இந்தியாவில் உள்ள 80 லட்சம் மக்கள் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் இணையதளம், செல்போன் நெட்வொர்க் என அனைத்தும் தடுக்கப்பட்டிருக்கிறது. லேண்ட்லைன் போன்கள் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீடும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மருத்துவக் கடைகளில் மருந்துகள் இல்லை, வீடுகளில் உணவு இல்லை. மருத்துவமனைகள் அடைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் பிரதமர் இதெல்லாம் காஷ்மீரிகளின் நல்லதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறார்.
இது வெளிப்படையாக நிலத்திற்கான போராட்டமாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஒரு பகுதியை தன்னால் எதுவும் செய்ய முடியும் எனக் காட்டுவதற்கே மோடி இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார். இந்துக்கள் - முஸ்லிம்கள் என்ற பிரிவினையை முழு வீச்சில் செயல்படுத்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தனது இந்துத்துவக் கொள்கையை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு மூன்று முக்கிய ஆயுதங்களை செயல்படுத்தினார் மோடி.
அதில் முதலாவது, பிறர் கொடுமைப்படுவதை பார்த்து மகிழும் குணத்தை உருவாக்குதல்.
2007ல் காவல்துறை கண்காணிப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் காவல் துறையால் கொல்லப்பட்டார். அதனைப் பற்றி ஆவேசமாகப் பேசிய மோடி, "வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி ஒருவன் வைத்திருக்கிறான் என்றால் அவர்களை நான் கொல்லனுமா வேண்டாமா" எனக் கேட்கிறார். அதற்கு கூட்டம், ஆம், அவர்களைக் கொல்லுங்கள் என்று சத்தமிடுகிறது. இத்தகைய நிகழ்வுகள் தற்போது இயல்பாகி விட்டது. நடுரோட்டில் முஸ்லிம்கள் தாக்கப்படும்போது பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கிற இவனுகளுக்கு இது தேவை என்று பேசும் குரல் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்தக் குரல்களுக்கெல்லாம் முதலாக இருந்தது மோடியின் குரல்.
இரண்டாவது ஆயுதம், பாதுகாப்பற்ற சிறுபான்மையினருக்கு தண்டணை அளிப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியை உருவாக்குதல்.
2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் மூலம் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் முஸ்லிம்களைப் பற்றி மோடி பேசுகிறார், "நாம் என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்காக நிவாரண முகாம்களை உருவாக்கலாமா? அப்படியென்றால் குழந்தைகளை உற்பத்தி செய்யும் மையங்களை நடத்தச் சொல்கிறீர்களா?. நாம் இப்படியானவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும்..." என்றார். வாழ்வாதாரம், சொந்தங்கள் என எல்லாம் இழந்து நிற்கும் மக்களுக்கு மேலும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பேசுவதை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆமோதிக்கிறார்கள், வரவேற்கிறார்கள்.
மூன்றாவது, சுய இரக்கம் தேடிக் கொள்வது, நாங்கள் ஏமாற்றப்பட்டவர்கள் என்ற மனநிலையை உருவாக்குவது
இந்நாட்டில் இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற பார்வையை உருவாக்க முனைவார்கள். மோடி ஒருமுறை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, இந்துக்கள் 1000 ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று பேசினார். இதைப்போல எப்போதும் இந்துத்துவ தலைவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருந்தால், அது இந்துக்களை அழித்து உருவாக்கப்பட்ட பகுதிகள் என்றும், பழமையான மசூதிகள் எல்லாம் கோவில்களை இடித்து உருவாக்கப்பட்டன என்றும், இந்துக்களை பரிதாப நிலைக்குக் கொண்டு வந்து ஒருங்கிணைக்க முயற்சிப்பார்கள். இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவானவர். அந்த அமைப்பிற்காக தன் தாயையும், மனைவியையும் விட்டு விலகி வந்தவர். ஆர்.எஸ்.எஸ் எதையெல்லாம் லட்சியமாகக் கொண்டிருக்கிறதோ அதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்த லட்சியங்களின் வரிசையில் முதலிடத்தில் எப்போதும் இருந்தது காஷ்மீர். அதனை சரியாக செய்து முடித்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக ராமர் கோவில், மதமாற்ற தடைச்சட்டம் என ஒவ்வொன்றாக மாற்றி இறுதியாக அரசியலமைப்பில் உள்ள ஜனநாயகம், மதச்சார்பற்ற என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு இந்தியாவை முழுமையாக இந்து நாடாக மாற்றுவதற்குத் தயாராகிறார்.
இந்தியாவுடன் இணையும்போது காஷ்மீருக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டு அழைப்பு இருந்தது, பாகிஸ்தானை நிராகரித்து இந்தியாவின் பக்கம் நின்றார் காஷ்மீரின் தலைவர் ஷெய்க் அப்துல்லா. அதற்கு அவர் கூறிய காரணம், இந்தியாவின் அரசியலமைப்பு கொண்டுள்ள ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையும் தான். ஆனால், இன்று பாகிஸ்தானை நிராகரித்ததற்கான காரணம் இந்தியாவை நோக்கியும் நிற்கிறது.
இந்தியா தற்போது காஷ்மீர் மீது எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மாற்றியமைக்காமல் போனால் இந்தியாவின் பெருமையாக இருந்த ஒற்றுமை முடிவடையும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
- அபூ சித்திக்
(Data from washington post, August 16)