் அது ஆட்சிக்கு வருவது ஒன்றும் பாவமாகாது’ என்று கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ் வகுத்துக் கொடுத்த பாதையிலிருந்து பா.ஜ.க ஒருபோதும் தடம் மாறாது என்பதுவே வரலாறு.

இப்போது காங்கிரசை ஒழித்துக்கட்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன் மோடியுடன் இணைந்து நிற்பது போலவே, அன்று நெருக்கடி நிலைக்குப் பின் இந்திராவை ஒழித்துக்கட்ட காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் பிரிவான ஜனசங்குடன் இணைந்து நின்றார்.

இன்று மணியன் கடும் விமர்சனங்களைச் சந்திப்பது போலவே அன்று ஜெயப்பிரகாஷ் நாராயணனும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இப்போது மணியன் சொல்வது போலவே அன்று அவரும் சொன்னார்; ‘ஜனசங்கத்தை மதவாத இயக்கம் என்பீர்களென்றால், நானும் மதவாதியே. செய்கிற வேலைகளை மட்டும் பாருங்கள். எதற்கு, யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்று பாருங்கள்’ என்றார்.

இந்திரா எதிர்ப்பாளர்கள் எல்லோரும் இணைந்து ஜனதா கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்கள். சோசலிஸ்டுகளின் தலைமையிலான ஆட்சியில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அத்வானி தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். ஆனால், நடந்தது என்ன? ஆட்சியிலிருந்து கொண்டே ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கினர். சோசலிஸ்டுகள் அதைக் கண்டித்தனர். கட்சியே உடைந்தாலும் கவலையில்லை, எமக்கு இந்துத்துவக் கொள்கைதான் முக்கியம் எனக் கூறிவிட்டு ஜனதாவிலிருந்து பிரிந்து சென்று பாரதிய ஜனதாக் கட்சியை உருவாக்கினர்.

இந்திரா என்னும் பேயை விரட்டப்போய் ஆர்.எஸ்.எஸ் எனும் பிசாசைக் கொண்டுவந்து மைய நீரோட்டத்தில் விட்டார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். பிசாசு தன் சுயத்தை வெளிப்படுத்தி இந்த நாட்டையே சூறையாடிவிட்டது. ஜனசங்கம் மதவாதத்தை கைவிட்டுவிட்டதென ஜெ.பி நற்சான்று அளித்தப் பிறகுதான், பாபர் மஸ்ஜித் இடிப்பு நடைபெற்றது. குஜ்ராத் உள்ளிட்ட கணக்கற்ற கலவரங்கள் நடத்தப்பட்டன.

இந்த வரலாறுகள் நன்றாகவே தெரிந்திருந்தும் மணியன் ஊரை ஏமாற்றித் திரிகிறார். ஏமாறுவதற்கு இங்கு எவரும் தயாரில்லை. ஏனெனில், இது பெரியார் பிறந்த சுயமரியாதை மண். இங்கு இந்துத்துவம் மண்ணைக் கவ்வியதுதான் வரலாறு.

நன்றி: சமநிலைச் சமுதாயம்

Pin It